அம்மா கத்திக்கொண்டிருந்தாள்.

'ஒரு தோசையோட எழுந்துறிச்சு ஓடற! என்னடி அவ்ளோ அவசரம்?'

'போம்மா, போட்டி ஆரம்பிச்சுடுவாங்க காசு குடும்மா, ' சீக்கிரம் . கையை கழுவிக்கொண்டே பரபரத்தாள் வசந்தி.

அம்மா கொடுத்த பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு அரை பாவாடை காற்றில் பறக்க படி இறங்கி ஓடினாள். அவள் ஓடுவதையே பார்த்துக்கொண்டிருந்த அவளுக்கு மனம் நெகிழ்ந்து போனது. கூடவே நேற்று அந்த முத்தாயி கிழவி சொன்னதும் நினைவில் நிழலாடியது.

"மல்லிகா! ஒம்மவ திமு திமுன்னு வளந்துட்டாடி!! சீக்கிரம் உக்காந்துடுவா, இனிமே இந்த அர பாவாட எல்லாம் போட விடாத."

வாசலில் நொண்டி விளையாடி கொண்டிருத்த மகளையே பார்த்தபடி அவள் சொன்னாள்,

"யம்மா நீங்க ஒன்னு! அது இப்பதான் அஞ்சாவது படிக்குது, நான்லாம் பதினஞ்சு வயசுல தான் வந்தேன். ஒடம்பு அவங்க அப்பா மாதிரி கொஞ்சம் ஊக்கமான ஒடம்பு."

எழுந்த எரிச்சலை மறைத்துக்கொண்டு வீட்டுக்குள் போய்விட்டாள். ச்சே, மொதல்ல பிள்ளைக்கு சுத்தி போடணும்.

வசந்தி மாநிறம். துறு துறுன்னு அவ வீட்ல இருந்தா வீடே றெக்க கட்டுன மாதிரி படபடத்து கிடக்கும். ஒத்த புள்ள தான். ஆனா அவ தோழி பட்டாளம் எப்பவும் அவகூடவே இருக்கும். சாப்பாடுலயும் கொறவு இல்ல. அந்த கிழவி சொன்ன மாதிரி வசந்தி வயசுக்கு மீறி வளர்ந்திருந்தாள். ஆனால் மனசு அவள் வயதுக்குரிய குழந்தைமையோடும், குதூகலத்தோடும் நிறைந்திருந்தது.

வெய்யில் ஏறி வந்துகொண்டிருந்தது. ஹை ஸ்கூல் பிள்ளைகளுக்கான விளையாட்டுப் போட்டி அன்று. ஊர் எல்லையில் இருந்த பள்ளி மைதானத்தில் பெரிய பசங்களும், விளையாட்டு வாத்தியாரும், வாட்ச் மேன் அண்ணனும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள்.

சுண்ணாம்பு தூள் கொண்டு ஓட்டப்பந்தயத்துக்கு பாதை போட்டுக்கொண்டிருந்தார்கள். வசந்தி தன் தோழிகளோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

"ஏய் பிள்ளைங்களா! இங்க வாங்க, நீ அந்த சுண்ணாம்பு டப்பாவ அந்த அண்ணன்கிட்ட குடுத்துட்டு வா, நீங்க ரெண்டுபேரும் அந்த டேபிள் எடுத்து நடுவுல போடுங்க, அங்க நாற்காலி எல்லாம் அடுக்கி இருக்கு பார், எல்லாத்தையும் பிரிச்சி வைங்க!"

வாத்தியார் சொன்னதும் வசந்திக்கும் அவள் தோழிகளுக்கும் ஒரே குஷியாகிவிட்டது. ஓடி ஓடி வேலை செய்தார்கள். போட்டியே அவர்கள் தலைமையில் தான் நடப்பது போல ஒரே பெருமை. தலை கால் புரியவில்லை.

சிறப்பு விருந்தினர் வந்து போட்டிகள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்தது. வசந்திக்கு பசிக்க ஆரம்பித்தது. கொண்டுவந்த பத்து ரூபாய்க்கும் இங்கு வந்த அரைமணி நேரத்தில் முறுக்கு, கிரீம் பிஸ்கட் , கல்கோனா, ஜவ்வு மிட்டாய் என்று வகை வகையாக வாங்கி தின்றாயிற்று. வெயில் வேறு மண்டையை பிளந்தது. இருந்த நாலைந்து மரத்தடியிலும் கூட்டம் நெருக்கி அடித்து நின்றுகொண்டிருந்தது.

குடிக்க வைத்திருந்த தண்ணி ட்ரம்மில் ஆள் ஆளுக்கு கைவிட்டு மொண்டு குடித்ததில் தண்ணீர் நிறம் மாறிக்கொண்டிருந்தது.

"ஏய், வர்றியா கடைக்கு போய் தண்ணி குடிச்சுட்டு வரலாம்." வசந்தி அமுதாவைக் கூப்பிட்டாள்.

"ஏ, அங்க பாரு ராணி அண்ணன் கபடி ஆடுறாங்க. நாங்க பாத்துக்கிட்டு இருக்கோம். கட அங்க தானே இருக்கு, நீ சீக்கிரம் ஓடிபோய் குடிச்சுட்டு வா."

ஹ்ம்! யாரும் வர்றமாதிரி தெரியல. வசந்தி கடை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அங்கிருந்த அந்த ஒரே ஒரு கடையில் பிள்ளைகளின் கூட்டம் முண்டி அடித்துக்கொண்டிருந்தது. சும்மா தண்ணி மட்டும் எப்படி கேட்குறது?! காசுவேற இல்ல, வசந்தி வாசலிலேயே தயங்கி நின்றுகொண்டிருந்தாள்.

"ஹேய், என்ன இங்க முழிச்சுக்கிட்டு நிக்குற?!என்ன வேணும்?"

திடுக்கிட்டு திரும்பினாள் வசந்தி. ராசு அண்ணன்! முத்தாயி பாட்டியின் பேரன். இப்பதான் காலேஜ் சேர்ந்திருக்கு.

"தண்ணி வேணும் அதான்..."

"சரி இரு வரேன்," ராசு அண்ணன் உள்ள போய் தண்ணியும் பிஸ்கட்டும் வாங்கித் தந்தது.

வசந்தி ஆர்வமாக சாப்பிட்டாள். போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது.

"ஏய் வசந்தி எங்க தோட்டத்துக்கு வர்றியா?மாங்கா பறிச்சுத் தரேன். என் சைக்கிள் ல போலாம்."

வசந்தி அவங்க அப்பாவோடு ஒரு முறை ராசு அண்ணன் தோட்டத்துக்கு போய் இருக்கிறாள். நெல் மூட்டைகள் ஏற்றும் வரை அந்த மாமரத்தில் தான் ஏறி விளையாடிக்கொண்டிருந்தாள். வரும் போது ராசண்ணன் அப்பா கை நிறைய மாங்கா பறித்துத் தந்தார். ரொம்ப ருசியான மாங்காய்.

வசந்திக்கு ஆசையாக இருந்தது. "சரிண்ணா, போலாம்."

தோழிகள், விளையாட்டுப் போட்டி எல்லாம் மறந்து ராசு அண்ணனோடு சைக்கிள் பின் சீட்டில் ஏறிக்கொண்டாள். தோட்டத்தில் யாரும் இருக்கவில்லை. வெயில் கொளுத்தும் அந்த மதிய நேர கடும் அமைதி வசந்திக்குள் லேசான ஒரு திகிலை கொடுக்கத் தொடங்கியது.

"யாரும் இல்லையா அண்ணா?" கேட்டுக்கொண்டே மாமரம் நோக்கி நடக்க எத்தனித்த அவளை ராசு கூப்பிட்டான்.

"இங்க வா, ஏற்கனவே ரூம்ல நிறைய மாங்கா இருக்கு." அந்த தோட்டத்து கொட்டகைக்குள் அவளை அழைத்துச் சென்றான்.

கட கட என மாட்டு வண்டியின் சக்கரம் எழுப்பிய சத்தம் கேட்டு ராசு பதறி வெளியே ஓடி வந்தான். முதல் தவறின் பதற்றம் அவன் கைகளின் நடுக்கத்தில் தெரிந்தது. முழித்துக்கொண்டு நின்றவனிடம்,

"தம்பி, அப்பா இல்லையா? வைக்கோல் அள்றதுக்கு வரசொன்னார். அதான்... "

"பாப்பா யாரு? தங்கசிங்களா??"

திடுக்கிட்டு திரும்பிய அவன் வசந்தி கொட்டகை வாசலில் நிற்பதைக் கண்டான். கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. பயத்தில் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. பேய் அறைந்ததைப் போல இருந்த அவளைப் பார்த்து

"யாருங்க, சொந்தக்கார பொண்ணா?"

பதில் சொல்லாமல் இருந்த ராசுவிடம் அவர் தன் அனுமானங்களை கேள்வியாக்கிக் கொண்டிருந்தார்.

"ஆமாம். மாங்கா கேட்டுது, அதான்... வீட்டுக்குப் போய் அப்பாவ வரசொல்றேன்." சொல்லிவிட்டு அவசரமாக உள்ளே போய் நான்கு மாங்காய்களை எடுத்து வந்து அவள் கையில் திணித்தான்.

"வா போலாம்."

ராசு சைக்கிளை நகர்த்தினான்.

"போ பாப்பா, போய் வண்டில ஏறிக்கோ," சொல்லி விட்டு அவர் வண்டி மாடுகளை அவிழ்த்துவிட நகர்ந்தார்.

செலுத்தப்பட்டவள் போல வசந்தி சென்று சைக்கிளில் ஏறிக்கொண்டாள். சைக்கிள் ஆள் அரவமற்ற அந்த வறண்ட பாதையில் சென்றுகொண்டிருந்தது. பாதையோர செடியில் இருந்த சிறு மலர்கள் வெயிலின் கோரமுகம் கண்டு வாடி தலை சாய்த்திருந்தன.

வசந்தி தன் கையில் இருந்த மாங்காய்களை நழுவவிட்டாள். அவை உருண்டு ஓடி பாதையோர முட் புதர் ஒன்றில் மோதி மறைந்தது.

********
- செ.சுஜாதா, பெங்களூர்.

Pin It