உலக வரலாற்றில் எல்லோராலும் கேட்கப்பட்ட வினாவாகவும் அல்லது எதிர்கொண்ட வினாவாகவும் இருப்பது உலகத் தோற்றத்தின்போது முதலில் கோழி வந்ததா? முட்டை வந்ததா? என்பதே. அதற்குப் பதில் கோழியே பறவையினங்களாக உருப்பெற்றது. பின்னர் அவைகள் இட்ட முட்டைகள் உணவுத் தன்மையின் காரணமாக வெவ்வேறு குண இயல்புகளைக் கொண்டிருந்தன். அவையே சேவல்களாகவும் மற்ற வகையினக் கோழிகளாகவும் பரிணாமம் பெற்றன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இது ஒருபுறம் இருக்க நகைச்சுவையாகக் கோழியே முன் வந்தது என்றும் முட்டை கோழியின் ‘பின்’ தான் வந்தது என்று கூறுவதும் உண்டு.

இவ்வாறு, கோழியின் தோற்றம் குறித்தக் கருத்தாடல்கள் சமுதாயத்தில் இன்றும் இருந்தாலும் தமிழ்ப் பண்பாட்டிலும் உலகப் பண்பாட்டிலும் கோழியின் கறிகளும் முட்டைகளும் பெரும் உணவாக இருப்பதையும் காண முடிகிறது. இது அசைவ உணவில் மிக முக்கிய பங்காற்றுவதையும் எவரும் மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் பொழுதுபோக்காகவும் போட்டியாகவும் சேவல்களை வைத்து சண்டையிட்ட மரபு சிந்துவெளி நாகரிகம் தொடங்கி, தமிழர் பண்பாட்டிலும் உலக நாடுகளிலும் இம்மரபு இருந்துள்ளதை அறிய முடிகிறது.

இக்கட்டுரை பேசப் போகும் சிக்கல் என்னவெனில் இங்கு சண்டையிட்டது கோழி என்று அறியப்படுகிற பெட்டை – பெண்ணா? இல்லை சேவல் என்ற ஆணா? என்பதே. ஒருவேளை சேவல் (ஆண்) சண்டையிட்டு இருந்தால் கோழிகளை (பெண்) ஏன் அவ்வாறு பழக்கப்படுத்தவில்லை என்ற வினா இயல்பாகவே எழுகிறது. ஆக, சமுதாயத்தில் ஆண், பெண் என்ற வேறுபாடுகளும் ஆதிக்கப் போக்கும் தலைதூக்கி இருந்தன என்று எடுத்துக் கொள்ளலாமா? இவ்வாறான பல்வேறு வினாக்களுக்குத் தக்க தரவுகளைக் கொண்டு நிறுவுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

கோழி

கோழி என்பது பொதுச்சொல்லா என்ற வினா எழுகையில், என்றால் ஆம் கோழி என்பது பொதுப்பெயராகவே நிற்கிறது. ‘கோழி அடைகாத்தது’ என்ற தொடரில் கோழி பெண்பால் சார்ந்தது என்பதும் ‘கோழி கூவியது’ என்பதில் கோழி ஆண்பால் சார்ந்தது என்பதாகவும் பொருள் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆக, இடத்திற்கும் காலத்திற்கும் சூழலிற்கும் ஏற்ப இந்தப் பொருள் கொள்ளும் முறை மாறுகிறது. ஆகவே, கோழி என்பது தமிழ்ச் சமூகத்தில் பன்னெடுங்காலமாகப் பொதுச்சொல்லாகவே வழங்கப்பட்டுள்ளது / வழங்கப்பட்டு வருகிறது. இவை மக்கள் வழக்குகளிலும் தொடர்வதைக் காணலாம்.

மக்கள் வழக்கு

பொதுவாகவே மக்களின் வழக்கில் இந்தக் கோழி, சேவல் குறித்த பேச்சுகள் (உரையாடல்கள்) தொடர்ச்சியாக இருந்து வருகின்றன. அந்தவகையில்,

“பொட்டைக் கோழி கூவி பொழுது விடியுமா”

“கோழி குருடாக இருந்தாலும் கொழம்பு ருசியாக இருக்கிறது”

“கோழி மிதித்து குஞ்சு சாகுமா?”

“கூரை ஏறி கோழி பிடிக்க வக்கத்தவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.”

“கோழி தான் சேவலைக் கூவச் செய்கிறது” (ஜப்பானிய வழக்கு)

“ஒரு சேவல் பன்னிரண்டு கோழிகளை அடக்கியாளும்…” (ஜெர்மனி வழக்கு)

“பெண்களுக்கும் குருமார்களுக்கும் கோழிகளுக்கும் எவ்வளவு இருந்தாலும் போதாது” (இங்கிலாந்து வழக்கு)

இவை ஒரு சிலவே சான்றாகக் காட்டப்பட்டுள்ளது. இதுபோன்று உலகம் முழுக்க கோழி, சேவல் குறித்தான ஆணாதிக்க மனோநிலை என்பது வெளிப்படையாகவே உள்ளது. அதாவது, ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்பதே அது. அவை, பேச்சுகளாக, சொலவடைகளாக, பழமொழிகளாக, வழக்குகளாக எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளது.

இதில் வீரம் செறிந்த பெண்ணைக் குறிக்கையில் கோழிச் சண்டை என்பதற்கு மாற்றிணைச் சொல்லாகச் ‘சண்டைக் கோழி’ என்று வசைபாகின்றனர். இப்படியாக, அடையாளப்படுத்தும் போக்கு இன்றும் தமிழ்ச் சமூகத்தில் நடைமுறையில் உள்ளதை யாராலும் மறுக்க முடியாது. அதற்குத் தக்க சான்றாக, ‘சண்டைக் கோழி’ (2005), ‘சண்டைக் கோழி - 2’ (2018), என்ற தமிழ்த் திரைப்படங்களே முன் நிற்கின்றன. அப்படத்தின் கதாநாயகியின் பாத்திர வடிவமைப்பினை நினைவில் கொள்க.

இலக்கிய - இலக்கணப் பதிவுகள்

தமிழ் இலக்கியத்தில் சங்க நூற்களில் இந்தக் கோழி – சேவல் குறித்தான வரலாற்றுப் பதிவுகளைப் புலவர்கள் பதிவு செய்துள்ளனர். அவை, வெறும் புனைவுகளாக அல்லாமல், மக்களின் வாழ்வியல் வரலாற்றுப் பதிவுகளாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாகக் குறுந்தொகை, அகநானூறு போன்ற இலக்கிய நூற்களிலும் புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூலிலும் இது குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. அவை பின்வருமாறு,

“உய்த்தனர் விடாஅர் பிரித்து இடைகளையார்

குப்பைக் கோழித் தனிப்போர் போல…” (குறுந். 305)

குப்பையில் மேயும் கோழிகள் என்றும் அவை உணவிற்காகவும் மற்ற தேவைக்காகவும் தங்களுக்குள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும், ஆயின் போர் செய்யும் வகையில் ஆயத்தமாக இருப்பது சண்டை (தனிப்போர்) சேவல்கள் என்ற கருத்தினை மேற்கண்ட பாடலானது விவரிக்கிறது. ஆக, பெட்டைகள் மேய்ச்சல் சண்டைகளுக்கு மட்டுமே செய்துள்ளன. சேவல்கள் (ஆண்) போட்டிகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதனையும் அறிந்துகொள்ள முடிகிறது.

வீட்டினை உறைவிடமாகக் கொண்டிருந்தன கோழிகள் என்றும் வீரத்துடன் சேவல்கள் பொதுவெளியில் சண்டையிட்டன. இதனை விவரிக்குப் பாடலானது பெண் வீரமற்றவள் என்றும் ஆண் வீரம் மிக்கவன் என்று கூறப்படும் செய்தி கவனிக்கத்தக்கதாகும்.

“அழல்அகைந் தன்ன காமர் துதைமயிர்

மனைஉறை கோழி மறனுடைச் சேவல்

போர்புரி எருத்தம் போலக் கஞலிய…” (அகம். 277)

அதேபோன்று, தான் சேவலின் செயற்பாட்டினை விளக்கும் இலக்கண நூலின் பதிவும் சேவலின் செய்கையினால் அதனை, ‘கடுஞ்சேவல்’ என்ற அடைகொடுத்து வழங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதுவும் ஆண் மையப்பட்ட பதிவாகவே உள்ளது என்பதனைக் கூர்ந்து நோக்க வேண்டும்.

“பாய்ந்தும் எரிந்தும் படிந்தும் பலகாலும்

காய்ந்தும் வாய்க்கொண்டும் கடுஞ்சேவல்” (புறப். வெண். 348)

தொல்காப்பிய உரையாசியரான இளம்பூரணரும் நன்னூலுக்கு உரையெழுதிய சங்கர நமச்சிவாயரும் மேலச்சேரி, கீழச்சேரி என்ற ஊர்களிலிருந்து சேவல்கள் சண்டையிட்டுக் கொண்டன என்பதனைச் சான்றாகத் தருகின்றனர். ஆக, மக்கள் சண்டை சேவல்களை வளர்த்து வந்தனர் என்பதும் அவைகளுக்குத் தனிப் பயிற்சி அளித்துள்ளனர் என்பதும் தெளிவாகிறது. அதே போல் தமிழ் நூல் மரபில், சண்டைக் ‘கோழி’கள் குறித்த நூல்கள் இருந்தன என்பதனைக் கூறுகிறார் ஐராவதம் மகாதேவன் (2018; 149). இவ்வாறாக, தமிழில் இலக்கிய – இலக்கணப் பதிவுகளில் காலந்தோறும் கோழி – சேவல் குறித்தான பதிவுகள் வெளிப்பட்டுள்ளன.

தொல்லியல் சான்றுகள்

தொல்லியல் சான்றுகள் மிக முக்கிய தரவுகளாகக் கொள்ளப்பெறும் இக்காலக்கட்டத்தில் இந்தக் கோழி – சேவல் மரபுகள் தொல்லியல் நிலைகளிலும் காணக் கிடைக்கிறது. அதாவது, சிந்துவெளி முத்திரைகள் தொடங்கி, தமிழ்நாட்டின் கோவில் சிற்பங்கள் வரை அதன் பதிவுகள் உள்ளன. குறிப்பாக, சிந்துவெளி முத்திரை எண் 338 உணர்த்தும் கருத்து மிக முக்கியமாகிறது. அதாவது, ‘ஒரு காளை (எருது) திமிலுடனும் நீண்ட கொம்புகளுடனும் காணப்படுகிறது. அதன் மேற்பகுதியில் இரண்டு ‘சேவல்கள்’ தலையை நீட்டி உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இடப் பக்கத்தில் சில குறியீடுகள் உள்ளன’ இது மேற்சுட்டிய சிந்துவெளி முத்திரையின் புறத் தோற்றமாகும்.

இதில் தலையை நீட்டி உயர்த்திப் பார்த்திருக்கும் இரு சேவல்களின் உருவப் பொறிப்பினைக் கொண்டு, அவை ‘சேவல் நகரம்’ என்ற அந்த நகரின் பெயரினைக் குறிப்பதாக உள்ளது என்று சிந்துவெளியின் மூத்த ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுகின்றார். (2018; 145) இதன் தொடர்ச்சியாக, சோழர்களின் தலைநகரமாக அழைக்கப்பட்ட உறையூருக்கு மற்றொரு பெயர், ‘கோழியூர்’ என்பதாகும். சோழர்களை, ‘கோழியூரன்’ என்றும் அழைத்துள்ளனர். ஏன் சோழர்கள் அந்த நகருக்கு அப்பெயரினை வைத்தனர் என்று நோக்குகையில், ‘சேவலொன்று ஒரு யானையை எதிர்த்து வீரமாகச் சண்டையிட்டதாகவும் அதன் வீரத்தைக் கொண்டாடும் வகையிலேயே ‘கோழி’ என்று அந்நகருக்குப் பெயரிட்டதாகவும் பழந்தமிழ் மரபுகள் பெயர்க்காரணம் கூறுகின்றன’ என்கிறார் ஆர். பாலகிருஷ்ணன் (2018; 146).

இந்தச் செயற்பாட்டின் நீட்சியாகச் சோழர்கள் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில், யானையின் தலையில் சேவல் கொத்துவது போன்று காசுகளை (நாணயம்) வெளியிட்டுள்ளனர். இந்த யானை - சேவல் சண்டையானது சிலப்பதிகாரம் நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

“முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய

புறஞ்செவி வாரணம்…”

இதற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் முறஞ்செவி என்பது யானையையும் புறஞ்செவி என்பது சேவலினைக் (கோழி) குறித்தாகவும் உள்ளது என விளக்கமளிக்கிறார். இந்த யானை சேவல் போர், திருச்சி உறையூர், பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் இரு புடைப்புச் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன.

அரசலாபுரம் என்ற ஊரில் சண்டைச் சேவலுக்காக வைக்கப்பட்ட நடுகல் கிடைத்துள்ளது. இது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இந்த நடுகல்லில், முகையூர் என்ற ஊரின் மேற்குடியிருப்பான மேலச்சேரி சார்பில் சண்டையிட்டு இறந்த ஒரு வீரச் சேவலுக்கு நடுகல் வைத்து அதன் நினைவைப் போற்றியுள்ளனர். (கல்வெட்டு எண்; 112) அதேபோலவே, இந்தாளூர் – கீழ்ச்சேரி என்ற இடத்தில் சண்டைச் சேவலுக்காக வைக்கப்பட்ட நினைவு நடுகல் ஒன்று கிடைத்துள்ளது (கல்வெட்டு எண்; 113). இவ்வாறு வீரத்தின் விளைநிலமாக விளங்கும் தமிழகம் தவிர்த்த மற்றைய பகுதிகளில் இப்படியாகச் சேவல்களுக்கு நினைவாக நடுகல் வைக்கும் மரபு இல்லை என்று கூறலாம் என்கிறார் ஆர். பாலகிருஷ்ணன் (2018; 151).

மேற்கண்ட பதிவுகளை ஒருவாறு நோக்குகையில், சேவல் சண்டை மரபு என்பது தமிழ்ப் பண்பாட்டில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது. இன்றும் தமிழகம் தவிர்த்து இந்தியா மாநிலங்களிலும் பாகிஸ்தானிலும் திட்டமிடப்பட்ட சேவல் (கோழிச்) சண்டைகள் நடைபெற்று வருவது கவனத்திற்குரியது.

தமிழ்த் திரைப்படம்

தமிழ்ப் பண்பாட்டின் நீண்ட நெடுங்காலாமான எச்சமாக இன்றும் செழுமைப் பெற்று விளங்கும் இந்தச் சேவல் சண்டை மரபு, மக்கள் ஊடாகமாக விளங்கும் சினிமா – திரைப்படம் வாயிலாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, சேவல் சண்டையைக் களமாக வைத்து தமிழில், 2011ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆடுகளம்’ என்ற திரைப்படம் தமிழின் வீரத்தைக் குறிப்பாகச் சேவல் சண்டை மரபினை எடுத்துரைக்கும் வகையிலான காட்சிப் பதிவாக அமைந்துள்ளது கவனித்தக்கதாகும். இதுபோன்று வேறு எந்த மொழியிலும் நிலத்திலும் நிகழவில்லை என்கிறார் ஆர். பாலகிருஷ்ணன்.

தமிழர் பண்பாட்டின் வேரடிகளில் ஆழமாகப் பதிந்திருப்பதாலே இவைகள் கொண்டாப்பட்டன அல்லது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவை தமிழர்களின் மரபணுக்களில் ஊறிபோன ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் பல காலத்திற்கும் இம்மரபுகள் தொடருமா என்பதும் ஐயமே. திறனாய்வாளர் நா. மம்மது கூற்றுப்படி, ‘மாடுபிடி சண்டைக்குத் தடை ஏற்பட்டது போல, எதிர்வரும் காலங்களில் சேவல் சண்டைகளுக்கும் முற்றாகத் தடை ஏற்படலாம்’ என்பது தவிர்க்க இயலாத உண்மையாகும்.

நிறைவாக

  • தமிழ்ச் சமூகத்தில் ‘கோழி’ என்பது பொதுப்பெயராகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இடத்திற்கும் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப அவை, ஆண் பாலாகவோ, பெண் பாலாகவோ பொருள் கொள்ளப்படுகிறது.
  • சண்டைக் கோழிகள் பெரும்பாலும் சேவல்களாகவே (ஆண்) இருந்துள்ளன. அவைகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. பெட்டைகள் அவ்வாறு பழக்கப்படுத்தபடவில்லை என்றே அறிய முடிகிறது. பெட்டைகளும் சண்டையிட்டன, பயிற்சி அளிக்கப்பட்டன என்பதற்கான தக்கச் சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை.
  • அன்றைக்கும் இன்றைக்கும் என்றுமே பெண்களின் மீதான ஆண்களின் ஆதிக்கம் நிறைந்தே காணப்பட்டது என்பது மறுப்பதற்கில்லை. இந்தச் சேவல் சண்டைகளிலும் ஆண் பால் உயர்த்தப்பட்டும் பெண் பால் தாழ்வுக்குள்ளாக்கப்பட்டுமே இருக்கின்றன.
  • தமிழர்களின் வேர் மடிகளில் இந்தச் சேவல் சண்டை மரபு பதியம் போடப்பட்டுள்ளது. எனினும் நவீனத் தொழில்நுட்பக் காலத்தில் இன்னும் எத்தனை காலம் நிலைத்திருக்கும் என்பது வினாவே.
  • இம்மரபு போற்றப்படாமல் போகும்போது, அது குறித்தப் பண்பாட்டுத் தரவுகளும் கவனிக்கப்படாமல் / பேசப்படாமல் போகும் அபாயம் உண்டு. அதேபோன்று, இதற்கென தனியாக பயிற்சியளிக்கப்பட்ட தனிச் சேவல்களின் இனங்களும் மனிதர்களும் அழிந்து போவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

துணைநின்றவை

  • ஆர். பாலகிருஷ்ணன், 2018, சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், பாரதி புத்தகாலயம், சென்னை.
  • நா. மம்மது, சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்நூல் திறனாய்வு, உயிர்மை மாத இதழ்.
  • ஐராவதம் மகாதேவன் 2003, பழங்காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள்
  • ச.வே. சுப்பிரமணியன், 2006, சங்க இலக்கியம் – அகநானூறு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
  • இளங்கோவடிகள், உ.வே.சா. (1892), சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் உரை, ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை.
  • ச.வே. சுப்பிரமணியன், 2006, சங்க இலக்கியம் – குறுந்தொகை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
  • ஐயனாரிதனார், பொ.வே. சோமசுந்தரனார் (1955) புறப்பொருள் வெண்பா மாலை, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.

- முனைவர் ஜெ.மதிவேந்தன், கெளரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி, செய்யாறு – 604 407, திருவண்ணாமலை மாவட்டம்.

Pin It