ஓடிக்கொண்டிருப்பது
நிற்பதாகத் தெரியலாம்
முகம் திறக்காமல்
பார்க்கத் தெரிந்தால்
திறந்திருக்கும்
அகவெளி புரியும்
ஆகாயத்தின் முடிச்சை
அவிழ்த்தபடியே நகரும்
நீரின் விரல்கள்
நல்லூழ் நவில்தலென
அந்நன்னாற்று வளைவில்
கொக்கதிரா நீச்சல்
பொன்மீனுக்கு
நின்று குனிந்து அதன்
ஆவலைக் காண்கையில்
ஓடிக்கொண்டிருப்பது
நின்றதாகத் தெரிகிறது
நெளியும் சலசலப்பில்
நீர்மின்மினி
சடுதியில் காணாமல்போன
மீனுக்கோ நிம்மதி
அசையாமல் நிற்கிறேன்
கழுத்து திரும்பிய
கொக்கிடம் என்ன சொல்ல
நிமிர்ந்து நின்ற
என்னிடம் தான் என்ன சொல்ல?
- கவிஜி