வலிந்து நிரப்பிக் கொண்ட தனிமையில்
திணறுகிறது வெளி கூதிர்காலத்தில்
ஒவ்வொரு சொல்லாக வீசியெறிகிறோம்
குளிர்விரட்டும் விறகடுப்பில்
பூத்துக் குலுங்குகிறது மழை.

அடர் இருளைப் பனி கொண்டு பிசைந்து
இரவு உணவுக்குத் தயார் செய்கையில்
வயிற்றிலிருந்து பசியைப் பிடுங்கி
விளையாடுகிறது காதல்

இன்னும் வீழாத ஒரு துளி பனிக்கு
பக்கத்துத் தோட்டத்தில் காத்திருக்கின்றன
இலையிலையாக மலர்கள்.

குகைகளில் துணையுடன் துயிலும்
காட்டு விலங்குகள் மிக நல்லவை.
புலியின் பற்களை
இப்போது நினைவுறுத்தாதே.
வால்முளைத்த யானைக்கன்றுகள்
விளையாடிய பின்னரே துயிலும் .

யாருமற்றிருக்கும் இரவையே
விரும்புகிறது நிலவு.
அதன் தீயை எடுத்து
நம் உடைகள் பற்றிக் கொள்ளாமல்
காட்டை எரிக்கலாம் வா !

- இரா.கவியரசு