மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.
மதிப்பிற்குரிய முதலமைச்சருக்கு வணக்கம்.
சிவகங்கை திருபுவனத்தில் சென்ற சூன் 28ஆம் நாள் சிறப்புப் படையைச் சேர்ந்த காவல் துறையினர் அஜித்குமார் என்ற 28 வயது இளைஞரை விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்ற கொடுநிகழ்ச்சி தமிழ்நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்து விட்டது என்பதை நன்கறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக உங்கள் தலைமையிலான அரசும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையும் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளைக் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் வரவேற்கிறோம்.
இதே கவனத்துடனும் விரைவுடனும் நடவடிக்கைகள் தொடர்ந்து உயர் காவல்துறை அதிகாரிகள் உட்பட குற்றச்சாட்டுக்குரிய அனைவரும் சட்டப்படிக் கூண்டிலேற்றப்பட்டு, காலத்தாழ்வின்றி நீதி நிலைநாட்டப்பெறுமென எதிர்பார்க்கிறோம். இவை தவிர இது போன்ற கொடுமைகள் எதிர்காலத்தில் நேரா வண்ணம் உறுதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
அஜித்குமாருக்கு நேரிட்ட அவலம் இனி எவருக்கும் நேரிடலாகாது என்று நாம் அனைவரும் ஆழ்ந்து விரும்புகிறோம். நீங்களும் இவ்வாறே உறுதியளித்தும் உள்ளீர்கள்.
ஆனால் கடந்த காலத்தில் காவல் சித்திரவதைகள் நிகழ்ந்த போதும் இதேபோன்ற உறுதிகள் தரப்பட்டன என்றாலும் காவல் கொடுமைகளும் கொலைகளும் கூட தொடர்வதை யாராலும் மறுக்க இயலாது என்பதே வருத்ததுக்குரிய உண்மையாக உள்ளது.
சாத்தான்குளத்தில் பெனிக்ஸ்-ஜெயராஜ் காவல் சித்திரவதைக்கு பலியாகிச் சென்ற 2020 சூன் 22ஆம் நாள் உயிரிழந்த துயரச் சூழலில், இவ்வாறான கொடுமைகள் தொடராமல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே, பொறுப்புள்ள அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் மாந்த உரிமை ஆர்வலர்களும் கூடிப் பேசிக் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் என்ற அமைப்பை நிறுவினோம், இந்த ஒருங்கிணைந்த முயற்சியில் தொடக்க முதலே இடம்பெற்ற கட்சிகளில் உங்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்று என்பதை நினைவிற் கொண்டுள்ளோம்.
2021ஆம் ஆண்டில் உங்கள் தலைமையிலான அரசு அமைந்த பிறகும் காவல் சித்திரவதைகள் ஓயவில்லை என்பதைப் பலமுறை உங்கள் அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளோம். [இது தொடர்பாக நாங்கள் திரட்டிய தரவுகளின் அட்டவணையை இத்துடன் இணைத்துள்ளோம்.]
2022 ஏப்ரல் 18ஆம் நாள் சென்னையில் தலைமைச் செயலக வீட்டு வசதி வாரியக் காவல் நிலையத்தில் விக்னேஷ் என்ற 25 வயது இளைஞர் சித்திரவதைக்கு ஆளாகி உயிரிழந்த போது, இந்த உண்மையை மறைக்கக் காவல்துறை அதிகாரிகள் செய்த முயற்சிகளை எமதியக்கத்தின் சார்பில் அரசின் கவனத்திற்கும் மக்களின் கவனத்திற்கும் கொண்டுவந்தோம். முதலில் இது காவல் சித்திரவதையால் ஏற்பட்ட சாவு என்பதை நீங்கள் மறுத்த போதிலும், சடலக்கூறாய்வு அறிக்கையைக் கண்ட பின் உண்மையை ஒப்புக் கொண்டு, தமிழ்நாட்டில் இனி ஒருபோதும் ’லொக்-அப்’ சாவுகள் நிகழாது என்று உறுதியளித்தீர்கள். அவ்வாறே காவல்துறை அதிகாரிகளுக்கும் ஆணையிட்டீர்கள்.
ஆனால் இதற்குப் பிறகும் 2022 ஏப்ரல் 27ஆம் நாள் திருவண்ணாமலை கிளைச்சிறையில் தங்கமணி (வயது 48) என்பவரும் 2022 சூன் 12ஆம் நாள் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அப்பு (எ) ராஜசேகர் (வயது 31) என்பவரும் காவல்-சாவு அடைந்ததாகச் செய்திகள் வந்தன.
இதையடுத்து அப்போதைய தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் திரு சைலேந்திரபாபு 2022 சூன் மாதம் 14ஆம் நாள் ”நிலைதரச் செயற்பாட்டு நடைமுறைகள்” (STANDARD OPERATING PROCEDURES) என்ற தலைப்பில் 41 கட்டளைகள் பிறப்பித்தார். இந்தக் கட்டளைகள் உங்கள் அரசின் காவல்துறைக் கொள்கைகளையே எதிரொலிப்பதாக அனைவரும் நம்பினோம்.
இந்தக் 41 கட்டளைகளும் வாசக உணர்வுடன் முழுமையாகவும் செம்மையாகவும் கடைப்பிடிக்கப்பட்டிருக்குமானால் தமிழ்நாட்டில் அதன்பிறகு ஒரே ஒரு காவல் கொட்டடிச் சாவு கூட நேரிட்டிருக்காது, திருபுவனம் அஜித்குமாரின் கொடுஞ்சாவும் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியும்.
சான்றாக, முதல் கட்டளை இதோ :-
(1) குற்றம் சாட்டப்பட்ட நபர்களை – சந்தேக நபரை அடிக்கவோ அல்லது சித்தரவதை செய்யவோ கூடாது. இது குறித்து அனைத்துக் காவல்துறை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு மேல்அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- இது பொதுவான கட்டளை. ஆனால் இரண்டாம் கட்டளை மிகவும் குறிப்பானது.-
(2) தனிப்படை (Special Team) போலீசார்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.
இப்போது திருபுவனம் கொடுநிகழ்வுக்கே தனிப்படைக் காவலர்கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இங்கே தனிப்படை போலீசார் (சைலேந்திரபாபு கட்டளைப்படி) கண்காணிக்கப்பட்டிருந்தால் அஜித்குமாருக்கு இந்த அவலம் நேரிட்டிருக்காது.
உங்கள் அரசு காவல் கொள்கை என்று தனியாக எதுவும் அறிவிக்கவில்லை என்றாலும் சைலேந்திரபாபு கட்டளைகளை உங்கள் தலைமையிலான தமிழக அரசின் காவல் கொள்கை எனக் கருதுவதில் பிழை இல்லை எனக் கருதுகிறோம்.
ஆனால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இந்தியக் காவல் பணி அதிகாரியான ஏஎஸ்பி பல்பீர்சிங் தன்னிடம் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கி சித்திரவதை செய்த போது சைலேந்திரபாபு கட்டளைகளும் உங்கள் அரசின் காவல் கொள்கையும் பல்பிடுங்கப்பட்ட நிலையில்தான் காணப்பட்டன. கொஞ்சகால இடைநீக்கத்துக்குப் பின் பல்லுடைப்பு பல்பீர்சிங் பழைய பதவிக்கே திரும்பி விட்டார். உயர் காவல் அதிகாரி என்ன குற்றம் செய்தாலும் தண்டிக்கப்பட மாட்டார் என்ற குற்றவிலக்குரிமை (impunity) அவருக்கு வழங்கப்பட்டிருக்குமானால், காவல் சித்திரவதைகளுக்கு இது ஊக்கம் தருவதாகாதா? என்று உரிமையுடன் கேட்க விரும்புகிறோம். (பல்பீர்சிங் மீது வழக்கு நிலுவையில் உள்ளது என்பதறிவோம். அது அவர் பதவிக் காலம் முடியும்வரை, ஏன், ஆயுள்காலம் முடியும் வரை கூட நிலுவையில்தான் இருக்கும் என்பதும் அறிவோம்.)
நிற்க, இனி ஒருபோதும் இந்தக் கொடுமை நிகழாது என்ற உங்கள் உறுதி மீண்டும் மீண்டும் பொய்த்துப் போவது ஏன்? என்ற கேள்வியைக் கேட்டுப் பார்க்க வேண்டுகிறோம். இது ஆட்சித் தலைமை வகிக்கிற உங்கள் ஒருவரின் உறுதியான முடிவு தொடர்பான வினாவன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம். காவல்துறையின் இயக்கத்தைத் தீர்மானிக்கும் அமைப்புமுறையில் (SYSTEM) உரிய மாற்றம் காணாமல் இந்தக் கொடுமைக்கு நிலையான முற்றுப்புள்ளி வைக்க முடியாது எனக் கருதுகிறோம்.
குடியாட்சியம் என்பதே சட்டத்தின் ஆட்சியாகத்தான் இருக்கமுடியும் என்ற அளவில், காவல் சித்திரவதைகளைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சிறப்புச் சட்டம் தேவை என்பதைக் காவல் சித்திரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறோம்.
சித்திரவதையால் துயரப்பட்டவர்களுக்கான ஐநா நாளைமுன்னிட்டு 2023 சூன் 26ஆம் நாள் சென்னையில் மாநில மாந்தவுரிமை ஆணையத்தில் எமதியக்கம் சார்பில் நடந்த நிகழ்வில் மேற்சொன்னவாறு சிறப்புச் சட்டம் தேவை என்பதை வலியுறுத்தினோம். உங்கள் அரசின் சார்பில் கலந்து கொண்ட மாண்புமிகு அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் எங்கள் கோரிக்கையை உங்கள் கவனத்துக்குக் கொண்டுசெல்வதாக உறுதியளித்துச் சென்றார்.
சித்திரவதை என்பது பன்னாட்டுச் சட்டப்படிக் குற்றமாகும். சித்திரவதைக்கும் மோசமான நடத்துமுறைக்கும் எதிரான ஐநா ஒப்பந்தத்திலும் விருப்ப உடன்படிக்கையிலும் இந்திய அரசு ஒப்பமிட்டுள்ளது. ஆனால் அதனை ஏற்புறுதி செய்யாமலே இருந்து வருகிறது (signed but not ratified). ஏற்புறுதி வழங்க வேண்டும் என்பது பன்னாட்டுலகின் வேண்டுகோள்.
இந்திய அரசுக்கு ஒரு தெளிவான சித்திரவதைக் கொள்கை இல்லாத போதும், தமிழக அரசு ஒரு சித்திரவதைக் கொள்கை வகுத்து அறிவிப்பது நாட்டுக்கே வழிகாட்டுவதாக அமையும் எனக் கருதுகிறோம்.
இந்தத் திசைவழியில் சித்திரவதைக்கு எதிரான சிறப்புச் சட்டம் ஒன்றைத் தமிழக அரசு இயற்ற இதுவே தக்க தருணம் என்று எடுத்துரைக்க விரும்புகிறோம். உங்கள் அரசின் சட்டப் போராட்டங்களைத் திறம்பட நடத்தி வரும் சட்ட அறிஞர்களோடு கலந்து பேச வேண்டுகிறோம். இந்த முயற்சியில் எமதியக்கத்தின் எல்லா வகையான ஒத்துழைப்புக்கும் உறுதிகூற விழைகிறோம்.
தமிழ்நாட்டில் காவல் சித்திரவதையைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சிறப்புச் சட்டத்துக்கு அஜித்குமார் சட்டம் என்றே பெயர் சூட்டுவது ”அரசு செய்த கொலைக்குப் பலியான குடிமகனின்” நினைவைப் போற்றுவதாக இருக்கும் என்றும், அது உங்கள் அரசின் பெறுபேறாக மதிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.
- தியாகு, ஒருங்கிணைப்பாளர்,
மீ.த. பாண்டியன், செயலாளர்,
& ஹென்றி திபேன், அறிவுரைஞர் (காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்)
இணைப்பு:
2021ஆம் ஆண்டில் உங்கள் தலைமையிலான அரசு அமைந்த பிறகு நடந்த காவல் சித்திரவதைகள்