தமிழ்நாட்டில் தீவிரமான குடி கலாச்சாரத்தை அரசே திட்டமிட்டு உருவாக்கி இருக்கின்றது. ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட மது அருந்தும் நிலை எந்தவித குற்ற உணர்வுக்கும் ஆட்படாமல் ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை புனித பிம்பங்களின் பின்னால் அருவருக்கத்தக்க சாராய வியாபாரிகளும், சமூக விரோதிகளும் ஒளிந்து கொண்டு இருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டில் 234 தொகுதியிலும் 24X7 சாராய விற்பனை சக்கை போடு போடுகின்றது. கடைகளில் குவாட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையிலும், பீர் பாட்டிலுக்கு 10 முதல் 20 ரூபாய் வரையிலும் அதிகமாக விலை வைத்து விற்கப்படுகின்றது. இது போக பார்களில் 24 மணி நேரமும் எவ்விதத் தடையும் இன்றி சாராய விற்பனை உள்ளூர் காவல்துறை, எம்எல்ஏ, மதுவிலக்கு ஆயத்துறை துணையோடு சீறும் சிறப்புமாக நடந்து கொண்டு இருக்கின்றது.
இதிலே திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், பிஜேபி என்ற எந்த எம்எல்ஏ தொகுதியும் விதிவிலக்கில்லை என்பதுதான் இவர்களின் சமூக அக்கறையை படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளது.
இப்படி கள்ளத்தனமாக சம்பாதிக்கும் பாவப் பணம் முழுவதையும் பங்கு பிரித்துக் கொள்ளும் அயோக்கியர்கள் யார் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
கடந்த ஆட்சியில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என காலில் சலங்கை கட்டி ஆடிய புரட்சிகர ஆட்டக்காரர்கள் எல்லாம் திமுகவை ஆட்சியில் அமர வைத்த கையோடு அறிவாலயத்தில் அண்டர்வேயர் துவைக்கும் புனிதப் பணியை ஏற்றுக் கொண்டு புரட்சிகர கடமையை ஆற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.
கலைஞர் திமுக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என அறிவித்தார். அன்று ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையைப் படித்தாலே இதை நாம் தெளிவாக புரிந்துகொள்ளலாம்.
"தி.மு.க. ஆட்சிக்கு மீண்டும் வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தலைவர் கலைஞர் அறிவித்துள்ளார். அரசே டாஸ்மாக் கடைகளை திறந்து விற்பனை செய்யும் கொள்கையை அ.தி.மு.க. அரசு தான் 2003-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. அந்த வகையில் எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள் என்ற நிலை உருவாகி விட்டது. அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை விட 'டாஸ்மாக் கடைகள்' எண்ணிக்கை அதிகமாகி விட்டது.
இன்றைய தினம் கேரள மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு மதுக்கடை இருக்கிறது என்றால் தமிழகத்தில் 10,000 பேருக்கு ஒரு டாஸ்மாக் கடை என்ற அவல நிலை அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் ஏற்பட்டு விட்டது.
மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பது ஏதோ தி.மு.க.விற்கு திடீரென்று ஏற்பட்ட எண்ணம் அல்ல. கடந்த முறை ஆட்சியிலிருந்த போதே 'இனிமேல் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம்' என்று தலைவர் கலைஞர் அறிவித்தார்.
பிறகு பொதுமக்கள் நடமாடும் இடங்களான பள்ளிக்கூடங்கள், கோயில்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பகுதிகளில் இருந்த 1300 பார்களையும், 132 டாஸ்மாக் கடைகளையும் மூடினார். எல்லாவற்றிற்கும் மேலாக 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 'இனிமேல் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்கு மேல் திறந்து இருக்காது' என்று ஒரு மணி நேரம் டாஸ்மாக் கடையின் விற்பனையை மூடச் சொல்லி உத்தரவிட்டவர் தலைவர் கலைஞர் தான். 2011ல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்திருந்தால் நிச்சயம் மதுவிலக்கை தலைவர் கலைஞர் அமல்படுத்தியிருப்பார்.
ஆகவே மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று இப்போது தி.மு.க. வெளியிட்டுள்ள அறிவிப்பு 2016ல் நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும். தாய்மார்களின் கண்ணீர் துடைக்கப்படும். குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என்ற இளைய சமுதாயத்தினருக்கு வளமிக்க எதிர்காலம் உருவாக, மதுப்பழக்கத்தை அறவே ஒழிக்க அடுத்து அமையப் போகும் கழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
மதுவின் மூலம் வரும் வருவாய் மட்டுமே முக்கியமல்ல. மக்களின் நலன், சமூக மாற்றம், மாணவர்கள், தாய்மார்களின் நலன் போன்றவை அதைவிட முக்கியம். குறிப்பாக தாய்மார்களின் வேதனையைப் போக்குவது திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்து வைக்கும் 'மதுவிலக்கு அமல்படுத்துவோம்' என்ற புதிய அத்தியாயத்தின் உன்னத நோக்கம். அந்த நோக்கம் சீரிய முறையில் செயல்பட, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதுமே 'சொன்னதைச் செய்த' கழகம். அந்த வகையில் மதுவிலக்கை அமல்படுத்தி, 2016-ல் செயல்வடிவம் கொடுப்போம்” என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
உண்மையில் அரசியல்வாதிகளின் அறிக்கைகள் எப்படி காலத்திற்கு ஏற்றார்போல கபடமாக இருக்கின்றது என்பதற்கு பதவியில் இல்லாதபோது ஸ்டாலின் அவர்கள் கொடுத்த அறிக்கைக்கும் தற்போது முதல்வராக அவர் இருக்கும் போது அவரின் செயல்பாட்டுக்கும் உள்ள வேறுபாடுதான் சாட்சி.
ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு (21/07/2015 இந்த அறிக்கையை வெளியிட்ட நாள்) அவர் குறிப்பிட்டு இருக்கும் மதுவால் ஏற்பட்டுள்ள சமூக சீர்கேடுகள் எல்லாம் தற்போது தமிழகத்தில் இல்லாமல் போய்விட்டதா என்பதையும், இனிமேல் மதுவிலக்கு கொண்டு வர வேண்டிய அவசியமற்ற நிலைக்கு தமிழகம் வளர்ந்திருக்கின்றதா என்பதையும் நேர்மையும் உண்மையும் உள்ள ஸ்டாலின் அவர்கள்தான் சொல்ல வேண்டும்.
ஆனால் பிரச்சினையின் உண்மையான காரணம் மக்கள் அழிகின்றார்கள் என்பதல்ல. மதுக்கடைகளும், மதுக்கூடங்களும் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பொன்முட்டையிடும் வாத்தாக உள்ளது. அதை ஒரே நாளில் அறுப்பதற்கு அவர்கள் ஒருநாளும் முன்வர மாட்டார்கள்.
ஒரு பக்கம் மதுக்கடைகளும், மதுக்கூடங்களும் பணம் கொழிக்கும் சொர்க்கங்களாக இருக்க, மற்றொரு பக்கம் அரசியல்வாதிகளே சொந்தமாக சாராய ஆலைகளை நடத்தி தமிழ்ச் சமூகத்தின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் அட்டைகளாக இருக்கின்றார்கள்.
தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுவில் 50% கணக்கில் வராமல் உள்ளதாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மார்ச் மாதம் கூறினார்.
தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுவில் பாதிக்கு பாதி வரி செலுத்தப்படாமல் விற்கப்படுகின்றன என்றால், அந்தக் குற்றத்தை செய்வது தனியார் அல்ல என்பதையும், அரசு நிறுவனமான டாஸ்மாக் தான் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் இதுபோன்ற கள்ளத்தனமாக சரக்குகள் விற்பதற்கு பார்களும், சந்துக்கடைகளும் பயன்படுகின்றன. இதை நடத்துவது யார் என்றால், கடந்த ஆட்சியில் அதிமுக குண்டர்களும், இந்த ஆட்சியில் திமுக குண்டர்களும்தான்.
தமிழகத்தில் 11 மது ஆலைகள், 7 பீர் ஆலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மது மற்றும் பீர் வகைகள் முழுவதும் டாஸ்மாக் நிறுவனத்தால் தான் கொள்முதல் செய்யப்படுகின்றன.
பெரும்பாலான சாராய ஆலைகள் அரசியல்வாதிகளாலும் அவர்களின் பினாமிகளாலும் தான் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் மெக்டவல், மோகன் ப்ரூவரீஸ், ப்ரூடன்ட் டிஸ்டில்லரீஸ், எலைட் டிஸ்டில்லரீஸ், ஏ.எம்.புருவரீஸ், கால்ஸ் டிஸ்டில்லரீஸ், கிங் டிஸ்டில்லரீஸ், இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் அன்ட் ஒயின் பிரைவேட் லிமிடெட் ,சிவா டிஸ்டில்லரிஸ் போன்ற சாராய ஆலைகள் செயல்படுகின்றன. மொத்தமுள்ள 11 சாராய ஆலைகளில் 7 ஆலைகள் திமுகவினர் தொடர்புடையதாக சொல்லப்படுகின்றது.
குறிப்பாக டாஸ்மாக் மூலம் திமுக ஆட்சிக் காலத்தில் அக்கட்சியின் எம்.பியாக இருந்த எஸ். ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான எலைட் டிஸ்டல்லரீஸ் நிறுவனமே ஆதாயமடைந்தது. அதே போல எஸ்.என்.ஜே. டிஸ்டல்லரீஸ் நிறுவனமானது எஸ்.என். ஜெயமுருகன் என்பவருக்கு சொந்தமானதாகும். இந்த ஜெயமுருகன் தான் கருணாநிதியின் 'உளியின் ஓசை' மற்றும் 'பெண் சிங்கம்' திரைப்படங்களைத் தயாரித்தவர் ஆவார். இந்த நிறுவனத்துக்கு 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில்தான் உரிமம் வழங்கப்பட்டது.
அதே போல ஆட்சி மாறினாலும் சசிகலா, இளவரசி ஆகியோரை உரிமையாளர்களாகக் கொண்ட மிடாஸ் நிறுவனத்தில் இருந்து சாராயங்களை திமுக அரசு கொள்முதல் செய்தே வருகின்றது.
அரசியலில் பங்காளிகள் போல நடந்தாலும் சாராய விற்பனை மூலம் வரும் பணத்தை பங்கு போட்டுக் கொள்வதில் அதிமுக, திமுக இரண்டுக்குமே ஒரு சகோதர உறவு உள்ளது.
2003 - 2004 காலகட்டத்தில் ரூ.3 ஆயிரத்து 639 கோடியாக இருந்த டாஸ்மாக் மதுபான விற்பனை, கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் 36,752 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. அரசுக்கு இவ்வளவு லாபம் என்றால், மதுபான ஆலைகளின் முதலாளிகள் எவ்வளவு கோடிகளைக் குவித்திருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சாராய விற்பனை மூலம் கடந்த ஆண்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.36,752 கோடியில் கொள்முதல் செலவு ரூ.19,294.07 கோடி என்றும் பணியாளர்கள் ஊதியம் ரூ.420.70 கோடி என்றும் ரூ.17,037.62 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு வாணிபக் கழகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது. இதனால், சாராய ஆலைகளே அதிகம் லாபமடைவது அம்பலமாகி உள்ளது.
தமிழ்நாடு மொத்த வருவாயில் 69% தமிழகத்தின் சொந்த வரி வருவாயிலிருந்தே பெறுகிறது. இதில் மதுவிலிருந்து கிடைக்கும் வரி வருவாய், மாநிலத்தின் சொந்த வருவாயில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும்.
தமிழகத்தில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் 5,300-க்கும் அதிகமான டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்திய முழுவதும் சேர்த்தே மொத்தம் 18 லட்சம் பேர் என்பதைப் பார்க்கும் போது தமிழகத்தை ஆண்ட, ஆளும் ஆட்சியாளர்கள் எவ்வளவு பெரிய கொலைகாரர்கள் என்பதையும், ஹிட்லரைவிட, முசோலினியைவிட மோசமான மனிதகுல விரோதிகள் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விழாக் காலங்களில் டார்கெட் வைத்து தாலி அறுக்கின்றார்கள். தமிழகத்தின் வார நாள்களில் மட்டும் 65-70 கோடி ரூபாய் மதிப்புக்கு மது விற்பனை நடைபெறுகிறது. இதுவே வார இறுதி நாள்களில் 90-100 கோடி அளவுக்கு மது விற்பனை அதிகரிக்கிறது. மேலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாள்களில் மட்டும் மது விற்பனை 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கின்றது.
ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் மதுவால் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. மதுவிற்பனையைத் தடுக்க முடியாது, அதை முறைப்படுத்த வேண்டும் எனச் சொன்ன அயோக்கிய பயல்கள் கூட ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் மது அருந்துவதைப் பற்றியோ, எந்த வரைமுறைகளும் இல்லாமல் 24 மணி நேரமும் சாராயம் விற்கப்படுவது பற்றியோ வாயே திறக்காமல் ஒரு விபச்சாரத் தரகனுக்கே உரிய கள்ளத்தனத்தோடு பிரச்சினையைக் கடந்து போகின்றார்கள்.
மதுவால் லட்சக்கணக்கான இளைஞர்கள் இறப்பது பற்றியோ, சமூகம் பண்பாட்டு ரீதியாக சீரழிவதைப் பற்றியோ, பெண்களுக்கு எதிரான குற்றங்களும், சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்திருப்பதைப் பற்றியோ கவலைப்படாத ஒருவன் தன்னை சமூக செயல்பாட்டாளன் என்றோ, எழுத்தாளன் என்றோ, கவிஞன் என்றோ, முற்போக்குவாதி என்றோ, பத்திரிகையாளன் என்றோ அழைத்துக் கொண்டால் அவனைவிட ஒரு கேடுகெட்ட மனிதன் வேறு யாராக இருக்க முடியும்?
- செ.கார்கி