பூவே உனக்காக நிர்மலா மேரியை மறக்கவே முடியாது.
நிச்சயம் கிரீடம் தான். சொல்லாமலே யார் பார்த்தது... பாடல் ஆகட்டும்... மச்சினிச்சி வர்ற நேரம் மண் மயக்குது... என்று மெல்லிசாக வீட்டுக்குள் பாடும் போதாகட்டும்... ஒரு மன நெருக்கம் நமக்கு ஏற்படும். குறும்புச் சிரிப்புக்குப் பின் ஒரு தனி அழகு அரும்புகின்ற மலர் தவம் காணலாம்.
பூவே உனக்காக படத்தில் ஒரு பொய்யான பாத்திரத்தில் வந்து, பிறகு 'என் முடிவு ஒண்ணுமில்ல, அவருக்கு ஓகேயான்னு கேளுங்க' என்று சொல்லும் இறுதிக்காட்சியில்... நமக்கேகூட நாயகனும் நாயகியும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. படம் நெடுகிலும் அவர் ஒரு பக்கம் என்றால் இவர் ஒரு பக்கம் நின்று படத்தை சமன் செய்திருப்பார்கள். நாயகனை வெறுப்பேற்றிக்கொண்டே வந்து சின்னச் சின்ன விளையாட்டில் சித்திரம் பேசியிருக்கும். நாகேஷ் ஐயாவோடு ஒரு காட்சியில்... யாராவது குரங்கைக் கூட்டிட்டு வாக்கிங் போவாங்களா என்று கேலி செய்து சிரிக்கும் போது, சித்திரம் சிரிக்கவும் செய்யும் என்று நம்பினேன்.
எங்களூர் பாலமுருகனில் பலமுறை பார்த்த படம். அதில் சில முறை இந்தப் புள்ளைக்காக என்றால்... அதில் ஒன்றும் தப்பில்லை. தகுதி உள்ள நாயகி... எங்கள் பள்ளிக் கால க்ரஷ் (Crush). நியாயப்படி சிண்ட்ரெல்லா (Cinderella) (ஒரு தொடர் எழுதியிருக்கிறேன்) லிஸ்டில் வந்திருக்க வேண்டும். இதயத்தில் தேங்கிவிட்டது. நாலைந்து மாதமாகவே எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது திரும்பும் பக்கமெல்லாம் அவர் அலை. பரவாயில்லை, அலையோடு அலையாக என் மொழியும் இங்கே கப்பல் விடட்டும்.
சங்கீதாவின் குரல் வழியே எப்போதும் ஒரு கொஞ்சல் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும். இந்தப் புள்ளையை அலெக்சாண்டர் படத்தில் தான் முதலில் பார்த்தேன் என்று நினைக்கிறேன். கேப்டனோடு கீச் கீச் என்று ஒரு சிறுமி போல... சிறுமி என்றதும் கேப்டன் என்றதும் தான் நினைவுக்கு வருகிறது. கேப்டன் மகள் படத்தில் சிறுமியாகவே நடித்திருக்கும். சின்ன உருவம். சித்திரம் போல எப்போதும் மனதுக்குள் சிகை ஆட்டியபடியே இருப்பதை எப்போதும் ரசித்திருக்கிறேன்.
சாமுண்டி படத்திலும் ஒரு குட்டிப் புள்ளையாக வந்திருக்கும். சில முகங்கள் காலத்துக்கும் அப்படியே இருக்கும். காலம் கை வைக்காத முகம் சங்கீதாவினுடையது.
அச்சடித்த வரிசையில் பற்கள்... அழகோவியம் பெண்ணானது போன்ற முகம்... அலட்டிக்கொள்ளாத இயல்பு... என்று எந்தப் படத்திலும் அந்த நாயகியாகவே இருக்கும் வடிவம் கண் கொள்ளாதது.
'வந்தாளப்பா வந்தாளப்பா வந்து பக்கத்தில நின்னாளப்பா' என்று இளைய திலகம் கூட ஆடுகையில்... குட்டியாக இருந்தாலும்... பட்டை தீட்டிய வைரமென மின்னும். அந்தப் படத்தில் அப்பாவான சுந்தர்ராஜன் அவர்களோடு சேர்ந்து செய்த அலப்பறைகள்... சிரிப்பு மூட்டுபவை. சத்யராஜுடன் நடித்த வள்ளல் படம்... இப்போதும் துருதுருவென நினைவில் அந்தக் குரல் கேட்கும். 'தொர்ராசு தொர்ராசு' என்று கூப்பிடும் அழகுக்கே ஆராதிக்கலாம். மலையாள முகம் என்றாலும்... தமிழாளும் சுகமும் கொண்ட வடிவம். சில முகங்களை ஒருபோதும் வெறுக்கவே தோன்றாது. அப்படி ஒரு களங்கமற்ற முகம்.
எல்லாமே என் ராசா தான்... இங்கே நாயகியாக அறிமுகம். அத்தனை பெரிய ஹீரோவோடு... கிடைத்த வாய்ப்பில் பாத்திரம் நிறைந்த பூரிப்பு அது. கங்கா கௌரி படத்தில்... கௌரி பாத்திரம் இன்னமும் மனதுக்குள் பத்திரமாக இருக்கிறது. மனதில் இருந்து சிலர் பேசுவார்கள்; அவர்களோடு நாம் பழகியிருக்க வேண்டியது இல்லை, ஆனால் அதை உணர முடியும். அப்படி ஒரு மனுஷியாகவே இவரைக் காண்கிறேன். அந்த வெள்ளந்திச் சிரிப்புக்கு மலையாளக் கரை தாண்டித் தமிழ்க் காற்று சாமரம் வீசும். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நடித்திருந்தாலும்... நம்மூர் நாயகியாகவே நம்பத் தோன்றும் தோற்றம். இன்னும் சொல்லப்போனால் பக்கத்து வீட்டுத் தாவணிப் பெண் போல ஒரு பதின்பருவத்து மயக்கம் எப்போதும்.
புயல் அடித்து ஓய்ந்த மகாநதியில்... இறுதிக்காட்சியில் வாழ்வு பேசும் பூரண மனுஷியாகத் திரையில் பூத்திருப்பார்.
விருது வேண்டுமானால் கேரளா கொடுத்திருக்கலாம், எப்போதும் இதயம் தருவது தமிழ்நாடு தான்.
இதோ காளிதாஸ் 2-வில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார். ஆவலோடு காத்திருக்கிறோம், கொஞ்சம் காதலோடும் தான். குழந்தை நட்சத்திரமாகப் பல படங்களில் நடித்திருக்கிறார் என்று விக்கிப்பீடியா (Wikipedia) சொல்கிறது. குமரி நட்சத்திரமாகவும் இன்னும் பல படங்களில் நடித்திருக்க வேண்டும். இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லை.
கல்யாண்ஜி கவிதை ஒன்று இருக்கிறது:
எதுவும் தாமதமாகி விடவில்லை இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விட முடியும்
அது இவருக்கும் பொருந்தட்டும்.
இந்தச் சிக்குலெட் (Chiclet) சிட்டுக்குருவிக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்.
- கவிஜி