துளி என்றா நினைத்தாய்
உடைய உடைய
அது கடல்

*
உன் குரல் கேட்காத நாளில்
கொலைப்பட்டினி
வாட்சப் வயிறு

*
அலுவலகம்தோறும் பாரதி உண்டு
இப்படி மறைந்து மறைந்து
கவிதை எழுதிக் கொண்டு

*
அவிழ்கையில் தான்
அருவி ஆகிறது
நதி

*
அடித்தடித்து
விளையாடுவதற்குத் தான்
இந்த வீட்டு காலிங் பெல்

*
பேருந்துக்கு நிற்பதை விட
பேருந்துக்குள் நின்றால்
அடுத்த ஒரு மணியில் வீடு

*
புத்தர்கள் நிறைய இருக்கிறார்கள்
சித்தார்த்தன்கள்
சிறை வைத்திருக்கிறான்கள்

*
காசுக்கு ஓட்டு போட்டவன்
கட்டிங்குக்கு ஓட்டு போடுகிறவனுக்கு
அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறான்

*
பார்க்கத் தான் அடங்காப்பிடாரி
கால் ஓய்ந்து அமர்கிறவர்களுக்கு
ஆலமரம் பொன்னூஞ்சல்

*
வானத்தில் வட்டமிடும்
கழுகு
பூமியில் பட்டம் விடுகிறது

- கவிஜி

Pin It