ஈஸ்வரி மட்டையைப் பிண்ணிக்கொண்டிருந்தாள். காலையிலிருந்து இரண்டு கீற்று கூட முடியவில்லை. குத்து வைத்து எத்தனை நேரம் வேலை பார்ப்பது? அடிவயிற்றில் வலி பொறுக்கமுடியவில்லை. எழலாம் என்றாலோ காலும் இடுப்பும் ஒத்துழைக்கவில்லை. கைகளைத் தரையில் ஊன்றி எழப்பார்த்தாள்.

அடிவயிற்றுக்கும் கீழே வலித்தது. அந்த இடத்தில் அரிப்பெடுத்தது. நசநசவென்றிருந்தது. பாழாய் போன வெள்ளை மறுபடியும் வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டாள்.

ஈஸ்வரிக்கு வயது முப்பத்தியைந்துதான். ஆனாலும் அவளைப் பார்க்கும் யாரும் அவளை நாற்பது நாற்பத்தைந்து வயதுக்காரி என்றுதான் நினைப்பார்கள். காதோரத்தில் கனத்த நரை ஓடியிருந்தது. எலும்புக்கூட்டுக்கு புடவை சுற்றிதுபோல அவளிருந்தாள். உட்பாவாடையும் புடவையும் நழுவி கீழே இறங்கும் அளவுக்கு இடுப்புக்குக் கீழே இளைத்திருந்தாள்.

பின் என்னதான் ஆகும்?

இரண்டு பிள்ளைகள். பெரியவனுக்கு 21 வயதாகிறது. இரண்டாவது பெண். 18 வயது. அடுத்தடுத்த குழந்தைகளைக் கலைத்துவிட்டாள். எப்போதாவது தனிமையில் சோர்ந்து அமர்ந்திருக்கும் போது கணக்குப் போட்டுப் பார்ப்பாள். ஆறு அல்லது ஏழு குழந்தையைக் கலைத்திருக்கிறாள். ஒவ்வொரு முறை கலைக்கும்போதும் உடல் ஒடுங்கிப்போகும். இரத்தம் வற்றிப் போகும். ஆனால், வேலைகள் மட்டும் அப்படியே நீளும்.

காலை எழுந்தவுடன் வாசலில் மாடு கட்டியிருக்கும் இடத்தைச் சுத்தம் செய்து தீவனம் வைக்க வேண்டும். கல்லுடைக்கப் போகும் கணவனுக்கு சமைத்து, சாப்பிட வைத்து கொடுத்தனுப்ப வேண்டும். அப்புறம் பிள்ளைகளை அனுப்பி வைக்க வேண்டும். அதற்கப்புறம், அள்ளிப் போட்டுக்கொண்டு தூக்கு வாளியைத் தூக்கிக்கொண்டு ஓட வேண்டும்.

பெரியாற்றுக் கால்வாயில் தண்ணீர் வந்துவிட்டால் பத்து இருபது நாளைக்கு கருப்பட்டி துவங்கி ஆண்டிப்பட்டி வரை வேலைகிடைக்கும். களையெடுப்பு, நாற்று நடவு என்ற முப்பது முப்பத்தைந்து நாள் கூட ஓடும். அதற்குள் சம்பாதித்துவிட வேண்டும் என்ற வெறியில் ஓடுவாள். அப்புறம், உடம்புக்கு காய்ச்சல் வந்து சீதாலட்சுமி டாக்டருக்குக் காசு கொடுப்பாள்.

அது இல்லையேன்றால் தென்னை மட்டை வாங்கி கீற்று முடைவாள். மட்டைக்கும் பஞ்சம் வந்துவிட்டால், ஓடை வேலைக்குப் போவாள். அந்த அறுபதுக்கு யார் போவார்கள் என்று நொந்துகொண்டே போவாள். இதற்கிடையில் மாட்டுக்குப் புல் அறுத்துக்கொண்டும் வரவேண்டும்.

இப்படியாக இவளின் பொழுது முடியும்போது தொலைக்காட்சியில் நாடகங்களெல்லாம் முடிந்திருக்கும். எப்போதாவது ஒரு நாள் கணவனின் கை இவள் மேல் ஊரும். ஒத்துழைக்க வேண்டும்.

அவனின் மனைவி இறந்த பின்னர் பாறையில் வேலை பார்த்த பழக்கத்தில் இவளைச் சேர்த்துக்கொண்டான். இரண்டு பிள்ளை பிறந்த பின்னர் பேசுவது கூட இல்லை. எப்போதாவது ‘கஞ்சி என்னாச்சிடி’, என்று உறுமல் கேட்கும். அவ்வளவுதான்.

அவன் கை ஊர்ந்தால் நிச்சயம் பிரச்சனைதான். கலைக்க வேண்டிவரும். அவள் எத்தனையோ முறை சாடை மாடையாகச் சொல்லிப் பார்த்தாள். அவன் தயராக இல்லை. ஆண்மை போய்விடுமாம். அப்புறம் கடைசிமுறை கலைக்கும்போது டாக்டரே இவளுக்குக் கருத்தடை செய்து வைத்தார்.

எழுந்து நின்ற ஈஸ்வரிக்குக் காலெல்லாம் நடுங்கியது. அடிவயிற்றில் வலி தீப்பிடித்தது போல பரவியது. மெல்ல நடந்துபோய் திண்ணையில் படுத்துக்கொண்டாள்.

அலங்காநல்லூர் போகும் பஸ் சத்தம் கேட்டு எழுந்தாள். அந்த டாக்டரம்மா வந்திருக்கும் என்று நினைத்தவளாக மினி பஸ் பிடிக்கப் புறப்பட்டாள். துணைக்கு மகள் காளியையும் அழைத்துக்கொண்டாள்.

டாக்டரம்மா சொன்னதைக் கேட்டவளுக்கு தலையில் இடி இறங்கியது போல இருந்தது. கண்ணில் இறங்கிய கண்ணீரை மறைத்துக்கொண்டு 500 ரூபாய் ஒரே தாளாகக் கொடுத்துவிட்டு மகளுடன் திரும்பினாள்.

வீட்டுக்கு வந்தபோது மணி 9 ஆகிவிட்டது. இவளுக்குப் பசிக்கவில்லை. நல்ல வேளையாக, காலையில் மிச்சமிருந்ததைச் சாப்பிட்டுவிட்டு கணவன் படுத்திருந்தான். சாராய வாடை அடித்தது. இனி எழுந்திருக்க மாட்டான். ஒரு பிரச்சனை முடிந்தது. பையனைக் காணவில்லை.

இவளை அறியாமல் அழுகை வந்தது.

‘வலிக்குதாம்மா?’ என்றாள் காளி.

ஆமாம். வலித்தது. போட்ட ஊசியும் கொடுத்த மாத்திரைக்கும் கேட்காமல் வலியெடுத்தது. ஆனால், ஈஸ்வரி அதனால் அழவில்லை.

டாக்டர் சொன்னதைச் சொன்னாள். கர்ப்பப் பையை எடுக்க வேண்டும் என்று சொன்னதை மகளிடம் சொன்னாள். பின் வீட்டு சீதாக் கிழவி வந்து அமர்ந்திருப்பதை அப்போதுதான் கவனித்தாள்.

‘போச்சு’ என்று நினைத்துக்கொண்டாள். சீதா கெழத்துக்குத் தெரிந்தால் அது ஊருக்கே தெரிந்த மாதிரி.

‘அத எடுத்துட்டா அப்புறம் என்ன பொம்பளடி நீயி’. என்றாள் சீத்தாப் பாட்டி. ஈஸ்வரிக்கு ஈரக்கொலை அறுந்தது போல இருந்தது. அழுதாள். வாய்விட்டு அழுதாள்.

‘எதுக்குடி இப்புடி அழுவுற’, என்று குரல் கொடுத்தாள் முத்தம்மா. அவர்கள் கீற்று முடையும் இடத்திலிருந்து குரல் வந்தது. ஈஸ்வரி பதில் சொல்லவில்லை.

உரத்துச்சொல்ல உடலில் தெம்பில்லை. மனதிலும் தெம்பில்லை.

முத்தம்மா எழுந்து வந்தாள். திண்ணைக்கு அருகே நின்று கொண்டு இவளைப் பார்த்தாள். ‘சொல்லுடி.. அடக் கழுத… சொல்லிட்டு அழுதாத்தானே என்னான்னு தெரியும்’, என்றாள்.

முத்தம்மா பக்கத்து வீட்டுக்காரி மட்டுமல்ல, தலைவியும் கூட.

ஈஸ்வரி சொல்வதற்கு முன்பு கெழவி முந்திக்கொண்டாள். ‘ஈசுக்குக் கர்ப்பப்பைய அறுத்துடனுமாம்’.

‘யாருடி சொன்னா?’, என்றாள் முத்தம்மா.

‘சீதாலட்சுமி டாக்டரு சொன்னாங்களாம்.. போயிருந்தோம்’, என்று காளியிடமிருந்து பதில் வந்தது.

‘அடிப்பாதகத்தி.. எத்தனை மொற சொன்னேன்டி நானு.. கலைக்காதடி.. கலைக்காதன்னு எத்தனை மொறச் சொன்னே... இப்ப ஆப்பரேஷனு ஆச்சின்னா எத வித்துடி செஞ்சிப்ப?’ என்று கோபப்பட்டாள் முத்தம்மா.

முத்தம்மாவுக்கு ஈஸ்வரியின் கதை முழுக்க அத்துபடி. கர்ப்பப் பை ஆப்பரேஷன் என்றால் அந்த டாக்டரம்மா பத்து ரூபாய்க்கு மேல் கேட்கும் என்றும் முத்தம்மாவுக்குத் தெரியும்.

‘சரி நான் பொறப்படறேன்’, என்று தோழரின் குரல் கேட்டது. அவரும் கீற்று முடையும் இடத்தில்தான் இருந்திருப்பார் போல.

‘அட இரு தோழரு… ஈசு அழுதுகிட்டு கெடக்கிறா.. நீ போறங்கற’, என்று முத்தம்மா திரும்பிப்பார்த்து குரல் கொடுத்தாள்.

தோழர் எழுந்து வந்தார். ஈஸ்வரி வாரிச்சுருட்டிக்கொண்டு, முணகிக்கொண்டே எழுந்து உட்காரப் பார்த்தாள்.

தோழர் திண்ணையில் அமர்ந்துகொண்டார். குண்டு பல்பு வெளிச்சத்தில் அவரின் முன்னந்தலை வழுக்கைத் தெரிந்தது. இவளையே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘சரி டாக்டர் என்ன சொன்னாங்க’, என்று ஈஸ்வரியைப் பார்த்து கேட்டார்.

ஸ்கேன் எடுத்ததையும், கர்ப்பப் பையில புண் என்றும் டாக்டர் சொன்னதைச் சொன்னாள்.

‘சரி.. ஸ்கேனக் காட்டு’, என்றார் தோழர்.

‘ஸ்கேனு கொடுக்கல’, என்றாள் ஈஸ்வரி ஈனசுரத்தில்.

சொல்லி முடிப்பதற்குள் தோழர் கேட்டார், ’ஏன் கொடுக்கல?’.

‘கம்பியூட்டர்ல காட்னாங்க.. ரொம்ப மோசமா இருக்குன்னு சொன்னாங்க’, என்றாள் ஈஸ்வரி.

‘ஓஹோ.. அப்புடியா?’ தோழர் குரலில் கிண்டல் இருந்ததாகப் பட்டது.

‘ஒனக்கு கம்யூட்டர் காட்டி வௌக்கம் கொடுத்தாங்களாங்காட்டியும்’, என்றார் தோழர். அவர் உதடு பிரியாமல், வழக்கம்போல, சிரிக்கிறார் என்று தெரிந்தது.

‘மருந்து சீட்டைக் காட்டு’, என்றார்.

மருந்து சீட்டெல்லாம் இல்லை. டாக்டர் கிளீனிக்கிலேயே கடையும் இருந்தது. நேரடியாக மருந்துதான் கொடுத்தார்கள் என்பதைச் சொன்னாள். அப்புறம் தோழர் அந்த கேரி பேக்கைத் திறந்து, கண்ணாடி போட்டுக்கொண்டு குண்டு பல்பு வெளிச்சத்தில் மாத்திரைகளைத் திருப்பித் திருப்பிப் படித்துப் பார்த்தார்.

‘ஆண்டி பயாடிக், பெயின் கில்லர்.. சத்து மாத்திரை’, என்றவர் முழம் உயரத்துக்கு இருந்த டானிக் பாட்டிலைப் பார்த்தவர் வாய்விட்டு சிரித்தார்.

‘என்னா தோழர்.. ஒனக்கு எங்க பாடு கிண்டலா இருக்கா?’, என்று முத்தம்மாள் பொய்க் கோபத்துடன் கேட்டாள்.

‘லூசுங்களா.. லூசுங்களா..’, என்றார் தோழர். லூசு என்பது அவருக்குப் பிடித்த வார்த்தை.

’லூசுங்களா.. இது எதுக்க இருக்கிற பாண்டியன் தென்னந் தோப்புல இருக்கிற கீர.. அத சாறாக்கி.. ஒங்ககிட்ட’, என்றவர் டானிக் பாட்டில் அட்டையைப் பார்த்துவிட்டு, ‘நூத்து நாப்பது ரூபா புடுங்கிட்டாங்க.. அந்த டாக்கடரம்மாவுக்கு எப்படியும் இந்த வகையில நாப்பது ரூபா வரவு’ என்று சிரித்தார்.

அப்புறம் எழுந்தவர் முத்தம்மாவைத் தனியே அழைத்துச் சென்றார்.

‘இதல்லாம் ஆம்பள பேசுனா தப்பாச் சொல்வானுங்க.. ஊருல.. நாங்கேக்குறத ஈசுகிட்ட கேட்டு சொல்லு’ என்றவர் முத்தம்மாவிடம் சில கேள்விகளைச் சொல்விட்டு பைக்கருகே சென்று சிகெரெட் பிடிக்கத் துவங்கிவிட்டார்.

முத்தம்மா திரும்பி வந்து ஈஸ்வரியிடம் கேட்டதைத் தோழரிடம் சொன்னாள்.

‘சரிதான்.. நாளைக்கு ஆறு மணிக்கு அப்புறம் ஈச கூப்பிட்டுட்டு வா. மந்த கிட்ட வேல்முருகன் டாக்டர் இருக்காரு.. அவருகிட்ட காட்டு… ஈசுக்கு கர்ப்பப்பையெல்லா எடுக்க வேண்டி வராது’, என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

முத்தம்மா சொன்னதை ஈஸ்வரியால் நம்ப முடியவில்லை. அவளுக்குத் தோழரைத் தெரியும். ரொம்பப் படித்தவர். ஆனால், டாக்டர் பொய் சொல்வாரா? கம்யூட்டருமா பொய் சொல்லும்?

மறுநாள் மாலையில் தோழர் சொன்னபடி மந்தைக்குப் போய் சேர்ந்தாள். துணைக்கு முத்தம்மாவை அழைத்து வந்திருந்தாள். போன் போட்டு தோழரையும் வரச்சொல்லும்படி முத்தம்மாவை நச்சரித்தாள்.

தோழர் வந்து சேர்ந்தவுடன் மூவருமாக டாக்டர் வீட்டுக்குச் சென்றார்கள். டாக்டர் வீட்டு வராந்தாதான் கிளினிக். வழக்கம்போல மூலையில் மருந்து கடையிருந்தது. பென்ஞ்சில் உட்கார்ந்து கொண்டனர். இரண்டு மூன்று பேர் காத்துக்கொண்டிருந்தனர்.

மருந்துக் கடைக்காரரிடம் தோழர் ரொம்பப் பழகியவர் போல ஏதோ பேசிக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு மருந்து பேரைச் சொல்லி இப்போது என்ன விலை என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு மேல் ஈஸ்வரிக்குப் புரியவில்லை.

இவர்கள் முறை வந்தபோது தோழர் முன்னே சென்று நின்றுகொண்டே ஏதோ இங்கிலீசில் பேசினார். அப்புறம் வெளியே போய்விட்டார்.

அப்புறம் டாக்டர் இவளின் அடிவயிற்றை அழுத்திப் பார்த்தார். லேடி டாக்டர் கொடுத்த மாத்திரைகளைப் பார்த்தார். தோழர் முத்தம்மாவை அனுப்பி கேட்கச் சொன்ன கேள்விகளையெல்லாம் டாக்டரும் கேட்டார்.

‘ஒன்னுக்குப்போற எடம் வீங்கிட்டு வலிக்குதுன்னு சொல்றா டாக்டரு’, என்று முத்தம்மா கூடுதல் விவரம் சொன்னாள்.

‘யூரின் டெஸ்ட், பிளட் டெஸ்ட் எடுத்தாங்களா?’, என்று கேட்டார்.

‘இல்ல டாக்டரு.. நேர ஸ்கேன் எடுத்தாங்களாம்’, என்றாள் முத்தம்மா முந்திக்கொண்டு.

அந்த டாக்டர் தலையைக் குனிந்துகொண்டு முகத்தை மறைத்துக்கொண்டு பின் தலையைச் சொறிந்துவிட்டுக்கொண்டு விறுவிறுவென்று எழுதினார்.

‘இந்த மாத்திரையெல்லாம் சரியா சாப்பிடுங்க.. நல்லா சாப்பாடு சாப்பிடுங்க.. சரியாயிடும்.. சாதாரண இன்பெக்ஷன்தான்.. சரியாயிடும்.. ஆகலன்னா.. யூரின் டெஸ்ட், பிளட் டெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் பார்க்கலாம்’, என்றார்.

‘இல்ல டாக்டரு.. கர்ப்பப் பைய எடுக்கனும்னு டாக்டரு சீதா..’, என்று ஆரம்பித்த முத்தம்மாள் முடிப்பதற்குள் டாக்டர் குறுக்கிட்டு,‘அதெல்லா வேணாம்மா.. அப்புடி ஒன்னும் பெரிசா இல்ல.. புரியலன்னா… ஒங்க தோழரக் கேளு’, என்றபடி இவர்களை அனுப்பி வைத்தார்.

மருந்துக் கடையில் 130 ரூபாய் வாங்கிக்கொண்டார்கள். ‘டாக்டருக்கு?’ என்று ஈஸ்வரி இழுத்தபோது, ‘எல்லாஞ் சேத்துத்தாம்மா’, என்றார் மருந்துக் கடைக்காரர்.

‘இப்புடி ஒரு டாக்டரா.’ என்றிருந்தது ஈஸ்வரிக்கு. நேற்று 500… அதற்கு முன்பு 500 என்று அந்த லேடி டாக்டருக்குக் கொட்டிக்கொடுத்திருந்தாள். தவணைக்கு எடுத்து வைத்திருந்தப் பணத்தை டாக்டருக்குக் கொடுத்திருந்தாள். ஆனால், சரியாகவில்லை.

அவர்கள் வெளியே வந்தபோது தோழர் சிகெரெட் பிடித்தபடியே நின்று கொண்டிருந்தார்.

‘ந்தா தோழர்.. இப்புடி சிகெரட் புடிச்சன்னா இதே டாக்டருகிட்ட நீ வரணும்’, என்று முத்தம்மா தோழரை மிரட்டினாள்.

அவர் பதிலேதும் சொல்லாமல் ‘சரி வரட்டா’, என்று புறப்பட்டார்.

‘இரு தோழரே ஒரு டீ சாப்பிட்டுப் போ’, என்று முத்தம்மா அவரை நிறுத்தினார். ‘ஓ கே’, என்றார் தோழர்.

’டீயின்னா எப்பவும் மாட்டேன்னு சொல்லமாட்டியே’, என்று முத்தம்மா கிண்டல் செய்தாள்.

’ஓசி டீய விட முடியுமா’, என்றார் தோழர் பதிலுக்கு.

அப்புறம் யோசித்தபடியே, ‘முத்தம்மா.. போலீஸ் ஸ்டேஷன்ல காசு கேட்டா குடுப்பியா’, என்று கேட்டார்.

‘இப்ப கொடுக்க மாட்டேன். ஆனா.. கட்சிக்கு வரதுக்கு முன்னடி கொடுத்திருக்கே’, என்றவள், ‘எனக்கு அப்ப வெவரம் தெரியதுல்ல’ என்று சேர்த்துக்கொண்டாள்.

‘அதாம் பிரச்சனையே.. ஒங்களுக்கு வெவரம் தெரியாதுன்னுதா போலீசும் கொள்ளையடிக்குது.. அந்த டாக்டரம்மாவும் கொள்ளையடிக்குது..’, என்றபடி நடந்தார். மூவரும் பேசிக்கொண்டே நடந்தார்கள். தோழர் நிறைய பேசினார். அரசு மருத்துவத் துறையை பணக்காரர்களுக்கு தானம் செய்துவிட்டது என்று துவங்கி பேசிக்கொண்டே நடந்தார்.

தோழர் சொல்வதெல்லாம் அவர்களுக்குப் புதிதாக இல்லை.. ஆனால், பழகிப்போன விஷயங்களுக்கு என்ன பொருள் என்று புரிந்தது.

Pin It