மானுடத்தை நேசிக்கும் எந்த ஒரு மனிதரும் எழுச்சித் தமிழரை நிராகரித்து விட்டு மானுடத்தை நேசிக்க முடியாது. அந்த அளவிற்கு இவ்வுலகை நேசிக்கும் அன்பின் பெருங்கடலாக இருக்கிறார். எதுவெல்லாம் மானிடத்திற்கு எதிரான கருத்தியலோ அவற்றையெல்லாம் எதிற்கும் முதல் குரல் தொல். திருமாவிடமிருந்து தான் வரும். சாதியாலும், மதத்தாலும் மக்களைப் பிளவுபடுத்தும் எண்ணம் கொண்டோரையும் ஜனநாயகப்படுத்தும் பண்பாளர். சனாதனத்தை வேரறுக்க புறப்பட்ட வேங்கையின் மைந்தனவர். 2000 ஆண்டுகளாக சாதி ஆதிக்கத்தாலும் ஒடுக்கு முறையாலும் உறங்கிக் கிடந்த சமுதாயத்தை உசுப்பேற்ற வந்தவர். கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தின் மாய வலையைக் கிழித்துத் தொங்க விட்டவர். ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர். பெண்களின் அரண். ஏழை எளிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரம். புலிகள் என்றால் ஈழம், ஈழம் என்றால் புலிகள் என்று உறுமியவர். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் இரண்டாம் புரட்சியாளர். பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலர். நாடாளுமன்ற உறுப்பினர், பேச்சாளர், எழுத்தாளர், பாலின வேறுபாட்டை அறுத்து சமத்துவத்தை நிலைநாட்டும் நாயகர். அவர் ஒரு தீர்க்கதரிசி. மானுட நேயர். விடுதலை நாயகர். அரசியல் சாசனத்தின் ஆன்மா. விடுதலையை விரும்பும் அனைத்து தரப்பு மக்களின் இதயம். தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், மாமேதை மார்க்ஸ் இவர்களின் ஒட்டுமொத்த வடிவம் தான் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன்.

எண்பதுகளுக்குப் பிறகு தலித்தியம், பெண்ணியம், மாறிய பாலினம் போன்ற கோட்பாட்டுச் சிந்தனைகள் இம்மண்ணில் வளம்பெற தொடங்கியன. குறிப்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் நூற்றாண்டுக்குப் பிறகு, ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. அதன் பிறகு தொடர் உரையாடல்கள் இலக்கியத்தின் வாயிலாகவும் பாமரர்களிடம் கதை, கவிதை நாடகமூலம் கலை இலக்கியத்தின் வாயிலாகவும், கொண்டு சேர்க்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு டாக்டர் சவிதா அம்பேத்கர் அவர்கள், டாக்டர் அம்பேத்கர் விட்டுச் சென்ற பணிகளை மேற்கொண்டார். அதன் ஒரு பகுதி தான் DALIT PANTHER OF INDIA (DPI) என்ற ஓர் இயக்கம் உருவானது. அதன் தமிழ்நாட்டின் பொறுப்பாளராக திரு. மலைச்சாமி இருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு அந்த அமைப்பை வழி நடத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் தொல். திருமாவிடம் வந்து சேர்கிறது. தலைமை ஏற்று வழி நடத்தி விடுதலை சிறுத்தைகளாக உருமாற்றும் அடைந்தது. அன்று தொடங்கிய அரசியல் பயணம் இதோ இந்த நொடி வரை தொடர்கிறது. ஏறக்குறைய 40 ஆண்டுகள் களத்தில் இன்றும் மக்களுக்காக களப்பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.thirumavalavan 560தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் யாரை எதிர்த்து? எந்த தத்துவத்தை எதிர்த்து போராடினார்களோ? அவர்கள் விட்ட இடத்தில் இருந்து, அதே மூர்க்கத்துடன் இன்னும் வேகமாக வேங்கையைப் போல போராடி சனாதனத்தை எதிர்த்து களமாடி சனாதனம் என்றால் என்ன என்பதை மிகத் தெளிவாக இந்த நூற்றாண்டில் மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். தங்களுடைய இறை வழிபாட்டு மரபுக்கும், சனாதனத்திற்கும் எள்முனை அளவேனும் தொடர்பில்லை என்ற வேறுபாட்டை எளிய பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கொண்டு சேர்த்த பெருமை அவருக்கு உண்டு.

முதலில் சனாதனம் என்றால் என்ன என்பதைப் பற்றி பின்வருமாறு காணலாம். சனாதன தர்மம் என்பது நிலையான தத்துவஞானம், நம்பிக்கை என்று பல்லாயிரம் ஆண்டுகாலமாக இந்து சமயத்தை குறித்து வந்த பெயர். இந்துக்களைப் பொறுத்தவரை இது மனிதனால் உருவாக்கப்பட்டவற்றை கடந்து தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது என்று புரிந்து கொள்ளவியலும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

அதனால்தான் இந்தியாவின் தேசத்தந்தை காந்தியடிகளை சனாதன சக்திகள் சேர்ந்து சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாத படுகொலையை செய்ததை இன்றளவும் நியாயப்படுத்த முயற்சிக்கிறது. அதே போன்று டாக்டர் அம்பேத்கர் யாரை எதிர்த்து தன் வாழ்நாளெல்லாம் போராடி நான் பிறக்கும்போது இந்துவாக பிறந்து விட்டேன். நிச்சயம் இறக்கும்போது ஓர் இந்துவாக சாக மாட்டேன் என்று சொல்லி பௌத்தத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் எந்த மக்களின் இழிவுக்காகவும், விடுதலைக்காகவும் போராடினாரோ அதே மக்களை வைத்து இந்துத்துவ அம்பேத்கர் என்ற புத்தகம் எழுதுவதற்கும் துணை நின்றது இதுதான் சனாதனத்தின் முக்கிய குறிக்கோள்.

சனாதன தர்மத்தை (அதர்மம்) ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு உள்ளிட்ட துணை அமைப்புகளை கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. கோல்வால்கர் டாக்டர் அம்பேத்கரின் தலைமையில் அமைந்த அரசியல் சட்டத்தைப் பற்றி மிக மோசமான சூழலில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். "சில மேற்கத்திய நாடுகளில் இருந்து சில விதிகளை எடுத்துக்கொண்டு பொருத்தமே இல்லாத குருக்கள் முருக்கலாய் ஒட்டியதுதான் நம் அரசியலமைப்புச் சட்டம் ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் இருந்து (சார்டன்) அல்லது முந்தைய உலக நாடு அமைப்பில் இருந்து சில போலி தத்துவங்கள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளின் அமைப்புச் சட்டங்களின் ஒட்டுத்துணி வேலை இது" என்று பதிவு செய்துள்ளார்.

அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக தன் வாழ்நாளின் பெருபங்கை செலவிட்டு ஒட்டுமொத்த மக்களுக்குமான ஒரு சட்ட நூலை எழுதி அனைத்து சான்றோர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட நூலை பற்றி இப்படி பிற்போக்கான எண்ணம் கொண்டவர் தான் கோல்வால்கர். அவர் மேலும் இன்றைய ஒன்றிய அரசை பற்றியும் பின்வருமாறு எண்ணம் கொண்டவராக இருக்கிறார். "நம்முடைய இணக்கமான ஒற்றை தேசியம் என்கின்ற உறுதிப்பாடு நம் அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு குழுவினரிடம் துளியும் இல்லை. என்பதை ஒன்றிய அமைப்புச் சட்டத்தின் விரிவுரையிலே தெளிவாகத் தெரிகிறது. நம் தேசத்தை மாநிலங்களின் ஒன்றியம் என்று அழைத்துள்ளனர். தற்போதைய ஒன்றிய கட்டமைப்பில் சிதைவு விதைகள் நிரம்பி உள்ளன என்று கூறுவதிலிருந்து இந்த அரசாங்கத்தை எந்த அளவிற்கு மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

ஒருபுறம் இந்தியாவைப் பற்றிய எண்ணம் மேற்குறிப்பிட்டதைப் போன்று இருந்தாலும் மற்றொரு எண்ணம் தன் தாய்நாட்டிலே கவனம் பெற்று இருப்பதையும் உணர முடிகிறது. உலகில் ஹிட்லரைப் போன்று ஒரு சர்வதிகாரியைப் பார்க்க முடியாது. அவன் நாஜிப்படையை உருவாக்கி நாளொன்றுக்கு 2000 யூதர்களை கொன்று குவிக்காமல் தூங்க மாட்டான். அப்படி யூத வெறிபிடித்த கொலைகாரனையும் அவனுடைய சித்தாந்தத்தையும் கோல்வாகர் எந்த அளவிற்கு தன்னுடைய உடல் பொருள் ஆவி அனைத்திலும் ஊறி போய் உள்ளது என்பதை பின்வரும் சான்று புலப்படுத்தும். இன்றைய விவாதப் பொருள் என்னவென்றால் தம் இனத்தை குறித்து ஜெர்மனியர்களுக்கும் மாபெரும் பெருமை. ஜெர்மனி தன் சமூகம் மற்றும் கலாச்சார தூய்மையை காப்பாற்ற வேண்டி தன் நாட்டில் இருந்த செமிட்டிக் இனத்தின் யூதர்களை அடியோடு அழித்து உலகையே அதிர வைத்தது. இங்கு உச்சகட்ட இனப்பற்று தென்படுகிறது இந்துஸ்தானத்தில் இருக்கும் நாம் சிறந்த செயலில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் பயனடைய வேண்டும் என்று ஹிட்லரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியவற்றைப் பட்டியலிடுகிறார். அப்படி என்றால் இங்கு இருக்கும் மக்களில் யூதர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. யூதர்களை கொன்று குவித்தது போல இங்கு இருக்கும் மக்களை கொலை செய்ய துணிவதை இது காட்டுகிறது. இது தனிப்பட்ட கோல்வாக்கரின் எண்ணம் இல்லை ஒட்டுமொத்தமான சனாதனத்தின் நோக்கம் இதுதான்.

அண்மைக்காலமாக கலை இலக்கியம் பண்பாடு ஊடகம் என்று எல்லா தலங்களிலும் அவர்களின் தலையீடுகள் அதிகரித்து வருவதை காண முடியும். இலக்கியத்தை இலக்கியமாக பார்க்காமல் அதை தங்களுக்கான ஆயுதமாக மாற்றும் போக்கும் அவர்களிடம் குடி கொண்டுள்ளது. ராமாயணத்தில் சாம்புகனின் வதையை நியாயப்படுத்தும் மனநிலை அவர்களுக்கு இருப்பதை காண முடியும். சாம்புகன் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவன். அவனுடைய கோரிக்கைகள் நியாயமானது. ஆனால் அவனை கொலை செய்யும் ராமன் எப்படி நல்லவனாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. ஆனால் அதற்கு ஒரு புதிய கற்பித்தத்தைச் சொல்லி மக்களை திசைதிருப்பி முட்டாளாக்கும் போக்கு அவர்களிடம் மிகத் தீவிரமாக காணப்படுகிறது. இந்தச் சிந்தனை ஒரு மனிதனுக்கு எப்படி வலுபெறும் என்றால் தீவிரவாத அமைப்பிலிருந்து வெளிவந்தவர்களால் மட்டும் தான் இது போன்று சிந்திக்க முடியும். இந்த அடிப்படை வாதத்தைப் புரிந்து கொண்டால் மட்டுமே சனாதனத்தையும் ஆர்.எஸ்.எஸ் செயலையும் புரிந்து கொள்ள முடியும். இந்த சனாதன சக்தி மக்களின் மூளையை எந்த அளவுக்கு சலவை செய்கிறது. அவர்களின் எண்ணங்களில் விஷத்தை பாய்ச்சுவதை உணர முடியும். மதம் அந்த அளவிற்கு மனிதனை முட்டாளாக்கும். மாமேதை காரல் மார்க்ஸ் மதம் ஒரு அபின் என்று கூறியதும் இந்த எண்ணத்தில் தான்.

மதம் மக்களை அனைவரையும் நிறுவனமயமாக்கப்பட்ட ஓர் அமைப்பு. அதற்கு ஒன்றிணைக்கும் குணம் உண்டு. பெரும்பாலும் மதவாதிகள் மக்களை இதன் அடிப்படையில் தான் ஒன்று திரட்டுகிறார்கள். மக்களையும் மதநம்பிக்கையிலும், மதபூசல்களிலும் வைத்திருக்கவே விரும்புகின்றனர். அதனால்தான் மனிதர்கள் உணர்ச்சி பூர்வமாகவே இருக்கிறார்கள். தன் உடன்பிறப்புகளையோ அல்லது உறவுகளையோ, தாய் தந்தையரையோ பற்றி தவறாக பேசினால் கூட மன்னித்து விட்டாலும் விடக்கூடும் ஆனால் தன்னுடைய சமய நம்பிக்கையைப் பற்றி பேசும்பொழுது உணர்ச்சி மேலிடச் செய்கிறது. மதவாதிகளும் இதையே விரும்புகின்றார்கள்.

 உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் இம்மூன்றும் தான் ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள். இந்திய மக்களுக்கு இந்த அடிப்படை தேவை மிக முக்கியமாக வேண்டப்படுகிறது. வீடு வாசல் இல்லாத மனிதர்கள் கூட தங்கள் மத நம்பிக்கையில் ஊறிப் போய் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு 2000 ஆண்டு காலமாக அவர்களின் மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறது.

மக்கள் எப்பொழுதும் தன்னிறைவு அடைந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இந்த மதவாத சக்திகள் இருக்கின்றன. எல்லாவற்றிலும் அவர்களை தன்னிறைவு அடைந்து விட்டால் சிந்திக்கத் தொடங்கி விடுவார்கள். அவர்கள் சிந்திக்கத் தொடங்கினால் கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள். அது போன்ற ஒரு நிலை வந்துவிடக் கூடாது என்பதில் நாட்டை எப்பொழுதும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் நிலையிலையோ அல்லது ஆபத்திற்குண்டான நிலையிலையோ அல்லது அச்சத்திலையோ வைத்திருக்க வேண்டும் என்பது இந்த சனாதன சக்திகளின் நோக்கமாக இருக்கிறது.

அதனால்தான் இந்தியா எப்பொழுதும் ஒரு பதட்டமான சூழலில் இருந்து வருகிறது. இன்றைக்கு விஞ்ஞான வளர்ச்சியில் உலக நாடுகள் எல்லாம் செவ்வாய் கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறது. இன்னும் இன்னும் பல புதிய புதிய கண்டுபிடிப்புகள் செய்து கொண்டு இருக்கிறன. மனிதநேயத்தை பற்றி விரும்புகிறது. ஆனால் இந்திய திருநாட்டில் இது போன்ற ஒரு சூழலுக்கு வாய்ப்பில்லை போலும் ஏங்க வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் அரசியலாக பார்க்கும் மனநிலை தான் இந்த சனாதன சக்திகளுக்கும் அதனுடைய ஆணிவேர் ஆர் எஸ் எஸ் க்கும் இருப்பதை அறியலாம். அதன் அடிப்படையில் புல்வாமா தாக்குதல், ராமர் கோயில் கட்டுவது, பண மதிப்பீட்டு நடவடிக்கை, ஜிஎஸ்டி, முத்தலாக் சட்டம், சட்டப்பிரிவு 370 ரத்து மற்றும் சென்ட்ரல் பிஸ்தா, விவசாய சட்டம், உஜ்வாலா, ஜன்தன் மற்றும் ஆயுஷ்மான் பாரத், கர்நாடக தோல்வியை மறைக்க புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவது, புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பதற்கு இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவரைக் கூப்பிட மறுப்பது, பற்றி எரியும் மணிப்புரை பற்றி பிரதமர் பேச மறுப்பது, பத்திரிக்கையாளர்களை சந்திக்க வெறுப்பது, நாடாளுமன்ற விவாதங்களில் கலந்து கொள்ளாமல் வெளிநாட்டு பயணம் செல்வது, தனியார் நிறுவனங்களுக்கு நாட்டை விற்பது, புதிய பொதுத் நிறுவனங்களை உருவாக்க விருப்பம் இல்லாதது, ஏழை எளிய மக்களுக்கு கல்வி மறுப்பது புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து கல்வி இடைநிற்றல் மாணவர்களை அதிகரிக்கச் செய்வது, தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமையை தட்டிப் பறிப்பது, ஆனால் முன்னேறிய சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுப்பது, உயர் கல்விப் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது, எப்பொழுதுமே பாகிஸ்தானை காரணம் காட்டி மத பூசலுக்கு வழி வகுப்பது, ஆனால் சீனா இந்தியாவில் ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்ததை பேச மறுப்பது, எப்பொழுதும் பொருளாதாரத்திற்காக மக்களை கையேந்த வைத்துக் கொண்டிருப்பது, விவசாயிகள் போராட்டம் செய்யும் பொழுது அவர்கள் மீது கார் ஏற்றி கொலை செய்வது, பாலியல் வன்கொடுமை செய்யும் தன் கட்சிக்காரர்களுக்கு துணை நிற்பது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றம் சாட்டிய பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆதரவு காட்டுவது, போராடிய போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் போன்று சித்தரிப்பது, ஒட்டுமொத்த இந்த நாட்டையே இந்து ஹிந்தி பாரதமாக மாற்ற முயற்சி செய்வது இதுதான் சனாதன சக்திகளின் முக்கிய குறிக்கோள். மட்டுமல்ல இது போன்ற செயல்களால் எப்பொழுதும் பரபரப்பாகவே வைத்திருக்க விரும்புவதுதான் சனாதனத்தின் நோக்கம்.

இதையெல்லாம் நன்கு உள்வாங்கப்பட்ட அமைப்புதான் விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் அதன் தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்களும். தன்னுடைய தொண்டர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவிற்கே ஒரு மிகப்பெரிய அரணாக விளங்குபவர் திருமா அவர்கள். அதனால்தான் இந்திய நாட்டிற்கு தீங்கு வரும் பொழுது அல்லது ஆபத்து சூழும் பொழுது முதல் எதிர்ப்புக் குரல் தலைவர் திருமாவிடம் இருந்து வரும். அதன் பிறகு தான் மற்ற அரசியல் கட்சிகள் யோசிக்கவே செய்யும்.

மற்ற அரசியல் கட்சிகள் ஏதோ ஒரு தேவைக்காக சனாதனத்தை விரும்பியும் விரும்பாமலும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை அரசியலில் இருந்தும், மற்ற வழிகளில் இருந்தும் சேர்த்து சொத்துக்களை காப்பாற்றவே நினைக்கின்றனர். அல்லது தாங்கள் சேர்த்த வைத்துள்ள சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள கட்சி நடத்த வேண்டியுள்ளது. ஆனால் எழுச்சித்தமிழர்க்கு அந்த பார்வையும் இல்லை, தேவையும் இல்லை. ஒரு நேர்மையான அரசியல்வாதியாக பற்றற்ற துறவியாக இருந்து கொண்டுள்ளார். உண்மையில் அவர் அரசியலில் இருந்து விலக நினைத்தாலும் அரசியல் அவரை விலக விடாது என்பதுதான் உண்மை. இன்றைக்கும் தமிழ்நாட்டில் அவர் இல்லாமல் அரசியல் கிடையாது. ஒட்டுமொத்த இந்தியாவே அவருடைய வாய்ச் சொல்லுக்கு ஏங்கிக் கிடக்கிறது. அதன் விளைவாகத்தான் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய அரசியல் பயணம். இந்த தென்னிந்திய பயணம் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை நினைவுபடுத்துகிறது.

குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதன் காரணமாக எழுச்சித்தமிழரின் வளர்ச்சியை கண்டு எரிச்சலடைகின்றனர். வன்மம் கக்குகின்றனர். வசைச் சொற்களால் மாரிப் பொழிகின்றனர். டாக்டர் அம்பேத்கர் போராடி பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி சுகபோக வாழ்க்கையை வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட மக்களை வழிநடத்தும் அரசியல்வாதி தங்களை பட்டியலினத்திலிருந்து வெளியேற்ற துடிக்கின்றார். அதற்குப் பின்னால் சனாதன சக்தியும் பிஜேபி அரசும் நரி தந்திரத்தை பயன்படுத்தி உள்ளனர் என்பது குன்றின் மீது இட்ட விளக்காய் எதிரொளிக்கிறது.

காய்ந்த மரமே கல்லடி படும் என்ற முதுமொழி. முதுமொழிக்கிணங்க எழுச்சித் தமிழரை விரும்பாத அவர் மீது வெறுப்பைக் கக்கும் சில சுயநல கயவர்களும், அமைப்புகளும் அவ்வப்போது அவர் பெயரைச் சொல்லி சமூக பதற்றத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர். அதில் ஒன்று இணையதள கருத்தரங்க அமர்வில் மனுதர்மம் கூறிய செய்தியை சொல்லி விளக்கினார். ஆனால் சனாதன சக்திகள் ஒன்றிணைந்து, பெண்களை வேசிகள் என்று திருமாவளவன் கூறிவிட்டார் என்ற பொய் பிரச்சாரத்தை முன்வைத்து எழுச்சித் தமிழரரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முயற்சித்தது. பின்னர் எந்த மனு தர்மத்தில் அந்த வசை சொற்கள் இருக்கிறதோ, அதே மனு தர்மத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை அவருக்கு உண்டு.

மனு ஸ்மிருதியை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் எரித்து தங்கள் எதிர்ப்புணர்வைக் காட்டினர். இது ஒரு பக்கம் இந்திய திருநாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது. தலைவர் திருமா அவர்கள் மனு ஸ்மருதியை புத்தகமாக அச்சடித்து அதை அனைத்து தரப்பு மக்களும் படித்து அதில் இருக்கும் கருத்துக்களை உள்வாங்க வேண்டும். அதன் பிறகு அவர்களே மனுதர்மம் என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்வார்கள் என்ற உயர்ந்த நோக்கத்தில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார். சனாதன சக்திகள் போட்ட கணக்கு வேறு. விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்ட கணக்கு வேறு. இதனால் சனாதன சக்திகளுக்கு ஆட்டம் கண்டது. அவர்களும் வழக்காடு மன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் போன்றவற்றில் நாங்கள் வழக்கு தொடுப்போம் என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிவிட்டு அப்படியே அடங்கிப் போனார்கள். ஆனால் அவர்கள் நீதிமன்றத்தை நாடவில்லை, மக்களிடம் செல்லவில்லை தானாகவே ஒதுங்கிக் கொண்டார்கள். இதுதான் திருமாவின் உத்தி.

இப்படி ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக சனாதனத்தை தோலுரித்துக் காட்டிய பெருமையும், சிறப்பும் எழுச்சித்தமிழர்க்கு உண்டு. இதன் காரணமாகத்தான் முன்னர் கூறியதைப் போன்று புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் போன்றோரின் மொத்த வடிவம் எழுச்சித் தமிழர் தோழர் திருமா.

- பேரா. எ.பாவலன்

Pin It