(தமிழ்நாட்டுரிமை மீட்பு மாநாட்டில் மணிப்பூர் தேசத்தின் மாந்த உரிமை விழிப்புணர்வு இயக்கத்தின் தோழர் பாப்லோ லோசங்பம் நிகழ்த்திய சிறப்புரை)

தொகுப்பும், தமிழாக்கமும்: இலெனின் நெடுஞ்செழியன்

தோழர்களே தமிழ்நாட்டின் தன்னாட்சி உரிமை குறித்தான ஒரு மாநாட்டிலே உங்கள் முன்னாள் முதல் முதலாக உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இதற்கு வாய்ப்பளித்த தோழர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்வு எனக்கோர் வாழ்நாள் படிப்பினையாகும்.

இந்தியா ஒரே வகையான மக்களைக் கொண்ட ஒரே சமூகம் என்பது உண்மையில்லை. இந்தியாவில் தனித் தன்மை பொருந்திய பல்வேறு இனங்கள் உள்ளன; தேசங்கள் உள்ளன.

மணிப்பூர் தனித் தன்மை கொண்ட தேசம். காசுமீர் தனித்தன்மை கொண்ட தேசம். அதுபோல் தமிழ்நாடு தனித்தன்மை கொண்ட ஒரு தேசம்.

தமிழ்நாட்டில் 60களில் நடைபெற்ற மொழிப் போராட்ட நிகழ்வுகள் எல்லாம் எங்களுக்கு எங்கள் தேசத்தின் மீதான உரிமை உணர்வெழுச்சியைக் கொடுத்தது.

இந்நிலையில் இந்தியா ஒரே தேசம் என்பது உண்மையில்லை. அது பல்வேறு தேசங்களை அடக்கி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

ஒன்றிய (ஐக்கிய) நாட்டு மாந்த உரிமை ஆணையத்திடம் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையோ, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையோ தங்கள் நாட்டில் நிகழ்ந்துள்ள மாந்த உரிமை மீறல் தொடர்பான அறிக்கையை அனைத்து நாடுகளும் ஒப்படைக்க வேண்டும்.

அவ்வகையில் 1983 ஆம் ஆண்டில் இந்திய அரசு தனது முதல் அறிக்கையை ஐ.நா.வின் மாந்த உரிமை ஆணையத்திடம் அளித்தது. அந்நேரத்தில் சிக்கிம் ஒரு தனி விடுதலைத் தேசமாக ஐ.நா.வில் ஏற்கப்பட்டி ருந்தது. மாறாக இந்திய அரசோ தனது வல்லாதிக்க நடவடிக்கைகளால் சிறு அண்டை தேசங்களைத் தங்களுடன் இணைத்ததைப் போல சிக்கிம் நாட்டையும் தன்னுடன் ஒன்றிணைத்துக் கொண்டது.

இந்நிலையில் அனைத்துத் தேச மாந்த உரிமை ஆணையத்திடம் இந்தியா அளித்த ஆய்வறிக்கையை ஆராய்ந்த சுவீடன் நாட்டு அறிஞரொருவர் முகமையான கேள்வியொன்றை எழுப்பினார். அதாவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியாவிற்கு அருகில் உள்ள சிறு தேசங்கள் எந்த வழிகளிலெல்லாம் இந்தியாவோடு இணையலாம் என்பது குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளதாகவும், மாறாக இணைந்த பிற்பாடு ஏதோ சில காரணங்களி னால் இந்தியாவுடனான தனது இணைப்பை முறித்துக் கொண்டுப் போக அச்சிறிய தேசம் விரும்பினால் அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பான எந்தவொரு வழிமுறைகளும் மறந்தும் கூட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படாமலிருப்பதை அவ்வறிஞர் சுட்டிக் காட்டினார்.

அதாவது இணைந்த தேசிய இனத்தின் பிரிந்து போகும் உரிமை தொடர்பான வழிமுறைகளுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பேரமைதி காக்கிறது.

இதுநாள் வரை இக்கேள்விக்கான விடையாக இந்திய அரசு விளக்கமளிக்கவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. தனது தேசிய இன மக்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு இந்தியாவிற்கு வெளியே அவர்களுக்கான (இழந்த) தேசத்தைக் கட்டி எழுப்புவது தொடர்பாக எந்த அமைப்புகளானாலும் குரலெழுப்பினால் அவர் களைச் சட்ட விரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்திய அரசு ஒடுக்குகிறது. தேசிய இன விடுதலை கோரிக்கையை எழுப்புகிறவர்களைச் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிற தீவிரவாதி களாகச் சித்தரித்து ஒடுக்குவது மட்டும் இப்பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கமல்ல. மாறாக இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரான ஒற்றைக் குரல் ஒலித்தாலும் அதைத் தீவிரவாதிகளின் சதியாகவும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையாகவும் கருத்து நிலையில் உளவியல் அடிப்படையில் ஒடுக்குமுறையை நிகழ்த்தி தேசிய இன விடுதலைக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யவும் பயன்படுத்துகிறது. அவ்வாறு தங்கள் மக்களின் எதிர்காலத்திற்காக இந்தியாவிற்கு வெளியே மணிப்பூர் தேசத்தைக் கட்டியெழுப்பப் போராடிய ஆறு மணிப்பூர் தேசிய விடுதலை அமைப்புகளைச் சட்ட விரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்திய அரசு தடை செய்தது.

கடந்த ஐம்பத்து ஆறு ஆண்டுகளாக இவ்வாறாகத் தனது சிறப்புப் போர்க் கருவிச் சட்டங்களின் (சிறப்பு அதிகாரம்) வாயிலாகக் காவல்துறை மற்றும் படைத் துறை துணைக் கொண்டு மணிப்பூர் தேசிய விடுத லைப் போராட்டங்களை இந்திய அரசு ஒடுக்கி வருகிறது.

படை பலத்தில் உலகில் மூன்றாமிடத்தில் உள்ள ஒரு மிகப் பெரும் படையை எதிர்த்துப் போராடுகிற மணிப்பூரிகளுக்குத் தெரியும் . இப்பெரும் படையை நாம் வெற்றி கொள்ள முடியாது என்று.

மாறாகத் தாங்கள் ஒரு தனித்த தேசிய இனமென்ற உண்மையைத் தங்களின் போராட்டத்தின் வாயிலாக தொடர்ச்சியாக உணர்த்தும் நோக்கத்திற்காகவும் தங்கள் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் மணிப்பூர் ஒரு தனித்த விடுதலை நாடாக இருந்தது.

அசோகரின் ஆட்சியிலோ முகலாயர்களின் ஆட்சியிலோ மணிப்பூர் தேசமானது இந்தியாவின் ஆட்சி எல்லைக்குள்ளாக வரவில்லை. இந்தியாவின் அரசியல் சமுதாய நிகழ் முறையிலிருந்து முற்றிலும் தொடர்பற்று, தென் கிழக்கு ஆசியாவின் ஒரு மூலையிலேயே மணிப்பூர் அமைந்திருக்கிறது. இங்கிலாந்தின் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவில் கால் பதித்திருந்தபோதுதான் முதல் முறையாக 1763 ஆம் ஆண்டில் மணிப்பூர் அரசோடு ஆங்கிலேய அரசு ஓர் உடன்படிக்கை செய்து கொள்கிறது. அதன்பின் 1891 ஆம் ஆண்டில் மணிப்பூர் தேசத்தைத் தங்களுடன் இணைக்க ஆங்கிலேய அரசு முனைந்தபோது மணிப்பூர் தேசிய மக்கள் கடுமையான போராட்டங் களை முன்னெடுத்தார்கள். ஆங்கிலேயர்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான மணிப்பூரிகளின் போராட்டத்தில் நான்கு ஆங்கிலேய உயர் அதிகாரிகள் கொல்லப் பட்டனர். தங்களது முதல் முயற்சியில் தோல்வியுற் றாலும், வலுவான படையைக் கொண்டு மீண்டும் மணிப்பூர் மக்களை ஆங்கிலேய அரசு ஒடுக்கியது.

இறுதியாக 1891 ஆம் ஆண்டில் மணிப்பூர் தேசத்தை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் வலுக்கட்டாயமாகத் தங்கள் அதிகாரத்திற்குள் கொண்டு வந்தனர். அப்போது பிரித்தானிய இந்தியாவோடு இணைக்கப் பட்ட கடைசி நாடாக மணிப்பூர் இருந்தது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது மணிப்பூர் தேசம் சொந்தமாகத் தனக்கான ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கொண்டிருந்தது. தனது அரசியல் சட்டத்தின்படி மணிப்பூர் அரசு 1948 ஆம் ஆண்டில் மணிப்பூரில் தேர்தலை நடத்தியது. எனக்குத் தெரிந்த வரையில் இதுவே தெற்காசியாவில் நடத்தப்பட்ட முதல் நாடாளுமன்ற சனநாயகத் தேர்தல் என நினைக்கிறேன். இத்தேர்தலின் அடிப்படையில் மணிப்பூர் மந்திரிகளின் சபை அமைக்கப்பட்டு 1948 அக்டோபரில் மணிப்பூர் சனநாயகக் குடியரசு நிறுவப்பட்டது.

மணிப்பூர் இரண்டாம் உலகப் போரின் முக்கிய அரசியல் அரங்கமாகத் திகழ்ந்தது.

சப்பானுடன் இணைந்து ஆங்கிலேயர் படைக்கு எதிரான போரை சுபாஷ் சந்திரபோசும் தமிழ்நாட்டி லிருந்து வந்த லக்சுமி சாகலும் இங்கிருந்து முன்னெடுத் தார்கள். இரண்டாம் உலகப் போரில் முக்கிய புவிசார் அரங்காகத் திகழ்ந்த மணிப்பூர் அப்போரினால் பெருத்த சேதங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், இந்தியா வில் அதிகார மாற்றம் ஏற்பட்ட பின்னர், இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட இழப்பிற்குத் தக்க இழப்பீடு தருவதாகக் கூறி சில்லாங்கிற்கு மணிப்பூர் அரசர் வரவழைக்கப்பட்டார். ஆனால் வந்த இடத்தில் அவரை வீட்டுக் காவலில் அடைத்து வற்புறுத்தி இந்தியாவுடனான இணைவாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது இந்திய அரசு.

முன்னதாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் மணிப்பூரை ஆட்சி செய்து வந்த வேளையில், இந்தியா இவ்வாறு நடந்து கொண்டதை நாம் கவனிக்க வேண்டும்.

இதையே மணிப்பூர் மன்னரும் அன்று எதிரொலித்தார். மணிப்பூர் அரசர் இவ்வொப்பந்தத்தை ஏற்கவில்லை என்றும் மக்களிடையே அரசியல் அதிகாரம் உள்ளது என்றும், எங்கள் நாட்டில் ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இயங்குகிறது என்றும் கூறி இந்தியாவின் அழுத்தத்தை மணிப்பூர் அரசர் மறுத்தார். இந்நிலையில் இந்திய அரசுக்கும் மணிப்பூருக்குமான இணக்கமாகச் செயல்பட்ட அசாம் மன்னர் மூலமாக மணிப்பூருக்கு ஒரு செய்தியை இந்தியாவிலிருந்து சர்தார் வல்லபாய் படேல் அனுப்பினார். "மேஜர் அமர் சிங் உடனே சில்லாங்கிலிருந்து படைகளுடன் மணிப்பூர் செல்லுங்கள்' என்று ஆணையிட்டார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட ஒரு நாட்டை, பர்மா, இங்கிலாந்து போன்ற நாடுகளால் ஏற்கப்பட்ட ஓர் ஆட்சியைத் தங்களுடன் வலுக்கட்டாயமாக இணைக்க பேச்சுவார்த்தையின் மிகத் தொடக்கத்திலேயே படைகளை அனுப்ப ஆணையிடுகிறார் சர்தார் வல்லபாய் பட்டேல்.

அதாவது 1949 செப்டம்பர் 21 ஆம் நாளில் இந்தியாவுடனான இணைப்பு ஒப்பந்தத்தில் கட்டாயத்தின் பேரில் கையெழுத்துப் போட்டு விட்டு நாடு திரும்புகிறார் மணிப்பூர் அரசர். அதன்பின் 1949 அக்டோபர் 11 ஆம் நாளில் இந்தியப் படை மணிப்பூரைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. 1949 அக்டோபர் 15 ஆம் நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக மணிப்பூரை அறிவிக்கிறது இந்திய அரசு. அதன் பின் எங்களது மந்திரி சபை கலைக்கப்பட்டது. அரசியல் அமைப்புச் சட்டம் நீக்கம் செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து மேஜர் அமர் சிங் மணிப்பூரை நிர்வகிக்கிற தரகுப் பிரதிநிதியாக நியமிக்கப்படுகிறார். முன்னதாக ஒன்று, இரண்டு, மூன்று என்ற தரத்தில் இந்தியாவின் மாநிலங்களை வகைப் பிரித்திருந்த இந்திய ஆட்சியாளர்கள் ஒரு காலத்தில் விடுதலை நாடாக இருந்த மணிப்பூர் தேசத்தை இந்தியாவின் மூன்றாம் தர மாநிலமாக அறிவித்து ஆட்சி செலுத்தியது.

காலம் சென்றது. இந்தியாவில் தொழிற் துறை எழுச்சி ஏற்பட்ட காலங்களான 1960, 1970 களில் மணிப்பூர் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. கிழக்கெல்லையில் சீனா, மேற்கில் வங்காள தேசமென இரண்டுக்கும் நடுவிலான இந்தியாவின் கடைக்கோடி தேசமாகத் தனது அனைத்து பொருளாதார வாய்ப்பு களையும் இழந்திருந்தது மணிப்பூர். முன்னதாக சீனா சீனா எனச் சீன அச்சத்தால் இந்திய ஆட்சியாளர்கள் எங்களை முழுமையாகக் கைகழுவி விட்டிருந்தார்கள். இந்நிலையில் மணிப்பூரிகள் இந்தியாவின் மூன்றாம் தர மக்களாக நடத்தப்பட்டு எந்தப் பணிக்கும் பொருத்தமற்றவர்களாக உருவகப்படுத்தப்பட்டார்கள்.

எங்கள் மக்களுக்கு ஒரு காலத்தில் காந்தி மற்றும் நேருவின் மீது ஈர்ப்பிருந்தது; நம்பிக்கையும் இருந்தது. இந்தியா எங்களை எவ்வாறு நடத்தப் போகிறது என்றறிவதில் நாங்கள் ஆர்வமாக இருந்தோம். ஆனால் எல்லாம் தவிடுபொடியானது.

ஆம், 1962 ஆம் ஆண்டில் சீனா எங்களைத் தாக்கியபோது நேரு எங்களைக் காக்காமல் நட்டாற்றில் விட்டு விட்டார். அதுவரை இந்திய நாட்டுப் பற்றுடன் சீனர்களுடன் போரிட்ட எங்கள் மக்கள் நேருவின் செயல்பாடுகளாலும், அறிக்கைகளாலும் கடும் சினமடைந்தனர். இந்தியா போரில் பின்வாங்கியது.

இதுகுறித்து என் தந்தை தன் நினைவுகளை என்னுடன் பகிர்ந்துள்ளார். அப்போது, என் தந்தை கௌகாத்தி பல்கலைக் கழகத்தில் அரசியல் பொருளாதாரத் துறையில் மாணவராக இருந்தார். இந்தியாவின் இந்நிலைப்பாட்டை அறிந்த மறு நிமிடம் என் தந்தை மற்றும் அவர்களின் நண்பர்கள் பல்கலைக் கழக விடுதியில் உள்ள சன்னல்களை எல்லாம் அடித்து நொறுக்கினர். இந்தியாவின் இத்துரோகத்தை மணிப்பூரிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மணிப்பூர் எங்கிலும் மக்கள் கொந்தளிப்பு இருந்ததாக நினைவு கூருகிறார்.

அதே நேரத்தில், 1948 ஆண்டுகளுக்குப் பின்பாக மணிப்பூரி இளைஞர்கள் படிப்பிற்காகவும், வேலைக் காகவும் இந்தியாவிற்குள் வரும்போது பல்வேறு வகையான மதிப்புக்குறைவுகளை அவர்கள் எதிர்கொண்டனர்.

குறிப்பாக மணிப்பூரிகளின் சப்பையான மூக்கு மற்றும் முக அமைப்பு காரணமாக அவர்கள் கேளிக்கைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இந்நிலையில் மீண்டும் மணிப்பூருக்குத் திரும்புகிற இளைஞர்களுக்குப் பொருளாதார தேக்க நிலைமை காரணமாக வேலையும் கிடைக்கவில்லை. அப்போதுதான் மணிப்பூரிகள் ஓர் உண்மையைப் புரிந்து கொள்கிறார்கள். மணிப்பூரிகளின் வாழ்விற்கு இந்தியா ஒருபோதும் உறுதி அளித்துக் காக்கப் போவதில்லை. நம்மை நாம்தாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மணிப்பூருக்கு நாம்தாம் பொறுப்பேற்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

இம்முடிவுதான் 1964ஆம் ஆண்டின் நவம்பர் 24 ஆம் நாளில் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (United National Liberation Front) உருவாகக் காரணமாகியது.

இன்று மணிப்பூர் தேசிய விடுதலைக்கான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி தோன்றி ஐம்பது வருடங்கள் ஆகின்றன. அப்போது இருந்த பல போராளிகள் இன்று நம்மிடையே இல்லை. இவ்வமைப்பினர் தொடக்கத்தில் அறிவுத்தளங்களில் மட்டுமே வேலை செய்தனர். மாவோவின் படைப்புகள் மற்றும் கார்ல் மார்க்சின் மூலதனம் போன்ற நூல்களை மணிப்பூர் மக்களுக்கு மொழிபெயர்த்து அறிமுகம் செய்தார்கள். மக்களை அரசியல் பொருளாதார கலாச்சாரத் தளங்களில் வலுப்படுத்தி அரசியல்படுத்தினார்கள். இப்படியாகத் தேசிய இன விடுதலைக்கான சித்தாந்தப் போராட்டத்தை முதலில் முன்னெடுத்தவர்கள் 1991 ஆம் ஆண்டில் கருவி ஏந்த வேண்டிய காலம் உணர்ந்தவர் களாகக் கருதினர். ஆயுதப் போரட்டத்தை முன்னெடுக் கிறார்கள். மணிப்பூர் மக்கள் படை என்ற பெயரில் மணிப்பூர் காடுகளில் மறைந்து கொண்டு இந்தியப் படையுடன் போராட்டத்தை நடத்துகின்றனர். அதே நேரத்தில் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி இயக்கத்திலிருந்து மணிப்பூர் மக்கள் விடுதலை போன்ற கருவிக் குழுக்கள் உருவாகின. ஆனால் இந்திய அரசுடனான கருவிப் போராட்டம் என்னவோ அவ்வளவு எளிதானதல்ல. இந்திய படையின் பல நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் இவ்வமைப் பினர் எதிர் கொண்டனர்.

ஆனால் இதில் அருமையான செய்தி என்னவென் றால் எந்த அமைப்பினரும் மணிப்பூர் தேசிய விடுதலை இலக்கை இந்திய அரசிடம் இணக்கத்திற்கு உட்படுத்தவில்லை. அவர்கள் அனைவரின் இறுதி இலக்கும் ஒன்றுதான். அது விடுதலை பெற்ற மணிப்பூர் தேசம் மட்டுமே. இன்றுவரை இக்கடுமை யான போராட்டத்தை அதே நெஞ்சுரத்தோடு அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.

இன்று ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி இயக்கத்தின் தலைவர் இந்திய அரசால் சிறை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டில் வங்காளதேசத்தில் தளை செய்யப்பட்ட அவர் முதல் அறுபது நாட்களுக்கு வெளியுலகத் தொடர்புகளிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டார். தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்த் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்ட அவர் தற்போது கவுகாத்தி சிறையில் உள்ளார்.

சிறைச்சாலையில் கடுமையான அழுத்தங்களை எதிர் கொண்ட போதிலும் அவர் தன் நோக்கத்தை இன்று வரை இந்திய அரசிடம் சமரசம் செய்து கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியல் சட்டத்திற்குப் புறம்பான சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தளை செய்து சிறையிலடைத்திருக்கும் இந்திய அரசிடம் நான் ஒன்று கேட்கிறேன். சட்டத்திற்குப் புறம்பான வகையில் விடுதலைக் கோரிக்கையை முன்வைத் திருப்பதாகக் குற்றம் சாட்டுகிறீர்களே, அப்படியானால் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் எந்த வடிவத்தில் எங்கள் கோரிக் கையை வலியுறுத்த வேண்டும் என்று சொல்லுங்கள். உங்கள் அரசியல் சட்டத்தில் இதற்கு ஏதேனும் வழிமுறைகள் இருக்கின்றனவா என்று தெளிவுபடுத்துங்கள்.

நாங்கள் எங்களின் கருவிகளுக்கு வேலை கொடுக்காமல், கள்ளாவிற்குள் வைத்து பூட்டி விட அணியமாக உள்ளோம். எப்போதென்றால் ஐ.நா.வின் மேற்பார்வையில் பிரிந்து போகும் உரிமை தொடர்பான அதன் விதி ஒன்றின் கீழ் மணிப்பூர் மக்களின் விருப்பத்தைக் கேட்க முன்வருகின்ற நேரத்தில் மட்டுமே எங்களின் கருவிப் போராட்டத்தைக் கைவிடுவோம். மணிப்பூர் மக்களே அவர்களுக்கான எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற உரிமையை ஐ.நா.வின் மூலமாக வழங்குங்கள். அவர்களுக்கான அரசியல் முடிவை எடுக்க இசைந்திடுங்கள். அவர்களின் அரசியல் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.

அவ்வாக்கெடுப்பில், மணிப்பூர் மக்கள் இந்தியாவுடன் சேர்ந்திருக்க விருப்பம் தெரிவித்தார்கள் என்றால் எங்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. மாறாக பிரிந்து போக விருப்பம் தெரிவித்தார்கள் என்றால் விடுதலை கொடுங்கள்.

மாந்த உரிமை செயற்பாட்டாளராக மணிப்பூரின் தேசியத் தன்னாட்சி உரிமையை நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மணிப்பூரிகளின் அரசியல் உணர்வை அங்கீகரிக்க வேண்டும். இதைத்தான் உலக மாந்த உரிமைச் சட்டங்களும் வலியுறுத்துகிறது. நீங்கள் எவ்வளவு வலுவான படை அழுத்தங்களைக் கொடுத்தாலும் மிகப் புதிய துப்பாக்கிகள் கொண்டிருந்தாலும் அதனால் இனி ஒரு பயனுமில்லை. இம்முறை எல்லாம் தற்போது காலாவதியாகி விட்டது.

நடப்பிலுள்ள அனைத்துச் சிறப்புக் கருவிச் சட்டங்களை முதலில் நீக்குங்கள். மணிப்பூர் மக்களே தங்களுக்கான அரசியல் நிலையைத் தீர்மானித்துக் கொள்கிற உரிமையை வழங்குங்கள். இதுவே இன்றைய புதிய சனநாயக சூழலில் சரியான தீர்வாக இருக்க முடியும். தன்னாட்சி உரிமைக்கான போராட்டம் என்பது இந்தியாவில் மட்டுமே சிறப்பாக நிகழ்கிற சிக்கலாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக் கக் கூடாது. இன்று உலகெங்கிலும் பல சிறிய தேசிய இனங்கள் தங்களின் விடுதலைப் போராட்டத்தில் வெற்றிப் பெற்று விடுதலையைப் பெற்று வருகின்றன. ஐ.நா.வும் பிற நாடுகளும் விடுதலை பெற்ற நாடுகளை அங்கீகரித்துள்ளன. இது மாந்தரின் அடிப்படை உரிமையாகும். இவற்றையெல்லாம் இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு முதிர்ச்சியான சனநாயக நாடு என்ற பொறுப்புணர்வுடன், தான் அனுபவிக்கிற விடுதலை உரிமையை பிற தேசிய இனங்களுக்கு வழங்க வேண்டும். அப்போது மட்டுமே இச்சிக்கல் தீரும்.

ஒரு மனைவி தன் கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் இருவரின் ஒப்புதலின் பேரில் மணவிலக்குக் கொடுத்துவிட வேண்டும். மாறாக, அவள் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து நீ என்னுடைய மனைவியாக வாழ்ந்தாக வேண்டும் என்று வற்புறுத்தினால் எவ்வாறு சேர்ந்து வாழ முடியும். இன்னும் எத்தனைக் காலங்களுக்குப் பல்வேறு சிறப்புக் கருவிச் சட்டங்களைப் போட்டு எங்களைச் சேர்த்திருக்க வலியுறுத்தப் போகிறீர்கள்? எங்கள் தேசத்தின் விடுதலைக் கோரிக்கையை முன் வைக்கிற எங்களை இன்னும் எத்தனை நாளைக்குத் தீவிரவாதிகள் என்றும் குற்றவாளிகள் என்றும் அறிவித்துக் கொண்டிருப்பீர்கள்? பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கின்ற இந்தியாவில் சேர்ந்திருப் பதற்கும் பிரிந்து போவதற்குமான ஒரு நேர்மையான சனநாயக வழிமுறைகளை இந்திய அரசு வகுக்க வேண்டும். பிரிந்து போகும் உரிமையைக் கோருகிற மக்களைச் சனநாயக வழிமுறைகளில் பிரிந்து போக அனுமதிக்கிற இந்தியாவை நாங்கள் காண வேண்டும்.

இறுதியாக ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். அதாவது சர்வதேச மாந்த உரிமை ஆணையத்திடம் இந்தியா தனது அறிக்கையைச் சமர்ப்பித்த போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்றும் குற்றவாளிகள் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் மாந்த உரிமை ஆணையமோ இச்சிக்கலைச் சமூக அரசியல் சிக்கலாக அணுக வேண்டும் என்று கோரியது. இவ்வரசியல் சிக்கலை நாம் அரசியல் வடிவத்திலேயே தீர்க்க வேண்டும். மாந்த உரிமை ஆணையத்தின் மூன்று அடிப்படை உரிமைகள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மாந்த உரிமை பிரிவு ஒன்றின்படி விடுதலை உரிமை என்பது ஓர் அடிப்படை மாந்த உரிமை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்தப் பிரிவும் விடுதலையின் பேச்சுரிமையை அடிப்படை மாந்த உரிமையாக அறிவிக்கிறது. எனவே இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான குரலை நமது இதயத்திலிருந்து எழுப்புங்கள். மூன்றாவதாக, பிரிவு 25 ஆனது சமூகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள அரசு எந்திரத்திடம் பொது மக்களின் பங்கேற்பைக் கோருகிறது. இம்மூன்று அடிப்படை உரிமைகளும் தேசிய இனச் சிக்கல் கேள்விக்கான முக்கிய அலகாக உள்ளது.

1997 இல் இந்திய அரசு அளித்த அறிக்கையில் நாங்கள் இந்த உரிமைகள் குறித்து விளக்கியும், இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும் தேசிய இனச் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் வற்புறுத்தினோம். இதேபோல் இம்மூன்று உரிமைகளைக் கருத்தில் கொண்டு தமிழர்கள், காசுமீரிகள், நாகர்கள் தங்களின் தன்னாட்சி உரிமைக்கான கோரிக்கைகளை ஒன்றிணைத்து சர்வதேச மாந்த உரிமை ஆணையத்திடம் எழுப்ப வேண்டும். அப்போது மட்டுமே இந்திய அரசு மீதான அழுத்தத்தை அதிகரிக்கச் செய்ய முடியும். நன்றி.

Pin It