என் தேசம் சிரச்சேதம்
செய்யப்பட்ட போதும்
என் வகுப்பறை சாவுநாற்றம்
வீசிய போதும் தான்
நான் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டேன்

மார் துளைத்த ரவைக்கூடுகள்
எழுதுகோலின் தலைமூடியாய் கவிழ்ந்து
இறுதி மரணங்களுக்குப் பிரசவம் பார்த்தவை

காலம் உயிர்த்திருக்கின்ற
என்னுடலத்தை ஒளித்து
என்னைச்சுற்றி தனித்தீவு எழுகிறது
விரல்கள் திசை நோக்கியே குறி நீட்டுகிறது

ஒரு சூரியோதயத்தைப் பார்ப்பதற்காகவோ
ஓரிரவின் தற்கொலைக்காகவோ
கண்டங்களையும் கடல்களையும்
அழிப்பதற்கு நான் தயாராக இல்லை

.00

வசீகரமான மௌனத்தை நிலைநிறுத்தி

என்னுள் நிரவி வாசத்தால்
மணக்கத் தொடங்குகிறீர்கள்
பிரபஞ்ச ஜீவிதத்தில்
இருத்தலின் மர்மம் உணர்த்தும்
வாய்பேசாத நிலவின்

காலடிச் சத்தத்தை ஆரத்தழுவுகிறேன்
துடித்துக் கொண்டிருக்கும் கவிதைகளிடம்
என்னைப் பூசிக் கொள்கிறேன்
அவை அந்த மகா சமுத்திரம்
நோக்கி இழுக்கின்றன
அதன் விரல்களைப் பிடித்துக் கொள்கிறேன்
நழுவி விட முடியாமல்
ஆக்கிமிடீசின் மிதத்தல் விதியோடு
அவை பேசுகிறது
என் குரலை ஆழ் அடித்தளத்தில்
தங்க வைத்திருக்கிறது
வசப்பட்டுப் போன என்னை
சொற்களை வீசி வீசி
தன்னுள் கொந்தளிக்கிறது
பேரொலிகளை காதுகளால் காண்கிறேன்
பித்து அலைகளை கண்களால் கேட்கிறேன்
மூர்க்கத் தனமாய் மௌனம் மொய்த்த
மரணக் கருணையை
விளைபளிங்கு உப்பு மட்டும் தான் என்றால்
நம்பவா போகிறீர்கள்

 

00

ஒவ்வொரு ரயில் பயணத்திலும்
ஒரு விடுமுறை அகாலம்
இறுக்கிக் கொள்கிறது

உயிரைக் கையில் திணித்தபடி
ஒவ்வொரு முறையும்
கிளாலிக்கடல் கடக்கையில்
ஏவப்பட்ட கணைகளுக்கு
எனக்கான இலக்குத் தெரியவில்லை

இருந்தும் குளிர்கோடை தன் தித்திப்பை
பொழியும் வெயிலில்
கரைத்துக் கொண்டிருக்கிறது

அரைவிலைக்கு வாங்கி
போர்த்திய குளிருடையில்
வலியுடன் நெகிழ்கிறது

என்னூரின் இலவம்பஞ்சுப்பொதி

நான் வெறும் ஐந்து சதத்தில்
ஒரு செர்ரிப்பழத்தில் அதைப் பிழிந்து
அருந்திக் கொண்டிருந்தேன்

அதனால் என்ன
மின்மினிகளை சிறைப்படுத்திய

என் பயணம் எனக்குப் போதுமாயிருந்தது

 

00

சுருதி சேர்ந்து பாடும் மழைப் பொழிவில்

பரவசம் நுரைக்கிறது
துணிக்கைச் சிரிப்புடன்
என்னோடு பஞ்சம் பறக்க பறந்து கொண்டிருந்தன
கூடடைந்த கலசப் புறாக்கள்.
வேகச் சுழலில் சிக்கி காலை கரைகிறது
என் ஊரின் வயல்களில் தாழப் பறந்து
சில கணங்களை நிகழ்த்திய குடுவை ஒன்று
வளரத் தொடங்குகையில்
கனத்திறங்கி அமர்ந்து விடுகிறது மனங்கொத்தி.
வண்ணம் குலையாத பூக்கடையை பரப்பி
சபலத்தை பூசி இருக்கும் வீதிக்கண்கள்.
எங்கிருந்தோ பறந்து வருகிறாய்
பொட்டுப் பூச்சியாய் நீ
வர்ணம் தொலையாத அதன்
சிறகைக் கட்டிப் பறக்கிறது
அடிவயிற்றில் தூரெடுத்த மனசு

 

00

இது கடக்கும் நெரிசல் பொழுது
வெயில் நனைத்த சாலையில்

மேலும் மேகம் எறிகிறது
தூற்றலின் முகவரியை
கால் நுனியில் துளிர் கசங்கிய
பூவொன்றின் கதறலும்
கசிந்த ரத்தக் கறையும் தவிர
ஒன்றுமே இல்லை

வெற்று வெளியில் புல் தடுக்கி வீழ்ந்த
ஒவ்வொரு பனித்துளியையும்
வெண் முட்டைகளாக சேகரித்து வைக்கிறேன்
நீ உயிரிடுவாய் என்றாலும்
வெற்றிடத்தை எங்கே வைப்பது
என்று தான் யோசிக்கிறேன்

ஈர நிலம் பிய்த்த கற்களை
நதியால் தூக்கி எறியவா முடியும்
ஆழமான கீறல்கள் நடுவிலும்
நாணல் ஒன்றை நட்டு வைக்கிறேன்
நினைக்கும் நொடிகளை கட்டி
நினைக்காத நொடிகளை
காய வைப்பது இலகு அல்லவா !

00

கடிகாரமுட்கள்
தூசு படியாத வயதைக் கிழிக்கின்றன
துள்ளித் துள்ளி ஒன்றும்
சற்றே வலிகளை நகர்த்தி ஒன்றும்
மனப்பூச்சியோடு விளையாடுகின்றன

ஒரு பட்டாம்பூச்சிக்குள்
ஒளிந்திருக்கும் மூச்சைப்போல
அதன் படபடத்த வானம்

முளைத்த சிறகு மகரந்தங்களில்

ஒழுகும் கருணை முறுவல்
சிலாகித்த முத்தம்
நகர்வின் நெகிழ்வு
ஈரங்கசி துளிக்கண்கள்
கனத்திறங்கும் மௌனம்
கலைந்து குடியேறிய புல் படுக்கை
துருவகன்ற சோகம்

எல்லாமும் நகர்கிறது
இன்னுமொரு மென்மையான
கணத்தின் பூவிதழுக்கு

முள்ளில்லாத கடிகாரம்
என்னுள் எழுந்தது
குனிந்து என் நிழலைப் பார்க்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை
சிதைத்துக் கொண்டிருந்தது

00

கண்கள் புறக்கணித்த கரும்பாறை ஒன்று
சிரித்துக் கொண்டிருந்தது
திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை
பூவொன்று உதிர்ந்திருந்தது

முகம் மொத்தமும் கீறிக் கிழித்த காற்றின்
நரம்புகளில் வடிந்தபடியே இருக்கிறது இரத்தம்
சேமித்து சேமித்து உறக்கத்திலும் சிரிக்கிறது மரம் !

மரங்களை அடர்த்தும்

நிலமாகும் கணமொன்றில் வேரின் வரிகளை
நிலவின் உருக்கமான கடிதம் வரைந்து விடக் கூடும்!

00

அறைக்கதவு திறந்த படியே இருக்கிறது
கரும்புக் காடு ஒன்றை
வளர்த்து வைத்திருக்கிறேன்
மௌனத்தின் விதைகள்
சுவரெங்கும் சிதறிக் கிடக்கின்றன
சிரிப்பின் கன்னக் குழிகள்
மரங்களாய் நிழலிக்கின்றன.
திறந்த ஜன்னலில் வெளித் தெரியும்
மொத்தத் தகராறுகளையும்,
காகிதச் சுருளுக்குள் அலறும் செத்துப் போன
பறவைகளின் ஒலிகளையும்,
அறை நிரம்பிய சுகாந்திர அனுபவத்தை கேட்கும்
பிச்சைக் குரல்களையும்,
சட்டென நகரும் பாஷை தெரியாத மைதானத்தையும்,
எப்போதும் தயாராக இருந்த கீறலும் காயமும்
மெல்ல வருடும் வலிகளையும்,
கரைந்து மூழ்கிய தனியன் கடலையும்,
நினைவு வில்லைகளை விழுங்கி உறங்காதிருந்த
திறந்த இமைகளின் வழி பார்க்க
எனக்கு எப்படி கண்கள் முளைத்தன

00

தனித்த பூவொன்றை
சிறகுகளால் வருடிச்சென்றது
வண்ணத்துப்பூச்சி
இன்னும் உலகம்
தொலைந்து போகவில்லை

உண்மைகளும் முரண்களுமாய்
எனக்கு முன்னால் வழிகிறது உலகம்

வினாக்களுக்குள் உறைந்து போகா
ஆறு எது பற்றியும் கவலையின்றி
நீண்டு நகர்கிறது

வெயிலில் காய்ந்து

கொடியில் உலர்ந்து கொண்டிருக்கிறது
கசக்கியும் சிதையாத நம்பிக்கையின்
ஈரம் காய்க்கும் விசித்திர மணல் திட்டு !

00

காற்றின் காதல்
கிளைகளில் தான் முறிந்து விழுந்தது

சேமித்த கடல்
தாகமுடைய கெண்டை மீன்கள்
பருகும் போதெல்லாம் சிதறி உடைந்தது

காயம் பட்ட மரத்தில்
ஈரம் தெளிக்க
ஓர் உதடு குவிப்பு போதுமாயிருந்தது

பிரிதலுக்கான பிரியமும்
பிரியத்திற்கான பிரிதலும்
இன்றேல் வாழ்க்கை
என்ன வாழ்வதாகவா இருக்கும்?

00

பதிலுக்கு பூக்க வேண்டும் என
எந்தப் பூக்களுமே எதிர்பார்ப்பதில்லை

பூமியை, காற்றை, மழையை
சுவாசிக்கச் செய்வது
தன்னையே வாசிக்கிறவனின்
மனநிலையை ஒத்தது

நீருக்கு
காற்றுக்கு
மண்ணுக்கு
கதவுகள் உண்டா
காலத்தின் கதவுகளை
சுவடுகள் தீர்மானிக்கின்றன

ஓர் இரகசிய கதையை
என் மகனிடம் புதைத்து வைத்திருக்கிறேன்
கொள்ளியிட வரும் போது
முடிந்தால் ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.

00

அது
இங்கிலாந்து நகர்கிறது
புகைத்தவாறும்
குவளைகளில் நுரைத்தவாறும்
ஏன் நானும்தான் என்னையும் தான்

தீக்கங்குகளில் குவிகின்றன
குவளை நொருங்கி
புகைந்து கொண்டிருக்கிறது
இருப்பும் இருதயமும்

நான் மட்டும்
புகைக்கக் கூடாதா என்ன
அவர்கள் என்னையே
வாயில் பற்ற வைத்தவாறு

சாம்பல் பூக்கள் நிறைகின்றன
கொச்சைப் படுத்தாமல் திகிலடைகிறது இருள்

தேய் வளர் இளம் பிறையாகி
மௌனச்சிறைக்குள் அறையப் பட்டிருக்கிறேன்
உறக்கத்திலும் புகைந்து நொருங்கி
எழுதுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதெனக்கு.

00

காலடியில் விழுந்து
தனித்துக் கிடக்கிறது ஆகாயம்
பறவையொன்றின் சிறகில்

உணர்ச்சி வடிந்த குரலில்
பேசத் தொடங்குகிறது தன் சரிதத்தை

வீணையின் நரம்பெடுத்து
சொற்களை புகுத்தி
காதைப் பிடித்து இசைக்கிறது நாதம்

ஒடிந்த பின்னும் மோனத்திலிருந்து
பறக்கத் தொடங்குகிறது
இரவு முழுவதும் விழித்திருந்த வானம்

ஒரு போதும் சிறகுகள் சிறைப்படுவதில்லை
தற்கொலைத்துக் கொள்கின்றன

மேனி தழுவாத வடுக்களும்
வானமற்ற வெளியும்
வாழ்வுக்கு இசைந்ததா என்ன?

00

 

என் அன்றாடத் தேவைகள்

முழுவதும் என்னுடையவை இல்லை
இதோ குவித்து வைத்திருக்கிறேன்
எடுத்துக் கொள்ளுங்கள் .

இளைப்பாறவும்
புத்துயிர்ப்படையவும் மட்டுமா நிழல்கள்
கட்டி வைத்து அடிக்கவும் தான்

நிகழ்பவை பேரதிர்ச்சியாக
இருப்பதாக இல்லை
பின் நிகழ்வுகள்
பேரதிசயத்திற்கானஆகச்சிறந்த ஆயத்தம்

மரத்தை ஏன் வெட்ட முற்படுகிறீர்கள்
காலருகே வைக்கோல் போருக்குள்
பழுத்துக் கொண்டிருக்கிறேன்.

00

ஒற்றை அறையின் குமிழ் விளக்கு
இருளடைந்து கிடக்கிறது
என் திருடப்பட்ட பகல் போல
நேரம் நிசி ஆகியும்
இதுவரை சலனமற்று திரிகிறது சூரியன்

விடாமுயற்சியுடன்
அலை மோத மோத
இன்னும் வேகமாய் எதிர்க்கும்
கரை மணலை
கொஞ்சம் கொய்து வைத்திருக்கிறேன்
இப்பக்கமும் அப்பக்கமும் தைத்து
ஒரு கடல் செய்ய

நீயேனும்
தாகமுடைய ஒரு கடலை
எடுத்துக் கொண்டு விரைவாய் வா
உயிரிழந்த விண் மீன்கள் துடிக்கின்றன.

00

பறவைகள் வரைந்த
துண்டு வானங்களை எடுத்து வருகிறது
பறந்த தெருவில் அவற்றோடு
மிதந்த மேகத்திரள்

ஆரஞ்சுச் சாற்றுடன்
கௌவிய பழமொன்று
குதூகலத்தை ஊற்றி ஊற்றி
மௌனமாய் அசையும்
இருள் பிரியாத காட்டில்
மழை பெய்தென்ன
சாரல் அடித்தென்ன

கடல் ஊர்ந்த தடம்
தரையெல்லாம்
உப்பை விதைத்திருந்தது
சுவடுகள் கரைந்து
கொண்டிருக்கின்றன
அலை ஒதுக்கிய கடற் சங்குகளில்
வாரியிறைத்துக் கிடந்தது
மீளா மரணத்துயர்

வடிந்து கொண்டிருந்தது
ஓலைக் கீற்றில்
தேங்கிய ஒற்றை வரி
"அந்தப் பூ காற்றை
எழுதிக் கொண்டே இருக்கிறது"

- தமிழ் உதயா, லண்டன்

Pin It