பேரறிவாசான் தந்தை பெரியார் அவர்களை முழுமையாக உள்வாங்கிய "முத்தமிழறிஞர் கலைஞர்" என்ற அரசியல் ஆளுமை மட்டும் இல்லையென்றால், ஒரு நாளும், இன்று வரையில் கூட, இனி எத்தனை ஆண்டுகள் போராடி இருந்தாலும், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு என்பது சாத்தியப்படுவதற்கு வாய்ப்பேயில்லை என்பதை அறுதியிட்டுக் கூற முடியும், இதை யாராலும் மறுக்க முடியாது. இன்றிலிருந்து பதினேழு ஆண்டுகளுக்கு முன் அப்பேற்பட்ட கோரிக்கையை புரிந்து கொள்ளுமளவுக்கு கூட யாருக்கும் இங்கே சமூகநீதிப் பார்வை இருந்திருக்க முடியாது. அப்பேற்பட்ட சமூகநீதிப் பார்வை கொண்ட கலைஞர், அவருடைய தனிப்பட்ட கொள்கை முடிவாக இதை உள்ளத்தில் தீர்மானித்து, இதை நிறைவேற்றியே தீர்வது என்று தீர்க்கமான மன உறுதியுடன் செயல்பட்டு, எப்பேர்ப்பட்ட நீதிமன்றங்களாலும் தகர்க்க முடியாத வண்ணம், அத்துணை சட்ட நுணுக்கங்களையும் பின்பற்றி, அவருடைய மிக மோசமான உடல் நிலையையும் பொருட்படுத்தாமல், அவர் மருத்துவமனையில் இருந்தாலும் இக்காரியம் தடைபடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து, அப்போது துணை முதல்வராக இருந்த திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் மூலமாக தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிக் காட்டினார் என்றால், இதுதான் கலைஞரின் சிறப்பு வாய்ந்த வரலாற்றுச் சாதனைகளில் முத்தாய்ப்பானது! முதன்மையானது!! எனவே இதற்கான வெற்றியைக் கொண்டாடும் உரிமை கலைஞர் தவிர, திமுக தவிர வேறு எவருக்கும் இல்லை என்பதை இங்கே அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யலாம்.
முத்தமிழறிஞர் கலைஞர் கடிதம்
இந்த மசோதாவை முதல்வர் தானே வந்து முன்மொழிவதாக இருந்தார். ஆனால் டாக்டர்களின் அறிவுரை காரணமாக அவர் வரமுடியாமல் போய்விட்டது. அதனால் தனது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தி ஒரு கடிதமாக அனுப்பியுள்ளார். அதில், இன்று என் வாழ்வில் ஒரு முக்கியமான நாள். ஆம், அருந்ததியர் சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா சட்டமன்றத்திலே நிறைவேறுகின்ற நாள்.
“இந்த நாளில் சட்டசபை வந்து இந்த மசோதாவை நானே முன்மொழிந்து நிறைவேற்றித் தரவேண்டும் என எண்ணியிருந்தேன். சட்டசபைக்கு வருவதாக இருந்தது. ஆனால், டெல்லி டாக்டரும், சென்னை டாக்டர் நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரையாலும் அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன். எனினும் இன்று காலையில் நானே அருந்ததியர் மசோதாவினை அவையிலே முன்மொழிவதற்கான உரையை என் கைப்பட எழுதி அவையிலே அதனை படிக்குமாறு மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பி வைத்து எனக்கு பதிலாக இந்த மசோதாவினை அவரை முன்மொழியுமாறு கேட்டுக்கொண்டேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
உச்ச நீதி மன்றம் தீர்ப்பு
2009 ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் அருந்ததியினருக்கு 3% இட ஒதுக்கீடு சட்ட மசோதா தாக்கல் செய்து, அருந்ததியினருக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. எனினும் இந்த சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு சட்டம் செல்லுபடி ஆகும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் ஏற்கனவே உள் ஒதுக்கீட்டை அனுமதிக்கக்கூடாது என்று ஆந்திர மாநில வழக்கில் 2004 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தின் ஐந்து நீதி நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது. இதன் காரணமாக இந்த வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு உச்ச நீதி மன்றம் பரிந்துரை செய்திருந்தது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு 1.08.2024 அன்று இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதில் பட்டியலின, பழங்குடினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் அன்று அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ் நாடு அரசின் சட்டம் செல்லும் என்று 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.
பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விளக்கப்படாத காரணத்தினால் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் உள் ஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் 14 வது பிரிவை மீறவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள் பட்டியலின, பழங்குடி இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று தீர்ப்பளித்தனர். பட்டியலின, பழங்குடி இன மக்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் காரணமாக அவர்களால் எளிதில் முன்னிலைக்கு வர முடியவில்லை என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. எனவே அரசியல் சாசன பிரிவு 14, துணை வகைப்பாட்டை அனுமதிக்கிறது என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியது.
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்ட முறையாகக் குழு அமைத்து, அதன் மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்டையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திருக்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க, அதற்கான சட்ட முன்வடிவைப் 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு பேரவையில் அறிமுகம் செய்து உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நிறைவேற்றிய சட்டம் இன்று தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் காலத்திலேயே உச்சநீதி மன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது பெருமைக்குரியது, பெருமகிழ்ச்சியளிக்கிறது.
ஒரு மாநில அரசிற்கு உள் ஒதுக்கீடு அளிக்க அதிகாரம் உண்டு என்று இன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கலைஞர் தலைமையிலான திமுக அரசின் நடவடிக்கை சரியானதுதான் என்பதை மெய்ப்பித்துள்ளது. இது சமூக நீதியை வலுப்படுத்தும் தீர்ப்பாகும். மாநில உரிமைகளுக்கு உச்ச நீதி மன்றம் வழி வகுக்கிறது எனப் பெருமைப்படுவதை விடுத்து ஒன்றிய அரசு கையில் அதிகாரம் வேண்டும் என்பது எந்த வகையான நியாயம்?
தீர்ப்பும் விமர்சனமும்
முத்தமிழறிஞர் கலைஞர் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்று உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்தேன் என்று கூறும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திரு தொல் திருமாவளவன் அவர்கள் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு வந்தவுடன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், "இந்தத் தீர்ப்பு பட்டியல் சமூகத்தினரை பிரிக்கிறது" என்று வெளிப்படையாகவே கூறுகிறார்.
பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விளக்கப்படாத காரணத்தினால் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் உள் ஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் 14 வது பிரிவை மீறவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள் பட்டியலின, பழங்குடி இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று தீர்ப்பளித்தனர் என்றால் எப்படி பட்டியல் சமூகத்தினரை பிரிக்கிறது எனக் கூறுகிறார்.
உள் இட ஒதுக்கீடு வேறு அதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் (sub categorisation) துணை வகைப்பாடு வேறு என்கிறார். அதைக் காரணம் காட்டி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை மறு சீராய்வு செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதம் விடுக்கிறார். போராட்டம் நடத்துகிறார். இது எந்த வகையான நியாயம். இது போன்ற செயல் தீர்ப்பு தொடர்கதையாக வேண்டும் என்ற எண்ணம் தானே அவருக்கு உள்ளது என்பது தெளிவாகிறது. இது பட்டியல் இனத்தின் எண்ணிக்கையைக் குறைக்கும் அதுமட்டுமல்ல "பட்டியல் சாதிகளுக்குள் இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்படக் கூடாது" என்று வெளிப்படையாகக் கூறுகிறார். இதுவரை மாநில உரிமைகளைப் பேசிவந்த இவருக்கு திடீர் மாற்றம் ஏன் வந்தது. ஒரு மாநில அரசிற்கு உள் ஒதுக்கீடு அளிக்க அதிகாரம் உண்டு என்று இன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கலைஞர் தலைமையிலான திமுக அரசின் நடவடிக்கை சரியானதுதான் என்பதை மெய்ப்பித்துள்ளது. இது சமூக நீதியை வலுப்படுத்தும் தீர்ப்பாகும். மாநில உரிமைகளுக்கு உச்ச நீதி மன்றம் வழி வகுக்கிறது எனப் பெருமைப்படுவதை விடுத்து ஒன்றிய அரசு கையில் அதிகாரம் வேண்டும் என்பது எந்த வகையான நியாயம்?
இதன் மூலம் இருதலைக் கொள்ளியாய் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை வெளிப்படையாக எதிர்க்கவும் முடியாமல், ஆதரிக்கவும் முடியாமல், தடுமாறுகிறாரா? ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறாரா? அல்லது அகில இந்திய தலித் தலைவராக வரவேண்டும் என்ற முயற்சியா? சமூக நீதிக்காக பாடுபடும் தலைவருக்கு ஏன் இந்த தடுமாற்றம். தேவேந்திரகுல சமுதாயம் முன்னேறிவிட்டது ஆகவே பட்டியல் இனத்தைவிட்டு வெளியேறுவோம் என ஒருவர் அறிவித்த போது, ஆனால் பட்டியல் இனச்சலுகைகள் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று இரட்டை நிலை மேற்கொண்ட போது அது பட்டியல் இன எண்ணிக்கையை குறைக்காதா? மற்றும் பட்டியல் சமூகத்தினரை பிரிக்காதா? ஏன் இந்த குழப்பத்தில் உள்ளார். தோழர் திருமாவளவன் அவர்களுக்குள்ள மரியாதையை கெடுக்க அவர் பக்கத்தில் இருந்துகொண்டே குழி பறிக்கிறார்களா? அவர் சிந்தனைக்கே விட்டுவிடலாம்.
இட ஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் முறைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:
2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி சென்னையில் 25,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கோரிக்கைப் பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. அப்பேரணியின்போதே அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டைக் கொள்கை ரீதியாக ஏற்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு
அதேநேரத்தில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்; கிரீமிலேயர்களை அடையாளம் காண்பதற்கான கொள்கையை அரசு வகுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் பட்டியலினத்தவர்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு சமூக நீதியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் அதற்கான ஒரு நடவடிக்கைதான் உள் இடஒதுக்கீடு. அதற்கு மாறாக கிரீமிலேயர் முறை புகுத்தப்பட்டால் அது பட்டியலினத்தவருக்கு சமூக நீதியை மறுப்பதற்கான கருவியாக அமைந்து விடும். கிரீமிலேயர் முறையை எல்லோரும் எதிர்ப்பார்கள் என்பதோடு, பட்டியலின, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை கொண்டு வரும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபடாது, கொண்டு வராது என அறிவித்தது ஆறுதல் அளிக்கிறது.
அம்பேத்கரின் அரசியல் சாசனத்தில் எஸ்.சி.,எஸ்.டி., ஒதுக்கீட்டில் கிரீமிலேயருக்கு வழியில்லை - மத்திய மந்திரி சபை உறுதி.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் எஸ்.சி ., எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை அமல்படுத்தும் கொள்கையை மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் கருத்து குறித்து விவாதித்து முடிவில் எஸ்.சி.,எஸ்.டி.,ஒதுக்கீட்டில் கிரீமிலேயரை அமல்படுத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டதாக கூட்டத்தில் பங்கேற்ற இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் பொது, "அம்பேத்கர் கொடுத்த அரசியல் சாசனத்தின்படி எஸ்.சி., எஸ்.டி., ஒதுக்கீட்டில் ஒரு கிரீமிலேயருக்கு வழிமுறை எதுவும் இல்லை”. இந்த ஒதுக்கீடு அரசியலமைப்பின்படியே இருக்க வேண்டும், அரசியலமைப்பின் விதிகளை பின்பற்றுவதில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதை மந்திரிசபையும் உறுதிசெய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
அருந்ததியர் இனம் சார்பில் நன்றிகள்
நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையிலான குழு அல்லும், பகலும் பாடுபட்டு இது சம்பந்தமான பல சட்டப் பிரிவுகளையும் படித்தாய்ந்து இதற்கான அறிக்கையினை தமிழ் நாடு அரசுக்கு அளித்து வெற்றிகரமான தீர்ப்புக்கு வழி வகுத்தமைக்கு என்றும் நன்றிக்குரியவராவார். 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி சென்னையில் 25,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கோரிக்கைப் பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு என். வரதராசன் அவர்கள் தலைமையில் நடந்தது. அதுசமயம் இக்கோரிக்கையை நீண்ட காலமாய் வலியுறுத்தியும் இப்பேரணிக்கு முன்முயற்சியும் மேற்கொண்ட ஆதித் தமிழர் பேரவை நிறுவனத்தலைவர் திரு இரா. அதியமான் அவர்களுக்கும் பேரணியில் கலந்து கொண்ட அனைத்து அருந்ததியர் அமைப்புகளுக்கும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்களாவோம். உச்ச நீதிமன்றத்தில் நடந்த எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கவனிக்கத்தக்க வகையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தலைமை நீதிபதியின் உரையில் குறிப்பிட்ட மேற்கோள் காட்டும் வகையில் இருந்த ஆய்வுக்கட்டுரையாளர் முனைவர் ரவிச்சந்திரன் பத்ரன் அவர்களும் பாராட்டுக்குரியவர்.
உச்ச மன்ற தீர்ப்பினை வரவேற்றும், ஆதரித்தும் ஆதரவு தெரிவித்த கட்சிகளின், அமைப்புகளின் தலைவர்கள், செய்தித் தாள்கள், ஊடகங்கள் அனைத்திற்கும் நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறேன்.
- கருவூர் இரா.பழனிச்சாமி