இருவரும்தான் விளையாடினோம் பால்யத்தில்,
பெண்ணுரு கொண்டிருந்தும் உணர்வில்லா
அந்தப் பொம்மையை வைத்து

அவன் பெற்றோருக்கு
பேச்சுத் துணையாய் இருந்து
பொழுதைப் போக்கவும்

அவன் பிள்ளைகளுக்கு
கதைகள் கூறி விளையாடி
உணவூட்டி வளர்க்கவும்

அவன் செல்லும் விருந்துகளுக்கு
அழகாய் உடுத்தி
உடன் செல்லவும்

தேவைப்படும் பொழுதினில்
அவனுக்கு இன்பமளிக்கும்
களிப்பாவையாகவுமே
என்னைக் கையாள்கிறான்
இப்போதும் ...

அந்த மரப்பாச்சியை
பொம்மையாய்க் கருதி
அப்போது விளையாடியதெனவே

நானும் அப்போது
விளையாடியதைப் போலவே
இப்பொழுதும் வாழ்கிறேன் ...
உணர்வற்ற மரப்பாச்சியெனவே
எனைப் பாவித்து

- கா.சிவா

Pin It