கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

lenin russiaஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி மோடிக் கும்பலின் பாசிசத்தை வீழ்த்த குறிப்பான திட்டம் வைப்பதில் (தமிழகத்தில்) மார்க்சிய – லெனினிய குழுக்களிடையே நிலவும் தவறான புரிதல்களுக்கு மாறாக எங்களது விமர்சனங்களை மார்க்சிய- லெனினிய அடிப்படையில் முன் வைத்துள்ளோம்.

அவை:           

  1. ஒரு பாட்டாளி வர்க்க இயக்கத்திற்குத் தெளிவான தேசிய, சர்வதேசிய திட்டம் தேவை என்பதை, அதாவது சர்வதேசிய கண்ணோட்டத்திலான தமிழ்த் தேசிய திட்டம் தேவை என்பதை தொடர் -1இல் “பாட்டாளி வர்க்கத்தின் தேசியமும் சர்வ தேசியமும்” என்ற தலைப்பில் தெளிவுபடுத்தியுள்ளோம். மேலும் தேச உருவாக்கமும், ஜனநாயகப் புரட்சியும் பிரிக்க முடியாது என்பதையும் விளக்கப்படுத்தியுள்ளோம்.
  1. ஒரு பாட்டாளி வர்க்க இயக்கத்தின் அதிகபட்ச, குறைந்தபட்ச, குறிப்பான திட்டம் என்றால் என்ன? என்பதையும், குறிப்பான திட்டம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதை அதாவது இடைக்கால அரசை நிறுவதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதை தொடர் 2இல் “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி” மீதான விமர்சனக் குறிப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளோம்.
  1. ஒரு பாட்டாளி வர்க்க இயக்கம் தமது அக, புற முரண்பாடுகளை அதாவது அடிப்படை, முதன்மை முரண்பாடுகளை தமிழ்த் தேசியத்தில் தீர்மானிப்பதா? இந்திய (தேசியத்தில்) தீர்மானிப்பதா? எனக் கேள்வி எழுப்பி அதனை தமிழ்த் தேசியத்தில் தீர்மானிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம். மேலும் அடிப்படை முரண்பாடு என்பது உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலும், முதன்மை முரண்பாடு என்பது அரசியல் அரங்கில் வர்க்க அணி சேர்க்கையில் ஏற்படும் மாற்றத்திலிருந்து தீர்மானிக்க வேண்டும் என்பதை தொடர் -3ல் “புதிய பேராளி இதழ் முன்வைத்த நமது குறிப்பான திட்டம் (வரைவு) அறிக்கையின் மீதான விமர்சனக் குறிப்புகளில்” தெளிவுபடுத்தியுள்ளோம்.
  1. ஒரு பாட்டாளி வர்க்கத்தின் குறிப்பான திட்டம் அதாவது அரசியல், பொருளாதார, அயலுறவு மற்றும் பண்பாட்டுத் திட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும், தேர்தல் பாலான பாட்டாளி வர்க்கத்தின் அணுகுமுறை குறித்தும், தொடர் -4ல் “பாட்டாளி வர்க்க சமரன் அணி (தமிழ்நாடு) அறிக்கைகள் சில விமர்சனக் குறிப்புகள்” தலைப்பிலான கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

“மார்க்சிய-லெனினியக் குழுக்களின் புரிதல்கள் மீதான விமர்சனக் குறிப்புகள்” கீற்று இணையதளத்தில் 1,2,3,4 தொடர்களாக வந்துள்ளன. இத்தொடர்களில் வந்த எங்களது விமர்சனங்கள் குறிப்பான திட்டம் வகுப்பதில் மார்க்சிய-லெனினிய சிந்தனையை ஏற்றுக் கொண்டுள்ள அனைவருக்கம் பொருந்தும். எனவே மேற்கண்ட அமைப்புகள் தவிர்த்து பிற அமைப்புகளின் குறிப்பான திட்ட அறிக்கைகள் எங்களது விமர்சனங்களுக்கு உட்பட்டு இருப்பதால் அதற்கு பதில் அளிப்பது கூறுவது கூறல் ஆகிவிடும்.

அதே நேரத்தில் சோசலிச தொழிலாளர் இயக்கத்தின் குறிப்பான திட்டத்திற்கு பதில் அளிக்கவில்லை. காரணம் அது புரட்சியின் கட்டம் சோசலிசம் என அறிவித்துள்ளதால் அதற்கு பதில் அளிக்கும் தேவை இருக்கிறது. ஜனநாயகப் புரட்சியின் கட்டத்தை ஏற்றுக் கொண்ட எல்லோரும் சோசலிசப் புரட்சி கட்டம் என்பவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இருப்பதாகக் கருதுகிறோம்.

ஒரு பாட்டாளி வர்க்க இயக்கம் எவ்வளவு பலவீனமான சூழலிலும் தனது குறிப்பான திட்டத்தை பாட்டாளி வர்க்கக் கண்ணோட்த்தில் வைக்க வேண்டும். அப்படியான குறிப்பான திட்டத்துடன் செயல்படும் பாட்டாளி வர்க்க இயக்கம் தனது பலத்தைப் பொறுத்தும், அரசியல் அரங்கில் ஏற்படும் வர்க்க அணி சேர்க்கைக்கு ஏற்பவும் முடிவுகள் மேற்கொள்ள வேண்டும். அமைப்பு பலவீனம் என்பதைக் காட்டி முதலாளியத் திட்டத்தை முன்வைப்பது தவறானது.

ஒரு பாட்டாளி வர்க்க இயக்கத்தின் அமைப்பு பலவீனமாக இருக்கிறது என்கிற காரணத்தால் முதலாளியத் திட்டத்தை முன் வைக்கக் கூடாது. அப்படி முன் வைத்து அது தொழிலாளி வர்க்கத்தின் குறிப்பான திட்டம் எனக் கூறுவது தொழிலாளி வர்க்கத்தை ஏமாற்றுவதாகும்.

இந்தியாவிலுள்ள மார்க்சிய –லெனினியக் குழுக்கள், குழுக்களாகவே நீடிக்கக் காரணம், அவை இந்தியாவை தேசம் என வரையறுத்து அதன் அடிப்படையில் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டதிலேயே அடங்கி இருக்கிறது. இந்தத் தவறைக் களைவதன் மூலமே அமைப்பை பலப்படுத்த இயலும்.

தமிழ்த் தேச பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை முன்னணி அடிப்படையிலான பாசிச எதிர்ப்பு முன்னணி தேவை. அதன் அடிப்படையிலேயே வேலைமுறை, வேலைத் திட்டம் வகுக்க வேண்டும்.

எங்களது குறிப்பான திட்டத்திற்கான முன்னோட்டத்தை “தமிழ்நாட்டின் மீதான பார்ப்பன - பனியா பாசிச ஆட்சியை முறியடிப்போம்” என்ற தலைப்பிலான கட்டுரையை கீற்று இணைதளத்தில் 2021 ஜனவரி 5இல் வெளியிட்டுள்ளோம். அதனுடன் சேர்த்து அரசியல், பொருளியல், அயலுறவு மற்றும் பண்பாடு அரங்கிலான பணிகளை குறிப்பான திட்டமாகக் கொண்டுவர இருக்கிறோம்.

தமிழ்த் தேச இறையாண்மையின் எங்களது விமர்சனங்களுக்கு மார்க்சிய-லெனினிய அமைப்புகள் பதில் கூறுவது அவர்களது கடமையாகும். பதில் அளிக்காமல் தவிர்ப்பது அவர்கள் குறுங் குழுவாதிகளாகவே நீடிக்க விரும்புகின்றனர் எனப் பொருள்படும்.

ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி மோடிக் கும்பலின் பாசிசத்திற்கு எதிராக குறிப்பான திட்டம் தேவை என்பதைக் கவனத்தில் கொண்டு அதனை வீழ்த்தவும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கி முன்னேறுவதற்கும் எல்லா முயற்சிகளும் மேற்கொள்கிறோம். ஒரு வேளை நமது முயற்சிகள் முதலாளி வர்க்கத்தின் துரோகத்தாலும், “புரட்சிகர” அமைப்புகளின் பெரியண்ணன் தனத்தாலும், சில அறிவாளிகளின் இறுமாப்பாலும் தோல்வி அடையலாம். அதற்காக நாம் வெட்கப்படத் தேவையில்லை. நாம் வெறுமனே கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதும், பாசிசத்தை முதலாளித்துவ ஜனநாயக அமைப்புகளே வீழ்த்தும் என முதலாளித்துவதற்கு வாலாய் போவதும் இழிவானது, வெட்கக் கேடானது, வரலாற்றில் மன்னிக்க முடியாதது.

-முற்றும்-

- ச.பாரி, தமிழ்த் தேச இறையாண்மை