ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்

ஒல்லா தெனில் இயலாதென விலகலும்

ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே

பொருளா தாரம் சந்தை வழியெனில்

பெருகும் புவிவெப்ப உயர்வுப் பொருட்கள்

உலகை அழிக்கத் திமிர்நடை போடும்

நலம்பெற மரங்களை வளர்க்க வெனிலோ

நட்டம் என்றே சந்தை தடுக்கையில்

எட்ட விலகி வழிவிட லாமே

((ஒரு செயலைச் செய்ய) முடியும் என்றால் முடியும் என்று சொல்லுவதும், முடியாது என்றால் விலகிச் செல்வதும் மனித இயல்பு உடையவர்களின் குணமாகும். சந்தை விதிகளின் படி பொருளாதாரம் செயல்படும் பொழுது புவி வெப்பத்தை உயர்த்தும் பொருட்கள் (அதிக அளவில் உற்பத்தியாகி) உலகை அழிவுப் பாதையில் செல்லத் திமிர் நடை போடுகிறது. (புவி வெப்பத்தைக் குளிர்விக்கும் அளவிற்கு மரங்களை நடலாம் என்றாலோ, நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று சந்தை விதிகள் (அப்படிச் செய்வதில் மூலதனத்தை ஈடுபடுத்த விடாமல்) தடுப்பதால் (இவ்வுலகம் புவி வெப்ப உயர்வால் அழியாமல் இருக்கும் பொருட்டு, முதலாளித்துவம்) எட்ட விலகி (இப்பிரச்சினையைத் தீர்க்கவல்ல சோஷலிச அமைப்புக்கு) வழி விடலாமே.)

Pin It