மாலைவெயில் ஒளிந்துகொண்டு
விட்டுப்போன மிச்சம்
செம்மஞ்சள் நிறமென
ஆங்காங்கே நிறைந்துகொண்டன
கழல் பலகண்டு
மூச்சிரைத்துக்கொண்டது தளம்
மரக்கிளைகளில் துஞ்சிய
பட்சிகளின் கவிகண்டு
களிப்பு நிறை கண்ட சிறார்கள்
வளி இடர்க்கொள்ளாத
புதர்களில் கவின்கொள்ளும் காதல்
இல்லாள் விழிகொண்ட சினம்
முறிய மௌனம் திறந்த பதி
விளம்பரக்காகிதம் அரவம்கொள்ளாமல்
சிறகேந்தி பிறழ் கொண்டது
அமர்ந்த நேரங்களில் யாவரும்
கொண்டுசென்ற குதூகலம் வேண்டி
காத்திருந்தது நீண்ட இருக்கை
தேய்ந்துகொண்ட ஒளியில்
யாருமற்று நுழைந்துகொண்டது இருள்
பதிவுகொண்டதை அசைபோட்டபடி
பிடிவாதமாய்
அன்னார்ந்துகொண்ட பூங்கா
இன்னொரு பொழுதுக்கு இரஞ்சிக்கொண்டது…

     ****

பிறை நிலவு

தின்றுவிட்டு பாதியாய்
இருள்வீதியில் கிடந்த
திங்களொன்று
முயல் போல மெதுவாக
என் ஜன்னல் கடந்தபோது
விழுந்துகொண்ட
உடையாத வெண்ணொளி
மிச்சமாய் தரைக்கொண்டதில்
முழுமைகொண்டது

- சன்மது

Pin It