நான்கே நாட்களில் முள்வேலி முகாம்களிலிருந்து ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வைத்த கலைஞருக்குப் பாராட்டுகள் என்று தமிழ்நாடெங்கும் தி.மு.க. ஒட்டிய சுவரொட்டியைப் பார்த்தீர்களா? உண்மை நிலவரமென்ன?

கடந்த மே மாதம் கலைஞர் சாகும் வரை உண்ணாப் போராட்டம் நடத்தி ஈழத்தில் போர் நிறுத்தம் கொண்டு வந்து ஈழத்தமிழர்களைப் ‘பாதுகாத்தார்’ அல்லவா, அதைப் போன்ற ‘சாதனைதான்’ இதுவும். ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்குத் தான் கொஞ்சம் பேரை மாற்றியுள்ளார், இராசபட்சே. அதைப் படமாக்கி, முகாமிலிருந்தே விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என்று ஒரு மாயையை சிங்கள அரசும் தி.மு.க.வும் செய்கின்றன.

இராசபட்சேயின் அழைப்பின் பேரில் இலங்கை சென்றவர்கள் தான் தி.மு.க. கூட்டணி மக்களவை உறுப்பினர்கள். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களையே அனுமதிக்காத இராசபட்சே தி.மு.க. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து அனுமதித்தார் என்றால், கலைஞர் மீது அவர் வைத்திருக்கும் ‘நம்பிக்கைக்கு’ அளவே இல்லை என்று பொருள்.
 
இராசபட்சேயின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்யாமல் கருணாநிதி நடந்து கொள்கிறார். இலங்கை சென்று திரும்பிய குழுவினர் ஊடகத்துறையினரை சந்தித்து, உளறிவிடக் கூடாது என்பதற்காக, இவரே வரவேற்கப் போவதாகப் பேர் பண்ணிக் கொண்டு சென்னை வானூர்தி நிலையத்திற்குப் போனார். அக்குழுவினர் கொடுத்த அறிக்கையும் கமுக்கமாகக் கலைஞர் கருணாநிதியிடமே இருக்கிறது. இவரே அக்குழுவின் சார்பில் அறிக்கை கொடுத்தார். இதிலிருந்தே, அவர் எதையோ மறைக்கப்பார்க்கிறார் என்பது தெரியவில்லையா?
 
தொல். திருமாவளவன் இலங்கை சென்று திரும்பிய பின், இராசபட்சேயைப் போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியுள்ளாரே?

கீழே விழுந்தேன், ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் தான் அவர் நடத்திய போராட்டம் உள்ளது.

முகாம்களைப் பார்க்கச் சென்ற பத்துபேர் குழு கொழும்பில், பிரியா விடைபெறும் போது, திருமாவைப் பார்த்து இராசபட்சே, “பிரபாகரனுடன் நீங்கள் இருந்திருந்தால் நீங்களும் கொல்லப்பட்டிருப்பீர்கள்” என்று எகத்தாளமாய்ப் பேசிக் குத்திக் காட்டினார். அதற்குத் திருமா மறுமொழி சொல்லவில்லை. அதுபற்றி செய்தியாளர்கள் கேட்ட போது ஆங்கிலத்தில் திருமாவளவன் “அவர் நகைச்சுவையாக அதைச் சொன்னார்; நானும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன்” என்றார். இது தொலைக்காட்சிகளில் அப்படியே வந்தது.

இந்தக் குழுவில் அவர் சென்றதே இன உணர்வாளர்களுக்கு ஏமாற்றமளித்தது. நம் இனத்தை அழித்த இராசபட்சேயிடம் நட்பு பாராட்டுவதும், கைகொடுப்பதும், நகைச்சுவையாகக் கூறினார் என்பதும் நம்பிக்கைத் துரோகம் என்று தமிழ் இன உணர்வாளர்கள் கருதுகின்றனர்.

இதையெல்லாம் அறிந்த பின் திருமா இராசபட்சேயை எதிர்த்து செய்திகள் கொடுத்தும் போராட்டம் நடத்தியும் இழந்த நம்பிக்கையை மீட்க முயல்கிறார்.

இராசபட்சே “நகைச்சுவையாக”, நீங்கள் கொல்லப்பட்டிருப்பீர்கள் என்று கூறிய போது, திருமாவும் நகைச்சுவையாக, “பிரபாகரனுடன் நான் இருந்திருந்தால் நீங்கள் வெற்றி பெற்று இருக்க முடியாது” என்று கூறியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லியிருந்தால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் உயர்ந்த கோபுரமாக அவர் காட்சி தந்திருப்பார்.

மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது, “காங்கிரசுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்குமான கூட்டணி இயற்கையான கூட்டணி; இயற்கை என்பதிலேயே கை இருப்பதை நீங்கள் அறிவீர்கள்” என்று கலைஞர் பாணியில் பேசினார், திருமா. “அண்மையில் இலண்டன் சென்ற போது ‘பிரபாகரன் சொல்லியதால் தான் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தேன்’ என்றார்.

உழைத்துச் சேர்த்த செல்வத்தை சூதாட்டத்தில் இழந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது போராடிச் சேர்த்த புகழை திருமாவளவன் இழப்பது!
 
வன்னி வதை முகாம்களிலிருந்து தமிழர்களை மீட்க என்ன தான் வழி?

உலக நாடுகள் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். தமிழகத் தமிழர்கள் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நடத்தும் தொடர் போராட்டங்கள், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் கொடுக்கும் அழுத்தம் ஆகியவை காரணமாக, உலக நாடுகள் பல, இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றன. வதை முகாம்களைக் கலைத்து அவர்களைத் தங்கள் சொந்த வீடுகளுக்கு அனுப்புமாறு கோருகின்றன. இராசபட்சேயைப் போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கருத்தும் உலக அரங்கில் பரவி வருகிறது.

இப்போரில் குற்றம் புரிந்தவர்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராகத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்கள் போராட்டத்தை இன்னும் முடுக்கி விட வேண்டும்.

அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவுக்குச் சொந்தமா? சீனாவுக்குச் சொந்தமா?

அருணாச்சலப் பிரதேச மக்களுக்குச் சொந்தம். அம்மக்கள் இந்தியாவுடன் இருக்க விரும்புகிறார்களா, சீனாவுடன் சேர விரும்புகிறார்களா, தனிநாடு அமைத்துக் கொள்ள விரும்புகிறார்களா என்பதை அறிந்து அதன்படி முடிவு செய்வதே சரியாக இருக்கும். அதற்கு அம்மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்துவதே சரியான வழி முறை.
 
சீனா, ஜம்மு காசுமீர் மக்களுக்கு, இந்தியாவின் கடவுச்சீட்டில் நுழைவு அனுமதி (விசா) எழுதித் தராமல் தனித்தாளில் எழுதித் தருகிறதாமே?

அதனால் நமக்கென்ன?

வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் மிகையாகக் குவிவதற்குக் காரணம் திவாலாகிப் போன உலகமயம் தான். அதை எதிர்க்காமல் சகோதர இனத்தவர்களை வெளியேறும்படிக் கூறுவது இனவெறி என்கிறார்களே சிலர்?

நம் பகைவர் ஒருவர் நம் ஊருக்கு அருகே உள்ள பெரிய நீர்த் தேக்கத்தை உடைத்து வெள்ளம் ஊரை அழிக்கும்படி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது முதலில் வெள்ளத்தை அடைத்து விட்டு அதன் பிறகு தான் அதை உடைத்தவனைத் தேடுவார்கள் நம் மக்கள். அல்லது வெள்ளத்தை ஒரு பகுதியினர் அடைத்துக் கொண்டிருக்க, வேறு சிலர் உடைத்தவனைத் தேடுவார்கள்.
 
ஆனால், வெள்ளத்தை அடைக்காமல் உடைத்து விட்டவனை மட்டும் தேடிக் கொண்டிருந்தால், வெள்ளம் ஊரை அழித்து விடும்.
 
வெளியாரின் மிகை நுழைவால் மண்ணின் மக்களின் கல்வி, வேலை, தொழில், வணிகம் ஆகிய அனைத்தும் பறிபோகும் போது, அவர்களைத் தடுக்காமலும், வெளியேற்றாமலும் அப்படியே விட்டுவிட்டு உலகமயத்தை மட்டும் எதிர்த்தால் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியுமா? முடியாது.

உலகமயத்தை எதிர்க்க, தடுக்க, தேசங்களின், தேசிய இனங்களின் இறையாண்மையை நிலைநாட்டுவதே முதன்மையான ஆயுதம். அவ்வழியில் தமிழ்த்தேசியம் அதன் இயல்பிலேயே உலகமயத்தை எதிர்க்கும் தன்மை கொண்டது. நாம் உலகமயத்தையும் பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளையையும் எதிர்க்கிறோம்.

வெளியாரை வெளியேற்றும் கோட்பாடு, வெளிநாட்டு முதலாளிகளுக்கும், வெளிமாநில முதலாளிகளுக்கும் பொருந்தும்! அவர்களும் வெளியேற்றப் படுவார்கள். இக்கோட்பாட்டின்படி அவர்களில் சிலரை நம் தேவை கருதி ஒருகட்டுக்குள் - வரம்புக்குள் வைத்திருக்கவும் முடியும்.

நம்மை விமர்சிக்கும் அந்தச் “சிலர்” தமிழ்நாட்டில் வெளியார் சிக்கல் இருக்கிறது என்பதை இப்பொழுதாவது ஏற்றுக் கொண்டுள்ளார்களே. அது நமக்குக் கிடைத்த வெற்றி தான்.

Pin It