20 நாளாய்
ஓடாமல் இருந்த மின்விசிறி
சரி செய்யப்பட்டு விட்டது
தென்றலின் தூதுவென
அது முதுகு காட்டி சிரிக்கிறது

வெளியிருந்து இனி யார்
தள்ளினாலும்
படக்கென திறக்காத
சதுரக் கனவை
ஜன்னலாக்கி விட்ட பெருமை
அறையெங்கும்

அம்மா அறைக்கும்
தன் அறைக்குமிடையே
தகரமே என்றாலும்
தடுப்பொன்று கச்சிதமாய்
சுவர் எழுப்பி விட்டது
அடக்கியும் அடங்க மறுக்கும்
சிகரெட் புன்னகை

பெரியவன் மாமா வீட்டுக்கு
சின்னவள் மதினி வீட்டுக்கு
கடைக்குட்டி
கண்ணயர்ந்து விட்டது

பாதுகாப்பு சாதனம்
மூன்றடுக்கில் வட்டமிடும்
திருட்டு பூனைகள்

குளித்து மல்லிகை பூக்க
மகாராணி தொப்பை மறைத்து
வருவது தான் பாக்கி

இருக்கட்டுமென பாதி குடித்த
கறுஞ்சரக்கு மீதியும் கேட்க
மானம் கெட்ட மனம் கேட்காமல்
முடித்த பின் நிமிர்ந்திருந்தது
போத்தல்
மல்லாந்து கிடந்தது குறட்டை

கூட்டுக்குள் நுழைந்த
தலைவிக்குள் வெடித்து சிதறிய
வேதங்களிலெல்லாம் வெந்து
தணியா காடு

இனி இது போல ஒரு நாள்
இந்த 48 வயது தகரக் கூட்டுக்குள்
எப்போது கிடைக்குமென
விட்ட கண்ணீரில்
வேஷம் கலைந்திருந்தது
வெளியே விடிந்திருந்தது

- கவிஜி

Pin It