அங்கீகாரத்துக்கு அலையும் மனமே
அடுத்தவர்க்காக
எப்போதேனும் சிந்தித்திருக்கிறாயா
வாழ்வின் அடிப்படைக் கோடுகள் மேல்
நின்றிருக்கிறாயா?

வாய் கிழிய அறம் புலம்பும் உறவே
அவிழ்ந்த உடையோடு
ஆதரவற்ற வழி நடுவே
பித்தேறி பிசுபிசுக்கோடு
நடக்கும் ஒருத்திக்கு
ஓடோடிச் சென்று
மானம் காத்திருக்கிறாயா?

தனக்கு மட்டும் தான்
கவலை எனப் பிதற்றும்
அறிவே
கல்லுடைத்து தார் போட்டு
உடல் நோக வேர்த்து பூக்கும்
சாலையோரப் பணியாளனிடம்
எப்போதாவது
பேசி இருக்கிறாயா?

சமூகம் என்ன செய்தது
நான் ஒதுங்கிக் கொள்கிறேன்
என்பது
வெட்கங்கெட்ட இயலாமை
சமூகம் தூக்கி வீசினால்
சாக்கடையும் நகராது
நாறிச் சாவாய் அன்பே

எனக்கு ஏன் யாருமே இல்லை
என்பது
அறியாமையின் மிகு புரட்டல்
நீ ஏன்
யாருக்காகவும் இல்லை என்பதே
மறுபரிசீலனைக்கு வழி காட்டும்

யாரையுமே நம்பாமல்
இருப்பது மதி நுட்பம் அல்ல
அற்பத்தின் மேல் நடுங்கும்
அப்பள இதயத்தின்
அரைகுறைப் புரிதல் அது
மனிதனை நம்பும்
வீதி நாய்களைப் பார்
வாலாட்டி தாலாட்டும் இன்றை

வெற்றுப் பெண்ணியத்தில்
வீணாய்ப் போன
கூட்டத்து சிப்பாயே
புறம் பேசுவதில் வாங்கிய
பட்டயப்படிப்பால் என்ன பயன்?

அவன் சரி இல்லை
இவன் சரி இல்லை
அது சரி இல்லை
இது சரி இல்லை
எதுவும் சரியில்லை என்றால்
நம்பு
நீ சரி இல்லை....!

- கவிஜி

Pin It