கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது. அதன் சாரம்சம் பின்வருமாறு: “பழங்குடி மக்களுக்கு இனச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் கட்சியின் அரசியல் அணிகளில் ஒன்றான தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் முன்முயற்சியில் (ஏப்ரல் 24) முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான பெண்கள் உள்பட சுமார் 10 ஆயிரம் பழங்குடி மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், அகில இந்திய ஆதிவாசிகள் சங்கத் தலைவருமான பிருந்தாகாரத் முற்றுகைப் போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தின் விளைவாக கோரிக்கைகளை ஏற்று கால வரம்புக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்த தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது.”

அதே வாரத்தில் ஆங்கில வார இதழ் ஒன்று, ஆட்சியைத் தக்க வைப்பதற்காக திரிபுராவை ஆளும் சிபிஎம் கட்சியினர், மாற்றுக் கட்சிகளில் சேரும் பழங்குடியினப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்து மிரட்டுவதாக ஓர் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டிருந்தது. பழங்குடிப் பெண்கள் பாலியல் துன்பத்திற்குள்ளான ஆறு சம்பவங்களையும், பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களையும் விரிவாகப் பதிவு செய்திருந்தது. காங்கிரஸ் அல்லது பாஜக சார்பு பத்திரிக்கை என்றோ, முதலாளித்துவப் பத்திரிக்கை என்றோ கூறி அதனை நாம் நிராகரித்துவிட முடியாது. ஏனெனில் காங்கிரஸ், பாஜகவின் ஊழல்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவதோடு, பன்னாட்டு/உள்நாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்படும் இந்திய இயற்கை வளங்கள் குறித்தும், அதனால் நிலமிழந்து தவிக்கும் அடித்தட்டு தலித், பழங்குடியின மக்களின் வாழ்நிலை குறித்தும் தொடர்ந்து பதிவு செய்து வரும் ‘தெகல்கா’ பத்திரிக்கையில்தான் (ஏப்ரல் 28, 2012) இச்செய்தி (http://old.tehelka.com/label/tripura-rapes/) வெளியாகியிருந்தது.

செய்தியின் தமிழாக்கம்:

சூனியக்காரிகளின் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் பாலியல் வன்புணர்ச்சி. 7 பெண்களின் கதை.

திரிபுரா சிபிஎம்மின் கடைசி கோட்டை. ஆனால் அங்கு எதிரிகளைப் பணியவைக்க எடுக்கப்படும் சிபிஎம்மின் முரட்டுத்தனமான முயற்சிகள் அக்கட்சியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன என்கிறார் ‘தெகல்கா’ வாரப் பத்திரிக்கையின் செய்தியாளர் இரத்னதீப் சௌத்ரி.

மார்ச்சு 20இல், தெற்கு திரிபுராவிலுள்ள தக்கா துளசி எனும் சிற்றூரில் 20 வயதை நெருங்கும் இரண்டு பழங்குடிப் பெண்கள், பழங்குடி ஆண்களைக் கொண்ட ஒரு கூட்டத்தினரால் துன்புறுத்தப்பட்டு பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டனர். இந்நிகழ்வு பெரும்பாலான தேசிய ஊடகங்களில் வெளிவரவில்லை. அதிக அளவு எழுத்தறிவு வீதமும் சிற்றூர் வளர்ச்சிகளையும் அரசியல் விழிப்புணர்வும் கொண்டதாகத் தற்புகழ்ச்சி செய்துகொள்ளும் ஒரு மாநிலத்தைப் பற்றி இந்நிகழ்வு மூலம் அறிய வடகிழக்குப் பகுதியிலுள்ள ஊடகங்களும் தவறிவிட்டன. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் வலியும் வேதனையும் இடதுசாரிகளின் கடைசிக்கோட்டையான திரிபுராவின் அனைத்துப் பழங்குடிப்பகுதிகளிலும் உணரப்படுகிறது, பேசப்படுகிறது.

உண்மையில் 19ஆண்டு கால இடதுசாரி ஆட்சியின் விளைவுகளை திரிபுரா பெண்கள் அனுபவித்து வருகின்றனர். பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர்; கூட்டத்தினரால் வன்புணர்ச்சி செய்யப்படுகின்றனர்; அதோடு, கொலையும் செய்யப்படுகின்றனர். கட்டப்பஞ்சாயத்துகள் மூலம் பழங்குடிப் பெண்கள் 'சூனியக்காரிகள்' என்று முத்திரை குத்தப்படுகின்றனர். அவர்களின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இவை எல்லாம் அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படுகின்றன.

தேசியக் குற்றப்பதிவுத் துறையின்(National Crime Record Bureau (NCRB)) தரவுகளின் படி, இந்தியாவிலேயே பெண்களுக்கெதிரான குற்ற வீதம் மிக மோசமாக இருப்பது திரிபுராவில்தான். (2010இல் ஒவ்வொரு ஒரு லட்சம் பெண்களில் 46.5 பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெற்றன) ஏப்ரல் 2010லிருந்து மார்ச்சு 2011 வரை, பெண்களுக்கான திரிபுரா மன்றம் (Tripura Commission for Women (TCW)) பெண்களுக்கெதிரான குற்றங்களுக்காக 913 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அவற்றில் 62 வழக்குகள் பழங்குடியினருக்கு எதிரானவை.

திடீரென ஏன் பழங்குடிப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்ச்சி அதிகரித்திருக்கிறது? வரலாற்றின்படி இடதுசாரிகள் பழங்குடிப் பகுதிகளில் வலுவான ஆட்சியைக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது இடதுசாரிகளின் ஆதவுத் தளம் அழிந்து வருகிறது. நாள்தோறும் பழங்குடியினர் சிபிஎம்மை விட்டு வெளியேறி உள்ளூர்க் கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். ஏனென்றால் அரசுத் திட்டங்களின் பலன்களை சிபிஎம் தலைவர்கள் தங்கள் உறவினர்களுடனும் கட்சிக்காரர்களுடனும் மட்டுமே பகிர்ந்து கொள்வதாக பழங்குடியினர் நம்புகிறார்கள். மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட படுவீழ்ச்சியினால் நிலைகுலைந்துபோன சிபிஎம்மினர் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அனைத்துத் தந்திரங்களையும் கையாண்டு வருகின்றனர். ஆனால் இப்பொழுது முதல்வர் மாணிக் சர்க்காரும் பெண்களுக்கான திரிபுரா மன்றமும்(TCW) இந்த அதிர்ச்சியளிக்கும் குற்ற வீதத்திற்கு விளக்கமளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளர்.

“திரிபுராவில் பெண்களுக்கெதிரான குற்ற வீதம் அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது” என்கிறார் சிபிஎம்மின் மாநிலப் பொதுச்செயலாளர் பிசான் தர். மேலும் “கடந்த 19 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கிறோம். எங்கள் ஆட்களின் ஒரு பிரிவினர் அதிகாரத்தின் பக்கம் சாய்ந்திருக்கிறார்கள். சில சமயங்களில் கொள்கை பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன்” என்கிறார் அவர்.

அரசியல் அழுத்தம் மிக அதிகமாக உள்ளதால் கண்காணிக்க வேண்டிய 'பெண்களுக்கான திரிபுரா மன்றம் (TCW)' அரசின் இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கிறது. “பாலியல் வன்புணர்ச்சி போன்ற சிக்கலான பிரச்சினைகளின் மீது நடத்தப்படும் அரசியல் விரும்பத்தக்கதல்ல. பாலியல் வன்புணர்ச்சி வழக்குகளின் அதிகரிப்பு எங்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. நாங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அரசு அமைதியாக இருக்கிறது என்பது உண்மையல்ல” என்கிறார் பெண்களுக்கான திரிபுரா மன்றத்தின் தலைவர் டாக்டர்.தபாத்தி சக்ரவர்த்தி.

ஆனால் இச்சிக்கலை அரசியலாக்காமல் விலகியிருக்கும் எண்ணம் காங்சிரசிடம் துளியும் இல்லை. “பழங்குடி மக்களின் வாக்கு வங்கிதான் இடதுசாரிகளை நீண்ட காலமாக ஆட்சியில் வைத்திருக்கிறது. ஆனால் அவர்கள் அம்மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. சிபிஎம்மினர் பெண்களுக்கெதிராக கொடிய குற்றங்களை நிகழ்த்தியதோடல்லாமல் தப்பித்தும் விடுகின்றனர். நாங்கள் இத்தீமைக்கு எதிராகப் போராடுவோம்” என்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினருமான இரத்தன் இலால் நாத்.

பழங்குடிப்பெண்கள் ஏன் இந்த ஆபத்திலுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள தெகல்கா தொலைதூரங்களிலுள்ள சிற்றூர்களுக்குப் பயணம் செய்தது. எங்களை அழைத்துச் சென்ற ஓட்டுனரே முதல் செய்தியைக் கொடுத்தார். “திரிபுரா தேவையான அளவு மின்சாரத்தைக் கொண்டுள்ளது. தொலைதூரத்திலுள்ள பகுதிகளில் கூட நல்ல சாலை வசதிகள் உள்ளன.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட மாநிலம் இதுவாகும். ஆனால் உண்மை என்னவென்றால் ஒருவர் ஆளுங்கட்சி ஆதரவாளராக இருந்தால் மட்டுமே அவர் வளர்ச்சியின் பயனை அடைய முடியும். அரசியல் எதிரிகள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சிபிஎம்மினரால் புறக்கணிக்கப்படுகிறார்கள்; சிபிஎம்மினரால் மனதளவில் துன்புறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படுகின்றனர்.” என்றார் அந்த ஓட்டுனர்.

பழங்குடியினருக்கெதிரான ஏராளமான வன்முறை நிகழ்வுகள் திரிபுராவின் மட்டமான அரசியல் விவகாரங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. 2008 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 20 தொகுதிகள் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டத் தனித்தொகுதிகளாகும். இந்த 20 தொகுதிகளில் 19இல் இடதுசாரிகள் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பழங்குடியினப் பெண்கள் மட்டும் இந்த கொடுமைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. பெண்களுக்கான திரிபுரா மன்றத்தின் ஏப்ரல் 2010லிருந்து மார்ச்சு 2011 வரையிலான பதிவுகள், 28.37 விழுக்காடு குற்றங்கள் ஆதிதிராவிடர்களுக்கு எதிராகவும் (SC), 13.14 விழுக்காடு குற்றங்கள் இசுலாமியர்களுக்கு எதிராகவும், 20.37 விழுக்காடு குற்றங்கள் ஓபிசி(OBC) பிரிவினருக்கு எதிராகவும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கின்றன. தங்களின் கடைசிக் கோட்டை மிகப்பெரும் சிக்கலில் இருப்பதை உணர்ந்து கொள்ள இடதுசாரிகளுக்கு இந்தத் தரவுகள் போதுமானது.

சம்பவம் 1

காங்கிரசு உறுப்பினர்களுடன் சேர்ந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என நாங்கள் எச்சரிக்கப்பட்டோம்.

பிங்கி திரிபுரா,22 & இராக்கிமாலா திரிபுரா, 22.

தக்கா துளசி, தெற்கு திரிபுரா மாவட்டம்.

PINKY_RAKHIMALA

ஒன்று விட்ட சகோதரிகளான இராக்கிமாலா திரிபுராவும், பிங்கி திரிபுராவும் தக்கா துளசி சிற்றூரில் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கின்றனர். இருவருக்கும் வயது 22.  தனது கணவர் கொள்ளை நோயில் தாக்குண்டு கடந்த ஆண்டு இறந்தபின், இராக்கிமாலா நாட்டுச் சாராயத்தைக் காய்ச்சி, விற்று தன் வாழ்வை ஓட்டி வருவதோடு தன் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார். மேலும் அவர் 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தில்' தினக்கூலியாக வேலை செய்கிறார்.

பிங்கி தன் கணவன் தன்னைச் சித்ரவதைப்படுத்தியதால் அவனை விட்டுப் பிரிந்து வாழ்கிறார். ஆனால் மணவிலக்குக் கேட்குமளவுக்கு அவருக்குத் தைரியம் வரவில்லை. ஏனென்றால் அவர் கணவன் சிபிஎம்மைச் சேர்ந்த ஒரு முரடன் என்பது சிற்றூருக்கே தெரியும். பிங்கி தன் மூன்று குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும்.

முதல் தகவல் அறிக்கையின்படி(FIR), ஆனந்தா தலைமையில் ஆறு பேர் கொண்ட பழங்குடிக் கூட்டத்தினர் மார்ச்சு 20ஆம் நாள் பிங்கியையும் இராக்கிமாலாவையும் பிடித்து அடித்தனர். பின்னர் அவர்களை சிபிஎம் பஞ்சாயத்து உறுப்பினரான பிரத்தலட்சுமி திரிபுராவின் வீட்டிற்கு இழுத்துச் சென்றனர். அங்கே சகோதரிகள் இருவரும் சித்திரவதைப்படுத்தப்பட்டனர். அவர்களின் உடைகள் உருவப்பட்டன.

“நாள்தோறும் அவன் செய்யும் சித்ரவதைகளால் அவனை விட்டுப் பிரிந்து வந்து விட்டதால் ஆனந்தா என் மீது சினத்துடன் இருந்தான்” என்கிறார் பிங்கி. “இந்தக் கூட்டத்தினர் முன்பே எங்களைத் துன்புறுத்த முயற்சித்தனர். சில மாதங்களுக்கு முன்பு அகர்தலாவில் நடந்த காங்கிரசு பேரணியில் நாங்கள் கலந்து கொண்டதால் அவர்கள் எங்கள் மீது சினம் கொண்டிருக்கலாம். எதிர்க்கட்சியினருடன் சேர்ந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என நாங்கள் எச்சரிக்கப்பட்டிருந்தோம்.” என்கிறார் பிங்கி. இத்தகவலைக் காவல் துறையினரிடம் தெரிவித்ததாக பிங்கி கூறுகிறார். ஆனால் முதல் தகவல் அறிக்கையில் இத்தகவல் இல்லை.

பின்னர் சகோதரிகள் இருவரும் காட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே அவர்கள் கூட்டத்தினரால் இரவு முழுவதும் பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டனர்.

“பொழுது விடிந்தபோது அடிபட்ட நிலையிலிருந்த இளம்பெண்களைக் கண்டோம். அவர்கள் உடலில் கிட்டத்தட்ட உடைகளே இல்லை. அவர்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.”  என்கிறார் தன் பெயரை வெளியிட விரும்பாத சிற்றூர்வாசி ஒருவர்.

காவல்துறையினர் ஒத்துழைக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். வழக்குப் பதிவு செய்வதில் ஏன் தாமதம் என்று காவல்துறையிடம் கேட்டபோது, “தாமதிக்கவே இல்லை. நாங்கள் சரியான நடவடிக்கை எடுத்தோம். குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்தோம்” என்றார் தெற்கு திரிபுராவின் காவல்துறைக் கண்காணிப்பாளரான அர்ச்சுன் தெப்பார்மா.               

குற்றம்சாட்டப்பட்டவர்களில் நிபேந்திராவும் சிதேந்திராவும் உள்ளூர் சிபிஎம் தலைவர்களின் மகன்கள். “இந்த இளைஞர்கள் எங்கள் பகுதிக்கே நடுக்கத்தை ஏற்படுத்துபவர்கள். அவர்கள் சிபிஎம்மைச் சேர்ந்தவர்கள் என்பதால் என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்துவிட்டு எளிதில் தப்பிவிடுகின்றனர்” என்கிறார் உள்ளூர்வாசியான சிந்துராம் திரிபுரா.

அதேநேரத்தில் 'வழக்கைத் திரும்பப் பெறுவதற்காக வனத்துறை அமைச்சர் சிதேந்திரா சௌத்ரி தங்களுக்குக் கையூட்டு கொடுத்தார்' என பழங்குடிப் பெண்கள் பேசியதாகக் கூறப்படும் நேர்காணலின் காணொளியை வெளியிட்டு சிபிஎம்மிற்கு எதிரான தன் அரசியல் விளையாட்டை விளையாடியது காங்கிரசு.

“மார்ச்சு 28ஆம் தேதி சிதேந்திரா சௌத்ரி எங்களைப் பார்க்க வந்தார். எங்களுக்கு வேலை அளிப்பதாகவும், ஆளுக்கொரு வீடும் ஒரு இலட்ச உரூபாயும் தருவதாகவும் கூறி, எங்களை வழக்கைத் திரும்பப்பெறுமாறு கேட்டார். மேலும் நாங்கள் அவர் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்டார். நாங்கள் பயந்துவிட்டோம். பின்னர் அவரிடம் 'நாங்கள் எங்கள் கௌரவத்தை இழந்துவிட்டோம்.எங்களுக்கு இப்போது நீதி வேண்டும்' என்று கூறினோம்.” என்கிறார் இராக்கிமாலா. ஆனால் சௌத்ரி இதை மறுத்ததோடு இதெல்லாம் காங்கிரசின் அரசியல் விளையாட்டு என்றார்.

சிபிஎம் தங்கள் ஆட்களை விடுதலை செய்யக்கோரி பேரணி நடத்தியதாகவும் பாதிக்கப்பட்டோர் பாலியல் வன்புணர்ச்சி பழிப்புரைகளை(sex racket) மேற்கொள்வதாகக் கூறியதாகவும் உள்ளூர்வாசிகள் கூறினர். “இப்பெண்கள் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டிருந்தனர். அதனால் சினத்துடன் இருந்த சிற்றூர்வாசிகளால் தாக்கப்பட்டனர். பாலியல் வன்புணர்ச்சி என்பதெல்லாம் காங்கிரசின் திட்டமிட்ட நாடகம்” என்று சிபிஎம்மின் மாநிலச் செயலாளர் பிசான் தர் அகர்தலாவில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

“ஒரு பேச்சுக்காக நாங்கள் பாலியல் தொழிலாளிகள் என்றே வைத்துக்கொள்வோம். அதற்காக அவர்கள் எங்களை வன்புணர்ச்சி செய்யலாமா? சிபிஎம் தலைவர்கள் அவர்களின் ஆட்கள் செய்ததை நியாயப்படுத்த முயல்கிறார்களா?” என்ற எதிர்க் கேள்வி கேட்கிறார் பிங்கி.

சம்பவம் 2

சி.பி.எம் தொண்டர்கள் அந்தப் பெண்ணை மிரட்டி, வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு கூறினார்கள்

நில்லிமா தெபர்மா- வயது 27 – சிகரிபரி, ஹோவை மாவட்டம்

(தமிழாக்கம் – ப.நற்றமிழன்)

NILIMAதனது கிராமம் வளர்ச்சியடைய வேண்டும் என்று எண்ணிய நில்லிமா தெபர்மா 2010ஆம் ஆண்டு ‘திரிபுரா தேசிய மாநாட்டு கட்சியின்’ சார்பில் பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  27 வயதான இவர் சிகரிபரி ஊரின் நிலமில்லாத பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.

‘திரிபுரா தேசிய மாநாட்டு கட்சியின்’ பொதுச் செயலாளரான அனிமேஷ் தெபர்மா, ”சில சி.பி.எம் தொண்டர்கள் தன்னை பயமுறுத்துவதாகவும், வேட்புமனுவை திரும்பப்பெற கோருவதாகவும் நில்லிமா எங்களிடம் கூறினார். இதனால் தனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு  நில்லிமா தன் வீட்டில் தங்காமல் வேட்புமனு திரும்பப் பெறும் கடைசி நாள் வரை வேறு இடத்தில் தங்கி வந்தார், ஆனாலும் இது அவரை கூட்டு வன்புணர்ச்சியிலிருந்தும், கொலை செய்யப்படுவதிலிருந்தும் பாதுகாக்கவில்லை.” என்கிறார்.

முதல் தகவல் அறிக்கையின் படி 19 பிப்ரவரி 2010 அன்று ஒரு திருமணத்திற்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த நில்லிமாவை சி.பி.எம் ஆதரவாளரான அசன்கா தெபர்மா என்பவரின் வீட்டில் வைத்து , ”திரிபுரா மாநில ரைபிள்ஸ்” பிரிவைச் சேர்ந்த மது அருந்திய சிலர் கூட்டு வன்புணர்ச்சி செய்து சாகும் வரை சித்ரவதை செய்துள்ளனர். சிகரிபரி மாவட்டம் ஆயுதக்குழுக்களின் கோட்டையாக கருதப்பட்டதால் இங்கு ”திரிபுரா மாநில ரைபிள்ஸ்” பிரிவு தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. நில்லிமாவை கொலை செய்த ஜவான்கள் அவளின் இறந்த உடலைக் கொண்டு சென்று, அருகிலுள்ள வனப்பகுதியிலுள்ள மரத்தில் அவளே தூக்குபோட்டுக்கொண்டதைப் போல தொங்கவிடத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த முயற்சி கிராம மக்களால் தடுக்கப்பட்டது.  

      கணவன் மனோஜ் தெபர்மாவின் குடும்ப வன்முறையினால் அவரைப் பிரிந்த நில்லிமா கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது அம்மா வீட்டில் வாழ்ந்து வந்தார். இப்பொழுது நில்லிமாவின் இரண்டு குழந்தைகளையும் அவரது அம்மா நந்துரணி தெபர்மா வளர்த்து வருகின்றார். “என் அம்மா கொல்லப்பட்டுள்ளார், அவரை கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்கிறாள் நில்லிமாவின் ஆறு வயது மகளான பாயல்.

   “தினமும் இரண்டு வேளை சோற்றுக்கே நாங்கள் சிரமப்படுகின்றோம். இந்தத் துன்பத்திற்குப் (நில்லிமா கொலை) பிறகு எங்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. எங்களைப் பார்க்க வந்த முதலமைச்சரும் கூட  எந்த உதவியும் செய்யவில்லை. ஒரு வேளை எனது மகள் எதிர் கட்சிகாரராக இருந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் நாங்கள் இந்தியாவின் குடிமகன்களா இல்லையா? எங்களது பாதுகாப்பிற்கு யார் உத்திரவாதம் அளிப்பது?” என நம்மை நோக்கி கேள்விக் கணைகளை வைக்கின்றார் நந்துரணி.

இந்த கொடூரமான நிகழ்வு பழங்குடி சமூகத்திற்குள்ளே  அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுமளவிற்கு அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. இதுவரை இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் 3

அவர்கள் என்னை நிர்வாணமாக்கி ஒவ்வொரு அறையாக இழுத்துச் சென்றார்கள்

இரத்னா தெப்பார்மா, 31 செயந்தி பசார்,தலாய் மாவட்டம்.

இரத்னா தெப்பார்மாவின் தந்தையான, மறைந்த மதன் தெப்பார்மா உள்ளூர் காங்கிரசு தலைவராக இருந்தவர். தந்தையைப் போலவே மகளும் காங்கிரசு ஆதரவாளர். இரத்னாவும் அவருடைய கணவர் நாகேந்திராவும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கூலித் தொழிலாளிகள். இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

RATNAமே23,2010 அன்று இரத்னாவின் கணவர் வெளியில் சென்றிருந்தார். அப்போது சி.பி.எம் ஆதரவளாரான மோகன் தெப்பார்மா இரத்னாவை, மேற்கு தலுச்சாரா பஞ்சாயத்துத் தலைவரான இரங்கலட்சுமி தெப்பார்மாவின்  வீட்டிற்கு செல்லச் சொன்னார். அங்கு சென்ற பிறகுதான் தான் ஒரு கட்டப் பஞ்சாயத்துக் கூட்டத்திற்கு வந்திருக்கிறோம் என்பது இரத்னவிற்குப் புரிந்தது. அந்த முரட்டுக் கூட்டத்தினர் இரத்னாவின் நடத்தை சரியில்லை என்று சொல்லி அவரை அடிக்கத்தொடங்கினர்.

“அவர்கள் என் உடைகளை உருவினர், செருப்பு மாலையை அணிவித்தனர். மேலும் ஒரு வெற்றுத் தாளில் கையொப்பமிட வைத்தனர். பின்னர் என்னை ஒவ்வொரு அறையாக இழுத்துச் சென்றனர். பெரும்பாலும் சி.பி.எம்மைச் சேர்ந்தவர்களாக இருந்த அந்தக் கூட்டத்தினர் என் முடியைப் பிடித்து, நான் தவறான நடத்தை கொண்டவள் என்று ஒப்புக்கொள்ளுமாறு என்னை வற்புறுத்தினர். ஒவ்வொறு முறை நான் மறுத்த போதும் என்னை மறைவிடங்களில் அடித்தனர்” என்கிறார் இரத்னா.

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யக்கூட தயங்கிதாகச் சிற்றூர்வாசிகள் கூறுகின்றனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரும் சரணடைந்தனர். ஆனால் இப்போது பிணையில் வெளியில் வந்துவிட்டனர். உள்ளூர் விவசாயியான அதுல் தாசு, "வழக்கைத் திரும்பப் பெறுமாறு இரத்னாவின் குடும்பத்தினருக்கு பெரும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஒட்டுமொத்த சிற்றூரும் சி.பி.எம் ஆட்களின் அச்சுறுத்தலில் உள்ளது. சாட்சிகளும் அச்சத்தினால் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கின்றனர்." என்று கூறுகிறார்.

இரத்னா சொல்வது அனைத்தும் உண்மை என அண்டை வீட்டிலிருப்பவரும் முக்கிய சாட்சியுமான சோசுதானா தெப்பார்மா கூறுகிறார். “அந்நிகழ்ச்சியை நினைக்கும் போதெல்லாம் நான் உறைந்து போகிறேன். அவர்களின் செருக்கைப் பாருங்கள். அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி எங்களைச் சான்றுகள் கொடுக்க விடாமல் தடுக்கிறார்கள்” என்கிறார் சோசுதானா.

குற்றவாளிகள் அரசியல் செல்வாக்குடையவர்கள் என்பதால் அவர்களை எதிர்த்து நீதிக்காகப் போராடுவது அறிவுடமை அல்ல என்று காவல்துறையினர் தெரிவித்ததாக இரத்னாவின் கணவரான நாகேந்திரா கூறினார். அவர்களுக்குக் கொலை மிரட்டல்களும் வந்துள்ளன. எனினும் இரத்னா, நாகேந்திரா இணையர் போராடுவதில் உறுதியாக உள்ளதாக சூளுரைக்கின்றனர்.

சம்பவம் 4

மனைவியின் தங்கையுடன் உறவு கொள்ள என்னை கட்டாயப்படுத்தினர்

கமலசிரி திரிபுரா, 48& தர்மசிரி திரிபுரா,60

சிக்கி சந்திரா பாரா,தெற்கு திரிபுரா மாவட்டம்.

மார்ச்சு 22ஆம் தேதி, சட்டமன்றத்தில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் முதல்வர் மாணிக் சர்க்கார் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “ஒரு கூட்டத்தினர் பிப்ரவரி 4ஆம் நாள் கமலசிரியையும் அவர் கணவர் மேசால் சந்திராவையும் சிக்கி சந்திரா பாரவிலுள்ள அவர்களது குடிசையிலிருந்து சாலிட்டா பன்குல் என்ற இடத்திற்கு ஒரு நோயரைக் குண்ப்படுத்துவதற்காக அழைதுதுச் சென்றனர். அந்த மக்கள் கமலசிரியை ஒரு சூனியக்காரி என்று நம்பினர். கமலசிரியும் மேசாலும் மறுத்ததால் அவர்கள் தாக்கப்பட்டனர். கமலசிரி தான் நோயரைக் குணப்படுத்த முடியாதென்றும் தன் சகோதரி தர்மசிரியால் குணப்படுத்த முடியுமென்றும் கூறினார். அந்தச் சிற்றூர்வாசிகள் தர்மசிரியைக் கொண்டுவந்தனர். தர்மசிரி நோயரைக் குணப்படுத்த மறுக்கவே அவரைக் கொடுமைப்படுத்தினர். தர்மசிரி பிப்ரவரி 9ஆம் நாள் இறந்து போனார்."

KAMALASRIஆனால் உண்மையில் அங்கே நடந்தது சித்திரவதையை விட மோசமானதாகும். 2 மாதங்களுக்குப் பிறகும் அந்தத் திகில் கமலசிரி மேசால் இணையரிடையே இன்னும் இருக்கிறது. "நீங்கள் உண்மையை வெளியிட்டால் நாங்கள் மீண்டும் துன்புறுத்தப்படுவோம். அவர்கள் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள். அவர்கள் சி.பி.எம்மிற்கு மிக நெருக்கமானவர்கள் என்பதால் காவல்துறையே அவர்களைக் கண்டு அஞ்சுகிறது.” என்றார் மேசால்.

ஆனால் கமல்சிரி, பழங்குடி மக்களின் மொழியான கோக்போராக்கில் தன்னுடையை பயங்கரமான கதையை விவரிக்கத் தொடங்கினார். “அவர்கள் எங்களை வற்புறுத்தி இழுத்துச் சென்றனர். நான் அவர்களிடம் எனக்குப் பில்லி சூனியம் எதுவும் தெரியாது என்று கூறினேன். ஆனால் அவர்கள் நம்ப மறுத்தனர். எங்களைக் கடுமையாக அடித்தனர். நாங்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டபோது சிறுநீரைக் குடிக்க வைத்தனர். எங்களுக்கு உணவு கொடுக்கவில்லை. என்னையும் என் சகோதரியையும் தினமும் பலமுறை வன்புணர்ச்சி செய்தனர்."

தலைமுடி மழிக்கப்பட்டு, தெய்னி(சூனியக்காரி) என்று முத்திரை குத்தப்பட்ட இந்தப் பழங்குடிப்பெண் கூறுவதிலிருந்து ஒன்று நமக்குத் தெளிவாகிறது. சம்பவத்தைப் பற்றி முதல்வருக்குத் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது அல்லது அவர் வேண்டுமென்றே உண்மையை மறைத்துள்ளார். கமலசிரியும் மேசாலும் அனைவர் முன்னிலையிலும் உடலுறவு கொள்ள வற்புறுத்தப்பட்டனர் என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.

ஆனால் மேசால் கூறும் உண்மை மேலும் கொடுமையானது. "அவர்கள் எங்களை அடித்ததில் நாங்கள் பலமுறை நினைவிழந்தோம். முதல்வர் கூறுவது போல அவர்கள் என்னை என் மனைவியிடம் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தவில்லை. ஆனால் மனைவியின் சகோதரியுடன் அவர்கள் முன்னிலையில் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தினர். அவர்களில் சிலர் புகைப்படங்களும் எடுத்தனர். எங்கள் உயிர் அவர்கள் கையிலிருந்தது. எங்கள் கண் முன்னே அவர்கள் தர்மசிரியைக் கொன்றனர். அவர்கள் எங்கள் இருவரையும் கொன்றாலும் கொன்றிருப்பார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் என்பதும் நாங்கள் சிபிஎம்மை விட்டு வெளியேறி காங்கிரசில் சேர்ந்ததும் தான்.”

இந்த சம்பவத்தை சூனியக்காரியை வேட்டையாடியாதாக மாற்றியதே ஒரு திட்டமிட்ட சதி என்று கூறுகின்றனர் உள்ளூர்வாசிகள். “இவர்கள் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் என்பதால் குறிவைக்கப்படார்கள் என்பதில் எங்களுக்குச் சிறிதும் ஐயமில்லை” என்கிறார் சிற்றூரிலுள்ள முதியவரான பிரேந்திரகுமார் திரிபுரா. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஆளுங்கட்சி ஆதவாளர்கள் என்பதும் உள்ளூர் சி.பி.எம் தலைவர் அருண் திரிபுராவிற்கு நெருக்கமானவர்கள் என்பதும் சாலிட்டா பான்குல்லிலுள்ள அனைவருக்கும் தெரியும்” என்கிறார் பீரேந்திரகுமார்.

ஆனால் காவல்துறையோ கொலை வழக்கை மட்டும் பதிவு செய்ததே தவிர, மேசால் சந்திரா காவல்நிலையத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி முறையிட்ட பிறகும் கூட கற்பழிப்பு வழக்குப் பிரிவைச் சேர்க்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.

“என்ன கொடுமைகள் செய்தாலும் ஆளுங்கட்சி ஆட்களைத் தொடக்கூடாதென்று ஆளுங்கட்சி கடும் அழுத்தம் கொடுக்கிறது. மீறி நாங்கள் நடவடிக்கை எடுத்தால் உடனடியாக தொலை தூரங்களுக்கு இட மாறுதல் கொடுக்கப்படும். கடைசியில் எல்லாரும் எங்களைத்தான் குற்றம் சொல்லுவார்கள்” என்கிறார் ஒரு மூத்த காவல்துறை அதிகாரி.

சம்பவம் 5

சிபிஎம் தன்னுடைய மக்களுக்கு என்ன செய்கிறது என்பதைப் பாருங்கள்!

மங்கலட்சுமி தெப்பார்மா,50

மகரம் சர்தார் பாரா,மேற்கு திரிபுரா மாவட்டம்.

MANGALAXMIமங்கலட்சுமி பல ஆண்டுகளாக தீவிரமான சிபிஎம் ஆதவாளராக இருந்தார். இரண்டு மகள்களைத் திருமணம் செய்து கொடுத்தபிறகு மங்கலட்சுமி தெப்பார்மா தன் இரண்டு மகன்களுடன் மகரம் சர்தார் பாராவில் வசித்து வந்தார். செப்டம்பர் 9ஆம் நாள், 2011 அன்று இரவு மங்கலட்சுமி தன்னுடைய வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பழங்குடியினரான சுக்குராம் தெப்பார்மா, சத்யராம் தெப்பர்மா, பிரசென்சித் தெப்பார்மா ஆகியோர் அவர் வீட்டிற்கு வந்தனர். மங்கலட்சுமி அவர்களுக்கு உள்ளூர் மதுவைக் குடிக்கக் கொடுத்தார். அவர்கள் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு  போதையிலிருந்த அந்த இளைஞர்கள் ஒரு வண்டியில் மங்கலட்சுமியை இழுத்துப்போட்டு துப்பாயை டோலா செர்ராவிற்கு (ஓடை) எடுத்துச் சென்றனர். அங்கு அவரைக் கூட்டமாக வன்புணர்ச்சி செய்தனர்.

“எனக்கு அவர்களை நன்றாகத் தெரியும். அவர்கள் இதே பகுதியைச் சேர்ந்தவர்கள்தாம். சிபிஎம்மைச் சேர்ந்தவர்கள். சிபிஎம் ஆதரவாளர்கள்” என்று மங்கலட்சுமி தன்னுடைய அழுகைக்கு நடுவே தெரிவித்தார். “இடது சாரிகள் பழங்குடி மக்களின் உரிமைக்காகப் போராடியதால் நான் சிறுவயதிலிருந்தே சிபிஎம்மை ஆதரித்தேன். ஆனால் கட்சி தன் சொந்த மக்களுக்கு என்ன செய்கிறது என்று பாருங்கள்” என்றார்.

குற்றவாளிகள் சிபிஎம்மைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று சிபிஎம் கட்சிக்காரர்கள் வற்புறுத்தியதால் மங்கலட்சுமி சிபிஎம்மை ஆதரிப்பதை நிறுத்திவிட்டார்.

சம்பவம் 6

சிபிஎம் பழங்குடி மக்களை அச்சுறுத்தி வைக்க முயல்கிறது.

சோதிலா உரூபினி, 5

போர்டோவால், மேற்கு திரிபுரா மாவட்டம்.

Jyotila

அவளுக்கு ஐந்து வயதுதான். ஆனால் அந்த இளம் வயது கூட அவனுக்குத் தயக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏழைப் பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த சோதிலா உரூபினி ஒரு முறையல்ல, இருமுறை வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டாள். சிபிஎம் தலைவரும் சம்பா சிற்றூரின் முன்னாள் தலைவருமான இரபி நாராயண் உரூபினி என்பவரின் மகன் சமீன் உரூபினிதான், சோதிலாவை வண்புணர்ச்சி செய்தான். திரிபுரா பழங்குடிப் பகுதிகளுக்காக, தனித்தியங்கும் மாவட்ட மன்றத்தின் கீழ் சம்பா சிற்றூர் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சோதிலா பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும்போது. 2011, செப்டம்பர் 28ஆம் நாள் சமீனால் வண்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை(FIR)  தெரிவிக்கிறது. ”2010இல் அவன் இதே குற்றத்தைச் செய்தான். ஆனால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எங்களை அவன் அச்சுறுத்தியதால் நாங்கள் அப்போது அமைதியாக இருந்துவிட்டோம்” என்கிறார் சோதிலாவின் தந்தையான பூர்ணா மாணிக் உரூபினி. இரண்டாம் முறை தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் பூர்ணா மாணிக் காவல்துறையை அணுகினார்.

பூர்ணா மாணிக் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியையும் தன் ஐந்து குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும். அவருக்குச் சொந்தமாக நிலமில்லை. அவர் பிபில்(BPL) அட்டை வைத்திருக்கிறார். ஆனால் அதுவும் அவர் காவல்துறையை அணுகிய பிறகு புதுப்பிக்கப்படவில்லை. அவர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்(MGNREGA) அட்டை வைத்திருக்கிறார். ஆனாலும் தினமும் வேலை கிடைப்பதில்லை.

“நான் திப்ரா சுதேசி தேசியக் கட்சியின்(Indigenous Nationalist Party of Twipra (INPT)) பேரணியில் கலந்து கொண்டதால் உள்ளூர் சிபிஎம் தலைவர்கள் என் மீது கோபமாக உள்ளனர்” என்று பூர்ணா தெரிவித்தார். சம்பவத்திற்குப் பிறகு, இதுவரை எந்த அதிகாரியோ அமைச்சரோ பூர்ணாவின் வீட்டிற்கு சென்று விசாரிக்கவில்லை என்பதிலிருந்து அவர்களின் அக்கறையின்மை தெரிகிறது. பூர்ணாவின் வலியையும் வேதனையையும் அதிகப்படுத்துவது போல சாமின் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறான்.

“5 வயது சோதிலாவாக இருந்தாலும் 50 வயது தெப்பார்மாவாக இருந்தாலும் பழங்குடிப் பெண்கள்தான் சிபிஎம்மின் இரை. பழங்குடி மக்களின் வாக்கு வங்கி சிபிஎம்மின் கையை விட்டுப் போய்விட்டதால், சிபிஎம் பழங்குடி மக்களை அச்சுறுத்தி வைக்க முயல்கிறது." என்கிறார் ஐஎன்பிடி(INPT) கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான இராசெசுவர் தெப்பார்மா. இவர் ஐஎன்பிடி கட்சியின் பழங்குடி மக்களுக்கான அரசியல் குழுவைச் சேர்ந்தவர்.

“இங்கு நாங்கள் பார்ப்பது எங்களை அச்சுறுத்துகிறது, கவலை தருகிறது. எப்போதெல்லாம் பழங்குடிப் பெண் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறாளோ அப்போதெல்லாம் அரசியல்வாதிகள் அப்பெண்ணின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். இது ஒரு சார்புத் தன்மை என்பது தெளிவு. அதிகாரத்திலுள்ளவர்களுக்கு இதைச் செய்ய எந்த அதிகாரமும் இல்லை” என்று தெரிவித்தார் திரிபுராவிலுள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்த மகாராசா பிரத்யோத் கிசோர் மாணிக்யா.

- இரத்னதீப் சௌத்ரி (தெகல்காவின் முதன்மைச் செய்தியாளர்).

kerala_cpm_cartoon

மேற்கு வங்கத்தில் தங்களது ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக வருவார்கள் என்ற அச்சத்தில் மரிச்ஜாபி தீவில் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, 17,000 தலித் மக்களைக் கொன்றது சிபிஎம் கட்சி (கம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய சுந்தர்பான் – மரிச்ஜாப்பி தலித் இனப் படுகொலை). ‘அரசியல் கொலைகள் ஒன்றும் எங்கள் கட்சிக்குப் புதிதன்று’ என்று கூறி, சிபிஎம் கட்சி எப்படி தனது அரசியல் எதிரிகளை கொலை செய்தது என்று அக்கட்சியின் இடுக்கி (கேரளா) மாவட்ட செயலாளர் எம்.எம்.மணி விவரித்தது அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது (http://tamil.oneindia.in/news/2012/05/29/india-execution-remark-kerala-cpm-leader-154711.html). இந்நிலையில் திரிபுராவில் மாற்றுக் கட்சிகளில் இருந்தார்கள் என்பதற்காக பாலியல் அத்துமீறலுக்கான பழங்குடியினப் பெண்களைப் பற்றிய செய்தி, சிபிஎம் கட்சி மீதான அச்சத்தை அதிகப்படுத்துகிறது.

கருத்தாக்கமும் தமிழாக்கமும் - வி.நரேந்திரன்

Pin It