ஊருக்கு தான் கார்த்திகை தீபம்
உனக்கும் எனக்கும் வழக்கம் போல
இது காதலின் தீபம்

*
கொலுசை உன் கால்கள் அணிந்து பார்க்க
அதனொலி உன் கால்களை
அணிந்து பார்க்கிறது

*
காஃபி போட்டு காத்திருக்கிறேன்
எழுந்து சோம்பல் முறித்து
இந்த நாளை இனிய நாளாக்கு

*
நிலவு காத்திருக்கிறது
ஒத்தையடியும் காத்திருக்கிறது
சீக்கிரம் வா வழி காட்ட

*
தூரமாக இருந்தால் நட்சத்திரம் நிலா
பக்கமாக இருந்தால் நீ
இருள் வெளிச்ச விதிகள் மூன்று தான்

*
கீறி விட்டதென வெட்டி விடாதே
அது நகங்கள் அல்ல
நகா பழங்கள்

*
ஒரே செடி தினம் வேறு பூக்கள்
உன் காதையும் கம்மலையும் தான்
சொல்கிறேன்

*
உன்னை அணிந்து பார்க்கத் தான்
அத்தனை ஆடைகளும்
ஆசையாய் தொங்குகின்றன

*
ஒரு முறை தூக்கி இறக்கு
தேவாட்டுக்குட்டியைப் போல
ஆகட்டும் அது தேவதையாட்டுக்குட்டி

*
பின்கட்டிலிருந்து வந்து விட்டு
பிசியாக இருப்பதாக காட்டிக் கொள்ளும்
பெண் பட்டாம்பூச்சி நீ

- கவிஜி