உலகில் சமதர்மம் வீழ்ந்த பின்னே
பலவகை யாலும் உள்ளோர் இல்லோர்
இடைவெளி பெருகிப் பலரும் மாள்கிற
கடைநிலை வறுமையும் ஊடகம் தனிலே
அச்சம் அகன்று உச்சத்தில் பொய்மை
நச்சென வளர்வதும் புவிவெப்ப உயர்வுடன்
சூழ்நிலைக் கேடும் உலகில் உயிரின
வாழ்வை முடிக்கத் துணிவாய் முயல்வதும்
முதலியம் ஒழித்துச் சமதர்மம் கொணர்வது
முதல்முழுக் கடனெனக் கற்பிக் கிறதே

(உலகில் சோஷலிச அரசுகள் வீழ்ந்த பின்னர் ஏழை பணக்காரர்களுக்கு இடையிலான ஏற்றத் தாழ்வுகள் பலவகைகளிலும் பெருகி, மக்கள் பலர் (தற்கொலை செய்து கொண்டு) மாள்கின்றனர். (உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற அக்கறை சிறிதும் இன்றி) ஊடகங்களில் அச்சமே இல்லாமல் பொய்மை நச்சு போல் உச்சத்தில் வளர்கிறது.(இது அகில உலக செய்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு [Association of News Papers and news Publishers] 25 ஆண்டுகளாக [அதாவது சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு] ஊடகங்களில் பொய்மை மெது மெதுவாக வளர்ந்து இப்பொழுது தலைவிரித்து ஆடுவதாக 3.12.2009 அன்று பாரீஸில் நடந்த கருத்தரங்கில், மனம் மறைக்க முடியாமல் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலமாகும்) (மேலும்) புவி வெப்ப உயர்வும் சூழ்நிலைக் கேடும் உலகில் உயிரின வாழ்வை முடிக்கத் துணிவாக முயன்று கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் முதலாளித்துவத்தை ஒழித்து சோஷலிச சமூகத்தைப் படைக்க வேண்டியது முழுமுதல் கடமை என்று கற்பித்துக் கொண்டு இருக்கின்றன.)

- இராமியா

Pin It