baby 243குட்டியம்முவிடம்
கை கால்கள் முளைத்து
அசைவுறும்
ஆன்மத் தேடலைக் கண்டு
பிரபஞ்சமானோம்
உந்தித் தவழ
அவளின் தலைமுடிகள்
சுருளாய் விழப்
பொம்மையாகினாள்
யாவரின் கைகளுக்குள்ளும்
அரிசிப் பற்களால்
புன்னகை மொழுகினாள்
அதனில் முத்தங்களின் வித்துக்கள்
சிந்த மீண்டும் ஏந்தி
ஊட்டிவிடக் காத்திருப்போம்
அவளிடம் அழகியல் மட்டுமல்ல
அழுகையுமுண்டு
அத்துளிகள் இதயவழி நுழைய
உப்புக் கரித்துத் திணறுவோம்
பூம்பாதங்களில் கொலுசுகளிட்டு
நடந்து வர
அம்பாளுக்கொரு வெண்பாவென
கலீரென்ற முத்தொலிகள்
காதிசைக்கும்
அவள் எச்சில் செய்த
பண்டங்களின் மிச்சங்கள்
எங்களின் நாவெழுதி
செங்கமலங்களாய் மலரும்
வளர்கிறாள்
அவளோடு வளர்கிறோம் வாழ்கிறோம்
எங்கள் வீட்டின்
முதல் பேரக் கிள்ளையவளிடம்
மழலைக் கேள்விகள்
மூக்கு சிவக்க
அதன் இறகுகளைப் பிடித்த
எங்களின் கைகள் சிலுப்பி
வானவெளியெங்கும் நிரம்பியது
பஞ்ச வர்ணம்....!

- புலமி

Pin It