இம்முறை
பால ராமனாகவே
இருந்து விடுங்கள்
ஷேமமாக.
சீதையை
சிதையேற்றாமல் இருப்பதற்கும்,
சம்பூகனை
வதம் செய்யாமல்
இருப்பதற்காகவும்
இல்லை.
பிராண
பிரதிஷ்டை நாளிற்குப்
பிறகாவது
நீங்கள் கருவறைக்குள்
கன்னி தோஷம்
காணாதிருக்கவும்தான்.

***

இயல்பெனும் புரிதல்.

வெகு நாளாகிவிட்டது
கானகப் பறவைகளுக்கு
இடையில்
கவிதை வாசிப்புகள்
நடந்து.

தேடியலைந்தது
குயில்
வெகு நாளாய்
ராகம் தேடியே
சுருதி சுத்தமாக
சொல்வேனென
அடம்பிடித்து.

குரலொலி
ஏற்ற இறக்கம்
பயின்ற கிளி
வரவேயில்லை
சொல் வளமையில்
சிக்கி...

வேடிக்கை பார்க்கும்
காக்கைகள்
வடையெடுத்து
வந்து ஏமாந்தது
வாசிப்புணர்வு பெற.

மாற்று வழி
சொன்னது புறா
காளான் வடை
கொடுத்தால்
கவிதைகள் கிடைக்குமென
வேடன் கையிலிருப்பதை மறந்து.

உணர்வொன்றில்
கீச்சிட்டது யாவும்
அதனதன் குரலில்.
காக்கை அறிந்தது
கரைதல்தான்
கவிதையென
முதன் முதலாக.

***
மாறிடவே இல்லை மனம்.

திருமணங்கள் யாவிலும்
உறவுகள் இணைந்தாலும்
ஏதோவொரு
உள்ளம் விசும்புகிறது
மதிக்கவில்லையெனும்
மனக்குறையில்.

***
தட்டப்படும் கதவு திறக்கிறது புறக்காரணமொதுக்கி

தட்டப்படும் நல்லிரவு
கதவுக்கு இருக்கிறது
காரணங்கள் யாவரும் அறிய.

பொறுப்பற்ற பொழுதுகளாக
கழித்தவர்களின் தட்டல்
நிதானமற்ற திமிரெடுத்தலாக
ஒலிக்கிறது வேதனையாக.

கலைப்புற்ற தட்டலின்
கதவொலிகள்
ஓய்வுற நிற்கிறது
பாரம் சுமந்து
கெஞ்சலாக.

நம்பிய
எதிர்காலத் தூண்கள்
தட்டுகிறது
அச்சம் கலந்து
பாசத்திற்கு மட்டும்
கேட்குமாறு.

வெளிவருகிறது
உள்ளிருந்து நல்லிரவானாலும்
திறப்பதற்கு
சலுகைகளை
எதிர்பார்க்கும்
ஆண்களுக்காக
அறிய மறந்த
ஆண்மையை நினைவூட்டி.

- ரவி அல்லது

Pin It