இருக்கும் இரு கரங்களும்
போதாதெனப் புலம்பும்
அம்மாவின் முதுகின் பின்னால்
எப்பொழுதும் துரத்திக்கொண்டிருக்கும்
இரக்கமற்ற சொற்களும்
இங்கிதமில்லாக் கட்டளைகளும்
ஓய்ந்திருக்கும் இடந்தன்னைப் பறித்துக்கொண்டிருக்கும்
ஓராயிரம் பணிவிடைகளும்
மனமுடைந்துபோன சொற்கள்
முட்டிமோதுகின்ற வீட்டில்
எப்பொழுதும் வெடித்துவிடத் தயாராக
நடமாடித் திரிகிறது பொறுமை
வலிய பாதங்களை அதிர வைத்து
நடந்து போகிறது
அனைத்தையும் மறுதலிக்கும்
ஒரு புறக்கணிப்பு
ஓங்கி வைக்கப்படும் பொருட்களிலிருந்தும்
அறைந்து சாத்தப்படும் கதவுகளிலிருந்தும்
புறப்பட்டு வருகிறது
அடுத்தவர் மீதான ஆத்திரங்கள்
கற்களை மாத்திரமே வைத்துக்
கட்டப்பட்ட வீட்டின்
விசாலமான கதவு, யன்னல்கள்
வழியே புகுந்து
திரைச்சீலைகளை வீசியெறிந்து
முகஞ்சுழித்தவாறு வெளியேறிப் போகிறது
அன்பில் தோயாத ஒரு வெப்பக் காற்று
சிதறடிக்கப்பட்ட பிள்ளைகளின்
வாழ்வையும்
உடைத்து வீசப்பட்ட
அன்பின் வரைபடங்களையும்
வீடெங்கும் இறைந்து கிடக்கும்
ஒருவனின் வக்கிரங்களையும்
சேகரிப்பதிலேயே
களைத்துப் போகிறாள்
வருத்தம் கவிழ்ந்த உடலுடன்
என்றாவது அவள் வீழ்ந்து தூங்கும்
ஆழ்ந்த உறக்கத்தை
அதிரவைத்துக் கலைக்கும்
தண்ணீர்க் குவளையன்றுக்காகவோ
அற்பச் சொல்லொன்றுக்காகவோ
கூச்சலிடும் ஒரு குரல்
நடைப்பிணம் போல எழுந்து வரும்
அவளது பாதங்களில் பின்னும்
யுகங்களாகச் சிதைக்கப்பட்டுவரும்
நிம்மதியன்று
என்றோ விதியாகித் தொடரும்
நியதிகளில் நசுங்குண்டவாறு
இரவு நெடுநேரம் வரை
துயிலை விரட்டி விரட்டிக்
காத்திருப்பாள்
எல்லோரும் உண்டு முடித்து
எஞ்சும்
குளிர்ந்த உணவுக்காக
கருங்கல் சிலையன்று
அதிகாரம் செய்தபடி
அலைகின்ற வீட்டில்
மோதி மோதியே செத்துவிட்டன
அவள் வளர்த்த எல்லா மான்குட்டிகளும்