இந்தியாவில் நடைமுறையில் இருந்த 163 ஆண்டுகள் பழமையான சட்டங்களை மாற்றி, தற்போது திருத்தி புதிய சட்டங்களாகக் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு. ஏற்கெனெவே நடைமுறையில் இருந்த குற்றவியல் சட்டம் (IPC) பாரதிய நியாயா சன்ஹிதா (BNS) எனவும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) எனவும், இந்திய சாட்சியச் சட்டம் (IEC) பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் (BSA) எனவும் திருத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் குற்றவியல் நீதி அமைப்பின் மூன்று சட்டங்களையும் மாற்றப்போவதாக 2019இல் ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து BNS, BNSS, BSA ஆகிய 3 புதிய சட்டங்கள் 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த மிக தீவிரமாக வேலை பார்த்த ஒன்றிய பாஜக அரசு, 150 எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்துவிட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆரம்பத்தில் சட்டீஸ்கர் மாநிலத்தில் அறிமுக செய்துவிட்டு பிறகு படிப்படியாக அமல்படுத்துவோம் என அமித்சா கூறினார். மிக விரைவாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் கிடைத்தது. இச்சட்டத்திற்கு எதிராக பல முக்கிய முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்கங்கள், சட்ட வல்லுநர்கள், மாநில பார் கவுன்சில்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் ஜூலை 1, 2024 முதல் இந்த புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன.இனி IPC-இன் உள்ள 511 பிரிவுகளுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதாவின் 358 பிரிவுகள் நடைமுறைப்படுத்தப்படும். CrPC-இன் 484 பிரிவுகளுக்குப் பதிலாக பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் 531 பிரிவுகள் நடைமுறைப்படுத்தப்படும். IEC-இன் 167 பிரிவுகளுக்குப் பதிலாக பாரதிய சாக்ஷ்ய ஆதினியத்தில் 170 பிரிவுகள் இருக்கும்.
இந்த புதிய சட்டங்களில் ஏற்கெனவே இருந்த 90 சதவீதம் சட்டப் பிரிவுகள் அப்படியே உள்ளன, இதில் பல பிரிவுகளில் மாற்றம், நீக்கம், புதிய பிரிவுகள், சார் பிரிவுகள் சேர்ப்பு (Sub Section) ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. மீதம் 10 சதவீதம் சட்டத்தை மறைமுகமாக கருப்புச் சட்டங்களாகக் கொண்டு வந்துள்ளது ஒன்றிய அரசு. மேலும் சில முக்கிய பிரிவுகளில் மாற்றம் செய்துள்ளனர். சான்றாக
குற்றங்கள் |
பழையது |
புதியது |
கொலை |
IPC பிரிவு 302 |
BNS பிரிவு 103 |
திருட்டு |
IPC பிரிவு 420 |
BNS பிரிவு 318 |
பாலியல் |
IPC பிரிவு 376 |
BNS பிரிவு 64 |
ஊரடங்கு |
CrPC பிரிவு 144 |
BNSS பிரிவு 163 |
இந்த புதிய சட்டத்தில் பழைய பிரிவுகளுக்கு பதிலாக வேறு எண் கொண்ட பிரிவுகளாக மாற்றம் செய்துள்ளதன் மூலம் போலீசார் மற்றும் பொதுமக்கள், மத்தியில் பெரும் குழப்பங்கள் ஏற்படும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(1)(ஏ) பிரிவின்படி, உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக அரசோ சட்டத்தையே மதிக்காமல் சமஸ்கிருத பெயரை ஆங்கிலத்தில் அச்சடித்து, மக்கள் மேல் திணிக்கிறது. ஒன்றிய பாஜக அரசு இந்த சட்டங்களுக்கு சமஸ்கிருத மொழியில் பெயர் சூட்டிய போதே இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து எதிர்ப்புக்குரல் ஒலித்தது. பல மாநிலங்களில் மாவட்ட மற்றும் உள்ளூர் நீதிமன்றங்களில் மாநில மொழி பயன்படுத்தப்படுவதால் “சமஸ்கிருதப் பெயர் கொண்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் எழும். எனவே மக்களுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்” என்றும் சில நீதிபதிகள் கூறினர்.
சமஸ்கிருதப் பெயர் காரணம் மட்டுமன்றி,மக்களின் குரலை ஒடுக்குவதே ஒன்றிய அரசின் முதன்மையான நோக்கமாக இருப்பதாகக் கூறி வழக்கறிஞர் சங்கத்தினர் போராட்டத்தில் இறங்கினர். தமிழ்நாட்டிலும் சென்னை, மதுரை, கரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி என பல்வேறு ஊர்களைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கத்தினர் இந்த புதிய சட்டங்களை கருப்புச்சட்டங்கள் என்று கூறி நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த புதிய சட்டங்கள் மூலம் நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைத்து, காவல்துறைக்கு அதிகாரத்தை குவித்துள்ளது ஒன்றிய அரசு. மேலும் அந்த அதிகார பலத்தால் காவலர்களால் தவறுகள் ஏற்படுமாயின் அது குறித்தான சட்ட நடவடிக்கை குறித்தோ, காவல் விசாரணை முறைகளைப் பற்றியோ, காவல் விசாரணையில் கைதிகளின் மேல் நடத்துப் வன்கொடுமை மற்றும் கொலைகளைப் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது குறித்து வழிகாட்டும் சிபாரிசு முறைகள் நிறைய இருந்தும் இந்த கொடுமையைக் களைய எவ்வித முயற்சியும் இச்சட்டங்களில் இல்லை. இதன் மூலம் அரசு போலீசை ஒரு கருவியாக பயன்படுத்தலாம் எனவும் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் முன்னாள் காவல் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தியாவில் அதிகார வர்க்கத்தின் வன்முறை பல காலமாக சுட்டிக் காட்டப்பட்டு வரும் சூழ்நிலையில், பாஜக கொண்டு வந்துள்ள புதிய சட்டங்கள் அதை மேலும் அதிகரிக்கும் வகையிலே அமைந்துள்ளன. கைதான நபர்களை போலீஸ் காவலில் எடுக்கும் அதிகபட்ச வரம்பை 15 நாட்களில் இருந்து 60 நாட்கள் அல்லது 90 நாட்களாக நீட்டிப்பதன் மூலம் காவல்துறையின் அதிகாரங்களை அதிகரித்திருக்கிறது பாஜக அரசு (BNSS பிரிவு 187). ஏற்கனவே சாதாரணமாக விசாரணை என்று அழைத்து சென்று காவல்நிலையத்தில் சிறை மரணங்கள் (lockup death) தொடர்கதையாகி வரும் நிலையில், இனி சாத்தான்குளம் சம்பவங்கள் போன்று பல மடங்கு பல மாநிலங்களில் அதிகரிக்கும் நிலையே ஏற்படும். இவை கேட்க ஆள்ளில்லாத மற்றும் பணபலமில்லாத எளிய சமூகப் பின்னணி கொண்ட மக்களுக்கே நிகழும்.
அதேபோல, புதிய சட்டங்களின் மூலம் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவுசெய்ய காவல்துறையினருக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்குவதையும் பல வழக்கறிஞர்கள் விமர்சித்துள்ளனர். IPC சட்டத்தின்படி முன்பு காவல்துறை கைதுசெய்யும்போது எவ்வித அடக்குமுறையும் செய்யக் கூடாது என்று இருந்தது. தற்போது அந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை விரும்பினால், விசாரணைக்கு முன்பே ஒருவரின் சொத்துகளை முடக்கவும் முடியும் என இச்சட்டத்தில் கூறப்படுகிறது. இது மனித உரிமை மீறல் என்றும், காவல்துறைக்கு இவ்வாறு அதிகாரங்களை குவிப்பதன் மூலம் இந்தியா முழுவதுமே ‘போலீஸ் ஸ்டேட்‘ (police state) எனும் நிலைக்குத் தள்ளப்படும் என்று மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
வெள்ளையர் கால குற்றவியல் சட்டமான IPC 124Aவை நீக்குகிறோம் என்று சொல்லி, அவற்றைவிடக் கொடுமையான சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. இதற்கு முன்னர் இருந்த 124A பிரிவு 113-ல் (தேசத்துரோக சட்டம்) பிரிவிற்குப் பதில் ‘இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களை பிரிவினைவாத செயல்கள்’ என்று கூறும் புதிய பிரிவைக் கொண்டுவந்துள்ளது ஒன்றிய அரசு (BNS பிரிவு 152). இவற்றோடு இந்த புதிய சட்டங்களில் முதன்முறையாக ‘பயங்கரவாதம்’ என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டு அது தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டுள்ளது.
PUCL ஆய்வில் 2015 -2020-ம் ஆண்டுகளுக்கு இடையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 8,371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 235 பேர் மட்டுமே கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்களில் 97.2% பேர் குற்றமற்றவர்கள் என்றும், 2.8% பேரின் குற்றங்கள் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளன என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதிலிருந்து பெரும்பான்மை வழக்குகள் அரசுக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர்களை ஒடுக்குவதற்கென்றே மோடி அரசு வழக்கு பதிந்துள்ளது என்பதே தெளிவாகிறது
பாலஸ்தீனம் குறித்துப் பேசியதற்காக தோழர் திருமுருகன் காந்தி மீது UAPA வழக்கோடு 2018இல் ஸ்டெர்லைட் படுகொலை குறித்து ஐ.நா.வில் பேசியதற்காக 124Aவழக்கும் பதிவு செய்து சிறையில் அடைத்தது. மோடி ஆட்சியில் தொடர்ந்து மக்களுக்கு எதிரான திருத்தச் சட்டங்களை போட்டு சமூக செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், போன்றோரை கைது செய்து சிறையில் தள்ளுகிறது. இப்போது IPC124Aவின் தொடர்ச்சியாகவே BNS150 என்ற பிரிவைக் கொண்டு வந்து அதன் மூலம் பாஜகவிற்கு எதிராக இயங்குபவர்களை அச்சுறுத்தப் பார்க்கிறது. மேலும் இப்பிரிவின் கீழ் பல ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் விதிக்கப் போகிறது மோடி அரசு. இனி இந்த கைது நடவடிக்கைகளை மேலும் அதிகமாக்கவே BNS150 பிரிவு பயன்படத்தப்படலாம் எனும் சூழல் உருவாகியிருக்கிறது.
மேலும் மின்னணு தகவல் தொடர்புகளைப் பயன்படுத்துவது இப்பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பது ’பெகாஸஸ்’ போன்ற உளவு செயலிகளை ஊக்குவிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கை மற்றும் திருநம்பி போன்ற மாற்று பாலினத்துவர்கள், கணவன் மனைவியின் சம்மதம் இல்லாமல் பாலியல் துன்புறுத்தல்கள் ஆளாக்குவது போன்ற குற்றத்திற்கு இம்மசோதாவில் திருத்தம் எதுவும் இடப்பெறவில்லை போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
அறவழியில் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்துபவர்களைக் கூட சிறையில் அடைக்கும் பிரிவுகளும் (subversive activity, feeling and economic security) புதிய குற்றவியல் சட்டங்களில் இடம் பெற்றுள்ளன. சான்றுக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடியதால் நாட்டின் காப்பர் உற்பத்தி குறைந்துள்ளது, அதனால் பொருளாதார பாதிப்பு/இழப்பு என அரசு கருதி, இனி போராடக் கூடாது என வழக்கு பதியக்கூடும். அதேப்போல் பரந்தூர் மக்கள் விமான நிலையம் வேண்டாம், எங்கள் நிலம் பறித்தால் நாங்கள் அகதிகளா? நாங்கள் வேறு இடத்துக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ செல்ல சொல்கிறீர்களா? என உணர்ச்சிப்பூர்வமாக கூறி போராடினால் கூட அரசுக்குப் பாதிப்பு என இச்சட்டம் பாயும்.
அதாவது “சாதாரண போராட்டங்களைக்கூட, அரசுக்கு எதிரான செயல்பாடாகக் காட்டி ஒருவரைக் கைது செய்ய முடியும்” என்று இந்த புதிய சட்டங்களைக் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் ஒய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் அவர்கள்.
இந்த சட்டம் மூலம் பொதுமக்கள் காவல்துறையினருக்கு இணையவழியில் புகார்கள் பெறுவதும், அதற்கான சாத்தியக்கூறுகளை விளக்கவில்லை. பொருளாதார மற்றும் தொலைத்தொடர்பு வசதி குறைந்த இந்தியாவில், நகர்புறம் தவிர்த்து இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமப்புறங்களில் எவ்வித இணையதள 5ஜி/4ஜி சேவை போன்ற கட்டமைப்பை செய்து தராமல் இணைய வழியில் புகார்கள் எப்படி சாத்தியமாகும்? எனவே இந்த புதிய சட்டங்கள் மூலம் கிராமப்புற மக்களுக்கும் காவல்நிலையங்களுக்கும் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
பாலியல் ரீதியான குற்றங்கள், கும்பல் படுகொலைகள், மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் போன்ற பல குற்றச்செயல்களுக்கு உரிய தண்டனை குறித்து இதில் வலிமையான திருத்தத்தை செய்திருக்கிறார்கள். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் சிறார்கள் மற்றும் பெண்களின் மீது நடந்த பாலியல் வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகள், மாட்டுக்கறிக்காக நடந்த கொலைகள், மணிப்பூர் பெண்கள் மீதான கும்பல் வன்புணர்வுகள், மணிப்பூர் மக்கள் மீதான படுகொலைகள் என இதில் கூறிய குற்றங்களை செய்திருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்களே எனும் போது இந்த வலிமையான திருத்தம் அவர்கள் மீது பாயுமா என்கிற சந்தேகமே வலுக்கிறது. ஏனென்றால் இவை எல்லாம் நடந்த போது மோடியும் வாய் திறக்கவில்லை. எந்த சட்டமும் பாயவில்லை.
இச்சட்டங்கள் ஒன்றிய மற்றும் மாநிலத்தின் கூட்டு பட்டியலில் வருகிறது. ஆனால் எந்த மாநிலங்களும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படாமல் இச்சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கிறது. இதனால் தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. இருப்பினும் தனது கருப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்தி வியாபாரிகள் முதலான நடுத்தர வர்க்கத்தினர் மீது வழக்கு பதியத் தொடங்கியிருக்கிறது மோடி அரசு.
இந்த புதியச்சட்டம் மூலம் நாட்டின் அனைத்து அமைப்புகளையும் ஒன்றிய அரசின் விருப்பப்படி மாற்றி அமைக்கும் நிலையை உருவாக்குகிறது மோடி அரசு. வெள்ளையர் காலனி ஆதிக்கம் சட்ட வடிவில் நீடிப்பதை ஒழிப்பதாகக் கூறி டெல்லி காலனி ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறது மோடி அரசு. பார்ப்பனீயத்தின் சமஸ்கிருத மொழி மேலாதிக்கத்திற்காக இப்படியான குளறுபடிகளை மேற்கொண்டு, சட்டத்துறை சார்ந்த அனைவரையும், மக்களையும் குழப்ப நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி, ஒரே மதம், ஒரே மொழி என்று அமல்படுத்த கடந்த ஆட்சிக் காலங்களின் ஒவ்வொரு நாளும் சட்ட திருத்தத்தை மேற்கொண்டு வந்த பாஜக அரசு, குற்றவியல் சட்டங்களின் பெயரையே இந்த ஆட்சியில் மாற்றி விட்டது. வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டங்களை எதிர்த்தது போல், இந்த புதிய குற்றவியல் சட்டங்களையும் பொதுமக்கள் எதிர்த்துப் போராடி திரும்பப் பெற வைக்க வேண்டும்.
- மே பதினேழு இயக்கம்