நாங்கள் ஆண்ட பரம்பரை
பேண்ட பரம்பரையென
மயிர் பிளக்க கொக்கரிக்கும் மானங்கெட்டவர்களே

பாலியல் வல்லுறவுக்;கு இரையாகி
பரிதாபமாய் உயிரிழந்த
பிஞ்சுக்குழந்தையின் அவலங்களறிந்தும்
இனியும் பூசிமெழுக முயற்சிக்காதீர்கள்
என் மகன் அப்படிப்பட்டவன் இல்லையென்று

ஓடி ஆடி விளையாடும் வயதில்
தனக்கெதிராய் நிகழும் தாக்குதலை
தடுத்து நிறுத்த முடியாத
பச்சிளங்குழந்தை
பாலியல் வக்கிரத்திற்குள் சிக்கி சீரழிந்து
உடலையும் உயிரையும் பறிகொடுத்த கொடூரம்
உங்களது நெஞ்சை உலுக்கவில்லையா?

தடுக்கிவிழுந்த பிள்ளையை
தாங்கிப் பிடிப்பதாய் பாசாங்கு செய்து
மறைவிடத்தில் கீழே கிடத்தி
உடம்பை வளைத்து நிமிர்த்தி
இருகால்களையும் விரித்துப் புணர்ந்து
வாயில் மண்ணிட்டு மூச்சை இறுக்கி
உயிரைக் குடித்த குற்றவாளியென
உங்களின் கண்களுக்குத் தெரியவில்லையா?

இனியும்
வெள்ளை வேட்டிகட்டி
மீசைமுறுக்கி அலையாதீர்கள்
நீங்கள் ஆண்பிள்ளை பெற்றவர்களென்று
வெட்கம் அச்சம் எதுவுமின்றி
பகுத்தறிவை கழட்டியெறிந்து
அம்மணமேனியாய் அலையும்
கசடுகள் படிந்த
உங்களது ஆண்குறியில் வழியும்
வன்மத்தையும் இழிவையும்
எப்போது துடைத்தெறியப் போகிறீர்கள்?

இப்போதெல்லாம்
மிருகங்கள் மனிதர்களாகிறது
மனிதர்கள் மிருகங்களாகிறார்கள்

- வழக்கறிஞர் நீதிமலர், மதுரை

Pin It