' சத்யா'

' டேய் சத்யா..' 'எந்திரிம்மா...'

' போ... போய் குளிச்சுட்டு வா...! இன்னிக்கு பிள்ளையார் சதுர்த்தி... பிரம்மச்சாரி பூஜ பண்ணணும்' ' அம்மா காலையிலேயே ஆரம்பித்துவிட்டார்.

' ம்மா... இன்னிக்கு ஆர்ப்பாட்டம் இருக்கும்மா... நான் கௌம்பறேன்', நான்.

' டே...ய் என் செல்லம்ல... இன்னிக்கு ஒரு நாள் மட்டும் பூஜை பண்ணு. அம்மா உனக்காக புது பூணூல் எடுத்து வெச்சுருக்கேன். குளிச்சுட்டு வந்து போட்டுண்டு...'

' ம்மா... நீங்களும் உங்க பூணூலும். சாமியும் கிடையாது பூணூலும் கிடையாது. நீங்கள்ளாம் என்ன கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்கத் தலைவரு, அறிவியல் இயக்க மெம்பரு? இந்த உலகம் எப்படி வந்தது? பரிணாம வளர்ச்சியில குரங்குலேர்ந்து...'

'  போடா நாயி....'

அம்மா கொழுக்கட்டை செய்யப் போய்விட்டார்.

நான் குளிக்கப் போனேன். பூஜை செய்தாலும் செய்யாவிட்டாலும் எனக்குக் கொழுக்கட்டை பிடிக்கும். நீரை எடுத்து மேலே ஊற்றினேன். நானா இப்படி மாறிவிட்டேன்? பிள்ளையார் சதுர்த்தியில் மரவனேரி சுளுளு காரியாலயம் தொடங்கி கன்னங்குறிச்சி ஏரி வரை ஆட்டம் பாட்டத்துடன் சென்று பிள்ளையாரைக் கரைத்து பத்து வருடம் தான் ஆகிறது. கடந்த நான்கு வருடமாகத்தான் கம்யூனிஸ்டாக மாறி இப்படி ஆகிவிட்டேன். பிள்ளையார் சதுர்த்தியில் அசைபோட்ட கொழுக்கட்டைகளைப் பற்றிய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே குளிக்க ஆரம்பித்தேன். ஒருமுறை சொல்லிப் பார்த்தேன்.

' ஓம் வக்ர துண்டாய தீ வித்மாஹி

மகா சேனாய தீமஹி

துந்நோ தந்திப் பிரசோதயாதே...'

நிறுத்துங்கள்...

சரியாக எட்டு வருடமாகிறது. இன்னும் நன்றாக நினைவிருக்கிறது.

பூங்கொடி

.

.

2005-

அப்போது நாங்கள் ஏற்காட்டிலிருந்தோம்.

பூஜையை முடித்துவிட்டு பயபக்தயோடு வீடு முழுக்க தீபாராதனை காட்டினேன். தொலைபேசி ஒலித்தது.

'ஹலோ'

'சத்யா நான் இந்துமதி பேசறேன்'

'ம் .. சொல்லு..'

' பூங்கொடியும் பரமேசும் கோயம்புத்தூர் போறாங்க. பூங்கொடி உங்கிட்ட ஏதோ பேசணுமாம்.. பஸ் ஸ்டாப் வா'

' ம் சரி'

தொலைபேசியைத் துண்டித்தேன். பஸ் ஸ்டாப் பதினைந்து நிமிட நடை தூரத்தில் இருந்தது.

' ம்மா.. நான் பஸ் ஸ்டாப் வரைக்கும் போயிட்டு வரேன்'

'டேய் நில்லுடா பிரசாதம்கூட சாப்பிடாம எங்க போற?'

'பரமேஸ் ஊருக்கு போறாளாம்மா.. என்னமோ பாக்கணுமாம். ஆதான் போய் பார்த்துட்டு வரேன்'

' ஓ... அப்படியா சரி போயிட்டு சீக்கிரம் வா...'

ஆம்மாவுக்குப் பூங்கொடியை அவ்வளவாகத் தெரியாது. பரமேசும் இந்துமதியும் தான் தெரியும். எனக்குக்கூட பூங்கொடி அவ்வளவாகத் தெரியாது.

ஸ்..ஸ்...ஸ்... அப்போதுதான் உரைத்தது.

'பூங்கொடி உங்கிட்ட என்னமோ பேசணுமாம்'

பூங்கொடி பேச என்ன இருக்கிறது?... மனதில் ஏதோ அப்பிக்கொண்டது.

இரண்டு சிகரெட்டுகளை வாங்கிக் கொண்டு எப்போதும் அவர்களைச் சந்திக்கும் (நான் தம்மடிக்கும்) இடத்திற்குச் சென்றேன். பரமேசைப் பார்த்ததும் மறுபடி அந்தக் கேள்வியை மறந்துவிட்டேன். பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின் திடீரென சொன்னாள்.

' பூங்கொடிதான் சத்யா உங்கிட்ட என்னமோ பேசணும்னு வர சொன்னா'

அப்போதுதான் அவளை ஏறிட்டேன். அருகிலிருந்த மரத்தைப் பிடித்தபடி நின்றிருந்தாள். கத்திரிப்பூ நிற சுடிதார் அணிந்திருந்தாள். என் தோழிகளிலேயே இவளும் பரமேஸ்வரியும்தான் மிகவும் அழகிகள். பரமேஸ்வரி ஆளைத் தூக்கியடிக்கும் அழகு. இவள் சற்று பாந்தமான அழகு. சிகரட்டைப் பற்ற வைத்துக்கொண்டே அவளைப் பார்த்து 'ம்'? என்றேன்.

'எனக்கு  மாப்பிள்ள பாக்கறேன்னு வீட்ல சொன்னாங்க'

அவளுக்குப் பதினேழு வயதுதான் இருக்கும். ஆனால் மலைப்பிரதேசங்களில் இதுபோன்ற திருமணங்கள் சகஜம். திருமணத்திற்கு அழைக்கத்தான் என்னை வரச்சொல்லி இருப்பாள் போலும்.

'வாவ்...சூப்பர் அப்ப சீக்கிரத்துல டும்..டும்..டும் ட்ரீட்டு வேற இருக்கும். இங்க பாரு எனக்கு, சதீஸ்க்கு, லட்சுமணனுக்கு மட்டும் தனியா ஒரு ஃபுல் வாங்கி..'

'நான் உங்களைத்தான் கட்டிப்பேன்னு எங்கப்பா அம்மாகிட்ட சொல்லிட்டேன்'

.

.

சிகரெட்-2

.

.

'நீங்க யோசிச்சு சொல்லுங்க'

நிஜமாகவே யோசித்துக் கொண்டிருந்தேன்.

'ஹா..ஹா..ஹா.. என் வலையில் தானாக ஒருத்தி மாட்டிக் கொண்டுவிட்டாள்.'

.

.

பின்பு அன்று மாலையே அவள் போன் செய்தாள். 'நான் யோசித்துவிட்டேன் சரி' என்றேன்.

இரண்டு மாதமிருக்கும். அப்போது நான் ஜோதி ஆண்ட்டி வீட்டிலிருந்து பஸ் ஸ்டாப் நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.

'சத்யாண்ணா' பக்கத்து வீட்டுப்பையன். 'டிபன்பாக்ஸ் எடுக்கலையாம்'

நல்லவேளை. போய் எடுத்துக்கொண்டு திரும்பி வந்தேன். இன்று மதியம் யுடுP வுநளவ. கோமதி மேடம் முகம் ஞாபகம் வந்தது. அதற்காகவாவது  சாப்பிட வேண்டும்.

' அண்ணா' மறுபடி அவன்தான். அவங்;களுக்கு போன் செய்துதான் அப்பா பேசுவார்.

'ஹலோ'

'நான் பூங்கொடி பேசறேன்'

'சொல்லு இந்த நம்பர் எப்...?'

'ஊர்லேர்ந்து வந்துருக்கேன். புது பஸ் ஸ்டாண்டுல வெய்ட் பண்றேன்.வாங்க'.

'இப்பவா?'

'ம்'

'சரி வர்ரேன்'

இன்று ALP டெஸ்ட்.

கோமதி மேடம். 'வெளிய போங்க சத்யகிருஷ்ணன்' என்றார். கண்களை மூடிக்கொண்டே யோசித்தேன்.

நேரே பஸ் ஸ்டாண்ட் போறேன் - அவளைப் பார்க்கறேன் - காபி – கிளம்பறேன் - ஒரு மணி நேரம் காலேஜ்க்கு லேட் - யுடுP வுநளவ – கோமதி மேடம். பரவாயில்லையே 'சத்ய கிருஷ்ணன் ...ம்...' என்றேன்;.

பர்சைப் பார்த்தேன். பத்து ரூபாய் இருந்தது. நாசமாப் போச்சு. இங்கிருந்து பஸ் ஸ்டாண்டுக்கே நாலு ரூபாய். இன்றுதான் சக்திவேலிடம் 20 ரூபாய் வாங்கவேண்டும் என்று நினைத்தேன். பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டேன்.அவள் எங்கே என்று பயணிகள் இருக்கையில் தேடினேன்.காணவில்லை.பகீரென்றது, பர்ஸில் ஐந்து ரூபாய் தான் இருந்தது.அப்படியே நடந்து வந்தேன். ஒரு ரூபாய் காயின் பாக்ஸின் அருகில் சுவரில் சாய்ந்தபடி நின்றிருந்தபடி நின்றிருந்தாள்.

மஞ்சள் நிற சுடிதார். கண்களில் சோகமா, ஏக்கமா,சோர்வா என இனங்காண முடியாத பார்வையுடன் என்னைப் பார்த்தாள். உதட்டில் புன்னகை ஒட்டிக் கொண்டது. வேகமாக வந்து என் தோளைக் கட்டிக் கொண்டாள். எனக்கு உடல் லேசாகிக் கொண்டிருந்தது.

'நீங்க தேடுவீங்கன்னுதான் இங்கேயே நின்னுட்டிருந்தேன்.'

'அரைமணி நேரமாவா?.'

'ம்.'

சொன்னால் நம்பமாட்டீர்கள். அவளை நோக்கிய என் எண்ணக் காமங்கள் தற்கொலை செய்துகொண்டன. நான் அடுத்த அடி நடந்தபோது எனக்குள் ஒலித்த சிரிப்பொலி தேய்ந்து காணாமல் போனது.

காபி முடிந்தது. 'சரி நான் கிளம்பறேன், எனக்கு யுடுP டெஸ்ட் இருக்கு. அந்த மேடம் ஏற்கனவே என்மேல காண்டா இருக்காங்க' என்றேன்.

'ம், ஐந்தடி தான் நடந்திப்பேன். 'நான் இன்னிக்கு ஹாஃப் டேயாவது உங்களோட ஸ்பெண்ட் பண்ணனும்னு எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா?' என சிணுங்கலான குரலில் கேட்டாள்.

அவள் கண்களைப் பார்த்தேன். ஐந்து நொடிதான். ஆனால் அந்த ஐந்து நொடியில் என்னவெல்லாம் நினைத்தேன் என்று இங்கே எழுத ஆரம்பித்தால் பல வருடங்களாகும். மூன்றே முக்கால் நொடியிலிருந்து அவளைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்.

'எங்க அண்ணங்கள நினைச்சா பயமா இருக்கு', பார்க்கில் என் தோளைக் கட்டிக் கொண்டு அவள் சொன்னாள்.

'வீட்ல சொல்லிட்டேன்னு சொன்ன?.'

' அது அப்பாம்மாட்ட, எல்லா முடிவும் அண்ணங்கதான் எடுப்பாங்க'

'சரி பேசிக்கலாம்'

'அவங்க பிரச்சன பண்ணுவாங்க. உங்களுக்குத் தெரியாது'

'ஏய் லூசு நாங்க பண்ணாத பிரச்சனையா? ஊங்க ஊர்ல பிரச்சனைனா என் பிரண்டுங்க இருக்காங்க,பாத்துக்கலாம். ரவிய மீறி எவன் பிரச்சினை பண்ணப் போறான்?'

'என்ன சொல்ல வர்றீங்க?'

'ஏதாவது பிரச்சனன்னா ரவிய வெச்சு பாத்துக்கலாம்'

'எங்கண்ணன் யாரு தெரியுமா?.'

' ரவி தான்'

நாசமா போக

( இந்த இடத்தில் ஒரு சிறு விளக்கம். இதற்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. ரவி என் நண்பன். கிட்டதட்ட ஒரு வருடமாக. ஆனால் அவன் தங்கையை எனக்குத் தெரியாது. பூங்கொடி என் காதலி, கிட்டதட்ட 2 மாதமாக. ஆனால் அவள் அண்ணனை எனக்குத் தெரியாது. இத்தனைக்கும் கிட்டதட்ட ஒன்றரை வருடமாக அவள் ஊரில் நான் கிரிக்கெட் விளையாடி வந்தேன்.அவள் ஊரிலுள்ள பெரும்பாலான இளைஞர்கள் என் நண்பர்கள். நான் வசித்த ஊரில் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் குடும்ப முறை, நட்பு, ஆண்-பெண் உறவு இப்படி இருந்தது என்பதைப் புரிந்துகொள்வது கதையின் போக்குக்கு உதவியாக இருக்கும்.)

ரவியும் நானும் ஒரு வருட நண்பர்கள். அவன் என்னைவிட ஏழெட்டு வருடம் பெரியவன். இருப்பினும் வாடா-போடா நட்பு எங்களுடையது. அவன் தங்கையை நான் காதலிப்பது எவ்வளவு பெரிய துரோகம்? அவளை இனி மறந்துவிடவேண்டும் என்று முடிவு செய்தேன்.

'...'

'அங்க பாருங்களேன்'

அவள் கை நீட்டிய இடத்தை நோக்கினேன்

' இச்..! கன்னத்தில் முத்தமிட்டாள்.

என் வாழ்வில் ஒரு பெண் (காதலியாக இருந்து) தந்த முதல் முத்தம். சரியாக முப்பத்தாறு விநாடிகளுக்கு முன்பு அவளை மறந்துவிட வேண்டும் என்று எடுத்த முடிவினை இந்த நொடியோடு மறந்துவிட்டேன். அதன் பிறகு அவள் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டாள். கிட்டதட்ட வாரமிருமுறை சந்தித்தோம். முத்தங்களின் எண்ணிக்கை கூடியது. என்னை முத்தமிடத்தான் வேலையை விட்டுவிட்டாளோ என்றுகூடத் தோன்றியது. முத்தங்கள் கன்னத்திலிருந்து உதடுகளுக்கு மாறிய இடைநிலைப் படியில் காதலின் பாத்திரம் குறித்த ஆராய்ச்சியிலிருந்தோம்.

போன வரிகளோடு நான் கதையை முடித்திருக்கலாம். ஆனால் வாழ்க்கை முடியாமலிருப்பதில்தான் உள்ளது.

.

.

'உங்க கண்ணு அழகா இருக்கு', ஒரு நாள் முத்த முடிவில் என்னிடம் சொன்னாள்.

இதுவரை அப்படி யாரும் சொன்னதில்லை. 'பயமாயிருக்கிறது' என்று நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். என் கண்களில் இன்றுவரை எந்த கவர்ச்சியையும் கண்டதில்லை. அவள் கண்களைப் பார்த்தேன். மருண்ட மான் போன்ற விழி என்ற சொலவடையை எங்கு கேட்டாலும் அவள் நினைவுதான் வரும். அப்படித்தான் அவள் விழி இருக்கும். அவளை எப்போது நினைத்தாலும் அந்தப் பார்வைதான் நினைவுக்கு வரும்.

பின்பு படித்தேன். தொழில் செய்தேன். படிப்பை நிறுத்தினேன். தொழிலை விட்டேன். படிப்பைத் தொடர்ந்தேன். இரண்டாண்டு கால வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் மாறாமல் ஒன்று இருந்தது, காதல்.

நான் செல்போன் இல்லாத (அதிக புழக்கத்திலில்லாத) காலத்தில் காதலித்தேன். எனவேதான் அவள்மீதான காதல் நிலையாக இருந்தது. நாங்கள் சண்டையிட்டதில்லை. காத்திருந்த சந்திப்புகளில், உரையாடல்களில் சண்டைக்கு இடமில்லை. சொல்ல மறந்துவிட்டேன் அப்பா இறந்துவிட்டதால் நாங்கள் சேலம் வந்துவிட்டோம். எங்கள் தொலைவு அதிகரித்துவி;ட்டது. காதலும்தான்... எங்கள் வார சந்திப்பு மாத சந்திப்பானது. இன்னும்கூட சந்திப்பு குறைந்தது. அவள் அப்படியே காத்திருந்தாள்.

.

.

இதை எழுதுவதற்குள் எனது மூன்றாவது சிகரெட்டின் சூடு கையை நெருங்கியது. சிகரெட் தீர்ந்துவிட்டது. இன்னும் ஒரு பாக்கெட் வாங்க வேண்டு;ம். கடைக்குப் போனேன்.

.

.

'சிகரெட் ஏன் பிடிக்கிறீங்க, நிறுத்துங்க', ஒரு நாள் முத்தத்தின் முடிவுரை. அவள் இதுவரை என்னை நிர்பந்தித்ததில்லை.

'எதுக்கு..' என்றேன் வியப்புடன்.

'வேணான்னா வேணாம்,எனக்குப் பிடிக்கல', குரலில் கோபம்.

'உளறாதடி'

'எனக்கு நீங்கதான் முக்கியம். உடம்புக்கு கெடுதல்தான? ப்ளீஸ் கேளுங்களேன்', குரல் உடைந்து கண்ணீர் ததும்பிவிட்டது. அவள் இதுவரை அழுததில்லை. அப்போதைக்கு ஒரு முத்தத்துடன் அவளை சமாதானப்படுத்தினேன்... கடைசிவரை அவளை அப்படியே ஏமாற்றிவிட்டேன்.

.

.

'தோழா ஒரு லேப்டாப் வாங்கணும். என்ன கம்பெனி நல்லா இருக்கும்? எனக்கு சின்னதா வெய்ட் லெஸ்ஸா வேணும்' என்று தலைவர் கேட்டார்.

அவருக்குப் பதில் சொல்லும்போதே நினைத்தேன்.

.

.

.

'சத்யா...', இரவியின் குரல் என்னை எழுப்பியது.

'என்ன இரவி திடீர்னு வந்திருக்க', கூட ஆண்டியும் வந்திருந்தான்.

'இல்ல செல்லு ஒண்ணு எடுக்கணும் அதான்...வந்து வாங்கித்தரியா?' அவ்வளவாக விவரம் (மொபைல் பற்றி) இல்லாததால் என்னை அழைத்துக்கொண்டுதான் போவான்.

'சரி நான் குளிச்சுட்டு வர்ரேன்', குளிக்கப் போனேன்..

'அதெல்லாம் முடியாது, தோசை வார்த்துத் தரேன், ஆளுக்கு ரெண்டு சாப்பிடுங்க' அம்மாவின்  அதட்டலான குரல் கேட்டது.

.

.

வீட்டை விட்டு டீக்கடை வந்து தம்மடித்தோம்.

'என்ன ரேஞ்சுல செல்லு வாங்கணும் ரவி?'

அப்போது ரவியின் தம்பியும் (அருணாசலம்) வந்துவிட்டான்.

'டேய்...ஏண்டா இப்படி உசிர வாங்கறீங்க, லவ் பண்ணா சொல்லித் தொலைங்கடா...' கோபமாக சொல்லிவிட்டு சிகரெட்டைப் பற்ற வைத்தபடி போய்விட்டான்.

'......'

'அவன் கெடக்கறான். அறிவு கெட்டவன். நீ தம்மடிடா. கோவப்பட்டா எல்லாம் சரியாப் போச்சா?' இரவி கோவப்படவில்லை. அவன் எப்போதும் பொறுமையானவன். அருணாசலத்தைச் சமாதானப்படுத்தப் போய்விட்டான்.

ஆண்டிதான் நடந்ததைச் சொன்னான். இவன்தான் இந்துமதியின் அண்ணன். பூங்கொடி விருப்பத்தை மீறி மாப்பிள்ளை பார்க்கப்போய், அவள் விஷம் குடிக்க முயற்சி செய்து கடைசி நேரத்தில் காப்பாற்றியிருக்கிறார்கள். ஒரு வழியாக என்னைக் காதலித்த விஷயத்தைச் சொல்ல என்னைக் கூட்டி (தூக்கிச்) செல்ல வந்திருக்கிறார்கள்.

எங்களைப் பஸ் ஏற்றிவிட வந்த பாக்கியராஜ் தானும் வருவதாகச் சொன்னான். இதற்கு அர்த்தம் நான் ஒரு பஞ்சாயத்துக்குத் தயாராக வேண்டும். என் பக்கம் எனக்கு ஆதரவாக ஒருவனும் எதிராக ஒருவனும் எதிராக ஊரே இருக்கும். சொல்ல முடியாது. நீங்கள் குப்பனூரில் இருந்து கொட்டச்சேடு சென்றிருந்தால் தெரியும். ஆள் நடமாட்டமில்லாத மலைப்பாதையில் (பேருந்துகூட நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறைதான்) எங்களைக் கொன்றுபோட்டாலும் யாருக்கும் தெரியாது. அவர்கள் அப்படி செய்யக்கூடியவர்கள்தான். அவர்கள் நிலையில் அன்று நான் இருந்திருந்தால் அப்படித்தான் யோசித்திருப்பேன். ஆனால் அப்படி ஒன்றும் அசம்பாவிதம் நடைபெறவில்லை என்பதை இன்று நான் கதை எழுதுவதிலிருந்தே ஊகித்திருப்பீர்கள்.

அவள் ஊருக்குச் சென்றோம். மந்தையில் (ஊர் மக்கள் கூடிப் பேசுமிடம்) ஊரே திரண்டிருந்தது. பூங்கொடி கலைந்த தலையுடன் நான்கைந்து பெண்கள் புடைசூழ நின்றிருந்தாள். அதே மருண்ட கண்களுடன் என்னைப் பார்த்தாள். கூட்டத்தில் ஒருவர் 'வந்துவிட்டான்...'  என்றபடி என்னை நோக்கி வேகமாக வந்தாள். கூட்டத்தில் சலசலப்பு. ' ஒரு நிமிஷம் நில்லுங்க..' சொல்லி முடிப்பதற்குள் ஒரு அடி விழுந்தது. இரண்டு மூன்றுபேராக சேர்ந்துகொண்டனர். பாக்கியராஜ் கெஞ்சிக் கொண்டிருந்தான். பூங்கொடி சத்தமிட்டு அழுதாள். நான் அவள் மருண்ட கண்களைப் பார்த்தபடி மயங்கிப் போனே....

.

.

என்றெல்லாம் கற்பனை செய்தபடிதான் அவள் ஊருக்குப் போனேன். ஆனால் ஊர் வெறிச்சோடியிருந்தது. நேராக அவளின் சித்தப்பா சின்னமணி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

' வாங்க தம்பி' என்றார். அவருக்கு என்மேல் நல்ல மரியாதை இருந்தது. அவருக்கு மட்டுமில்ல அந்த ஊரில் உள்ள பலருக்கும்.

'காபி சாப்பிடுங்க'

'பேசிடலாமா?..'

'ம்', அருணாசலம்.

'பாப்பாக்குக் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்'

'மூணு வருஷம் வெய்ட் பண்ணுங்க, நான் படிக்கணும், வேலைக்குப் போகணும்'.

'என்னப்பா சொல்ற?' என்றார் அருணாசலம்.

'அதெல்லாம் முடியாதுங்க. இங்க பாரு சத்யா எங்க தங்கைக்கு இந்த வருஷம் கல்யாணம் பண்ணனும். நாங்க லவ்வுக்கு எதிரானவங்க இல்ல. உனக்கே என் தங்கச்சிய கட்டி வெக்கறேன். நீ அவள வச்சி காப்பாத்தினாலும் சரி விட்டுட்டுப் போனாலும் சரி நாங்க எதுவும் கேட்க மாட்டோம்' அருணாசலம். 

'இல்லண்ணா. இவன் அப்பா செத்து ஒரு வருஷம் கூட ஆகல. இன்னும் படிச்சு முடிக்கல. வேலைக்குப் போகல. இப்ப கல்யாணம் பண்ணி என்ன பண்ண முடியும்?' எனக்கு ஆதரவாக பாக்கியராஜ் குரல் கொடுத்தான்.

'சரிப்பா. நான் உனக்காக ரெண்டு வருஷம் வெய்ட் பண்றேன். ஆனா உங்க அம்மாவ கூட்டிட்டு வந்து நீ சொல்லணும்' சின்னமணி தீர்மானமாகச் சொன்னார்.

' அது எப்படிங்க? நான் லவ் பண்ணினதுக்கு எங்கம்மாவை வந்து பேச சொல்லணுமா, முடியாதுங்க' என்றேன் நான்.

இதேபோல் கிட்டதட்ட ஒருமணி நேரம் விவாதம் நடந்தது. துரதிஷ்டவசமாக நான் ஒரு காதலனாக மட்டுமில்லாமல் எதார்த்தவாதியாகவும் இருந்தேன். அதனால் ஒரு பூர்ஷ்வா கம்யூனிஸ்டு போலவோ அல்லது கம்யூனிஸ்டு முதலாளி போலவோ என் நிலை மாறிவிட்டது.

இந்த ஒருமணி நேர விவாதத்தை இரு மருண்ட கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன.

'சரிண்ணா...' பூங்கொடியின் குரல் எங்கள் விவாதத்திற்கு முடிவுரை எழுதியது. என்னை நோக்கினாள். 'இப்படி செய்துவிட்டாயே' என்பதுபோல் இருந்தது. அவளது மருண்ட பார்வையை நான் பார்த்தது அதுதான் கடைசி தடவை. புருவங்களை நெறித்தபடி கோபப் பார்வையோடு கண்கள் திறந்தாள்.

'நீங்க சொல்றதே நன் கேக்கறேன். அவங்கதான் அவங்க அம்மாவ கூட்டிட்டு வர முடியாதுன்னு சொல்றாங்க. நீங்க கல்யாணம் பண்ணனும்னு சொல்றீங்க. என் தலையெழுத்து... உங்க பேச்சையே கேக்கறேன்'. என் முகத்தை ஏறிட்டுகூட பார்க்காமல் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

நீண்ட நேர மௌனத்தை சின்னமணி தான் கலைத்தார்.' சரி தம்பி, பாப்பாதான் சொல்லிடுச்சுல்ல. ஆனா எங்க பொண்ணு பத்தி தப்பா எதுவும் வெளியே சொன்னீங்க'

கையை உயர்த்தினேன். ' என்னைப் பத்தி தெரியும்ல?'

' சரி தம்பி, சாப்பிட்றீங்;களா?'

'இல்ல, நான் வரேன்'.

வரும் வழியில் பாக்கியராஜ் சொன்னான். 'ச்ச.. ஒரு சூப்பர் பிகர மிஸ் பண்ணிட்டடா. இன்னிக்கு ரொம்ப அழகா இருந்தா'.

'...'

'ஆனாலும் அவ அண்ணனுங்க காட்டாணுங்கடா. ஒரே வருஷத்துல தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும்னா என்ன பண்றது?'.

'....'

அவளுக்குத் திருமணம் நடந்து ஆறு ஆண்டுகளாகிறது. ரவி அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. எப்போதும்போல் பழகினான். அருணாசலம் ஒரு வருடம் கோபமாக இருந்தான். பின்பு சரியாகிவிட்டது. பூங்கொடியைப் பலமுறை பார்த்தேன். அவள் என்னை ஏறிட்டுகூட பார்த்ததில்லை. நான் முன்பே சொன்னதுபோல அவள் மருண்ட பார்வையை என்னால் பார்க்கவே முடியவில்லை.

.

.

போன மாதம்தான் இந்துமதி பூங்கொடியைப் பற்றிப் பேச்செடுத்தாள்.

'எப்படி இருக்கா? ஏன்றேன்.

'ம்...நல்லா இருக்கா சத்யா. இங்கதான் குப்பனூர்ல இருக்கா (என் பக்கத்து ஊர்), அவ பாப்பா இங்கதான் எல்கேஜி படிக்கிறா' என்றாள்.

'ஓ...'

'அவ வீட்டுக்காரருக்கு எல்லா விஷயமும் முதல்லயே தெரியும். அவரு உன்னப் பார்க்கும்போதெல்லாம் 'போய் பேசு பூங்கொடி'னு சொல்லுவாராம். ஆனா நீதான் பேசமாட்டேங்கறியாம்?.'

'அதெல்லாம் ஒண்ணுமில்ல. அவ என்மேல கோவமா இருப்பான்னுதான் நான் பேசல' என்றேன்.

' நீ பேசலன்னுதான் அவ பேசல' என்றாள்.

' அப்படின்னா அவ குப்பனூர்ல தான இருக்கா? வீட்டுக்கு வந்து பாக்க சொல்லு. அவ வீட்டுக்காரரையும் கூட்டிட்டு வரச்சொல்லு. நான் இல்லன்னா என்ன? அம்மாவைப் பார்த்துட்டுப் போகச் சொல்லு.

'ம்..சரி சத்யா' என்றபடி போனாள். நான் பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே தூங்கினேன்.

.

.

ஆர்ப்பாட்டம் முடிந்தது. சிரியாவுக்கு எதிராகப் போர் தொடுக்கும ;அமெரிக்காவைக் கண்டித்தாயிற்று. வீட்டிற்கு வந்தேன். வெளியே புதிதாக இரண்டு மூன்று செருப்புகள் இருந்தன.

நீங்கள் கணித்தது சரிதான். பூங்கொடி குடும்பத்தோடு வந்திருந்தாள். என்னை நட்போடு பார்த்தாள். அவள் கணவனும்தான். அவள் குழந்தை புதிதாக வந்த அங்கிளைப் பார்த்து முதலில் பயந்தாள். பின்பு நன்றாக ஒட்டிக் கொண்டாள். அவள் கண்கள் அப்படியே பூங்கொடியை நினைவூட்டின.

 

இல்லை இல்லை உங்கள் கணிப்பு தவறு. அவள் பெயர் ஸ்வேதா. அம்மா தம்பதியிடம் பேசிக்கொண்டிருக்க நான் ஸ்வேதாவுடன் விளையாட மாடிக்;குப் போய்விட்டேன்.  அடம்பிடித்து ஸ்லாப்பில் ஏறிக் கொண்டாள்.

'அங்கிள் அங்கிள் உங்களுக்கு யுடீஊனு  தெரியுமா?'

'ம்ஹீம் தெரியாதே', நான் உதட்டைப் பிதுக்கினேன்.

'ஹஹ்ஹா ஹஹ்ஹாhh தெரியாதா?'

'ம்ஹீம். சொல்லித்தரியா?.'

'ரைம்ஸ் சொல்லித் தரட்டா?.'

'ம்..'

' ABCDEFG......HIJKLMNOP.........LMNOPQRST......UVWXYZ...’  பாடினாள்.

' அங்கிள் அங்கிள் அது என்ன?'

'அது மல்லிகைச் செடி'

'மல்லிகைச் செடியா.. அய்ய எனக்கு மல்லிகைப்பூ தான் தெரியும்'

'அப்படியா?'

'ம்;... ஆமாம். மல்லிகைப்பூ வெள்ளையா இருக்கும். அப்பறம் ஏன் மல்லிகைச் செடி பச்சையா இருக்கு?'

இப்படி நிறைய கேள்வி கேட்டாள்.

'அங்கிள் அது என்ன?' கையை நீட்டிக் கேட்டாள். அவள் கை நீட்டிய திசையை ஏறிட்டேன்.

'இச்'

'ஹஹ்ஹா..ஹஹ்ஹா...' சிரித்தபடி கீழே குதித்து வீட்டுக்குள் ஓடினாள்.

என் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்க மறந்து வெகுநேரம் நின்றுகொண்டிருந்தேன்.

Pin It