இன்னும் எத்தனை மனித உயிர்களை நாம் சாதிவெறி பிடித்த மிருகங்களுக்கு பலி கொடுக்கப் போகின்றோம்? ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்று பதவியேற்கும் போது சொன்னாரே ஸ்டாலின் அவர்கள். அவர் எந்த இடத்தில் இருந்து இந்த நிலைக்கு வந்தடைந்தார், அதற்குப் பின்னால் உள்ள வலி என்ன என்பதை குறிக்கத்தானே அப்படி சொன்னார்.

ஆனால் இன்றோ அது அவரின் வளர்ச்சியாகவும், அவரின் குடும்பத்தின் வளர்ச்சியாகவும் மட்டுமே மாறிப் போனது. தன்னைவிட சாதிரீதியாக கீழ்நிலையில் உள்ளவர்கள் மிக மோசமான தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைப் பற்றியோ, அவர்கள் மிகக் கொடூரமாக சாதி ஆணவப் படுகொலை செய்யப்படுவதைப் பற்றியோ முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

பள்ளிகளில் சத்துணவு போடுவதும் , பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்ய அனுமதிப்பதும், மேல்படிப்பு படிக்கும் பெண்களுக்கு மாதமாதம் உதவித் தொகை தருவதும் மட்டுமே தன்னுடைய சாதனையாகப் பீற்றிக் கொள்வதில் என்ன முற்போக்கு உள்ளது?

இவை எல்லாம் பொருளாதார நோக்கிலும் பெண்கள் முன்னேற்றத்திலும் முக்கியமானதுதான். ஆனால் பிரச்சினை இது மட்டும்தானா?

அந்தப் பெண்கள் நல்ல கல்வி கற்று தன்னுடைய வாழ்க்கைத் துணையை தேர்தெடுத்துக் கொள்ளும் உரிமையை இந்த சாதிய சமூகம் அனுமதிக்காத போது, அதை உடைப்பதற்கு துளி அளவுக்குக்கூட வேலை செய்யாத அரசு பெரிதாக என்ன சமூக மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போகின்றது?

தினம் தினம் சாதி ஆணவப் படுகொலைகள் நீக்கமற தமிழ்நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் வெட்கம் கெட்ட அரசோ அதை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளாமல் கடந்து சென்று கொண்டிருக்கின்றது.

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு ஒன்றை வழங்கியது.

அதில், ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காகவும் அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களை தண்டிப்பதற்காகவும் சிறப்புச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், அதற்கான எந்தப் பணிகளையும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை தொடங்கவில்லை.

மதுரை வீரன், காத்தவராயனில் தொடங்கி இளவரசன், கோகுல்ராஜ் ,உடுமலைப்பேட்டை சங்கர், பள்ளிக்கரணை பிரவீன், ஓசூர் நந்தீஷ்-சுவாதி, திருவாரூர் அபிராமி, நெல்லை கல்பனா, நாகப்பட்டினம் அமிர்தவள்ளி, கண்ணகி - முருகேசன் என வெளிச்சத்திற்கு வந்த படுகொலைகள் மட்டுமே சமூகத்தின் கவனத்தைப் பெறுகின்றன. ஆனால் வெளியுலகிற்குகே வராமல் கொன்று புதைக்கப்பட்டவர்கள், எரிக்கப்பட்டவர்கள் ஏராளம்.

அதன் வரிசையில் மீண்டும் ஒரு கொடூர சாதி ஆணவ படுகொலை தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.

ஜூன் மாதம் 24 ஆம் தேதி அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் அம்மன் கோவில் காலனி தெருவைச் சேர்ந்த மாரிமுத்து – மாரியம்மாள் என்பவரின் மகன் அழகேந்திரன் (21) என்பவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.azhakenthiran motherஇதில் அழகேந்திரன் சக்கிலியர் வகுப்பைச் சார்ந்தவர் ஆவார். அவர் காதலித்த ருத்ரபிரியா பள்ளர் வகுப்பைச் சார்ந்தவர் ஆவர். இருவருமே தலித்துகளாக இருந்தும் தலித் உள் சாதிக்குள் நீண்ட காலமாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் சாதிவெறியின் வெளிப்பாடாக இந்தக் கொடூர கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.

நாம் வெளிப்படையாக தலித்துகள் என்ற வார்த்தையால் சாதி ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்தாலும் அவர்களுக்குள்ளும் மிக மோசமான சாதிவெறி இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அவர்களும் சாதி இந்துக்களைப் போலவே சாதிமறுப்புத் திருமணத்திற்கு எதிராகவும், தங்களுக்குள்ளாவே சாதிய ஏற்றத்தாழ்வை கடைபிடிப்பவர்களாகவுமே உள்ளனர்.

ஒரு பறையர் சாதிப் பெண்ணை சக்கிலியர் சாதி ஆண் திருமணம் செய்வதையோ, ஒரு பள்ளர் சாதிப் பெண்ணை பறையர் அல்லது சக்கிலியர் சாதி ஆண் திருமணம் செய்வதையோ அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

இந்தப் படுகொலையில் முக்கிய குற்றவாளியான பெண்ணின் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. மனதில் இவ்வளவு சாதிவெறியை வைத்துக் கொண்டு இவர் யாரைக் காப்பாற்றுவதற்கு ராணுவத்திற்குப் போனார் என்று தெரியவில்லை.

இவர்தான் ருத்ரபிரியாவின் தாய்மாமா பிரபாகரனை வரவழைத்து அழகேந்திரனைப் படுகொலை செய்யச் சொல்லி உள்ளார்.

இவர் மீது ஏற்கெனவே கொலை, கொள்ளை, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகள் உள்ளன. ஏற்கெனவே குண்டர் சட்டத்திலும் கைதாகி இருக்கிறார்.

அழகேந்திரனை செல்போனில் அழைத்து ‘ருத்ரபிரியாவுக்கும் உனக்கும் திருமணம் செய்து வைக்கின்றோம்’ என ஆசை வார்த்தை கூறி வேம்பலூர் கண்மாயிக்கு அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி தலை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இந்தக் கொலை ஏறக்குறைய கோகுல்ராஜை தலைவெட்டி கொலை செய்த அதே பாணியில் நடைபெற்றுள்ளது.

வழக்கம் போல இந்த சாதி ஆணவபடுகொலை வழக்கிலும் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கத்தில்தான் காவல்துறை செயல்பட்டுள்ளது. எவன் வீட்டில் இழவு விழுந்தாலும் அது எப்போதுமே காவல்துறைக்கு மகிழ்ச்சியான செய்திதான்!

இன்னும் எத்தனை கொலைகளை, தலையற்ற முண்டங்களை நாம் பார்க்கப் போகின்றோம் எனத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 185 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாகவும், அவற்றில் 3 கொலைகளுக்கு மட்டுமே தண்டனை கிடைத்து உள்ளதாகவும், தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் தான் சாதி ஆணவப் படுகொலைகள் மற்றும் சாதியக் குற்றங்கள் அதிகம் நடக்கிறது என்றும் ‘எவிடென்ட்ஸ்’ கதிர் கூறியுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டில் மேற்கு தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 30 ஆணவக் கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் சாதி ஆணவக் கொலைகள் 2010ம் ஆண்டில் மட்டும் 5,000 கொலைகள் நடைபெற்றதாகவும் அதில் 1000 கொலைகள் இந்தியாவில் நடந்தவை என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. அதாவது உலகில் நடந்த ஆணவக் கொலைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் நடைபெறுகின்றது.

இந்த அரசிடம் சாதி ஒழிப்பிற்கோ, சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கோ எந்த உருப்படியான திட்டமும் கிடையாது. சாதிவெறியர்களை அனுசரித்து அவர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வதன் மூலம் தேர்தல்களில் வெற்றி பெறுவது மட்டுமே இவர்களின் ஒரே நோக்கம்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என கோரிக்கை வைப்பவர்களையும், சாதி ஆணவப் படுகொலைகளை வெளிப்படையாக ஆதரித்துப் பேசுபவர்களையும், தலித்துகளுக்கு எதிராக விஷம் கக்குபவர்களையும் கூட்டணியில் வைத்துக் கொண்டு இவர்கள் சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வருவார்கள் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

குறைந்த பட்சம் சாதிப் பெயர்களில் இருக்கும் அமைப்புகளைத் தடை செய்யவோ, அவர்கள் கூட்டம் போட்டு சாதிவெறியை பரப்புரை செய்வதையோ கூட சமூக நீதி அரசால் தடை செய்ய முடியவில்லை.

சாதிவெறி சங்கங்களால் தமிழக இளைஞர்கள் மிக மோசமான சாதிவெறி பிடித்த மனிதர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பள்ளிகளில், கல்லூரிகளில், வேலை செய்யும் இடங்களில் என அனைத்து இடங்களிலும் சாதிய அணிச்சேர்க்கை வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சமூக வலைதளங்களில் கையில் அருவாளுடனும் மீசையை முறுக்கிக் கொண்டும் ‘என் சாதிப் பெண்ணை காதலித்தால் கல்யாணம் செய்தால் வெட்டிப் போட்டு விடுவேன்’ எனப் பகிரங்கமாக பொதுச்சமூகத்திற்கு எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

சமீபத்தில் காதல் ஜோடிக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்ததால் திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நுழைந்த சாதி வெறியர்கள் அதை அடித்து நொறுக்கினார்கள்.

நிலைமை கைமீறி போய்க் கொண்டு இருக்கின்றது. ஆனால் சமூக நீதி அரசு, திராவிட மாடல் அரசு என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திமுக அரசு இதை எல்லாம் கைக்கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பதோடு இந்தப் பிரச்சினையில் கள்ள மெளனம் காத்து வருகின்றது.

அரசியல்வாதிகளின் சமூக அக்கறை எவ்வளவு வெட்கக்கேடானது என்பதையும், அவர்கள் எவ்வளவு மலிவான புத்தி உடையவர்கள் என்பதையும்தான் நடப்பு நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன.

ஒருபக்கம் முற்போக்குவாதிகளின் ஒரு பிரிவு இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அதைப் பற்றி வாயே திறக்காமல் திமுக ஆட்சிக்கு பஜனை பாடுவதையே தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

அவர்களுக்கு சாதி ஆணவப் படுகொலைகளைப் பற்றியும் கவலை இல்லை, கள்ளச்சாராய மரணங்கள் பற்றியும் கவலையில்லை. அவர்கள் ஸ்டாலின் கொட்டாவி விட்டால் கூட அதில் எந்தளவு சமூக நீதியும் பாசிச எதிர்ப்பும் இருக்கின்றது என்பதைக் கண்டுபிடிக்க இரவு பகலாக வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

சாதிக்கு எதிராகவும், சாதிவெறிக்கு எதிராகவும், சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராவும் நடவடிக்கை எடுக்கத் துப்பில்லாத திமுக, இனியும் தன்னை திராவிட மாடல் அரசு என்று சொல்லிக் கொண்டால் அது திராவிடம் என்ற கருத்தியலுக்கே எதிரானது!.பெரியாருக்கு எதிரானது!.

- செ.கார்கி