பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவின் மரணம் இந்திய ஜனநாயக இயக்கத்துக்கு மாபெரும் இழப்பாகும். மிகுந்த துணிவும் அறிவுக் கூர்மையும் கொண்ட அவருடைய குரல் பாசிச எதிர்ப்பில் ஓங்கி ஒலித்தது. பாசிசத்தின் கொடுங்கரங்கள் அவரை விட்டுவைக்கவில்லை. மனித இனத்தின் விடுதலைக்கான முன்னோடிகளிடையே அவருடைய பெயர் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும். ஒடுக்கப்பட்டவர்களின் துயர் துடைப்பதில் முன் நின்றவர்கள் எதிர்கொண்ட குற்றச்சாட்டுக்களையும் பயங்கரத்தையும் அவரும் எதிர்கொண்டார். அவரது உடல் அழிந்துவிட்டாலும் அவருடைய உணர்வு, இந்தியா எங்கும் காடுகளிலும் சமவெளிகளிலும் அல்லது மாநகரங்களிலும் உள்ள விளிம்புநிலை மக்களின் இதயங்களில் வாழ்கிறது. அங்கே கார்பொரேட் ஆதரவு பாசிஸ்டுகளுக்கு எதிராக தொடர்ந்து ஒளிவீசிக் கொண்டிருக்கும் எதிர்ப்பின் சுவாலைகளில் வாழ்கிறது.57 வயதான முனைவர் சாய்பாபா கல்லீரலில் இருந்த கற்களை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அவர் இறந்துபோனார். அவர் உடல்நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் நிஜாம் மருத்துவ அறிவியல்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அவருடைய மரணம் வெறுமனே மருத்துவத் துயரம் மட்டுமல்ல, மாறாக அவர் சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டு வந்ததன் விளைவாகவே இருந்தது. ஏறத்தாழ பத்தாண்டு கால சிறைவாசத்துக்குப் பிறகு பம்பாய் உயர்நீதி மன்றத்தின் நாக்பூர் இருநீதிபதிகள் அமர்வால் விடுதலை செய்யப்பட்ட போதிலும், சிறையில் அவருக்கு அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்ட நிலைமையில் அவருடைய உடல் படிப்படியாகச் சீர்குலைந்து வந்திருந்தது.
வாழ்நாள் முழுதும் அறப்போராளியாக வாழ்ந்த சாய்பாபா டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியப் பேராசிரியராக இருந்தது மட்டுமின்றி விளிம்புநிலை மக்களுக்காக ஓய்வறியாமல் குரல் கொடுத்து வந்தார். பழங்குடி மக்கள், தலித்துக்கள், முஸ்லிம்கள், காஷ்மீர் மக்கள் ஆகியோரின் உரிமைகளுக்காகப் போராடினார். ஏராளமான மக்களை இடம்பெயரச் செய்த கார்பொரேட் நிலக்கொள்ளையையும் பச்சை வேட்டை நடவடிக்கையையும் அவர் எதிர்த்துப் போராடினார். அப்சல் குருவின் மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். காஷ்மீரின் சுய நிர்ணய உரிமைக்கான திடமான ஆதரவாளராக இருந்தார். அவருடைய விட்டுக் கொடுக்காத ஆதரவுக் கரம் தனியார்மயம் மற்றும் கட்டண உயர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்களுக்கும் நீண்டது. மேலும் வர்க்கப் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாத சாதிய ஒடுக்குமுறை ஒழிப்புக்கும் அவர் போராடினார்.
சாய்பாபாவின் கோட்பாட்டுப் பங்களிப்பும் அதே அளவுக்கு ஆழமானதாக இருந்தது. அவர் அறிவுப் பேராசானாகவும் இருந்தார், ஐரோப்பாவின் செவ்வியல் வெளிப்பாடுகளிலிருந்து வேறுபட்ட, இந்தியாவின் அரை-நிலப்பிரபுத்துவ கட்டமைப்பைக் குறித்தும் இந்தியாவில் பாசிசத்தின் தனித்துவமான வடிவங்களைக் குறித்தும் பகுப்பாய்வு செய்தார். மக்கள் எதிர்ப்பு இதழ் ஆசிரியர் பொறுப்பும் அனைத்திந்திய எதிர்ப்பு அமைப்பின் தலைமைப் பாத்திரமும், புரட்சிகர ஜனநாயக முன்னணிப் பொறுப்பும் இந்திய இடதுசாரி இயக்கத்தில் அவரது நிலையை மையமான ஒன்றாக உறுதிப்படுத்தியது.
சிறையில், சாய்பாபா நெகிழ்ச்சியானவராக இருந்தார், அவரது உள்ளார்ந்த அகமாற்றத்தையும் புரட்சிகர உணர்வையும் பிரதிபலித்த கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தார். தாங்கிக்கொள்ள முடியாத நிலைமைகளிலும் அவரது மனஉறுதி உடைந்து போகவில்லை. அவரது விடுதலைக்காக அணிதிரண்ட உலகளாவிய எதிர்ப்பு இயக்கங்கள் அவரது செல்வாக்கிற்குச் சாட்சியமாக இருக்கின்றன.
எவ்வாறாயினும், சாய்பாபாவுக்குப் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. புரட்சிகர ஜனநாயக முன்னணி மற்றும் பிற மக்கள்திரள் அமைப்புக்களுக்குள் ஜனநாயகச் செயல்பாடு குறித்த பிரச்சனைகளைத் தீர்க்க அவர் போராட வேண்டியிருந்தது. இருந்தபோதும், அவரது நீதிக்கான ஒரு போராளியாக அவரது மரபு மாறாமல் உயிர்ப்போடு இருந்துவருகிறது.
(ஹர்ஷ் தகோர் சுதந்திர இதழியலாளர், டெல்லியில் பேராசிரியர் சாய்பாபாவை அவர் அடிக்கடி சந்தித்துள்ளார்.)
நன்றி: countercurrents.org
தமிழில்: நிழல்வண்ணன்