குளிரூட்டப்பட்ட அறைக்குள்
மின் விளக்குகள் ஒளிர
விதவிதமாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது
விலைக் குறிப்பிணைத்த
காலணிகள்

தரத்திற்குமதிகமான விலையெனினும்
தயக்கமின்றி
பணம் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள்
வாடிக்கையாளர்கள்

நடந்து நடந்து தேய்ந்ததில்
பிடியறுந்து போக
தூக்கியெறிய மனமின்றி
சாலையோர வறியவரிடம் வந்து நிற்கிறார்கள்

நூல் துளைத்த ஊசியால்
அறுந்த வார் இணைத்து
பின்னலிட்டு
பத்து ரூபாய் கூலி என்கிறார்

அடித்துப் பிடித்து பேரம் பேசி
ஐந்து ரூபாய் கொடுத்துச் செல்கிறார்கள்
அதே வாடிக்கையாளர்கள்

விலையை
நிர்ணயம் செய்கிறார்கள்
சமூகத்தின் பொதுப் புத்தியேந்தி

- நீதிமலர், வழக்கறிஞர்

Pin It