இன்று ஊடக செய்தி என்பது சமூகத்தில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக நாம் கருதுகிறோம். ஆனால் அது நடந்ததை நடந்தவாறு சொல்ல வேண்டும், உண்மையை உரக்க சொல்ல வேண்டும். உலகத்தில் எந்த மூலையில் நடந்த நிகழ்வுகளையும் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்த வேண்டும். அதே வேளையில் ஒரு சார்பு நிலையில் நிற்காது நீதிதேவதையின் கையில் இருக்கும் நியாய தராசுபோல் சாயாது நிற்க வேண்டும். யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த துணைநிற்க வேண்டும். அரசாங்கம் மக்களுக்கு நன்மை செய்யும்போது அதைப் பாராட்டி மேலும் நல்ல திட்டங்கள் கொண்டுவர ஊக்கப்படுத்த வேண்டும். இதுவே ஊடக அறம்.
ஆனால் தற்போதுள்ள தினசரி நாளேடுகளில் ஒரு சில செய்தித்தாள்கள் ஒன்றிய அரசின் கைப்பாவையாகவும் ஆரிய பார்ப்பனத் திமிருடன் வலம் வருவதாக இருக்கிறது. அதற்கு சரியான உதாரணம் தமிழ் நாளேடான தினமலர் நாளிதழ் என்று சொல்லலாம்.
31.8.2023 அன்று தினமலர் “மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” – என்று தலைப்பு செய்தி வெளியிட்டிருந்தது. தமிழ்நாட்டின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக தமிழ்நாடு முதல்வர் கொண்டு வந்த ஏழை எளிய மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை பற்றி மிகவும் கேவலமாக எழுதியிருந்தது தினமலர்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி, பொருளாதார நிலை இவைகளை வைத்துதான் கணக்கிட முடியும். இதுதான் அடிப்படையும் கூட. இவற்றில் குழந்தைகளின் உடல்நிலை மற்றும் கல்வி மிகவும் முக்கியமானது. அதை தீர்மானிப்பது அவர்களின் வாழ்க்கைத் தரம். நாட்டை ஆளும் அரசு மக்கள் அனைவரின் வாழ்க்கை தரத்தை சமமாக உயர்த்த வேண்டும். ஏழை – பணக்காரன் என வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான நேர்மையான ஆட்சியையும், கொள்கையும் வகுத்து முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
இதற்காக வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு சிறப்பு சட்டங்களை இயற்றி அவர்களைக் கை கொடுத்து தூக்கி நிறுத்த அரசு முற்படும். அந்த வகையில் தமிழ்நாட்டின் திராவிட வேர்களை அடித்தளமாகக் கொண்டிருப்பது பள்ளிக்கல்வித்துறை. கல்வி கிடைக்கப் பெற்றால் தான் சமூகத்தில் ஏழை மக்களும் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். இதை உணர்ந்து பல ஆண்டுகளாக வறுமையில் உள்ள மக்களுக்கு எப்படியாவது கல்வியை கொடுத்து சமூகத்தில் சமநிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று ஆராய்ந்து அதைக் கண்டறிந்து செயல்பட்டது நீதிக்கட்சி.
எளிய மக்களின் இல்லாமையும், இயலாமையுமே அவர்களது கல்வியைத் தடுக்கிறது. எனவே இவற்றை நீக்க சரியான வழிமுறையைத் தேர்ந்தெடுத்தது நீதிக்கட்சி. நீதிக்கட்சியை சேர்ந்தவரும், சென்னை மாநகராட்சியின் தலைவருமான சர் பிட்டி தியாகராயர் 16-09-1920 அன்று மதிய உணவுத் திட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.
அதற்கு பிறகே தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஏழை எளிய மக்கள் கல்வி கற்போர் சதவீதம் அதிகமாக உயர ஆரம்பித்தது. தமிழ்நாட்டில் 1922-23-ம் ஆண்டில் 811 ஆக இருந்த மாணவர் சேர்க்கை இத்திட்டத்தின் மூலமாக 1924-25-ம் ஆண்டில் 1,671 ஆக உயர்ந்தது. (அதற்கு பிறகு 1957ல் குலக்கல்வி திட்டத்தை வலியுறுத்திய ராஜாஜியை பின்னடைய செய்தவர் தந்தை பெரியார்) மேலும் பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றதும் இத்திட்டத்தின் விரிவாக்கத்திற்கு பெரும்பங்காற்றினார். பெருந்தலைவர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்தார். அவருக்குப்பின் தமிழ்நாட்டை ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளின் முதல்வர்கள் — அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இவர்கள் அனைவரும் மத்திய உணவுத் திட்டத்தை அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு சென்றனர். இவ்வாறு ஏழை எளிய குழந்தைகளுக்கும் சத்தான உணவு கிடைக்கவும் இதன்மூலம் அவர்கள் உடல்நலனும் கல்வியும் மேம்படவும் சத்துணவு திட்டம் பயன்பட்டது.
முதலில் கிராமப்புறங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் 1982 செப்டம்பரில் நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் 10-லிருந்து 15 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் இந்தத் திட்டத்தின் மூலம் சத்தான மதிய உணவைப் பெற்றனர். அதற்குப் பிறகு தமிழக முதல்வரான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், 1989-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை அவித்த முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 2007-ஆம் ஆண்டிலிருந்து வேகவைத்த முட்டை வாரத்திற்கு மூன்று நாட்கள் வழங்கப்பட்டது. பிறகு 2010-ல், வாரத்தில் ஐந்து நாட்கள் அவித்த முட்டையும், முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழமும் வழங்கப்பட்டது. 2013-இல் அன்றைய தமிழக முதல்வரான செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள், குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப மசாலா முட்டைகளுடன் பலவகையான உணவுகளை இத்திட்டத்தில் சேர்த்தார்.சத்துணவுத் திட்டம் தற்போது 43,243 மதிய உணவு மையங்களில் செயல்படுத்தப்பட்டு, தினமும் 48.57 லட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5-லிருந்து 9 வயதுக்குட்பட்ட ஆரம்பப்பள்ளி குழந்தைகளுக்கும், 10-லிருந்து 15 வயதுக்குட்பட்ட உயர் தொடக்கக்கல்வி குழந்தைகளுக்கும் வாரத்தில் 5 நாட்கள் என மொத்தத்தில் ஒரு வருடத்தில் 210 நாட்களுக்கு, சூடான சத்தான உணவு வழங்கப்படுகிறது.
இப்படி திராவிட இயக்கங்கள் கொண்டு வந்த திட்டங்களில் சிறப்பான ஏழை எளியவர்களுக்கான மதிய உணவு திட்டத்தின் அடுத்த கட்டமாக, தமிழ்நாடு அரசு மதிய உணவு திட்டத்துடன் காலை உணவும் வழங்கவேண்டும் என ஆணை பிறப்பித்து நடைமுறை படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அண்மையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பயன்பெறும் வகையில், மொத்தம் ரூ.33.56 கோடி செலவில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சத்துணவு திட்டத்தின் மூலமே தமிழ்நாட்டின் சமூகநீதிக் கொள்கை தழைத்தோங்கியது என்பது வரலாறு. இதன் மூலமே ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட குழந்தைகள் என அனைவரும் ஆர்வத்துடன் கல்வி கற்க முன்வந்தனர். தமிழ்நாடு கல்வி கற்போர் எண்ணிக்கையில் சிறந்த மாநிலமாக திகழ்ந்தது. இதனையடுத்து அண்டை மாநிலத்தவரும் கல்வி கற்கவும், மேம்பட்ட வாழ்க்கைக்காகவும், மருத்துவத்திற்காகவும் அமைதியாக வாழவும் தமிழ்நாட்டிற்கு வந்து இன்றும் நல்ல முறையில் இங்கே வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும் ஏழை எளிய குடும்பத்தில் உள்ள மாணவர்கள் குடும்ப நிதிநிலை காரணமாக தங்கள் குடும்பங்களில் சத்தான உணவைப் பெற முடிவதில்லை. பெற்றோர்கள் வியாபாரம் மற்றும் தொழில் காரணமாக அதிகாலையிலேயே வேலைக்குச் செல்வதால் பெரும்பான்மை குழந்தைகள் காலை உணவைச் சாப்பிடாமலே பள்ளிக்கு வந்து விடுகின்றனர். இதனால் காலை assembly / prayer நேரத்தில் பல குழந்தைகள் தலைசுற்றல் வந்து கீழே விழுந்த நிகழ்வுகளை நாம் நிறைய கேட்டிருக்கிறோம். இதற்குக் காரணம் பசி. ஆனால் சிறு குழந்தைகளுக்கு ‘பசிதான்’ காரணம் என சொல்லத் தெரியாது. முகம் வாடி துவண்டு விடுவார்கள், இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. இத்தகைய பசித்துயர் போக்க வந்த சிறப்பான திட்டம்தான் சத்துணவுத் திட்டம்.
இது ஒருபுறமிருக்க பெற்றோர் இல்லாது உறவினர்கள் உதவியுடன் வாழும் குழந்தைகளுக்கு மிக மிக அவசியமான திட்டம் சத்துணவுத் திட்டம் எனலாம். தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் மூலம் இனி பள்ளிக்கு நேரம் தவறாமல் முன்கூட்டியே குழந்தைகள் வருவார்கள். கல்வியில் கவனம் செலுத்துவது கூடும். அவர்களை உடலாலும் கல்வியாலும் வலிமை பெற்றவர்களாக மாற்றுவதே இத்திட்டத்தின் மகத்தான நோக்கம்.
31/8/23 அன்று தினமலர் சென்னை அலுவலகத்தை முற்றுகையிட்ட மே17 இயக்கத்தினர்
இத்திட்டத்தை செயல்படுத்துவது என்பது மிகவும் சவாலான ஒன்று. அதை நடத்திக் காட்டிய திராவிட திமுக கட்சிக்குப் பாராட்டுக்கள். இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மாணவர்கள் குதூகலத்துடன் வருகை அதிகரித்திருப்பதாக அரசு பள்ளி அட்டவணை சொல்கிறது. இவ்வாறு எதிர்கால சந்ததியினரை கல்வியுடன் உடல்நலத்திலும் வலிமையாக மாற்றுவதே திராவிட சிந்தனை.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த திட்டத்தைப் பற்றித்தான் தினமலர் எனும் பார்ப்பன ஊடகம் தனது கொச்சையான வன்மத்தைக் கக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழர்கள் ஆதரவின் பேரில் செய்தித்தாள் (பிழைப்பு) நடத்தி கொண்டு தமிழ்நாட்டு அரசின் திட்டத்தையும், மாணவர்களையும் கொச்சையாகப் பேசுவதற்கு அவர்களின் ஆதிக்க வெறியும் ஆரிய பார்ப்பனத் திமிரும் காரணிகளாகத் தெரிகின்றன. ஒன்றிய அரசின் மனதைக் குளிர்விக்க அவர்களுக்கு சாமரம் வீசுவதற்காக பார்ப்பன விசத்தை கக்குகிறது தினமலர் செய்தித்தாள். சூத்திரன் கல்வி கற்க கூடாது, மீறி கற்றால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற ஆரிய சனாதன மனநிலையோடு இயங்கும் இவர்களுக்கு இத்திட்டம் பலத்த இடியாய் இறங்கி இருக்கிருக்கிறது. அதனால்தான் குழந்தைகள் சாப்பிடும் உணவை பற்றி பேசாது மலத்தை பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி எழுதியிருக்கின்றனர்.
இந்த ஆரிய பாசிச பார்ப்பன செய்தித்தாளின் கேடுகெட்ட விஷம புத்தி வெளிப்படுவது இது முதல்முறை அல்ல. ஒன்றரை லட்சம் தமிழர்களை ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்த இலங்கை சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு ஆதரவாக செய்தி வெளிட்ட கொடூரமான செய்திதாள்கள் ‘தி இந்து’ மற்றும் ‘தினமலர்’. எனவே தமிழர்களின் வலிகளையும் அவர்களின் உணர்வுகளையும் பற்றி மிக மோசமாகவும், சர்வசாதாரணமாகவும் வேறு கோணத்தில் மடைமாற்றிய அயோக்கியத்தனமான பார்ப்பன தினமலரை புறக்கணிப்போம். தமிழரை அவமதிக்கும் இது போன்ற செய்தித்தாள்களை தமிழ்நாட்டை விட்டு விரட்டியடிப்போம்.
- மே பதினேழு இயக்கம்