அவளோடு நான் இருக்கத்தான்
உச்சி வெயிலும் இருக்கிறது
கதவடைத்து வரும்
அவளுக்குள்ளோ ஆயிரம் கதவுகள்

மிளகாய்த்தூள் வாசத்தில்
மிஞ்சி போட்டிருக்கும்
மதிய வெயிலுக்கு
அவள் மொட்டைமாடி வாசம்

மைவிழி கீச்சிடும் சொற்களில்
இரண்டிரண்டு முறை சிமிட்டல்
நிற்பதும் நடப்பதும் சுழலுவதுமாக
அறைக்குள் அர்த்த ராத்திரி
எப்படியோ பகலிலும்

மூச்சடைத்து எரியும் சூரியனை
அறைக்குள் உதைத்துத் தள்ளுகிறோம்
ஆசுவாசப்படும் இடமெல்லாம்
உருண்டோடும் வியர்வைப் புள்ளிகள்

நகம் கீறுவது நயம்பட இருக்கிறது
நர்த்தனம் ஒற்றைக்கால் தூக்கி
சுதியோடு தாளம் செய்கையில்
இன்னும் உக்கிரம் வெயிலிலும்

மஞ்சள் நிறத்தொரு மதியத்தை
இப்படி துவைத்துக் காயப் போடுவது
காதலின் வன்முறை
கூடவே கட்டிலின் கருணை

நகை கூடி நாணம் விட்டொழிந்து
ஜன்னல் திறக்கும் கூந்தல் முகத்தில்
தீரா வெயிலுக்கு இன்னும் சில நாக்குகள்

அந்தி சாயும் அந்த வேளை வரையும்
இப்படித்தான் வெயில் பூட்டோடு
உடல் திறந்து கிடக்கிறது
அடிதோங்கும் அச்சுப்பிறழாத ஆதி சங்கதி...!

- கவிஜி

Pin It