அன்பார்ந்த விவசாயப் பெருமக்களே!

தமிழகத்தில் 80-களின் துவக்கம் முதல் செயல்பட்டு வரும் விவசாயிகள் விடுதலை முன்னணி (வி.வி.மு) அமைப்பை நன்றாக அறிவீர். “உழுபவனுக்கே நிலம்! உழைப்பவருக்கே அதிகாரம்!” என்ற முழக்கத்துடன், புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் விவசாயிகளின் விடுதலையை சாதிப்பதை நோக்கமாகக் கொண்டு புரட்சிகர அமைப்பாக, அரசியல் இயக்கமாக செயல்பட்டு வருகிறோம்.

தமிழகத்தின் ஜீவ நதியான காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநிறுத்தும் வகையிலான போராட்டங்கள், முல்லைப் பெரியார் அணையில் 152 அடி நீரை தேக்கக் கோரி 5 மாவட்டங்களில் நடந்த போராட்டங்கள், தென் தமிழகத்தின் முக்கிய நீராதாரமான தாமிரபரணி ஆற்றை பன்னாட்டு கோக் ஆக்கிரமிக்க முயன்றபோது அதனை தடுத்து நிறுத்த முன்னெடுத்த போராட்டங்கள் துவங்கி ஆற்று மணலை கொள்ளையடிக்கும் மணல் மாஃபியாக்களுக்கு எதிராக பாலாறு, வெள்ளாறு, தென் பெண்ணையாறு, கொள்ளிடம், வைகை உள்ளிட்ட ஆறுகளைப் பாதுகாக்கும் வகையில் நடந்த போராட்டங்கள் வரை விவசாயத்திற்கு ஆதாரமான நீராதாரத்திற்காக போராடியதை அறிவீர்கள்.

விவசாயத்தை அழித்து விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற்றத் துடிக்கும் புதிய விவசாயக் கொள்கையை எதிர்த்துப் போராடியதையும் அறிவீர்கள். பன்னாட்டு நிறுவனங்களின் லாப வேட்டைக்காக இந்திய விவசாயிகளின் மீது திணிக்கப்பட்ட மான்சாண்டோ விதைகள், இறால் பண்ணைகள், தேக்குப் பண்ணைகள், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ் அகழ்வு திட்டங்கள், அம்பரப்பர் மலையில் கொண்டுவரத் துடிக்கும் நியூட்ரினோ திட்டங்கள் போன்ற நாட்டுக்கும், மக்களுக்கும் எதிரான திட்டங்களை முறியடிக்கும் வகையில் விவசாயிகளைத் திரட்டி போராடியுள்ளோம்.

விழுப்புரம், கடலூர், தேனி, தருமபுரி, மதுரை, தஞ்சை மாவட்டங்களில் நிலப்பிரபுத்துவ - சாதி ஆதிக்க சக்திகளின் வர்க்க சுரண்டல் மற்றும் ஆதிக்க சாதி வெறியாட்டங்களை எதிர்த்துப் போராடி ஆயுள் தண்டனை முதல் ஒன்று-இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் வரை அனைத்தையும் எதிர் கொண்டுள்ளோம். 

90-களில் கொண்டு வரப்பட்ட மறுகாலனியாக்கத்தின் தாக்குதல் இந்திய விவசாயத்தின் மீதும், விவசாயிகள் மீதும் ஒரு ஆக்டோபஸ் தாக்குதல் போல் நடத்தப்பட்டு வருகிறது. விதை, பூச்சி மருந்து போன்ற விவசாயத்திற்கான அனைத்து உள்ளீடு பொருட்களும், அனைத்து விவசாய விளை பொருள்களும் பன்னாட்டு வேளாண் கழகங்கள் மற்றும் இந்திய தேசங்கடந்த, உள்நாட்டு தரகு அதிகாரவர்க்க முதலாளிகளின் கிடுக்கிப் பிடிக்குள் வந்துவிட்டன.

உணவு தானிய இருப்பு வைத்தல், உணவு தானிய ஏற்றுமதி ஆகிய அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது. இதற்கேற்ப இந்திய ஒன்றிய அரசு கொண்டுவரத் துடிக்கும் மூன்று வேளாண் சட்டத் திருத்தம் ஓராண்டு போராட்டத்திற்குப் பிறகு பாசிச மோடி அரசினால் திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு குறைந்த பட்ச ஆதரவு விலை (MSP) மற்றும் கொள்முதல் விலையைப் (PP) பற்றி தீர்மானகரமான முடிவு எடுக்காமல் போராட்டம் நீறு பூத்த நெருப்பாக கனற்று கொண்டுள்ளது.

பன்னாட்டுக் கம்பெனியின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி, கத்தரிக்காய், பழவகைகள், உணவு தானியங்கள் போன்றவைகளை சோதனை செய்யும் களமாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்களும், புறம்போக்கு நிலங்களும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும், கார்ப்பரேட்களின் ஒப்பந்த விவசாயத்திற்காகவும், தொழில்மய நோக்கங்களுக்காகவும் விவசாயிகளிடம் இருந்து பலாத்காரமாக பறிக்கப்பட்டு வருகின்றன.

பயிரிடும் நிலப்பரப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன் காரணமாக உணவு தானிய உற்பத்தியும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடன் பெற்றுள்ள விவசாய குடும்பங்களின் எண்ணிக்கையும், சராசரியாக ஒரு விவசாயி பெற்றுள்ள கடன் அளவும் அதிகரித்துள்ளது. இதன் விளைவு, கடந்த 30 ஆண்டுகளில் 3.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வளவு இருந்தும் விவசாயம் நடந்து கொண்டுள்ளது. விவசாயம் இல்லையேல் உணவு இல்லை; உணவு இல்லையேல் மனித குலம் இல்லை.

இந்த மறுகாலனியாதிக்க காலகட்டத்தில் மனித வாழ்க்கைக்கு மிகவும் அடிப்படையான உணவு உற்பத்தி, அதன் வினியோகம், ஏற்றுமதி - இறக்குமதி அனைத்தும் பன்னாட்டு ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் வேளாண் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அவர்களின் அடிவருடிகளான தரகு அதிகார வர்க்க முதலாளிகள், கார்ப்பரேட்டுகளின் ஏகபோக ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு விட்டது. இதனால் உணவு தானியங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டுள்ளன. உணவுப் பாதுகாப்பு (Food Security) பறிபோய் விட்டது. உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பை விட முதன்மையானது. உணவுப் பாதுகாப்பு மட்டுமல்ல! உணவு இறையாண்மையும் (Food sovereignty) பறிக்கப்பட்டு விட்டது.

இவற்றின் விளைவாக உணவு தானிய பற்றாக்குறை, விலைவாசி ஏற்றம், உணவுத் தேவைக்காக அந்நிய நாடுகளிடம் கையேந்தும் நிலை உருவாகி விட்டது. உணவு தானிய உற்பத்தி முதல் பருத்தி, சணல் போன்ற தொழில்களுக்குத் தேவையான கச்சாப் பொருள்கள் என பலவகை பொருட்களை உற்பத்தி செய்கின்ற விவசாயிகளோ பன்னாட்டு வேளாண் வர்த்தக முதலாளிகள் மற்றும் இந்தியாவின் தேசங்கடந்த, தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் பண்ணை அடிமையாக மாற்றப்பட்டுள்ளனர்.

பிரிட்டன் காலனியாதிக்கத்தின் மறுபதிப்பு போல வந்திருக்கும் இந்த நிலைமை பற்றியும், தனியார்மயம் – தாராளமயம் - உலகமயம் என்ற நாட்டை மறுகாலனியாக்கும் கொள்கைகள்தான் இதைக் கொண்டு வந்தது என்பது பற்றியும் விவசாயிகளிடையே கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி அணிதிரட்டுவதையே விவசாயிகள் விடுதலை முன்னணி தனது முக்கிய பணியாகக் கொண்டு செல்லும்.

அரசிடம் கோரிக்கை வைத்து இந்த மறுகாலனியாக்கத்தை முறியடிக்க முடியாது. காரணம், இதுவரை நாட்டை ஆண்ட காங்கிரசு மற்றும் தற்போது ஆண்டு வரும் கார்ப்பரேட் அடிமைகளான பாரதிய ஜனதா கட்சிகள்தான் போட்டி போட்டுக் கொண்டு விவசாயிகளை மறுகாலனியாதிக்கத்திற்குள் தள்ளினார்கள்.

எனவே, விவசாயிகளுக்கு அதிகாரம் வரும்போதுதான் இன்றைய அடிமை நிலையை மாற்ற முடியும் என்று விவசாயிகள் விடுதலை முன்னணி விவசாயிகளிடம் பிரச்சாரம் செய்யும்; தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாய கமிட்டிகளுக்கு அதிகாரம் என்ற முழக்கத்தை மையமாக வைத்து பிரச்சாரம் செய்யும்.

என்ன விளைவிக்க வேண்டும், என்ன விலைக்கு விற்க வேண்டும் என்ற அதிகாரம் விவசாயிகளிடம் இருக்க வேண்டும். விதைகள், நீர் ஆதாரங்கள், விளைநிலம் போன்றவற்றின் மீதான கட்டுப்பாடு விவசாயிகளின் அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டும் என்ற முழக்கங்களை முன்வைத்து விவசாயிகளை திரட்ட விவிமு பாடுபடும். அதே சமயம் தற்காலிக சீர்திருத்தங்களான மானியங்கள், கடன் தள்ளுபடிகள், குத்தகை குறைப்பு, வரி குறைப்பு உள்ளிடவைகளுக்காகவும் குரல் கொடுக்கும். எனினும் இறுதி தீர்வு என்பது “அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் விவசாயிகளுக்கு வேண்டும்!” என்ற முழக்கத்தை விவசாயிகள் தங்களது சொந்த முழக்கமாக ஏற்கும் வகையில் உணர்வுபூர்வமாக செயல்படுவோம்.

விவசாயத்தின் அழிவு கிராமப்புற வேலையின்மையைத் தோற்றுவிக்கிறது. இதன் விளைவாக நகரமயமாக்கம் அதிகரிக்கிறது. அதன் தொடர்ச்சியாக நகர்ப்புறத்திலும் வேலை இன்மை மிகவும் மோசமாக அதிகரித்துள்ளது. இந்த சூழல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்த கூலிக்கு வேலை செய்யும் ரிசர்வ் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு விவசாயிகள் விடுதலை முன்னணி பரந்துபட்ட மக்களுடன் இணைந்து போராடும்.

2015 முதல் விவசாயிகள் மத்தியில் எமது அமைப்பு வேலைகளை சுருக்கிக் கொண்டதை தவறாக உணர்கிறோம். டெல்லியில் நடந்த வீரம் செறிந்த விவசாயிகளின் போராட்டம் எங்களது தவறுகளை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது. டிசம்பர்-25 வெண்மணி நினைவு தினத்திலிருந்து பீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து போராடுவோம் என்று உறுதியளிக்கிறோம்.

மாநில ஒருங்கிணைப்பாளராக தோழர் கம்பம் மோகன், மாநில பொருளாளராக தோழர் போடி செல்வராசு ஆகியோரைக்கொண்ட மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு வேலைகளை கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் அழிக்கப்பட்டு, விவசாயிகள் விவசாயத்தை விட்டே விரட்டப்படும் இந்த தருணத்தில் விவசாயிகள் அமைப்பாக அணிதிரள்வது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. கார்ப்பரேட் – காவி பாசிச அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, வெற்றிகரமாக முறியடித்த டெல்லி விவசாயிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில் அமைப்பில் இணையுமாறு விவசாயிகளை அறைகூவி அழைக்கிறது விவசாயிகள் விடுதலை முன்னணி.

- மோகன், மாநில ஒருங்கிணைப்பாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி, தமிழ்நாடு.

Pin It