ஏதெனுமொரு
சிறு இடைவெளியிலாவது குளிர்ந்து
உன் கண்களுக்கு முன்
அதிகாலையின் துளியாகிடப் பார்க்கிறேன்
எல்லா பொழுதுக்குமான வெளிச்சத்தைப் போல
எல்லாவற்றையும் நீ முந்திக் கொள்கிறாய்
எனக்குள் இன்னும் பயன்படுத்த முடியாமல்
பெருகிக் கொண்டேயிருக்கிறது
நமக்கானவைகள்
அவற்றை எத்தனை முறை தான்
சமாதானப்படுத்தி நிறுத்தி வைப்பது
எப்படி உன்னால் மட்டும்
எல்லா நேரமும்
எனக்காக வாய்க்க முடிகிறது
கடைசியில் உன் அன்பின் மீது
மனம் பிசகிய என் அன்பிற்கு
சொல்லில் சிக்காத கோபம் பார்
நேசிப்பின் அத்தனை சுவைகளையும்
என் அன்பு கசக்கிறதென
முகம் திருப்பிக் கொள்கிறது
அவற்றின் நாளை நாளையெனும்
அனைத்தையும்
உன் அன்பு மிக அழகாக
தனதாக்கி நகர்கிறது
என் அன்பு தன் புலம்பல்கள் கோபங்கள்
தன்னாலாகதவற்றை நினைத்து
ஒன்றும் பேசாமல் உன்னிடம் தோற்று
திரும்ப நினைக்கிறது
இறக்க நினைக்கிறது
தன்னைத் தானே விட்டுவிட நகர்கிறது
நிதானமாய் உன் அன்பின் கரங்கள்
என் அன்பின் கால்களை
மெதுவாக வருடுகிறது
இம்முறையும் நீயே முந்திக் கொண்டாய்
என் சுதந்திரத்தாலான அன்பை
நீ சிறை வைத்திருப்பதாகத் தோன்றுகிறது
எனக்கு கொஞ்சம் மெளனம் கொடு
உன் அன்பை தூங்கச் செய்
நீ உன் வேலைகளைப் பார்
நான் என் அன்பை அழ விட வேண்டும்
அது வாழ வேண்டும் நமக்காக
நீ நீயாய் என்னைப் பார்க்க
உன் அன்பு திரும்பிக் கொள்கிறது
நான் தனியாய் அமர்ந்து
என் அன்பினை
யாருமற்றதாய்க் கண்கள் கொண்ட
ஒரு பூனைக்குட்டியின்
தலையை வருடுவது போல
வருடிக் கொடுக்கிறேன்
பாவம் என் அன்பு
பாவம் என் அன்பு
பாவம் என் அன்பு
- முருகன்.சுந்தரபாண்டியன்