1. நானாகிவிட நீ.
*** *** *** *** ***
மறுதலிக்காமல்
மௌனித்துக் கிடக்கிறேன்
சூரியனைப்போல.
மறைகிறது
புலர்கிறதெனும்
பொய்யுரைகளை
கேட்டும்
ஒளிர்ந்து.

2. உறுபசியின் வேண்டல்.
*** *** *** *** ***
கிறுகிறுக்கும்
பசியின்
இறுதிப்பொழுதில்
அச்சமுறுகிறோம்
ஆயாசத்துடன்
ஒரே படகில்
நோக்கமென்னவோ
வேறாக.

3. தவறவிட்ட தருணம்.
*** *** *** *** ***
கொஞ்சம்
வேகமாக நடந்திருக்கலாம்
கால் விரல்
நோவினை
இல்லாதிருந்தால்.

கெஞ்சியது
பறித்துவிடென
தவித்து
சாலையோர
சென்டிப்பூ
முந்தி விட்ட
ஆட்டை நினைத்து.

4. யாவிலும் யாவாக.
*** *** *** *** ***
சிக்குப் பிடித்த தலையுடன்
அழுக்கேறிய
சேலையுடுத்திய
பிச்சைப் பெண்ணின்
கைக்குழந்தை
சிரிப்பும்
கண்களும்
நினைக்க வைக்கிறது
குழந்தையும்
தெய்வமும்
ஒன்றென.

5. புரிதல்கள் வேறானது.
*** *** *** *** ***
பரிதவித்துப்
பறக்கிறேன்
காக்கையின்
கால் முள்ளெடுக்க.
மனிதர்களைப் பற்றிய
அதன்
புரிதல்கள் வேறென
அறியாமல்.

6. எரிதணலறியாது.
*** *** *** *** ***
இம்முறை
சிதையிலேற
விருப்பமில்லை
சீதைக்கு.
பிரிந்திருந்தது
இராமனுமென்பதால்.

7. மன்னிப்புகளெனும் வண்ணம் குலைத்து.
*** *** *** *** ***
மன்னிப்பு கேட்ட
பிறகுதான்
தெரிந்தது
கையாலாகாதவனென்று
நினைக்கிறார்களென
அறியாமையில்
வீழ்ந்து கிடப்பவர்கள்.

மறுபடியும்
மன்னிப்பு கேட்டேன்
அவர்கள்
விழித்துவிடும்
சாத்தியங்களுக்காக.

மீண்டும்
மன்னிப்பு
கேட்டேன்
மனக் கிறுக்கேறியவர்களிடம்
முகம் மலர்ந்து.
பிறகேன்
வாடிக் கிடக்கிறார்களென
சொல்லவே இல்லை
அவர்கள்
ரோசம் கொண்டதாகக்
காட்டி.

8. காணுமாவல் மேவி...
*** *** *** *** *** ***
தேடிக் கொண்டிருக்கிறேன்
இருளாக
மறைந்தவர்களை
முட்டாளாக முயன்று.

சாத்தியமே இல்லை
ஒளியின் முன்
இருள் வருமென்பதை
மறந்து.

9. அவதாரப் பொய்யர்கள்.
*** *** *** *** ***
சொல்லிக்கொண்டே
இருந்தார்கள்.
தோன்றி மறைந்து
துயரம் போக்குவதாக
அழைத்து.

ஒத்துப் பார்க்கவும்
ஒரு
கேள்வி கேட்கவும்
யாருமில்லையெனும்
தைரியத்தில்
யுகங்கள் தோறும்.

10. காத்திருந்தாலும் காக்கவியலாது.
*** *** *** *** ***
ஊர்ந்து கொண்டே
இருந்தேன்
இரவு முழுவதும்
புழுவோடு
தூக்கம் கலைத்து.

ஓய்வெடுக்கலாமது
நாளையென்
வேலைகளை
கவனத்தில் கொண்டு.

காலம் தன்
வேலையைக் காட்டியது
கண் சொருகும்
கணத்திற்குள்
பாய்ந்த பல்லியை
பார்க்க மறைத்து.

11. மகளுக்கும் வாசமுண்டு.
*** *** *** ***
பழுப்பேறிய கூந்தலாட
தொளதொளக்கும்
ஆடையில்
நாகரீக நளினம் காட்டுகிறாய்
பூரிப்பாக்கி.

மகிழ்ந்த நாளின்
ஒத்திசைவில்
சம்மதிக்கிறது
பழமையாசைக்கு
பச்சைக் கொடி
காட்டி.

உடுத்திய பின்புதான்
அறிகிறோமிருவரும்
தாவணி பாவாடை
அழைந்து வந்த
வெட்கத்தை
ஆடையும் பாதியென
வியந்து.

12.

விதி தெரியாது
வினை தெரியும்
எரியும் இலங்கையைப் பார்க்கும்பொழுது.

- ரவி அல்லது

Pin It