அடித்தூரில் படிந்த நேசம்
கிளைகள் பரப்பி வாசனைகள் கூட்டும்
நான் யாரென பிறர் வியக்க.
உதிரும் அன்பில்
நிழலாடிய
யாவரும்
மகிழும் பொழுது
ஊற்றுக்கண் திறந்த
உன்னைக் காணாத
தவிப்பை
எப்படிச் சொல்வது
வாடி வதங்கியுதிரும்
இத்துயரைத் தவிர.
அரிதென சூழும் மேகம்
நீ வரும் சமிக்ஞையென
அறிகிறேன்
வானம் நோக்கி வறுந்தியென்
வாழ்நாளைக் கழித்து.

***

அவர்களின் அறம் நமக்கானதல்ல.

இம்முறை
அனுப்பி வைத்த
வெறுப்பிற்கு மூப்பில்லை
கனியாகாமல் கசப்பதால்.
தொற்று நோயாக
தொடர்ந்து பறக்கிறது
உறவுகள் பேசி
வெறி கொண்டு வீழ்த்த.
எப்பொழுதாவது தோன்றியதா உனக்கு
நேசமேகிய நம் சரசப்பேச்சுகள்
இச்சண்டாள சூழலில்
சாத்வீகம் கொள்ள.
யாருமற்றதொரு இடத்தில்
கட்டிக் கதறிவிட்டு.
இன்னொரு தேசம் செல்வோமா
இனிப்புடன் வாழ.
விட்டுக் கொடுத்தலின்
உச்சம் தொட்டபின்
விடாபிடிக்குள்
வீழ்ந்து போனதை
என்ன செய்ய.
துரிதகெதியிலான வெளியச்ச பாடுகளில்
முடிந்துவிட்டதான
உன் அறிவிப்பு வரை
நெகிழும் அன்பில்
நெஞ்சுருகி
சுமக்கிறேன்.
யாதொரு குறையுமற்று
நாம் மட்டும்
இணக்கமாகி
இன்னொரு
அத்தியாயம் தொடர.

***

அவலத்தில் ஆகாயம் பார்த்து.

பீடித்து அழும்
இத்துயரை
தாங்காத கூரைகள்
வருந்தி
சிதைந்தது
வானமே வியக்குமாறு
வெட்ட வெளியாகி.
புயல் கடந்ததாக
ஆசுவாசம் கொள்ளும்
இவ்வேளையில்.

***

புரிதலெனும் புதிய ஆயுதம்.

வண்ணங்களில்
சிக்கி
வாழ்க்கையை
கூறுகள் போட்டலைந்தது.
நிறமிகளில்
நித்தியத்தை தேடும் மனம்
நாளும் பொழுதும்.

திசைகள்
தேடியது
திருஷ்டிக் கலிக்க
தீண்டாமையைப்போல
தெரியாமை
மிகைத்த
அறியாமை
அப்பாவிகளிடம்.

சுவை மொட்டுக்களை
சுவீகரித்து.
சிவப்பை சேர்மானமாக்கி
வெள்ளையானதால்
வீதிகளில் வீசியது
மிலேச்ச சடங்குகளால்.

பொல்லாப்பை கூட்டினார்கள்.
பூசணியிலும்
காவியை
கறிகள் செய்யவும்.
மருத்துவ குணம்
மலைக்க வைத்தாலும்
வெள்ளையை
திருஷ்டிக்கென
தீண்டாமலாக்கி‌யும்.

கலகமிழைக்காமல்
கருத்தொன்றை
சொல்லிவிடுங்கள்.
கணிப்புக்கார்களுடன்
கலந்தாலோசித்து
கண்ணியமாக
அடுத்த
ஆயுத பூஜை
வருவதற்குள்.
வீதியின் நடுவில் உடைக்கும்
பூசணிகளை
வீதியோரத்தில்
உடைத்து
விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக.

நன்றி: ஆயுத பூஜை மாலை ஸ்கூட்டியில் வழுக்கி விழுந்த பெண்ணைக் காப்பாற்றி, உடைத்த பூசணியை அப்புறப்படுத்தி செங்கல் மண்ணிட்டு சென்ற ஆம்புலன்ஸ் டிரைவருக்கு

***

அரும்பி நிற்கும் ஆசைகள்.

வெளியே போவது எப்போதென்று
கேட்க முடியவில்லை
வேதனையோடு
யாவரும்
கிடப்பதால்.

கேட்டுக்
கொண்டே இருக்கிறது
சத்தமென்று பேசிக்கொண்டார்கள்.
வாழ மட்டும்
இருந்தவர்கள்.

சொல்ல முடியவில்லை
அழுகின்ற அம்மாவிடம்
கூட்டி வந்திருக்கலாம்
தோட்டத்தில் இருந்த
குட்டி நாயையென்று
துக்கித்தழும் சோகமடங்க.

பழகிக்
கொள்கிறேன்.
பசிக்கு
பன்னை கையில்
வைத்து கொண்டே
உண்ணாமல்
அம்மாவை ஏமாற்றி.

பயிற்சி கொடுத்தார்கள்
அபயப் பள்ளியில்
பதுங்குழிக்குள்
பதறாமல்
இருப்பதற்கு
பழக்கி.

முடிவுக்கு வருவார்கள்
யாவையும்
சிதைத்ததொரு
நாள்.
பொய்யாக
எங்களுக்குள்
நடு நிலை
நாடுகள் இருக்கிறதெனும்
நம்பிக்கைகளை
விதைத்து.

தழுவிக் கொள்கிறேன்.
உன் புத்தகத்தை
தாயன்பு
மேவிய
வேண்டுதலாய்.
குட்டி நாயையும்
கூட இருக்கும் பூச்செடிகளுகளையும்
பத்திரமாக
பார்த்துக்கொள்
வரும் வரையென்று.

- ரவி அல்லது

Pin It