சில தினங்களுக்கு முன்னால் மதுரை கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது மாநில மாநாடு நடைபெற்றது. அதையொட்டி பேட்டியளித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்,

CPM K Balakrishnan"கருத்தியல் ரீதியாக போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதைப் போன்று கோவில் விழாக்களில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்பதுடன் முன்நின்று நடத்த முயற்சி செய்வோம். கோவில் விழாக்களில் ஆர்.எஸ்.எஸ். கொடிகளை நட்டு மத உணர்வைத் தூண்டி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மதச் சார்பற்ற முறையில் அனைத்து மதத்தினரும் கோவில், தர்கா, தேவாலயங்களுக்குச் சென்று வழிபடுகின்றனர். அவர்களைப் பாதுகாப்பதும் நம் கடமை. எனவே மார்ச்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி இனி கோவில் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும்" என அறிவித்தார்.

இது முற்போக்குவாதிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் இந்திய சமூகத்தில் கோயில் என்பது எப்போதும் பார்ப்பனிய ஆதிக்கத்துடன் தொடர்புடையதாகவே இருந்து வந்திருக்கின்றது.

அப்படி இருக்கும் போது கோயில் திருவிழாக்களில் பங்கேற்பது என்பது பார்ப்பனியத்துடன் நேரடியாக மோதுவதாகும். இது ஏதோ கோயில் விழா சம்மந்தப்பட்ட ஒன்றல்ல. அந்தந்த ஊர்களில் கோயில் திருவிழாக்களில் ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்க சாதிகள் தொடர்பானது.

அப்படி என்றால் சிபிஎம் பார்ப்பனக் கோயில்களிலும் நாட்டார் தெய்வக் கோயில்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து சமர் புரியப் போகின்றதா என ஆவலோடு எதிர்ப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

ஏற்கெனவே சுயசாதியில் நாள், நட்சத்திரம் எல்லாம் பார்த்து திருமணம் செய்து கொள்ளும் சனாதனிகளின் கூடாரமாக இருக்கும் சிபிஎம் அப்படியான ஆபத்தான முடிவை ஒரு நாளும் எடுக்காது. இவர்களின் நோக்கம் காவிக்கு பதில் சிவப்புக் கொடியை ஏற்றுவதைத் தவிர வேறு ஒன்றும் அல்ல என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இதன் மூலம் அவர்களின் ஓட்டு வங்கியை வேண்டுமானால் கொஞ்சம் உயர்த்திக் கொள்ளலாம் ஆனால் எந்தவித சமூக மாற்றமும் நிச்சயம் ஏற்படப் போவதில்லை.

கேட்டால் கோயில் திருவிழாவில் பங்கெடுக்கக் கூடாது என மார்க்ஸ் சொல்லவில்லை, எங்கெல்ஸ், லெனின் சொல்லவில்லை என சப்பைக் கட்டு கட்டுகின்றார்கள்.

ஆனால் உண்மை என்ன?

மார்க்ஸ் தனது டாக்டர் பட்ட ஆய்வுக்காக எடுத்துக் கொண்டதே டெமாக்ரிடஸ், எபிகூரஸ் எனும் கிரேக்க நாத்திகர்களைப் பற்றித்தான். ஹெகலின் தர்க்கவியலை ஏற்றவர் மதம் பற்றிய அவரின் கருத்துமுதல்வாதத்தை முற்றாக நிராகரித்தார்.

எங்கெல்ஸ் 1886ல் எழுதியது "லுத்விக் பாயர்பாக்கும் சாஸ்திரிய ஜெர்மானிய தத்துவத்தின் முடிவும்" என்பது. "கடவுள் உலகைப் படைத்தாரா அல்லது உலகமானது நித்தியமாக உள்ளதா? இந்த கேள்விக்கு தத்துவஞானிகள் கொடுத்த பதில் அவர்களை இருபெரும் முகாம்களாகப் பிரித்தது" என்று அதில் குறிப்பிட்டார். அதில் தங்கள் இருவரையும் நாத்திக முகாமில் இருத்தினார்.

1845ல் தான் எழுதிய புகழ் பெற்ற 'பாயர்பாக் சூத்திரங்க'ளில் மார்க்ஸ் கூறுகின்றார்: "புனிதக் குடும்பத்தின் ரகசியம் பூலோகக் குடும்பத்தில் உள்ளது". அதாவது பிதா - குமாரன் - பரிசுத்த ஆவி எனும் கிறிஸ்தவத்தின் புனிதக் குடும்பம் எனப்பட்டதும், அதன் அதிகாரக் கட்டமைப்பும், வழிபாட்டு முறைமைகளும் அன்றைய ஐரோப்பிய சமூக கட்டமைப்பை பிரதிபலிப்பதாக இருந்தது. அதனால்தான் அது எடுபட்டது என்றார்.

"…பழைய மதங்களின் வீழ்ச்சி பழைய ராஜ்யங்களின் வீழ்ச்சியைக் கொண்டு வரவில்லை; மாறாக, பழைய ராஜ்யங்களின் வீழ்ச்சிதான் பழைய மதங்களின் வீழ்ச்சியையும் கொண்டுவந்தது…"(மதமும் அரசும் பற்றிய விமர்சனம்).

இதன் பொருள் சமூக மாற்றமே மதத்தை வீழ்த்தும். மதத்தின் அழிவு ஒரு போதும் சமூக மாற்றத்தைக் கொண்டு வராது என்பதுதான். மேலும் மார்க்சின் புகழ்பெற்ற

"மதத்தின் துயரம் என்பது அதே சமயத்தில் உண்மையான துயரத்தின் வெளியீடாகவும், உண்மையான துயரத்துக்கெதிரான ஆட்சேபணையாகவும் இருக்கின்றது. மதம் என்பது எப்படி உணர்ச்சியற்ற நிலைமையின் உணர்ச்சியாக இருக்கிறதோ, அதே போன்று இதயமற்ற உலகத்தின் இதயமாகவும், ஒடுக்கப்பட்ட ஜீவனின் பெருமூச்சாகவும் இருக்கின்றது. அது மக்களுக்கு வாய்த்த அபினி" என்ற வரிகள் மூலம் அவர் சொல்ல வந்தது,

"மக்களின் யதார்த்தமான ஆனந்தத்துக்காக, மக்களின் மாயையான ஆனந்தமாகவுள்ள மதத்தை ஒழித்தாக வேண்டியிருக்கின்றது. அதன் நிலையைப் பற்றிய மாயைகளை விட்டொழிக்க வேண்டும் என்ற கோரிக்கை, மாயைகளுக்குத் தேவைப்படும் ஒரு நிலையையே விட்டொழிக்க வேண்டும் என்ற கோரிக்கைதான். எனவே மதத்தின் விமர்சனம் என்பது அதன் கருவிலேயே துயரப் படுகுழியைப் பற்றிய அதன் ஒளிப்பிரபையாகவுள்ள மதத்தைப் பற்றிய விமர்சனம்தான்".

"… இறந்த பின்னும் வாழ்வதென்பது கிரேக்கர்களால் ஒரு கெடு வாய்ப்பு என்றே கருதப்பட்டது. பின்னர் வந்த கிறிஸ்தவம் பிரதிபலனையும் தண்டனையையும் தீவிரமாக விண்ணுலுகத்துக்குக் கொண்டு சென்றது. சொர்க்கத்தையும் , நரகத்தையும் சிருஷ்டித்தது; பாடுபடுபவர்கள், சுமை சுமப்பவர்கள் ஆகியோயோரை இந்தத் துன்பப் படுகுழியிலிருந்து சாஸ்வதமான சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லக்கூடிய விமோசன மார்க்கம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உண்மையில் விண்ணுலகத்தில் ஒரு தக்க பரிசு கிடைக்கும் என்ற எதிர்கால நம்பிக்கையின் மூலமே அடக்கப்பட்ட வெகுஜனங்களுக்கு உற்சாக மூட்டி உத்வேகம் கொள்ளச் செய்யும் ஒரு புதிய முழுமையான மதத்தின் அடிப்படையான ஒழுக்கக் கொள்கைகளின் மூலமே ஸ்டோயிக் பிலோனின் உலகத் துறவும் துறவிகளும் தம்மை உயர்த்திக் கொள்ள முடியும்..." என்பதைத்தான் (கிறிஸ்தவம் பற்றிய எங்கெல்சின் ஆய்வுக் கட்டுரைகள்).

"… மதத்தின் விமர்சனம் என்பது மனிதனின் மாயையைக் குலைத்து, அவனைச் சிந்திக்கவும், செயல்படவும் அவனது யதார்த்த தத்துவத்தை அவனே உருவாக்கவும் , மாயை குலைந்து மனிதனாகி அவன் பகுத்தறிவுக்கு மீண்டுவந்து, தன்னைத்தானே அவன் சுற்றி வரவும், அதன்மூலம் அவனது உண்மையான சூரியனைச் சுற்றி வரவும் செய்கின்றது. மனிதன் தன்னைத் தானே சுற்றி வராதவரையிலும், மனிதனைச் சுற்றிவரும் மாயைச் சூரியன்தான் மதம் என்பது." (ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனம்)

ஆம், அதுதான் உண்மை. கடவுளின் ரகசியம் என்பது சமூக கட்டமைப்பில் உள்ளது. சமூக கட்டமைப்பு மாறும் போது மதங்களும் கூட மாறுகின்றன. சமூக கட்டமைப்பை மாற்றாமல் நம்மால் ஒரு போதும் மதங்களின் செல்வாக்கை மாற்ற முடியாது.

மார்க்ஸ் எங்கெல்ஸ் மட்டுமல்ல லெனினும் அதையேதான் தனது மதம் பற்றிய பல்வேறு கட்டுரைகளில் சொல்கின்றார்.

"சோஷலிசப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சியைப் பொறுத்தமட்டில், மதம் தனிநபரது சொந்த விவகாரமல்ல. நமது கட்சி தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காகப் போராடும் வர்க்க உணர்வு கொண்ட, முன்னேறிய வீரர்களை ஒருசேர இணைக்கும் கழகமாகும். இப்படிப்பட்ட ஒரு கழகம் மத நம்பிக்கைகளின் வடிவிலாகிய வர்க்க உணர்வின்மை, அறியாமை அல்லது மூடத்தனம் குறித்துப் பாராமுகமாய் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது".

மதத்தின் தீமைகளையும் அது எப்படி முதலாளித்துவ வர்க்கத்துக்கு சேவை செய்கின்றது என்பதையும் அம்பலப்படுத்துவது ஒரு கம்யூனிஸ்ட்டின் அடிப்படையான கடமையாகும். அதைச் செய்யாமல் மாரியம்மன் கோயிலில் கூழ் ஊத்தப் போகின்றேன் என்பது கம்யூனிஸ்களுக்கு அழகல்ல என்று லெனின் சொல்ல வருகின்றார். மேலும்

"மதம் மக்களுக்கு அபினியைப் போன்றது. மதம் ஒரு வகையான ஆன்மீக பெரும் போதை கொண்டது. அதில் மூலதனத்தின் அடிமைகள் மூழ்கி அவர்களுடைய மனித உருவத்தையும், மனிதப் பிறப்புக்குகந்த முறையிலான வாழ்க்கை நடத்துவதற்கான உணர்வையும் கோரிக்கைகளையும் மழுங்கடித்து மூழ்கடித்து வருகிறார்கள்." என்கின்றார். இதன் மூலம் மதம் பற்றிய மார்க்சின் கருத்தையே லெனினும் பிரதிபலிக்கின்றார்.

"மதத்தை எதிர்த்தல் என்பது சூக்குமமான - சித்தாந்த போதனை என்ற அளவில் நின்றுவிடக் கூடாது, அத்தகைய போதனையாக அதைச் சுருக்கி விடவும் கூடாது. மதத்தின் சமூக வேர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வர்க்க இயக்கத்தின் ஸ்தூலமான நடைமுறையோடு இப்போராட்டம் இணைக்கப்பட வேண்டும்" என்கின்றார்.

இதன் மூலம் ஆயுத பூசை கொண்டாடுவது, பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை கொடுப்பது போன்றவை கம்யூனிஸ்ட்களின் வேலை அல்ல என்றும் அவர்களுக்கு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் ஒரே கடவுள் எப்படி இருக்கின்றார் என்று சொல்வதன் மூலமும் வர்க்கப் போராட்டத்திற்கு அணி திரட்டுவதன் மூலமும் அவர்களை ஒரே வர்க்கமாக ஒன்றாக்க வேண்டும் என்கின்றார்.

மேலும் ஆத்திகர்களை கட்சியில் சேர்ப்பது பற்றிய பிரச்சினையைப் பேச வந்த லெனின்

"ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில், ஒரு குறிப்பிட்ட தொழிற்கூடத்தில் உள்ள பாட்டாளிகள் இரண்டு பிரிவாகக் கீழ்க்கண்டவாறு பிரிந்து நிற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பிரிவு முன்னேற்றமான, நல்ல வர்க்க உணர்வு பெற்றுள்ள சமூக ஜனநாயகாவாதிகள், அவர்கள் நாத்திகர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

மற்றொரு பகுதி பின் தங்கிய தொழிலாளர்கள், கடவுள் நம்பிக்கை உடையவர்கள், மாதா கோவிலுக்குச் செல்பவர்கள் அல்லது ஸ்தல மதகுருவின் நேரடியான ஆதிக்கத்தின் கீழ் கூட அவர் ஒரு கிறிஸ்தவத் தொழிலாளர்களின் சங்கத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம். இந்த ஸ்தலத்தின் பொருளாதாரப் போராட்டத்தின் விளைவாக ஒரு வேலை நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் மேலும் கருதுவோம். மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் வேலை நிறுத்த இயக்கத்தின் வெற்றிக்கு முக்கியத்துவம் அளிப்பது, இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களை நாத்திகர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்று பிரிப்பதை உறுதியாக மட்டுப்படுத்துவது, அத்தகைய பிரிவினையைச் சுறுசுறுப்பாக எதிர்ப்பது ஒரு மார்க்சியவாதியின் கடமையாகும்.

இத்தகைய சூழ்நிலையில் நாத்திகப் பிரச்சாரம் செய்வது அவசியமற்றதாகவும் தீமையளிப்பதாகவும் இருக்க முடியும். பின்தங்கிய பகுதியினரை விரட்டி விடலாம், தேர்தல்களில் ஒரு மாண்டேட்டை இழந்து விடலாம் என்ற ஃபிலிஸ்டீனிய அச்சம், இதரவை காரணமாக இப்படிக் கூறவில்லை, மொட்டையான நாத்திகப் பிரச்சாரத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சிறப்பான முறையில் கிறிஸ்தவத் தொழிலாளர்களைச் சமூக - ஜனநாகத்துக்கும் நாத்திகத்துக்கும் மாற்றக் கூடிய நவீன முதலாளித்துவச் சமூகத்தின் நிலைமைகளில் வர்க்கப் போராட்டத்தின் உண்மையான முன்னேற்றத்தை மனதில் கொண்டு இதைக் கூறுகிறோம்."

கட்சிக்குள் வரும் ஆத்திகர்களை கருத்து முதல்வாதிகள் என துரத்தி அடிப்பதற்குப் பதிலாக அவர்களை முதலாளிகளுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்திற்கு ஒன்று திரட்ட வேண்டும் என்கின்றார். காரணம் வர்க்கப் போராட்டம் நிச்சயம் கடவுளின் இடம் என்பதை தொழிலாளர்களுக்கு உணர்த்திவிடும் என்பதால்தான். ஆனால் அவர் கம்யூனிஸ்ட்களை பட்டையும் கொட்டையும் போட்டுக்கொண்டு மதவாதிகளைப் போலச் செயல்படச் சொல்லவில்லை.

இதே கருத்தைதான் ஸ்டாலின், மாவோ போன்றவர்களும் சொல்லி இருக்கின்றார்கள்.

"… அரசியல், குலமரபு, மதரீதியான, ஆண்பால் ஆகிய இந்த நான்கு அதிகார அமைப்பு முறைகளும் நிலவுடமை – ஆணாதிக்கமுறை மற்றும் கருத்தியல் ஆகியவற்றின் மொத்த திரளுருவம் ஆகும். இந்த நான்கு தடித்த கயிறுகளால் சீன மக்கள் குறிப்பாக உழவர்கள் கட்டப்பட்டுள்ளனர்…"(மாவோ படைப்புகள் தொகுதி ஒன்று. பக்கம்:60)

ஏறக்குறைய இந்தியா பட்டாளி வர்க்கத்தின் வீழ்ச்சிக்கு எது எல்லாம் முக்கிய காரணியாக இருந்ததோ அதே தான் சீனாவின் வீழ்ச்சிக்கும் அன்று காரணமாக இருந்தது. அரசியல், குலமரபு, மதம், ஆணாதிக்கம் என்ற நான்கையுமே ஒழிக்க வேண்டும் என மாவோ அறைகூவல் விடுக்கின்றார். மேலும் பிற்போக்குத்தனம் முட்டுச்சந்தில் கொண்டுபோய்தான் நிறுத்தும் என்கின்றார்.

"…சுருக்கமாகக் கூறுவதெனில் பிற்போக்குத்தனம் முடிவில் அதன் ஆதரவாளர்கள் எண்ணுவதற்கு நேர்மாறானதையே விளைவிக்கின்றது. இவ்விதிக்கு விதி விலக்கு என்பது நவீன காலத்திலோ பண்டைய காலத்திலோ இல்லை. சீனாவிலோ வேறு எங்கணுமோ இல்லை" (மாவோ படைப்புகள் தொகுதி இரண்டு. பக்கம்:550).

மேலும் நெற்றிப்பொட்டில் அடித்தார்போல மாவோ சொல்கின்றார், இந்த உலகில் மனிதனைக் காப்பாற்றும் சக்தி மனிதன் மட்டுமே என்று. அவனது உழைப்பால்தான் இந்த உலகம் மாற்றியமைக்கப்பட்டது. எனவே எந்தக் கடவுளும் அவனைக் காப்பாற்றவோ சமூகத்தை மாற்றியமைக்கவோ ஒரு போதும் வரமாட்டார்கள் என்கின்றார்.

"… அடிமைகள் கிளர்ந்தெழ வேண்டும், சத்தியத்துக்காகப் போராடுக. மாபெரும் ரட்சகன் என்று எவரும் இருந்ததில்லை. கடவுளர்களையும் சக்கரவர்த்திகளையும் நாம் நம்பிப் பயனில்லை. நமது விடுதலைக்கு நம்மையேதான் சார்ந்திருக்க வேண்டும். மனிதர்களின் இவ்வுலகை உருவாக்கியது யார்? உழைக்கும் கூட்டமான நாம்தான்…"(மாவோ படைப்புகள் தொகுதி ஒன்பது. பக்கம்:615)

மதத்தைப் பற்றி தோழர் ஸ்டாலினின் கருத்தும் அதுவேதான்

"… சமூக – ஜனநாயகவாதிகளின் திட்டத்தில் சமயச் சுதந்திரம் பற்றி ஒரு விதி உள்ளது. இதன் படி எந்தக் குழுவும் தாங்கள் விரும்புகிற மதத்தைப் பின்பற்றலாம். மிகவும் பழமைப் பிடிப்புள்ள கத்தோலிக்க சமயம், இன்னும் இது போன்ற பல சமயங்களைப் பின்பற்றலாம், எனினும் அனைத்துவிதமான அடக்குமுறைகளையும் எதிர்த்து சமூக- ஜனநாயகம் போராட வேண்டும்.

அது கத்தோலிக்க மதமாயிலும் சரி, ப்ராட்டஸ்டண்ட் மதப் பிரிவாக இருந்தாலும் சரி. எனவே கத்தோலிக்க மதமும், ப்ராட்டஸ்டண்ட் மதமும் திட்டத்தின் அடிப்படை அம்சத்தோடு முரண்படவில்லை என்று சொல்ல முடியுமா? இல்லை, நிச்சயம் அவ்வாறு சொல்ல முடியாது. சமூக ஜனநாயகவாதிகள் எல்லா நேரங்களிலும் கத்தோலிக்க ப்ராட்டஸ்டண்ட் மத அடக்குமுறைகளை எதிர்க்க வேண்டும். தேசிய இனங்கள் தாங்கள் விரும்பும் மத்தைப் பின்பற்றும் உரிமையையும் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை சரியான முறையில் புரிந்துகொண்டு, சோசலிச உலகக் கண்ணோட்டத்தை அடையும் பொருட்டு சமூக- ஜனநாயகவாதிகள் தொடர்ந்து கத்தோலிக்க, ப்ராட்டஸ்டண்ட், இதர பழமைவாத கிறித்துவ சமயங்களை எதிர்த்துப் போராட வேண்டும்". ( ஜே.வி.ஸ்டாலின் படைப்புகள். தொகுதி இரண்டு. பக்கம்:387)

எப்படி பார்த்தாலும் எந்த ஒரு மார்க்சிய ஆசானும் கோயில் திருவிழாவில் பங்கெடுத்து சமத்துவத்தைக் கொண்டு வர முடியும் எனச் சொல்லவில்லை!. காரணம் அவர்களின் பார்வை தெளிவாக இருந்தது.

மதத்தைக் கடைபிடிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. ஆனால் அது எந்த வகையிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தைப் பாதிக்காதவரைதான். கட்சிக்குள் வந்த ஒருவர் அங்கு கருத்து முதல்வாதத்தைப் பரப்ப எந்த உரிமையும் கிடையாது. ஆனால் நம்ம ஊர் கம்யூனிஸ்ட்களோ கோயில் திருவிழாவையே நடத்துவோம் என்று கூச்சமே இல்லாமல் சொல்கின்றார்கள்.

நாம் கருத்துமுதல்வாதிகளை வென்றெடுக்க அவர்களின் சாதி சார்ந்த, மதம் சார்ந்த விழாக்களுக்கு மாற்றாக சாதி சாராத, மதம் சாராத திருவிழாக்களை முன்னெடுக்க வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் பண்பாட்டை, உழைப்பின் உன்னதத்தை அவர்களின் வாழ்வியலைப் போற்றும் கலைகளை உருவாக்கி அதன் பக்கம் அவர்களைத் திருப்ப வேண்டும்.

அப்படி செய்வதால் உடனே மக்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பின்னால் வந்து விடுவார்களா என்றால் நிச்சயம் வர மாட்டார்கள். அது ஒரு நீண்ட கால திட்டமாக இருக்க வேண்டும். காரணம் கருத்துமுதல்வாதம் கூட நீண்ட காலமாக நிலைத்து நின்றதன் காரணமாகவே அதனால் மனிதனின் ஆழ் மன உணர்வில் ஆழமாக தன்னைப் பதிந்துகொள்ள முடிந்தது.

சிபிஎம்மின் இந்த நிலைப்பாடு உண்மையில் கேலிக்கூத்தான ஒன்றாகவே இருக்கின்றது. முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மத உணர்வை முன்னிலைப்படுத்தாமல் தொழிலாளர்களை நம்மால் திரட்ட முடியும். ஆனால் சாதியவாதிகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்த குறைந்தபட்ச சாதிய எதிர்ப்புணர்வாவது நம்மிடம் இருக்க வேண்டும்.

கட்சி அணிகள் வெட்கமே இல்லாமல் சுயசாதி திருமணம் செய்து கொள்வதும் கட்சியின் தலைமை அதைக் கண்டிக்காமல் இருப்பதும் இயல்பான ஒன்றாக இருக்கும் போது இவர்களால் எப்படி கோயில் மூலம் ஆழமாக வேறூன்றி இருக்கும் சாதிய ஆதிக்கத்தைக் களையெடுக்க முடியும்?

காவிக்கொடிக்குப் பதில் சிவப்புக் கொடி பறந்தால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடுமா? பிரச்சினை கொடியில் இல்லை, நாம் கோயில் சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ள சாதி சனாதனத்தை எப்படி வேரறுக்கப் போகின்றோம் என்பதில்தான் இருக்கின்றது.

ஏற்கெனவே பஜனை கோஷ்டிகளாக தோழர்கள் உள்ள நிலையில் அவர்களைக் கொண்டுபோய் கோயிலில் விட்டால் அவர்கள் வேட்டிக்குப் பதில் வேப்பிலையை கட்டிக் கொண்டுதான் ஆடப் போகின்றார்கள்.

கோயில் திருவிழாவில் பங்கெடுக்கப்பதன் மூலம் சிபிஎம் சாதி ஆதிக்கத்தை ஒழிக்கப் போகின்றதோ இல்லையோ நிச்சயம் ‘பிச்சைக்காரர்கள் நல சங்கம்’, ‘சூத்திர மற்றும் பார்ப்பன பூசாரிகள் நல சங்கம்’, ‘பக்தகோடிகள் நல சங்கம்’, ‘மடப்பள்ளி புளியோதரை கிண்டுவோர் நல சங்கம்’ போன்றவற்றை வைத்து அவர்களிடம் லெவி வசூல் செய்யும். இதுதான் தோழர்களால் அதிகபட்சமாக கொண்டு வர முடிந்த சமூக மாற்றமாக இருக்கும்.

- செ.கார்கி

Pin It