முன்னுரை

அம்பை என்னும் பெண் எழுத்தாளுமை தமிழுலகம் அறிந்த சிறந்த படைப்பாளி. பெண்ணெழுத்து வரிசையில் முதன்மையராக நிற்பவர். தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளை, வலிகளைக் காத்திரமாக எழுதுபவர். பெண் ‘வலிமையானவள்’ ‘மென்மையானவள்’ என்று இருவேறு நிலைப்படுத்தப்பட்டு எப்படி ஒடுக்கப்படுகிறாள் என்பதனையும் அதன் ஆழமான பார்வையையும் தம் படைப்புகள் வழி முன்வைத்தவர். இலக்கிய வெளியில் முற்றும் முழுவதுமாக புறந்தள்ளி விடும் சூழல் அம்பையின் படைப்புகளுக்கு இல்லை. அவரது எழுத்து பெண் வலியையும் வலிமையையும் அழுத்தமாகப் பேசுகிறது. அதுகுறித்து இனி காணலாம்.

ambaiஅம்பை

அம்பை என்ற புனைபெயரில் எழுதும் பெண் படைப்பாளியின் இயற்பெயர் சி.எஸ். இலட்சுமி. அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து பெண்ணியச் சிந்தனைகளை எழுதி வருபவர். எம்.ஏ. முடித்த பிறகு, பண்ருட்டியில் சில காலம் பள்ளி ஆசிரியராகவும் சென்னையில் ஆங்கிலப் பேராசிரியராகவும் பணி புரிந்தவர். காலச்சுவடு, கணையாழி, கலைமகள், இந்தியா டுடே, தீபாவளி மலர்கள் ஆகியவற்றில் தொடர்ந்து எழுதி வருபவர்.

பெண்களின் வலியைப் பெண் பார்வையிலிருந்து எழுதப்படும் எழுத்தாக அம்பையின் படைப்புகள் உள்ளன. ஆனாலவை பிரச்சாரமோ, புலம்பலோ இல்லாத தன்மையைக் கொண்டுள்ளன. பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் போன்ற காரணங்களை முன்னிறுத்திப் பெண்கள் எப்படியாக நேர்மறையாகவோ, எதிர்மறையாகவே ஒடுக்கப்படுகின்றனர் என்பதனை அம்பை தன் படைப்புகள் நெடுக பேசுகிறார்.

பெண்களின் வாழ்வியல் என்று எடுத்துக்கொண்டால், அதில் ஆண்னின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக அமைந்து விடுகிறது. ஆண் ஆதிக்கம், அதிகாரம், கேலி, கிண்டல் போன்ற அழுத்தங்களுக்கும் ஒடுக்குதல்களுக்கும் பெண்கள் காலங்காலமாகச் சிறைபட்டு வருகின்றனர். அவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில், அம்பை தன் எழுத்துக்களை வடிவமைத்துக் கொள்கிறார்.

ஆணாதிக்கத்தை முதன்மைப் பேசுபொருளாகக் கொண்டு தனது படைப்பினை எழுதுகிறார். தொடக்கக் கால எழுத்துக்களில் மார்க்சியச் செல்வாக்கும் பின்பு துப்பறியும் கதைகளின் பாணியிலும் கதைகளை எழுதுகிறார் என்ற விமர்சனமும் இவரின் மீது உண்டு. சமூகவியல், இலக்கியம் என்னும் இரண்டு வகைப்பட்ட தன்மைகளில் தனது எழுத்தாளுமைய அம்பை அமைத்துக் கொண்டார். கள ஆய்வு செய்வதிலும் பிரச்சனைக்குரிய களத்தில் நேரடியாகச் சென்று ஆராய்ந்து எழுதுவதும் இவரின் எழுத்துக்கு உற்ற துணையாக அமைகிறது. பெண்களின் முதல் கோபக்கனல் எழுதுவாக இருக்குமோ அது தான் அம்பையின் படைப்புகளாக இருக்கும்.

கருவும் களமும்

பெண்கள் பற்றிய ஆண்கள் மதிப்பீடும் தம்மைப் பற்றிய பெண்கள் மதிப்பீடும் முரண்படத் தொடங்கிவிட்டதை எடுத்துக் காட்டுவனவாக அம்பை படைக்கும் கதைகள் அமைகின்றன. இம்முரண்பாட்டிற்கான காரணத்தை வெளிப்படுத்தும் கதைக்கருக்களையும் அதற்கேற்ற கதைக்களன்களையும் உருவாக்கிக் கொள்கிறார். பெண் கல்வி, தொழில் நுட்பம், அறிவியல் முன்னேற்றம் காரணமாகப் பெண்கள் விழிப்புணர்வுப் பெற்றுள்ளனர். ஆண்களால் தாங்கள் சக மனிதர்களாக நடத்தப்பட வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றனர்.

பெண் அடங்கி இருக்க வேண்டும். சமையலறையே அவளுடைய முதன்மையான இருப்பிடம் என்ற கருத்துடைய இச்சமுதாயம் பெண்களைச் சக மனிதர்களாக நடத்துவதில்லை. ஆண்கள், பெண்களை அலட்சியப்படுத்துவதை நுணுக்கமாகவும் ஆவேசமாகவும் சில சமயங்களில் நகைச்சுவையாகவும் வெளிப்படுத்துகிறார் அம்பை.

படைப்புகள்

அம்பை தமிழிலும் ஆங்கிலத்திலும் தம் படைப்புகளை வெளியிட்டுள்ளார். 1960களில் எழுத்துத் துறைக்குள் காலடி எடுத்து வைக்கும் அம்பை தனது வீரியமான மொழியால் அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் வசீகரத்தைக் கொண்டுள்ளார்.

புதினம், குறும் புதினம், சிறுகதை என்னும் வடிவங்களில் தமது படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு இலக்கியப் பங்களிப்பினை ஆற்றி வருகிறார். தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் புலமை மிக்கவராகத் திகழ்கிறார். சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் போன்ற படைப்புகள் குறிப்பிடத்தக்கவையாக மிளிர்கின்றன.

அம்பையின் முதல் படைப்பாக, “நந்தி மலைச்சாரலிலே (1960)” குழந்தைகளுக்கான துப்பறியும் நாவல் ஒன்றினை எழுதினார். பிறகு தொடர்ந்து எழுத முற்பட்டார். அந்தவகையில், சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்ற சிறுகதைத் தொகுப்பிற்கான 2021ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார். தமிழ், ஆங்கிலம் எனத் தொடர்ந்து பல்வேறு மொழி இதழ்களில் எழுதி வருகிறார். அம்பையின் படைப்புகள் பெண் எழுத்துக்களில் ஒரு அதிர்வினை உண்டாக்கியது. தொடர்ந்து எழுதி வரும் அம்பை நவீன – அறிவியல் தொழில் நுட்பச் செய்திகளையும் கவனத்தில் கொண்டு எழுதுகிறார்.

எழுத்து மொழி

அம்பை தன் தனிப்பட்ட வாழ்வியலிருந்து அதற்கான கச்சாப் பொருள்களை எடுத்து படைப்புகளைப் படைத்துள்ளார். பெண் காலங்காலமாகத் தன் வாழ்வியல் என்பதனை அடுப்பங்கரை சமையல், குழந்தைப்பேறு என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்துப் பார்த்த ஆணாதிக்க மனநிலையைக் கேள்விக்குள்ளாக்குகிறார்.

அம்பை மக்களின் பேச்சுமொழியினைத் தவிர்த்து, இலக்கிய வழக்கு மொழியினை எடுத்து படைத்துள்ளார். இலக்கிய மொழி என்பது வெறும் எழுத்து மொழியினை உரையாடல் வழி வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அஃறிணைப் பொருட்களைக் கொண்டு பேசும் உரையாடல் மொழியினைத் தமது கதைகளில் அம்பை பயன்படுத்துகிறார். தனக்கு ஏற்பட்ட வாழ்வியல் அனுபவத்தைப் படைப்பாக்குவது என்பது அம்பைக்கு கைவந்த கலையாகும். பிராமணக் குடும்ப வாழ்க்கைக்குள் பிறந்து வளர்ந்திருந்ததால் அம்மொழியும் அடிக்கடி தன் கதைகளுக்குள் வந்து போகும் சூழல் அமைந்துள்ளது.

மனிதர்களின் அன்றாட பேச்சுமொழியினைத் தவிர்த்து, ஒரு மேட்டிமைத்தனத்துடன் மொழியமைப்பினை வெளிப்படுத்துகிறார். கதைகளின் களன்களை உள்வாங்கிக் கொள்வதில் ஒருவிதச் சிக்கல் எழுகிறது. அது எழுத்து நடையாக இருக்கவும் செய்கிறது. மக்களின் வாழ்வியலை வாசகர்களுக்கு எளிதில் புரிந்துக்கொள்ளும்படியாக இல்லாதது ஒரு வருத்தத்திற்குரியதாகவே பார்க்க முடிகிறது.

மனித உணர்வுகளை உள்ளது உள்ளபடியே எவ்வித அலட்டல் மொழியும் இன்றி இயல்பாக பதிவு செய்திருக்கிறார். காதல், திருமணம், அரசியல், இசை, உறவுகள் என்று பல்வேறு நிலைகளில் தம் படைப்புகளைப் படைத்தவர். பெண்களின் வாழ்வியலை சுயம் சார்ந்த செய்திகளை மிகவும் இயல்பு நடையில் படைப்பவராக விளங்குகிறார். பெண் தாழ்ந்தவள் என்கிற கட்டமைப்பை உடைத்து எறியும் போக்கினைத் தமது எழுத்துக்கள் வழி உருவாக்கினார்.

பெண்களுக்குப் பெண்களால் ஏற்படும் சிக்கல்கள், உறவு பிரச்சனைகள், குழப்பங்கள், வலிகள், வேதனைகள், கோபங்கள் போன்றவற்றைக் கிண்டலாகவும் நகைச்சுவை தொனியிலும் தம் படைப்புகள் மூலம் வெளிப்படுத்துகிறார். உணர்வுப் பூர்வமாக அவற்றை வெளிப்படுத்துவதில் அம்பைக்கு நிகர் அம்பையே எனலாம்.

உலகம் முழுவதும் பெண்கள் தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, பெண்களை ஆண்கள் ஒடுக்குவது என்பது பரவலாக உள்ளது. அதே சமயத்தில் பெண்களுக்குப் பெண்களே எதிரிகளாக இருப்பதும் தொடர்ந்து நிகழ்கின்றது. பெண் என்னும் உயிரியை வெறும் பாலியல் நுகர்வுக்கும் உயிர் உற்பத்திக்கும் (குழந்தைப்பேறு) அடிமை வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தனர். இன்னும் பெண் மீதான கட்டமைப்பு மாறுபடவில்லை.

எத்தனை நூற்றாண்டுகள் ஆயினும் பெண் ஆணுக்கும் அவன் சார்ந்தவர்களுக்கும் கட்டுப்பட்டவளாகவே இருக்கின்றனர். பெண் ஒரு குடும்பச் சொத்தாகப் பார்க்கின்ற போக்கு தற்பொழுதும் வழக்கத்தில் உள்ளதைக் காணலாம். பெண்ணின் வலிகளை, வேதனைகளை, பாடுகளை என்ன ஆனாலும் பெண் எழுத மாட்டாள் / பாட மாட்டாள்.  ஆண் தான் பெண்ணின் அனைத்து உணர்வுகளையும் பதிவாக்க வேண்டும் என்கிற சூழலிருந்து பெண்கள் தனக்கான எழுத்தினை வரையறுத்துக் கொண்டார். அதுவே, பெண்ணெழுத்து என்றும் பெண்ணியம் என்னும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. பெண் தனக்கான உரிமையைத் தேவையை அவர்களே தீர்மானித்துக் கொள்வதாகும். இது யாரும் யாருக்கும் அளிக்கும் பிச்சையோ! கடமையோ! அல்ல. தனக்கான விருப்பான உணவினைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் தன்மையாகும்.

கதாபாத்திரங்கள்

            அம்பையின் சிறுகதைகளில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் உன்மையான மனிதர்களை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. புனைவுகள் ஏதுமற்று நடந்த நிகழ்வுகளையே கதைகளாக்குவதால் புனைபெயரோ அல்லது கற்பனைக் கதை மாந்தர்களோ ஏதுமின்றி இயல்பான பார்த்த, நேசித்த மனிதர்களைக் கதை மாந்தர்களாக்குகின்றார்.

            தனது குடும்ப உறவுகளையே கதை மாந்தர்களாக்குவதும் பார்த்த, கேட்ட மனிதர்களை உணர்வுபூர்வமாக கதைஞர்களாக மாற்றுவதும் இயல்பான ஒன்றாக அம்பைக்கு வரப் பெற்றுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கதாபாத்திரங்களாக மிளிரச் செய்கின்றனர். அஃறிணை உயிரினங்களைக் கதாபாத்திரங்களோடு ஒன்றி இணைந்து வருவது போன்று படைக்கப்பட்டுள்ளது. காகம், யானை, பூனை போன்ற பல்வேறு விலங்கினங்கள் கதையின் ஒட்டத்தோடு படைக்கப்பட்டுள்ளதை அம்பையின் படைப்புகள் வழி கண்டு தெளிய முடிகிறது.

பெண் எழுத்து

குடும்பப் பெண்ணின் அறிவை, தெளிவை அவை புறக்கணிக்கப்படும் பேதமையை எளிமையாகவும் எள்ளலோடும் சொன்னவர் அம்பை. தன்னைப் பற்றிப் பெண் வரைகிற சித்திரம் அனைத்தும் பெண்ணியப் படைப்பு ஆகிவிடாது. நுண்ணுணர்வும் அரசியல் தெளிவும் கைகூடி வருபவையே காலத்தைத் தாண்டி நிற்கும். அந்தவகையில், பிறிட்டுப் பாய்ந்த பெண்ணிய எழுத்துக்கு அம்பையே முன்னோடியாவர்.

பெண்களின் இன்ப, துன்ப நிகழ்வுகளையும் காதல், திருமணம் போன்ற நிகழ்வுகளினூடாக ஆண் அதிகார மையத்திற்குள் பெண்கள் எவ்வாறு சிக்குண்டு கிடக்கின்றனர் என்பதினை விளக்குகிறார். சமகாலத்தில் பெண்கள் படும் பல இன்னல்களையும் பணி செய்யும் இடங்களில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களையும் சமூக அவமானங்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்பதினை அம்பை தன் படைப்புகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

முடிவுரை

பெண் என்றாலே ஏளனமாகப் பார்க்கப்பட்ட காலம் மாறி, பெண்கள் முதன்மைப் பொறுப்புகளில் வலம் வருகின்றனர். பெண்கள் தொடர்ந்து புறக்கணிப்பட்டதன் விளைவு இன்று பெண்களில்லாத துறையே இல்லை என்று உறுதியாகக் கூறலாம். இவை ஒரே நாளில் நிகழ்ந்தவை இல்லை. பல காலமாக பல்வேறு ஆளுமைகளின் போராட்டங்கள், முன்னெடுப்புகளால் இவை இன்று சாத்தியமாகியுள்ளது. பெண்களைக் கூண்டுக் கிளியாகவே பார்த்த சமுதயாம் இன்று எல்லைகளற்று பறக்கும் வெளியினை உருவாக்கியுள்ளது. பெண் சுதந்திரம் என்பது ஏதோ ஆண்களால், பெண்ணுக்கு வழங்கப்படுவது போன்ற மாயையை உருவாக்கி வருகின்றனர். அது யாராலும் யாருக்கும் வழங்கப்படுவதில்லை என்கிற உண்மையை உணர்ந்து கொண்டால் அதுவே நலம்.

பார்வை நூல்கள்

  • அம்பை, சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை, காலச்சுவடு பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 2019.
  • அம்பை, வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காலச்சுவடு பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 2020.
  • இரா. பிரேமா, பெண்ணியம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, முதற்பதிப்பு - 2014.
  • ம.ப. சித்ரா. பெண்ணியப் பார்வையில் அம்பையின் சிறுகதைகள் எம்.பில். ஆய்வேடு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. 1991,
  • நி. நதியா, பெண்ணியமும் பெண் மொழியும் பிஎச்.டி. ஆய்வேடு, மாநிலக் கல்லூரி, சென்னை 2008.

- முனைவர் ஜெ. மதிவேந்தன், கெளரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி, செய்யாறு – 604 407. திருவண்ணாமலை மாவட்டம்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.