andanoor sura novelகி.பி. அரவிந்தன் நினைவு உலகளாவிய குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது இந்நூல்.

தந்தை பெரியார் மகளிர் மாநாடுகளில் பேசும்போது பெண்களாகிய நாம் என்ற சொல்லைப் பயன்படுத்துவார். தன்னையும் ஒரு பெண்ணாக உணர்ந்தால் வரும் வார்த்தைகள்தான் அவையென அணிந்துரையில் களப்பிரன் கூறியிருப்பார்.

தாய் வழிச் சமூகம் தந்தை வழி சமூகமாய் மாறும்போது பெண்ணுடல் ஆண்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, உடல் காமத்திற்கான பண்டமாக மாறியதென அணிந்துரையில் கவிதா முரளிதரன் கூறியிருப்பார்.

பெண் வாசகர்களிடம் நன்மதிப்பை இழக்கலாம், ஆபாசமெனத் தூற்றலாம், சிலர் என்னை சந்தேகக் கண்களால் பார்க்கலாம். உண்மைக்கு அருகிலிருந்து இக்கதை எழுதியதால் இவற்றில் ஏதேனும் ஒன்று நடக்கும் என்று ஆசிரியர் 'கொங்கை' நாவலின் தன்னுரையில் எழுதியிருப்பார்.

இனி நாவலும் அதனூடே என் பார்வையும்...

மார்பகத்தைப் பெரிதாக்கும் விளம்பரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது, நான்காவது படிக்கும்போது பூப்பெய்து தற்போது ஆறாவது பயிலும் மாணவி விமலாவையும், ஆசிரியர் சந்திராவையும் அவரின் இருமகள்களான சுஜி, விஜியையும் அறிமுகப்படுத்தி கதையை நகர்த்தியுள்ளார் ஆசிரியர்.

மனைவியை இழந்து மறுமணம் செய்யாமல், பூப்பெய்தபோது நம் வழக்கம் அத்தை முறையானவள் தான் பார்ப்பாள், விமலா விசயத்தில் இங்கு அப்பா தான் பார்க்கிறார். விமலாவிடம் எப்படியெல்லாம் அப்பா நடந்து கொள்கிறார் என்பதை சந்திரா தெரிந்து கொள்ளும்போது தாயுமானவராக உயர்ந்து நிற்கிறார்.

மாடுகளுக்கு மடி கனமாகயிருப்பின் பால் அதிகம் கிட்டுமென்பது அனைவரும் அறிந்ததே.

40 வயதைத் தாண்டிய சந்திராவின் தொப்பையை, இடுப்புக்கு மேல் மடிப்பு விழுவதை மற்றவர்கள் பார்வைக்காக குறைக்க முயற்சிக்கும் பொருட்டு உடற்பயிற்சி கற்றுத் தருபவளிடம் என் மனைவியின் கொழுப்பினை குறைக்க பயிற்சியளியுங்கள் மார்பகத்தை மட்டும் குறைக்காமல் பார்த்துக் கொள்ளுங்களென்பான். சந்திரா அதைக் கேட்டும் கேட்காதவளாய் கடந்து போவதை இன்றுவரை பெண்களின் நிலை இப்படித்தான் உள்ளதெனக் காட்டியிருப்பார்.

மனைவியின் ஆடை தற்செயலாக விலகுவதை அடுத்தவன் பார்த்துவிடக்கூடாதே என கண்ணும் கருத்துமாக உலவும் கணவரை காட்சிப்படுத்தும்போது யாரும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்துள்ளார் ஆசிரியர்.

பால்வடி மருந்து ஊசியினால் சுரக்கும் பாலைக் குடித்து வந்த என் முலைக்காம்புகள்போல பாலை வடிய விட்டுக் கொண்டிருக்கும் ஊசி போடப்பட்ட மாடுகளின் காம்புகளை தனியார் பால்பண்ணையில் அப்பாவுடன் சென்று பார்த்ததாக ஆசிரியர் சந்திராவிடம் விமலா கூறும்போதுதான், தான் பள்ளிக்கு வரும்போது மார்பகத்தை அருகில் வந்து தினமும் பார்த்து கேலி பேசுபவனோடு இட்டுக்கட்டி தெருமக்கள் இணைத்துப் பேசியதை அப்பா தவறாகப் புரிந்து அவள் மனதை ரணமாக்கியதையும் அதன் விளைவோ தன் பெருத்த மார்பகத்தின் மேல் வெறுப்பை உருவாக்கியதாகவும் காட்டியுள்ளார்.

மார்பகப் பிரச்சினையில் உழன்றவளிடம் ஈழத்தில் தமிழச்சிகளை கைது செய்து முலைகளை சிங்களவர்கள் அறுத்தனரென்பதையும், திருவிதாங்கூர் மன்னரிடம் முலை வரி கட்ட முடியாதெனக் கூறி முலையை அறுத்து நாஞ்செலி கொடுத்ததாகவும், நாமும் இப்ப முலைவரி மறைமுகமாக பிராவிற்கு ஜி.எஸ்.டியாக கட்டுவதாகவும் சந்திரா கூறுவதாக நேர்த்தியாக நாவலில் சொருகியதோடு தஞ்சையில் பண்ணையாரிடம் சேரிப்பெண்கள் தன் மகளின் மார்பகத்தை காண்பித்தபின் மேல்சட்டை அணிய அனுமதிப்பர் முன்பெல்லாமென்பதை அறியாதவர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

உலகெங்கிலும் பெண்களை உளவியல் ரீதியாக நோகடிப்பது யாருமில்லா நேரத்தில் பெண்கள் அருகே சென்று மார்பகம் அழகு என ஆண்கள் கூறி கடந்து செல்வதை சுஜி, விஜியின் புத்தக வாசிப்பினால் நிகழும் கலந்துரையாடலின் மூலம் வெளிக்கொணர்ந்துள்ளார்.

மார்பகத்தைக் குறைக்க ஏதேனும் வழியுண்டா என சந்திராவுடன் அழகுக்கலை நிபுணரிடம் ஆலோசனை கேட்க வந்த விமலா, குட்டி ரேவதி எழுதிய முலைகள் புத்தகத்தை அங்கு வாசிப்பதைக் கண்டு கடந்து செல்லும் பெண்களின் கேலிப்பேச்சும், மார்பகத்தை பெரிதாக காண்பிக்கத் துடிக்கும் சிலரையும் ஒரே இடத்தில் சந்திக்கவும் நமை சிந்திக்கவும் வைத்திருப்பார்.

நடராஜன் எழுதிய ஆயிஷா என்கிற கதையை தெரிந்துகொண்டு அவளுள் மாற்றத்தைக் கொண்டு வராமல் எதிர்வினைக்கு கொண்டு சென்றது இச்சமூகமே என முடித்திருப்பார் ஆசிரியர் சுரா.

கொங்கை நாவல் ஒவ்வொரு வீட்டிலுள்ளவர்களும் வாசித்து புத்தக அலமாரியில் அடுக்கி வைத்தார்களெனில், இனி ஆண்கள் முலைகளைப் பார்த்து பேசாமல் கண்களைப் பார்த்து பேசப் பழகிக் கொள்வர், மார்பகம் பற்றிய வலி குறைந்து மன வலிமை பெருகும் பெண்களுக்கு.

நூல்: கொங்கை
ஆசிரியர்: அண்டனூர் சுரா
முதல் பதிப்பு: ஆகஸ்ட், 2018.
விலை: ரூ.70/-
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
7, இளங்கோசாலை, தேனாம்பேட்டை,
சென்னை-600 018.

- செல்வக்குமார், இராஜபாளையம்

Pin It