அனுவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. குழந்தை அழுதுகொண்டேயிருந்தது. பாலூட்ட வேண்டும். ஆனால், மார்பில் பால் இல்லை. குழந்தை முட்டி மோதி உறிஞ்சியதால் காம்புகள் எரிந்துகொண்டேயிருந்தன. பாலூட்டியே தீரவேண்டும். ஆனால், பால் ஊறினால்தானே..

அவள் சாப்பிட்டது நேற்று காலையில். பெரியக்கா வீட்டிற்குச் சென்றபோது, ‘என்னடி காஞ்சி கெடக்கிற? புள்ள என்னாகும்?’, என்று கேட்டு நான்கு இட்டிலி கொடுத்தார். பசித்துக் கிடந்த அனு, நாய் தின்பதுபோல அள்ளி போட்டுக்கொண்டாள். அப்புறம், சாப்பாட்டிற்கு வாய்ப்பில்லை.

அவள் கணவன் லாரி டிரைவர். திருச்சி லால்குடி சென்று காவிரி மண்ணை எடுத்து வந்து மதுரை முதலாளிக்குக் கொடுக்க வேண்டும். மண்ணை இறக்கும்போதும், மண்ணிற்காகக் காத்திருக்கும்போதும் தூங்கிக்கொள்வான். மற்றபடி பேய் விரட்டுதான். வீட்டிற்கு வர, ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் ஆகும். சமயத்தில் அதனை விடவும் தாண்டும். அவனுக்கு முதல் மனைவி இருக்கிறாள். அங்கே போனான் என்றால் பணம் எல்லாம் போய்விடும்.

அவன் வந்து பணம் தரும் வரையில் அனுவால் சமாளிக்க முடியாது. அடுப்பு எரியாது. குழந்தைக்கு ஏதாவது என்றால் பார்க்க வழியிருக்காது. அதனால், வேலைக்குப் போவாள். நான்கு மாத கைக்குழந்தையை வைத்துக்கொண்டு என்ன வேலை பார்ப்பது? களையெடுக்க, வெங்காயம் எடுக்க என்று போனால், மரத்தில் தூளி கட்டி குழந்தையை விட்டுவிட்டுப் போகவேண்டும். பசித்து அழுதால் கூட தெரியாது. இளம் பயிர் எப்படி வெய்யிலைத் தாங்கும்? அந்த வேலைக்கெல்லாம் போக முடியாது.

அவளுக்கு வாய்த்த பேருதவி 100 நாள் வேலைதான். அங்கேயும் சிரமம்தான். அளந்து விடுவார்கள். இத்தனை பேருக்கு இவ்வளவு என்று அளந்து விடுவார்கள். அதனை வெட்டினால்தான் முழு கூலி. அந்த அளவை வெட்ட முடியாது. அதனால், வெள்ளைத் தொப்பிக்காரம்மா சொல்வதுதான் கூலி. அந்த அம்மா டாட்டாவுக்குப் பிறந்ததுபோல அலட்டிக்கொள்ளும். கண்மாய் கரை ஏறி வருவதற்குள் அந்த அம்மாவுக்கு மூச்சு வாங்கும். புடவை முந்தானையை எடுத்து விசிறிக்கொள்ளும்.. ஆனால், இவர்கள் வெயிலில் கடப்பாறை போடவில்லை என்றால் கோபித்துக்கொள்ளும்.

ஆனால் இவளுக்கு ஒரு வசதியிருக்கிறது. இவள் ரெட்டியார் சாதிதான். ஆனால் ஏழை. குழிக்கு என்று ஒதுக்கப்பட்ட பெண்களில் அனைத்து சாதியும் இருக்கும். பத்து பேர் சேர்ந்து வெட்டினால்தான் அந்த எண்பதோ, எண்பத்திச் சில்லறையோ கிடைக்கும். அதிலும் தொப்பிக்காரம்மா நல்ல மனசு வைக்க வேண்டும். ஆனால், அனைத்து சாதிப் பெண்களும் ஒன்றாக சேர்ந்துகொண்டு இவளைக் கண்மாய்க்குள் இறங்கவிடமாட்டார்கள்.

‘போடி.. பச்ச ஒடம்புக்காரி.’ என்று விரட்டுவார்கள். தென்னை மர நிழலில் இவளும் இவள் மடியில் பிள்ளையுமாக உட்கார்ந்திருப்பாள். இவளுக்காக அவர்கள் உழைப்பார்கள். எப்படியானாலும் வாரம் முடியும்போது 400 ரூபாய் குறையாமல் சம்பளம் வரும். அந்த சம்பளத்திற்கும் வேட்டு வைத்துவிட்டார்கள்.

அனு பஞ்சாயத்து ஆபீசுக்குப் போனபோது ஒரே தள்ளுமுள்ளு. எங்கே பார்த்தாலும் பெண்கள். பஞ்சாயத்து ஆபீஸ் என்பது ஒரு அறைதான். அதற்குள் 50 பெண்கள் இருப்பார்கள். வெளியே கட்டுக்கடங்காத பெண்கள் கூட்டம். அனைவரும் அட்டையைப் பெறுவதற்காக அலைமோதிக்கொண்டிருந்தார்கள். கைக்குழந்தையை வைத்துக்கொண்டிருந்த இவளால் உள்ளே போவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

1400 அட்டைக்கு 350 அட்டைதான் வந்திருக்கிறதாம். எல்லோருக்கும் அட்டையில்லை என்று பேசிக்கொண்டார்கள்.

நொந்து போன அனு, பஞ்சாயத்து ஆபீசு வாசலில் இருந்த வேப்ப மரத்து நிழலில் அமர்ந்துவிட்டாள். ரொம்ப நேரம் போனது. தலைக்கு மேலிருந்த சூரியன் மேற்கே போய்விட்டான். இவளுக்கு வயிறு எரிந்தது. சிசுவோ பாலுக்கு அழுதது. ஜாக்கெட் பட்டனை அவிழ்த்துவிட்டு முந்தானையால் மறைத்துக்கொண்டு பாலூட்டினாள். கொஞ்ச நேரம்தான்.. சிசு மீண்டும் அழுதது.. இவளுக்குத் தெரியும்.. இனி இரத்தத்தைத்தான் கொடுத்தாக வேண்டும்.

அப்போதுதான் முத்தம்மா வெளியே வந்ததைப் பார்த்தாள். முத்தம்மா பள்ளர் சாதி. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிக்காரி. முத்தம்மா என்றால் பஞ்சாயத்து ஆபீஸ், ஆர்ஐ ஆபீஸ், ரேஷன் கடை எல்லாம் நடுங்கும்.

முத்தம்மா யாரையோ திட்டிக்கொண்டே இவளைக் கடந்தாள். இவளுக்கு அது புரியவில்லை. ஆனால், அட்டை கிடைக்குமா என்று முத்தம்மாவுக்குத் தெரியும் என்பது இவளுக்குத் தெரியும். விருட்டென்று எழுந்தாள். பிள்ளையை வாரிச்சுருட்டிக்கொண்டாள். ஜாக்கெட் பட்டன் அவிழ்ந்திருப்பது தெரியாமலிருக்க முந்தியால் மறைத்துக்கொண்டாள். முத்தம்மாவை விரட்டிக்கொண்டு ஓடினாள்.

முத்தம்மாவுக்கு ஒரு கால் ஊனம். ஆனால், நடக்க ஆரம்பித்தாள் என்றால், பின்னால் எல்லோரும் ஓட வேண்டியிருக்கும். அனுவும் ஓடினாள்.

முத்தம்மாவை மறித்து நின்றாள். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

‘என்ன கண்ணு?’, என்று முத்தம்மா இவளைப் பார்த்தாள்.

‘அக்கா.. எனக்கு அட்டை வேணும்.. கெடைக்குமா?’

முத்தம்மாவின் கூர்மையான கண்கள் குழந்தையைப் பார்த்தன. திறந்து கிடக்கும் ஜாக்கெட்டை ஊடுருவிப் பார்த்தன. இவள் கண்களைப் பார்த்தன.

‘என்னிக்குச் சாப்பிட்ட?’, என்றாள் முத்தம்மா.

அனுவுக்குப் பொட்டில் அடித்ததுபோல இருந்தது. சொன்னாள்.. புருஷன் வர நாளானதை, கஞ்சிக்கு வழியில்லாததை. அனுவிற்கு வெட்கமாக இருந்தது. பள்ளச் சாதி பெண்ணிடம் வெட்கம் விட்டுப் பேசுகிறோம் என்று தெரிந்தது. ஆனால், அட்டை வேண்டுமே.. அட்டையில்லாவிட்டால் ஏது வேலை? ஏது கஞ்சி?

‘ஓஞ்சாதி சனங்க ஒன்னக் கண்டுக்கிலியா?’ என்று கேட்டாள் முத்தம்மா.

அனுவின் சாதிதான் ஊரின் பெரிய சாதி. பஞ்சாயத்து தலைவரும் ரெட்டியார்தான். கிளார்க்கும் ரெட்டியார்தான். எல்லா கட்சித் தலைவர்களும் ரெட்டியார்தான். ஆனால், அவளுக்கென்று யாரும் இல்லை. இவள் கஞ்சிக்குச் செத்தவள். அதிலும் பிள்ளைமார் பையனைக் கல்யாணம் செய்துகொண்டவள்.

‘இல்லக்கா.. ஒனக்குத் தெரியாததா?’ என்று அனு பூசி மெழுகினாள்.

‘சரி வா.. கடைக்குப் போவோம்..’ என்ற முத்தம்மாள் டீக்கடைக்கு இழுத்துச் சென்றாள்.

‘அக்கா.. எனக்கு அட்ட வேணுக்கா.. அந்த ஆளு என்னக்கி வரும்னே தெரியல.. நாம்பட்டினியா கெடந்தா இந்த சிசு செத்துப்போவுங்க்கா’, என்று அனு பின் தொடர்ந்தபடியே சொன்னாள்.

‘சரிம்மா.. பால வாங்கி ஊத்து’, என்றாள் முத்தம்மா,

‘அதுக்குங் காசு வேணும்ல.. அதா.. அட்டை கெடைக்கிமாக்கா?’, அனுவின் சிந்தையெல்லாம் அட்டையில் இருந்தது.

‘அதத்தான் நானும் பெரிய தோழர்ட்ட கேட்டேன். டெல்லியிலேயே பணத்தைக் கொறச்சிட்டாங்கலாம்.. சண்டைபோட்டுத்தான் அட்டை வாங்கனுமாம்.. ஒங்க சாதிதான் போராட்டத்துக்கு வராதே’, என்று முத்தம்மா அலுத்துக்கொண்டாள்.

‘இல்லக்கா நா வறேன். ஆனா.. அட்டைக்கா’, என்று அனு தொணத்தினாள்.

‘போன வருஷம் எத்தனை நாளைக்கு வேலை பாத்த?’

‘எங்க வேலப்பாத்தேன்.? அப்பத்தான் நாம்மாசமா இருந்தேன்’. அனுவிற்கு அந்த கொடிய காலம் கண்ணில் வந்து போனது.

‘அப்புடின்னா ஒனக்கு அட்டை கொடுக்கக் கூடாதுன்னு பிடிஓ உத்தரவாம். ஆனா பிடிஓ சொல்றது சட்ட விரோதம்முன்னு பெரிய தோழர் சொன்னாரு..’

யார் அந்த பெரிய தோழர் என்று அனு யோசித்தாள். அதுவல்ல முக்கியம், அட்டை வேண்டும். அதுதான் முக்கியம் என்று அவள் மூளை சொன்னது.

‘இல்லக்கா.. எனக்கு அட்டை வேணும்.. எங்க சாதியில பொறந்தா கையேந்த முடியாதுக்கா.. ஆனா.. புள்ளைய வச்சிகிட்டு என்ன செய்ய?’

‘வேணாண்டி.. கையேந்த வேண்டாம்.. பெரிய தோழர் கிட்ட சொன்னா… மருந்து என்னன்னு சொல்வாறு… வா பாத்துக்கலாம்’. என்று முத்தம்மா டீக் கடைக்கு உள்ளே சென்றாள். ‘என்ன சாப்பிடற?’ என்று கேட்டாள்.

அனுவிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. முத்தம்மா வாங்கித்தர அதனை மற்றவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று யோசித்தாள்.

அந்த டீக்கடையை நடத்துவதும் ஒரு பெண்தான். ஆனால், மூப்பர் சாதிப்பெண்.

பசி இவளை வாயைத் திறக்க வைத்தது. ‘வேணாக்கா.. எனக்கு சோறு வேணும்.. புள்ள கடிச்ச கடியில இரத்தம் வருதுக்கா..’

‘அடிப் பாதகத்தி.. நீ சாவுடி.. ஆனா, புள்ளைய ஏண்டி சாகடிக்கிற’ என்று சீறிய முத்தம்மா, ‘சரி.. வா’, என்றபடி பிள்ளையை வாங்கிக்கொண்டாள். அன்னையின் வாசம் மாறியதைக் கண்ட சிசு வீறிட்டு அலறியது.

‘எங்க வூடு ஊருக்கு வெளியில இருக்கு.. ஓடையில மீன்பிடிச்சு மீன் கொழம்பு வச்சிருக்கேன்.. வந்து, யாருக்கும் தெரியாம சாப்பிட்டுட்டுப் போயிடு கண்ணு’, என்றபடி முன்னாடி நடந்தாள்.

அனு, அன்னையின் பின் செல்லும் சிறுமி போல முத்தம்மாவின் பின் நடந்தாள்.

Pin It