கடலைக் கவிழ்க்கும் கனவோ
தக்கையில் அசையும்
பறவைக்கு
*
ஒரு தோல்விக் கவிதையை
எழுதவாவது
ஒருமுறை
காதலில் தோற்க வேண்டும்
*
தீயை நீருக்குள் வளர்க்க
அதன் வேருக்குள் நீ
நீந்த வேண்டும்
*
சங்கு
கடலின் கங்கு
உன் கழுத்து
சங்கின் சடங்கு
*
முற்றும் துறந்த முனிக்கு
முக்காடு போல
எதுக்கு இம்மரம்
*
மௌனம் பழகிய வீதியில்
மதியத்தைத் திறக்கும்
மேல்வீட்டு ஜன்னல்
*
நல்ல கவிதை எழுதும் போது
மேசைக்கடியே
கரை புரளும் காட்டாறு
*
தொண்டை மலர சிரி
மண்டைக் கனம் தளர்
இப்போது நீ கொண்டலாத்தி
*
உனக்குத் தெரியாதா
முறைச்சிட்டு திரிவதெல்லாம்
முத்தங்களுக்குத் தான் என்று
*
மழைப் பேச்சு
கேட்கிறது
அத்தனையும் ரகசியம்
- கவிஜி