widowபுத்தக அலமாரி
எழுத்துகளின் உடை
வெளியே வந்த கதா பாத்திரம்
ஆறு வயது விதவை
நிகழ்கால பச்சையத்தை ருசித்தது
கதைகளின் சருமத்தால்
மூடியிருந்த வாழ்வைப் புரட்டியது
நிகழ்காலத்தை சுற்றிப்பார்த்த பின்
சருமத்தை உரிக்க முயன்று
தோற்ற பிறகு சொன்னது
ஒரு நாள் ஜெயிப்பேன்
இந்த புதிய மழைக்காற்றை
இந்த காலைப்பனியை
சுடும் இந்த இரவு வெப்பத்தை
இறந்த காலம்
சாபமிட்ட உடலை அவிழ்த்து
நிகழ்காலம்
ஆசீர்வதித்த புதிய உடலில் செருகுவேன்
நானே வீடாகி
நானே காற்றாகி
நானே நிரப்புவேன்
என் வீட்டை
என் வாசனை ததும்பும்
இரவு பகல்களால்
நிறைவடையாத கனவுகளோடு
சங்கமித்து
உயிர்ப்பை பிரசவிப்பேன்
ஒட்டிக்கிடக்கும்
பழைய விதிகளை எரிப்பேன்
என் காலம் ஏன் மோசமாக இருந்தது
இன்றைய சமூக சிந்தனை
அந்தக்கால மனித மூளைகளில்
இது ஏன் தோன்றவில்லை
மூடர்களின் காலமாக இருக்க
அதைப் பணித்தது யார்
இந்தக்காலம் போல அது
ஏன் சுதந்திரமாக இல்லை
வாழ்வு
காலியாகிவிட்டதென்று சொல்லி
என் கதவுகளை மூடி விட்டார்கள்
காமத்தின் சுனை
மூடி வைக்கத்தெரியாமல் உடலில்
காலத்தின் புதர்கள் படிந்து
சுரக்கத்தொடங்கிற்று
சுனை நீர்
குடித்து வளர்ந்த உறுப்புகளை
உணர்ச்சிகளை கொல்லத்தொடங்கினேன்
நான் கொன்றிருக்கக்கூடாது

Pin It