தமிழ்நாட்டு நிலைமை

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 10 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சிக்குப் பிறகு, குறிப்பாக 2016 முதல் பா.ஜ.கவின் பினாமியாக அ.தி.மு.க ஆட்சி நடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு, தி.மு.க ஆட்சி அமைத்துள்ளது. இது அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் ஒரு விதமான ஆறுதலைத் தந்துள்ளது என்று கூறலாம்.

ஆனால், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட அ.தி.மு.க கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, மேற்கு மண்டலத்தில் பெரும்பான்மை தொகுதிகளை வென்றுள்ளது. மேலும், நாகர்கோவில், திருநெல்வேலி, கோவை தெற்கு, மொடக்குறிச்சி ஆகிய நான்கு இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.

மேலும், தி.மு.க பார்ப்பனிய சனாதனத்துக்கு எதிராக சமரசமின்றி போராடுவதில்லை என்பது வரலாறு.

எனவே, தமிழ்நாட்டில் பார்ப்பனிய சனாதனத்துக்கு எதிரான ஜனநாயக போராட்டத்தில் ஒரு மூச்சு விடுவதற்கான அவகாசம் மட்டுமே கிடைத்துள்ளது.

மேலும், கார்ப்பரேட் முதலாளித்துவ அடிப்படையிலான பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான அரசியலில் தி.மு.க போன்ற கட்சிகள் முதலாளித்துவ தரப்பில் உள்ளன.

இந்திய நிலைமை

இந்தியாவில் ஒன்றிய அளவில் பா.ஜ.க அதிகாரத்தில் இருப்பதும், சனாதன இந்துத்துவத் திட்டங்களையும் சர்வதேச நிதி மூலதனத்துடன் கைகோர்த்த குஜராத்தி-பனியா கார்ப்பரேட் முதலாளிகளின் வலைப்பின்னலை மேலும் மேலும் வலுப்படுத்தி இறுக்குவதற்கான கொள்கைகளையும் தீவிரமாக அமல்படுத்துவதும் நாம் எதிர்கொள்ளும் சவால்களாக உள்ளன.

பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், இராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியை இழந்திருந்தாலும், டெல்லி, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனாலும், பீகாரிலும் குஜராத்திலும் இழுத்துப் பிடித்து குறைந்த பெரும்பான்மையுடனேயே ஆட்சி அமைக்க முடிந்தாலும், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் வலுவான சக்தியாக இல்லாமல் போனாலும்

 • கர்நாடகாவிலும் மத்தியப் பிரதேசத்திலும் ஹரியாணாவிலும் மணிப்பூரிலும் கோவாவிலும் சட்டப் பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்துள்ளது, பா.ஜ.க
 • ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, தெலங்கானாவின் சந்திரசேகர ராவ், ஒடிசாவின் நவீன் பட்னாயக் போன்ற மாநிலக் கட்சித் தலைவர்கள்/முதலமைச்சர்கள் ஒன்றிய அளவில் பா.ஜ.கவுடன் சமரசம் செய்து கொள்ளும் அரசியலையே நடத்தி வருகின்றனர்.
 • உத்தர பிரதேசம் என்ற பெரிய மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் உள்ளது. இமாச்சல் பிரதேசம், உத்தர்காண்ட், அசாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம் போன்ற மாநிலங்களிலும் தனியாகவோ கூட்டணிக் கட்சிகளுடனோ அதிகாரத்தில் உள்ளது, பா.ஜ.க
 • ஒன்றிய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநில ஆளுனர்கள், ஒன்றிய பிரதேசங்களின் துணைநிலை ஆளுனர்கள், அவர்கள் மூலமாக பல்கலைக் கழக துணை வேந்தர்கள், உயர் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குனர்கள், ரிசர்வ் வங்கி போன்ற பல்வேறு நிர்வாக அமைப்புகளிலும், நீதித்துறையிலும் கூட ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க ஆட்களை புகுத்துவதில் வெற்றி கண்டுள்ளது.
 • தன்னுடைய அரசியல் இலக்குகளை சாதிப்பதற்கு, ஒன்றிய அரசின் அமைப்புகளான வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை போன்றவற்றை, எதிர்க்கட்சிகள் மீதும் தன்னுடன் உடன்படாத சக்திகள் மீதும் அரசை எதிர்த்து போராடும் செயல்பாட்டாளர்கள் மீதும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது, பா.ஜ.க அரசு. மேலும், மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ள துறைகளிலும் தலையிடுவதை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
 • பெரிய ஊடகங்களில் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் கட்டுரைகள் அவ்வப்போது வந்தாலும், ஒன்றிய அரசுக்கும் மோடிக்கும் துதிபாடும் போக்கிலேயே பெரும்பாலான ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன.
 • ஒன்றிய அரசையும், இந்துத்துவ அரசியலையும் விமர்சிக்கும் thewire முதலான மாற்று இணைய ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பவர்களையும், அத்தகைய விமர்சனங்கள் வெளியாகும் சமூக ஊடக நிறுவனங்களையும் சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் மோடி அரசு மிரட்டி ஒடுக்கி வருகிறது.
 • நவீன உளவு பார்க்கும் மென்பொருளான இசுரேலின் பெகசசை பயன்படுத்தி, எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் செயல்பாட்டாளர்கள், ஏன் சொந்தக் கட்சியினரைக் கூட கண்காணித்துள்ளது மோடி அரசு. இந்த மென்பொருள் மூலம் குறி வைக்கப்பட்ட நபர்களின் ஸ்மார்ட் தொலைபேசிகளை உடைத்துப் புகுந்து தகவல்களை தொடர்ந்து திருடி வருகிறது. இதன் மூலம், அரசுக்கு எதிரான எதிர்ப்புகளை முறியடிக்கவும், செயல்பாட்டாளர்களை சிறையிலிடவும், அரசு அதிகாரிகளை மிரட்டி பணிய வைக்கவும் செய்கிறது.
 • அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவது, பாகிஸ்தான் மீதான வெறுப்புப் பிரச்சாரம், எல்லைப் புறத்தில் பதற்றம், பயங்கரவாதத் தாக்குதல் என தேசவெறியை தூண்டி விடுதல் என தனது வெகுமக்கள் அடித்தளத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்துகிறது, பா.ஜ.க.
 • பசு பாதுகாப்பு, ‘லவ் ஜிகாத்', சாதி பிரிவினைகள் இவற்றையும் பயன்படுத்தி தனது வேரை ஆழமாக ஊன்றிக் கொண்டுள்ளன ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான இந்துத்துவ சனாதன சக்திகள்.

கார்ப்பரேட், பார்ப்பனிய சனாதனத்துக்கு எதிரான கட்சிகளின் நிலைமை

இந்நிலையில், ஜனநாயகத்துக்காக போராடும் இளைஞர்களும், மாணவர்களும், செயல்பாட்டாளர்களும் வலுவான அரசியல் கட்சியாக உருப்பெறாமல், கார்ப்பரேட் சனாதனத்துக்கு எதிரான அரசியல் பலவீனமாக உள்ளது.

பார்ப்பனிய சனாதனம் என்பது இந்திய சமூகத்தை 2000 ஆண்டுகளாக ஒடுக்கி ஆளும் சித்தாந்தம் ஆகும். பார்ப்பனியம் என்ற சொல்லால் குறிக்கப்படும் சாதியக் கட்டமைப்பு காலத்துக்கு ஏற்றபடி, அதன் ஆளும் வர்க்கத்தின் தேவைக்கேற்றபடி மாறிக் கொள்கிறது. அதே நேரம் அழிவில்லாதது, மாறாதது, புராதனமானது என்ற பொருளில் சனாதனம் என்ற சொல்லால் குறிக்கப்படும் சித்தாந்தம் 2,000 ஆண்டுகளாக உழைக்கும் மக்களையும் உழைக்கும் சாதியினரையும் ஒடுக்கி வரும் ஒன்று. அது இந்திய சமூகத்தில் மனித உள்ளத்தை சின்னஞ்சிறு கூட்டுக்குள் அடையச் செய்து முடக்கிப் போட்டு வருகிறது.

எனவே, இந்தியராக பிறந்து வளரும் ஒவ்வொருவருக்கும் குழந்தைப் பருவம் முதல் ஊட்டி வளர்க்கப்படும் சனாதன சிந்தனை முறை எல்லாக் கட்சிகளிலும், அனைத்து தனிநபர்களின் சிந்தனையிலும் ஆழமாகவும் அழுத்தமாகவும் ஆட்சி செலுத்துகிறது. இந்த சனாதன சிந்தனையின் ஆதிக்கத்திலிருந்து உணர்வு ரீதியாக விடுவித்துக் கொள்ளாதவர்கள் அதற்கு சேவை செய்பவர்களாகவே செயல்படுகின்றனர்.

இவ்வகையில் காங்கிரஸ் கட்சி பா.ஜ.கவின் தீவிர இந்துத்துவத்துக்கும் தீவிர கார்ப்பரேட் அரசியலுக்கும் எதிராக தனது மிதவாத இந்துத்துவத்தையும் மிதமான கார்ப்பரேட் சார்பு அரசியலையும் முன் வைக்கும் பலவீனமான கட்சியாக உள்ளது. மாநிலக் கட்சிகளின் நலன்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகவும், சில கட்சிகள் காங்கிரசுடன் அகில இந்திய அளவில் கூட்டணி வைத்துக் கொள்ள முடியாததாகவும் உள்ளன.

உலக நிலைமையும் சோசலிச இயக்கமும்

ஏகாதிபத்திய கட்டமைப்பில் உழைப்புச் சுரண்டலும், இயற்கை வளங்களை சூறையாடுதலும், புவி வெப்பமயமாதலை ஏற்படுத்தி தீவிரப்படுத்தும் மூலதன விரிவாக்கமும் கடும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளன. மேலும், முதலாளித்துவத்தின் உள் முரண்பாடுகளால் நெருக்கடிகள் வெடித்து பொருளாதார தேக்கம், வேலையின்மை, அதன் விளைவாக உழைப்புச் சுரண்டல் கடுமையாவது, வாழ்வாதாரம் இழப்பு ஆகியவை அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான இனவாத சக்திகள் அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டாலும், டொனால்ட் டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் பல மாநிலங்களிலும், நாடு தழுவிய அரசியலிலும் இன்னும் செல்வாக்கு செலுத்துகின்றனர்.

பிரேசிலில் பொல்சனாரோ, துருக்கியில் எர்டோகன், பிரிட்டனில் போரிஸ் ஜான்சன் என பல்வேறு முக்கியமான நாடுகளில் வலதுசாரி முதலாளித்துவ கட்சிகள் ஆட்சியில் உள்ளன. தென் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் இடதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வருவதும், வலதுசாரி ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாவதும் நடந்தாலும் அவை உலக அளவிலான மாற்றை முன் வைக்க அல்லது பிற நாட்டு புரட்சிகர சக்திகளுக்கு முன் உதாரணமாக இல்லை.

அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்கும் சீனா, ரசியா ஆகிய இரண்டு நாடுகளும் தத்தமது நாட்டு நலன்களை மையமாக வைத்து முறையே அரசு முதலாளித்துவ, வெளிப்படையான முதலாளித்துவ அமைப்பை உருவாக்கி செயல்படுகின்றன.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி உள்ளது. சீன அரசு, சோசலிசத்தை கட்டியமைப்பதாக சொல்லிக் கொள்கிறது. 1949-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்த புரட்சிக்குப் பிந்தைய 70 ஆண்டுகளில் சீனா உலகின் மிகப்பெரிய அரசியல் பொருளாதார சக்தியாக வளர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு சவால் விடும் வகையில் வளர்ச்சியடைந்துள்ளது.  (சீனாவின் இந்த வளர்ச்சி பற்றி மார்க்சிய லெனினிய மதிப்பீட்டை வந்தடைய வேண்டியுள்ளது).

ஆனால்,  உண்மையான ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் சோசலிச நாடும் கடைப்பிடிக்க வேண்டிய பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற கோட்பாட்டைக் கைவிட்டு, தன் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கான சர்வதேச உறவுகளின் மீது மட்டுமே சீன அரசு அக்கறை காட்டுகிறது.

இவ்வாறாக, உலகெங்கிலும் உள்ள புரட்சிகர சக்திகளுக்கு கோட்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வழிகாட்டும் அல்லது ஆதரவு அளிக்கும் சர்வதேச சோசலிச முகாம் எதுவும் இல்லாத நிலை உள்ளது.

நான்காவது அகிலம் முதலான பெயர்களில் செயல்படும் பல்வேறு டிராட்ஸ்கிய குழுக்கள் மார்க்சிய லெனினியத்துக்கு எதிரான கோட்பாட்டு அரசியலை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

நேபாள மாவோயிஸ்டு கட்சி சர்வதேச அகிலம் ஒன்றை துவங்குவதற்கான முனைப்புடன் உலகின் பல்வேறு புரட்சிகரக் கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான முன்முயற்சி எடுத்தது. ஆனால் அக்கட்சியின் உள்முரண்பாடுகளாலும் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தாக  வேண்டிய நிலையாலும் அப்பணியானது அடுத்த கட்டத்திற்கு நகராமல் தேக்க நிலையை அடைந்து விட்டது.

மொத்தத்தில், இன்றைக்கு சர்வதேச அளவிலும் சரி இந்திய அளவிலும் சரி பிற்போக்கும் எதிர்ப்புரட்சியும் கோலோச்சுகின்றன, அவற்றை எதிர்த்த ஜனநாயக அரசியல் தாராளவாத முதலாளித்துவத்தின் எல்லைக்குள் செயல்படும் வகையில் பலவீனமாக உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை 

சி.பி.ஐ, சி.பி.எம், சி.பி.ஐ-எம்.எல் (லிபரேஷன்) போன்ற கட்சிகள் தேர்தல் அரசியலில் பங்கேற்றாலும் அவை ஓரிரு மாநிலங்களில் மட்டுமே வலுவுள்ளவையாக சுருங்கிப் போயுள்ளன.

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், சி.பி.ஐ, சி.பி.எம் ஆகியவை முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து அவர்களது மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. ஏற்கனவே சிறிய அளவில் செயல்பட்டு வந்த சி.பி.ஐ-எம்.எல் (லிபரேஷன்) மேலும் பிளவுபட்டுள்ளது.

தேர்தலில் பங்கேற்காத மார்க்சிய லெனினிய குழுக்களில், சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், தெலங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ள பழங்குடி பகுதிகளில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளனர். தடை செய்யப்பட்டு விட்ட அக்கட்சியின் செயல்பாடு நகர்ப்புறங்களிலும் சமவெளி கிராமங்களிலும் பிற மா.லெ குழுக்களின் அளவுக்கே உள்ளது.

தமிழ்நாட்டில் சொல்லிக் கொள்ளும்படி செயல்பட்டுக் கொண்டிருந்த சி.பி.ஐ-எம்.எல், மா.அ.க, தமிழ்நாடு, கடந்த சில மாதங்களாக பிளவுண்டு, பெயரளவுக்கு இருந்த செல்வாக்கையும் இழந்துள்ளது.

சி.பி.ஐ-லிருந்து பிரிந்து சி.பி.ஐ (எம்) உருவாகி, சி.பி.ஐ (எம்)-லிருந்து பிரிந்து சி.பி.ஐ (எம்.எல்) உருவாகி 55 ஆண்டுகள் ஆகி விட்டன. சி.பி.ஐ (எம்.எல்) உடைந்து உருவாகிய மா.லெ குழுக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றன.

1940-களிலும், 1950-களிலும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் அமைப்பு பலமும், 1960-கள் வரை தொடர்ந்த அரசியல் செல்வாக்கும் அதற்கடுத்த 50 ஆண்டுகளில் படிப்படியாக தேய்ந்து விட்டன. இப்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைப்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும்  பலவீனப்பட்டு நிற்பது வெள்ளிடை மலை.

இந்த நிலையில் சமூக மாற்றத்துக்காகவும், புரட்சிக்காகவும் பணியாற்ற முன் வந்திருக்கும், பணியாற்றிக் கொண்டிருக்கும் செயல்பாட்டாளர்களாகிய நாம் இந்தக் கட்சிகளுடன் எத்தகைய உறவை பேண வேண்டும், நமது செயல்பாடுகளை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

கம்யூனிச இயக்கத்தின் பணிகள் 

இந்தியாவில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் அல்லது அத்தகைய கட்சியை உருவாக்கும் இயக்கத்தின் அடிப்படையான பணிகள் என்னென்ன?

வலுவான ஒரு அகில இந்தியக் கட்சியைக் கட்டுவது

 • தொழிலாளர்களை தொழிற்சங்கங்களில் அணி திரட்டுவது
 • விவசாயிகளை அணி திரட்டி போராடுவது
 • அரசியல் பிரச்சாரத்துக்கான அச்சு அல்லது இணைய பத்திரிகை நடத்துவது
 • கார்ப்பரேட் சுரண்டலுக்கும் சனாதன அடக்குமுறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவது
 • கார்ப்பரேட் சனாதன சக்திகளை தொடர்ந்து அம்பலப்படுத்துவது
 • முதலாளித்துவ ஜனநாயக சக்திகளுடன் கைகோர்ப்பது
 • மார்க்சியத்தை கற்றுக் கொடுப்பதற்கான வகுப்புகளை நடத்துவது, குழுக்களை உருவாக்குவது

மேலே சொன்னவற்றில் ஒன்றை அல்லது பலவற்றை அல்லது அனைத்தையும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் குழுக்களும் கூடுதல் அல்லது குறைந்த அளவில் தொடர்ந்து செய்து வருகின்றனர்.  பிரச்சாரம், கிளர்ச்சி, அமைப்பு கட்டுதல், போராட்டங்கள் இவை அனைத்தும் புரட்சிகர அரசியலில், ஒன்றோடொன்று இணைந்த இன்றியைமையாத கண்ணிகள் என்பது மறுக்க முடியாத உண்மை.

 • சி.பி.ஐ (எம்), சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் மூலம் ஆலைத் தொழிலாளர் மத்தியிலும், போக்குவரத்துத் தொழிலாளர் மத்தியிலும் இன்னும் பல துறைகளிலும் பரந்து விரிந்துள்ளது. இது போலவே சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்.எல்) லிபரேஷன் போன்ற கட்சிகளிலும் தொழிற்சங்கங்களை இந்திய அளவில் நடத்தி வருகின்றனர்.
 • சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொண்ட படைகளை உருவாக்கி ஆயுதப் போர் புரிந்து வருகிறது.
 • பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகளையும், குழுக்களையும் சேர்ந்த விவசாய சங்கங்கள் வெவ்வேறு அளவில் விவசாயிகளை அணிதிரட்டி போராடுகின்றன. இதன் சமீபத்திய வெளிப்பாடாக, ஒன்றிய அரசின் வேளாண் சட்டத் திருத்தங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் போராட்டம் உள்ளது.
 • இந்தியா முழுவதும் செயல்படும் 700-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளும் குழுக்களும் நூற்றுக்கணக்கான பத்திரிகைகளை நடத்தி வருகின்றன.
 • இந்த அமைப்புகளும், பிற குழுக்களும், தனிநபர்களும் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்வதையும் மார்க்சிய லெனினிய கல்வி புகட்டுவதையும் செய்து வருகின்றனர்.

இவை அனைத்தும் இருந்தும், நம் எதிரிகளும் மதிக்கும் வகையிலான இயக்கமாக, வலுவான கோட்பாட்டு அடித்தளம் கொண்ட அமைப்புகளாக கம்யூனிஸ்டுகள் இல்லை என்பது யதார்த்தம்.

மேலும், இந்தக் கட்சிகள் அனைத்தும் தமக்கிடையே ஐக்கியமும் ஒற்றுமையும் இன்றி தனித்தனி தீவுகளாக செயல்படுகின்றன, தொழிலாளி வர்க்க இயக்கத்தை பலவீனப்படுத்துகின்றன.

எந்தக் கண்ணியைப் பற்றிக் கொள்வது?

இந்நிலையில், இளம் கம்யூனிஸ்ட் கழகம் என்ற பெயரில் ஒன்றிணைந்திருக்கும் நாம் செய்ய வேண்டியது என்ன?

lenin speechஒரு புரட்சிகர இயக்கத்துக்கு மேலே சொன்ன வேலைகள் அனைத்தும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், "அரசியல் வாழ்க்கை முழுவதுமே எண்ணற்ற கண்ணிகளோடு கூடிய முடிவே இல்லாத ஒரு சங்கிலியாகும். எந்தக் கண்ணியை நம் கையிலிருந்து தட்டிப் பறிக்க முடியாதோ, எந்தக் கண்ணி அந்தந்தத் தருணத்தில் மிக முக்கியமாய் உள்ளதோ, எந்தக் கண்ணியை வைத்திருந்தால் சங்கிலி முழுவதும் நம் கைவசமாகி விடும் உத்தரவாதம் இருக்கிறதோ, அந்தக் கண்ணியைத் தேடிக் கண்டுபிடித்து ஆன மட்டும் பலமாகக் கையில் பிடித்துக் கொள்வதில்தான் அரசியலின் ஒட்டு மொத்த கலையும் அடங்கியுள்ளது."

- லெனின், என்ன செய்ய வேண்டும் நூலில், "ஒரு அனைத்து ரசிய பத்திரிகைக்கான திட்டம்" என்ற 5-வது அத்தியாயத்தின், ஆ. "கூட்டு அமைப்பாளராக ஒரு பத்திரிகை இருக்க முடியுமா?" என்ற பிரிவில்.

இந்தத் தருணத்தில் நமக்கு மிக முக்கியமான கண்ணி எது? நாம் ஆனமட்டும் பலமாகக் கையில் பிடித்துக் கொள்ள வேண்டிய கண்ணி எது? எந்தக் கண்ணியைப் பற்றிக் கொண்டால் சங்கிலி முழுவதும் நம் கைவசம் ஆகிவிடுவதற்கான உத்தரவாதம் உள்ளது? என்பதைப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் செயல்படும் எந்தக் கட்சியாவது, நாங்கள் பிடித்துக் கொண்டிருக்கும் கண்ணிதான் சங்கிலி முழுவதையும் நம் கைவசம் ஆக்கிக் கொள்வதற்கான உத்தரவாதத்தைத் தருகிறது என்று நமக்குச் சொல்ல முடியுமா?

மாறாக, கட்சியில் இணைப்பதற்கு வழக்கமாகச் சொல்லப்படும் முக்கியமான ஒரே வாதம் 'தனியாக இருந்தால் என்ன செய்ய முடியும்? அமைப்பாக இருந்தால்தான வலிமை' என்பது மட்டும்தான். இதை ஒவ்வொரு கட்சியும் சொல்கின்றது.

"சரியான திசைவழி தீர்மானிக்கப்பட்டு விட்டதும் ஊழியர்கள் [கட்சி அமைப்பு] தீர்மானகரமானவர்களாக ஆகிறார்கள்" என்பதுதான் உண்மை. சரியான திசைவழி இல்லாத போது எவ்வளவு வலுவான, எவ்வளவு விரிவான கட்சி அமைப்பு இருந்தாலும் பலனில்லை என்பதுதான் கடந்த 100 ஆண்டுகால அனுபவம் நமக்குக் காட்டும் பாடம்.

அப்படியானால், நமது கேள்விக்கு விடை காண்பதற்கான திறவுகோல் எங்கு உள்ளது? - உழைக்கும் வர்க்கங்கள் மீதான தாக்குதல்களும் அவற்றை எதிர்த்த போராட்டங்களும்

இந்தியாவில் தொழிலாளர்கள் மீதும் விவசாயிகள் மீதும், மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் மீதும், மாநில உரிமைகள் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்களும், பார்ப்பனிய சனாதன சாதியக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேலும் மேலும் அதிகரித்துள்ளன. இவற்றை எதிர்த்த போராட்டங்களும், அவற்றின் மீதான பரந்து பட்ட மக்களின் வெறுப்புணர்வும் இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசியல் உணர்வூட்டியுள்ளன. தொழிலாளர்கள் மத்தியிலும், விவசாயிகள் மத்தியிலும் போராட்ட உணர்வு மேலோங்கியுள்ளது.

பா.ஜ.கவின் ஆட்சியில் நிகழும் தீவிரவாத இந்துத்துவ தாக்குதல்களும், ஒரே நாடு ஒரே தேசம் என்ற முழக்கத்தின் கீழ் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதும், கார்ப்பரேட் நலனுக்கான திட்டங்கள் மூர்க்கமாக அமல்படுத்தப்படுவதும் இந்திய சமூகத்தில் உள்ள முரண்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.

 • குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் முன்னெடுத்த போராட்டங்கள் டெல்லியில் தொடங்கி நாடு முழுவதும் பரவின.
 • 3 வேளாண் சட்டங்களை எதிர்த்த பஞ்சாப்-ஹரியானா-மேற்கு உத்தர பிரதேச விவசாயிகளின் போராட்டமும் நாடு முழுவதும் தாக்கத்தைச் செலுத்துகிறது.
 • மாநில உரிமைகளைப் பறிப்பதை எதிர்த்து, மாநில முதலாளிகளின் நலன்களுக்கு எதிராக, அம்பானி அதானி முதலான ஒரு ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினருக்கு மோடி அரசு சாதகமாக நடந்து கொள்வதை எதிர்த்து மாநில ஆளும் வர்க்கங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன.
 • மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசு பா.ஜ.கவின் ஒன்றிய அரசுக்கு எதிரான உறுதியான எதிர்ப்பை முன்னெடுக்கிறது.
 • தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடாகா போன்ற மாநிலங்களிலும் மாநில உரிமைகளுக்கு ஆதரவான சக்திகளின் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
 • பா.ஜ.கவின் சாணக்கிய அரசியல், மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளை முற்றச் செய்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு, இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை தகராறு, மாநில போலீஸ் படையினருக்கு இடையேயான ஆயுதம் தாங்கிய மோதலாக உருவெடுத்ததை சமீபத்தில் அசாம், மிசோராம் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையில் பார்க்கிறோம்.
 • மோடி-அமித் ஷா பெகசிஸ் மென்பொருளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு பலரை உளவு பார்த்ததை எதிர்த்த எதிர்க்கட்சிகளின் விடாப்பிடியான போராட்டம், இந்திய முதலாளிகளுக்கு இடையேயான முரண்பாடு தீவிரமடைந்துள்ளதை காட்டுகிறது.

உலக அளவிலும் ஏகாதிபத்திய நாடுகளிலும், பிற நாடுகளிலும் அரசியல் முரண்பாடுகளும் நெருக்கடிகளும் போராட்டங்களும் தொடர்ந்து வெடித்துப் பரவி வருகின்றன.

இந்தப் புறநிலை நெருக்கடிகளைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர் வர்க்க இயக்கத்துக்கு தலைமை தாங்கிச் செல்லும் வகையில் புரட்சிகர அகநிலை சக்திகள் பலமாக இல்லை என்பதை மேலே பார்த்தோம்.

இப்போது அனைவரின் முன் நிற்கும் கேள்வி, நாம் என்ன செய்ய வேண்டும் என்பது. குறிப்பாக, சோசலிசப் புரட்சியை நோக்கிய ஜனநாயக இயக்கத்துக்கும், ஜனநாயகப் புரட்சிக்கும் தலைமை ஏற்று வழிநடத்திச் செல்ல வேண்டிய கம்யூனிஸ்டுகள் என்ன செய்ய வேண்டும் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்து நிற்கிறது.

நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்பது திருவள்ளுவர் வாக்கு.  கலைஞர் உரை - "நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன?  நோய் தீர்க்கும் வழி என்ன?  இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்யவேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)”.

நம் நாட்டை பிடித்திருக்கும் பிணிகளுக்கான நோய்க்குறிகள் எவ்வாறு வெளிப்படுகின்றன? இன்று பிற்போக்கு சக்திகளும், எதிர்ப்புரட்சிகர சக்திகளும் உழைக்கும் மக்கள் மீது தொடுக்கும் தாக்குதல்கள் எந்தெந்த வடிவத்தில் நிகழ்கின்றன?

அ. பார்ப்பனிய சனாதனத்தின் வெறுப்பு அரசியல்

 1. முஸ்லீம்கள் மீதான வெறுப்பைத் தூண்டி மதவெறி பிரச்சாரம், கலவரம், தாக்குதல்கள்
 2. முஸ்லீம்களின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பது, இந்துமத அடையாளங்களை அரசு அடையாளங்களாக மாற்றுவது
 3. பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதல்களும் படுகொலைகளும்
 4. ‘லவ் ஜிகாத்' என்ற பெயரில் இளம் காதல் இணையினரையும், திருமணமான தம்பதியினரையும் பிரித்து வைப்பது, காதலுக்கு எதிரான சட்டங்களை இயற்றுவது
 5. சாதி ரீதியாக சமூகத்தை மேலும் பிளவுபடுத்தி தேவைப்படும் போது கலவரங்களை நடத்துவது
 6. மாநிலங்களின் உரிமைகளை பறித்து கல்வி, மருத்துவம், அரசாட்சி, கலாச்சாரம் போன்ற அனைத்துத் துறைகளையும் இந்திய அளவில் இந்துத்துவ மயமாக்குவது.

ஆ. ஏகாதிபத்திய/உள்நாட்டு கார்ப்பரேட் சுரண்டல் அரசியல்

 1. கார்ப்பரேட்டுகளின் இலாபத்தின் மீதான வரி விகிதத்தைக் குறைப்பது
 2. பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பது
 3. கல்வி, மருத்துவம், எரிபொருள் வினியோகம், தொலைதொடர்பு, ரயில் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் கார்ப்பரேட் மூலதனத்தை அனுமதிப்பது
 4. வங்கிகளையும் காப்பீட்டு நிறுவனங்களையும் கார்ப்பரேட் மயமாக்குவது, பங்குச் சந்தை கடன் பத்திரச் சந்தை ஆகியவற்றில் பந்தய மூலதனத்தை ஊக்குவிப்பது.
 5. கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு வசதியாக தொழிலாளர்களின் உரிமைகளை சட்ட ரீதியாக பறிப்பது
 6. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பலியிட்டு கார்ப்பரேட் மயமாக்கலுக்கு பாதை போடுவது
 7. மீன்வள மசோதா, நகைக்கடைகளை ஒழுங்குபடுத்துவது முதலான நடவடிக்கைகள் மூலம், சுயேச்சையான சிறுதொழில்களை அழித்து கார்ப்பரேட் மயமாக்கலுக்கு வழி வகுப்பது
 8. இயற்கை வளங்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு கூட்டிக் கொடுப்பது
 9. அரசு நிர்வாகத்தையே கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பது

ஒட்டு மொத்த பொருளாதாரமும் முடக்கப்பட்டு, பெரும்பாலான தொழிலாளர்களும் சிறு தொழில் செய்பவர்களும் வருமானம் இழந்த நிலையில், பங்குச்சந்தைக் குறியீட்டு எண் உயர்ந்து கொண்டே போகிறது. அம்பானி, அதானி போன்ற முதலாளிகளின் சொத்து மதிப்பு உயர்கிறது. இந்திய நிறுவனங்களிலும், பொதுவாக இந்தியப் பொருளாதாரத்திலும் அன்னிய மூலதனத்தின் ஆதிக்கம் அதிகரிக்கிறது.

இவற்றுக்கு எதிரான போராட்டங்கள் எப்படி நிகழ்கின்றன?

பார்ப்பனிய சனாதனத்துக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தில் அம்பேத்கரிய அரசியலை பின்பற்றும் தலித் கட்சிகளும் அமைப்புகளும் ஒரு புறமும், மாநில உரிமைகளையும் தேசிய முதலாளிகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தி.மு.க, திரிணாமூல் காங்கிரஸ் போன்ற  மாநிலக் கட்சிகள் மறுபுறமும் முன்னணியில் உள்ளன.

இத்தகைய போராட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள், முதலாளித்துவ ஜனநாயகக் கட்சிகளுக்கு வால் பிடிப்பவையாகவோ அல்லது சமரசம் செய்து கொள்பவையாகவோ உள்ளன. பல்வேறு வகையான ஜனநாயகப் புரட்சிகளை கட்சித் திட்டங்களில் வைத்திருந்தாலும், பார்ப்பனிய சனாதன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, சிறுபான்மையினர் உரிமை, மாநிலங்களின் (தேசிய இனங்களின்) உரிமை இவை தொடர்பான போராட்டங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமை இல்லை என்பது யதார்த்தம்.

ஏகாதிபத்திய/உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பல இடங்களில் முன்னணி வகிக்கின்றன. ஆனால் இந்தப் போராட்டங்களில் சர்வதேச கார்ப்பரேட் நிதி பெறும் அறக்கட்டளைகளால் இயக்கப்படும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடு வலுவாக உள்ளது போல தோற்றமளிக்கிறது. ஆனால், அவை இந்தப் போராட்டங்களை திசைதிருப்பி முடக்கி, ஆளும் வர்க்கத்துக்கு சாதகமாக முடித்து விடும் போக்கைக் கடைப்பிடிக்கின்றன.

இளம் கம்யூனிஸ்ட் கழகம் எதை மையமான பணியாகக் கொள்ள வேண்டும்?

லெனின் 1901-ம் ஆண்டு மே மாதம் எழுதிய "எங்கிருந்து தொடங்குவது" என்ற தனது கட்டுரையில் (லெனின் தொகுதி நூல்கள் (ஆங்கிலம்), 5, பக்கம் 17),

“சமீப ஆண்டுகளில் 'என்ன செய்ய வேண்டும்' என்ற கேள்வி ரசிய சமூக ஜனநாயகவாதிகளை குறிப்பிடத்தக்க தாக்கத்துடன் எதிர் கொண்டு வருகிறது. (1880-களின் இறுதியிலும் 1890-களின் தொடக்கத்திலும் இருந்தது போல) நாம் எந்தப் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி யைப் பற்றியது இல்லை, மாறாக, தெரிந்த பாதையில் என்ன நடைமுறை அடிகளை எடுத்து வைக்க வேண்டும் என்பதும் அவற்றை எப்படி எடுத்து வைக்க வேண்டும் என்பதும்தான் கேள்வி"

என்று குறிப்பிடுகிறார்.  (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

2021-ல் இந்திய கம்யூனிஸ்டுகள் முன் நிற்கும் கேள்வி, “தெரிந்த பாதையில் என்ன நடைமுறை அடிகளை எடுத்து வைக்க வேண்டும் என்பதும் அவற்றை எப்படி எடுத்து வைக்க வேண்டும்" என்பது இல்லை, மாறாக, “எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்ற கேள்விதான் நம் முன் நிற்கிறது.

ஏன் அப்படிச் சொல்கிறோம்?

கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்பாட்டு அடித்தளம்

ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1960-கள் வரை முறையான கட்சித் திட்டம் ஒன்றை வகுத்திருக்கவில்லை. கட்சியின் பிளவுக்குப் பின் தோன்றிய சி.பி.ஐ, சி.பி.ஐ(எம்) கட்சிகள் தமது கட்சித் திட்டத்தை சீனப் பாதையா, ரசியப் பாதையா அல்லது இரண்டுக்கும் நடுவிலான பாதையா என்ற அடிப்படையிலேயே வகுத்துக் கொண்டன. இந்திய சமூகம் பற்றிய பருண்மையான மார்க்சிய லெனினிய ஆய்வுகளைச் செய்து அதன் அடிப்படையில் புரட்சிக்கான போர்தந்திரத்தை வகுத்து, செயல்தந்திரங்களை உருவாக்கி செயல்படவில்லை.

எனவே, இந்தக் கட்சிகளின் திட்டங்களில் இந்திய சமூகத்தின் மிக முக்கியமான சமூகப் பிரச்சினையாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் சாதிய படிநிலைக் கட்டுமானம் பற்றிய மதிப்பீடும், இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகள் பற்றிய கோட்பாடும் மேலோட்டமாகவே உள்ளன. சாதி என்பதை தீண்டாமை மட்டுமே என்று சுருக்கிப் பார்ப்பது, அரசியல், கலாச்சார தளங்களில் மட்டுமின்றி உற்பத்தி உறவுகளிலும் அதன் மூலம் உற்பத்தி சக்திகள் மீதும் அது ஆதிக்கம் செலுத்துவதை அங்கீகரிக்கத் தவறுவது, தேசிய இனங்களின் உரிமைகளை மாநில உரிமைகள் என்று குறுக்குவது என்ற பாரிய தவறுகள் கட்சித் திட்டங்களில் நீடிக்கின்றன.

இதற்குப் பின்னர் தோன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) 'சீனப் பாதையே நமது பாதை' என்று வரையறுத்து சமூகம் பற்றிய பருண்மையான ஆய்வு இல்லாமல் அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவம், புதிய ஜனநாயகப் புரட்சி, நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை என்று வரையறுத்துக் கொண்டது. அதிலிருந்து பிளவுபட்டு தோன்றிய பல்வேறு மா.லெ குழுக்களும் கட்சிகளும் இதே முடிவுகளை சிறிதளவு மாற்றியும் சேர்த்தும் கொண்டனவே தவிர, இந்தியாவின் சாதியக் கட்டமைப்பு, இந்திய பல்தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருப்பது, இந்துத்துவ அரசியல் இசுலாமியர்களை எதிரிகளாக சித்தரிப்பது இவை தொடர்பான வரலாற்று ஆய்வை செய்யவில்லை.

மாறாக, இந்தியா குறித்து மார்க்ஸ் முன் வைத்த ஆசியபாணி உற்பத்தி முறை என்பதை நிராகரித்து, ஐரோப்பாவைப் போலவே இந்தியாவிலும் உற்பத்தி முறைகள் நிலவின என்ற அடிப்படையில், இந்திய நிலப்பிரபுத்துவம் அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவம் ஆக மாறி உள்ளது என முடிவு செய்து கொண்டன.

ஆசியபாணி உற்பத்தி முறையை தூக்கிப் பிடிப்பதாகச் சொல்லிக் கொண்ட சி.பி.ஐ-எம்.எல், மா.அ.க, தமிழ்நாடு என்ற அமைப்பும், ஆசிய பாணி உற்பத்தி முறைக்கும் நிலப்பிரபுத்துவத்துக்கும் வேறுபாடு எதுவும் இல்லை என்று நிறுவ முயற்சித்தது. அத்தகைய அவியல்வாதத்தின் அடிப்படையில் இந்திய சமூகத்தில் அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை நிலவுகிறது என்ற அதே வரையறையை தக்க வைத்துக் கொண்டது. ஆசிய பாணி உற்பத்தி முறை, அதன் இந்திய வடிவத்தின் தனிச்சிறப்பான சாதி வருணாசிரம கட்டமைப்பு ஆகியவற்றை குறித்து பருண்மையான ஆய்வுகளைச் செய்து கோட்பாட்டு முடிவுகளை வந்தடைந்து அதன் அடிப்படையில் கட்சித் திட்டத்தை உருவாக்கவில்லை.

சர்வதேச நிலைமைகளைப் பொறுத்தவரை, அனைத்துக் கட்சிகளுமே, 1920-களுக்குப் பிறகு ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான உறவிலும், சோசலிச முகாமுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையேயான உறவிலும், அதன் பின்னர் 1990-களுக்குப் பிறகு சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களையும் முழுமையாக ஆய்வு செய்து முடிவுகளை எடுக்கவில்லை.

அவ்வப்போது ஏற்படும் அரசியல், பொருளாதார மாற்றங்களை ஆய்வு செய்து தமது அரசியல் செயல்பாட்டுக்கான திட்டமாக வகுத்துக் கொண்டாலும், குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றி மார்க்சிய பேராசிரியர்களும் பிற அறிஞர்களும் முன் வைக்கும் தனித்தனியான அறிவுத்துறை ஆய்வு முடிவுகளை தமது பத்திரிகைகளில் கட்டுரைகளாக பிரசுரித்தாலும், அவற்றைத் தொகுத்து இந்திய சமூகம் பற்றிய பருண்மையான ஆய்வு செய்து, அதன் முடிவுகளை கட்சித் திட்டத்தில் இணைத்து புரட்சிக்கான பாதையை வகுக்கவில்லை.

இவ்வாறாக, சி.பி.ஐ-ன் தேசிய ஜனநாயகப் புரட்சி, சி.பி.ஐ(எம்)-ன் மக்கள் ஜனநாயகப் புரட்சி, சி.பி.ஐ (எம்.எல்) - லிபரேஷன், சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) முதலான மார்க்சிய லெனினிய அமைப்புகளின் புதிய ஜனநாயகப் புரட்சி என பல்வேறு கட்சிகளும் இந்தியப் புரட்சியின் தன்மையை வரையறுத்துள்ளன. மேலும், தேர்தல் பாதை, நீண்டகால மக்கள் யுத்தப் பாதை, இந்த இரண்டும் கலந்த கலப்புப் பாதை என வெவ்வேறு கட்சிகள் வெவ்வேறு பாதைகளை வரையறுத்து வைத்துள்ளன.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டு வரலாற்றிலும் சரி, அதிலிருந்து பிளவுண்டு உருவான கட்சிகளின் மற்றும் குழுக்களின் 50-க்கும் அதிகமான ஆண்டு வரலாற்றிலும் சரி, புரட்சிக்கான இந்தத் திட்டங்களும், பாதைகளும் கோட்பாட்டுத் தெளிவையோ, நடைமுறையில் முன்னேற்றங்களையோ கண்டிருக்கவில்லை என்பது நம் முன் நிற்கும் உண்மை.

இந்தியப் புரட்சிக்கான மார்க்சிய லெனினிய கோட்பாடு

இது தொடர்பாக ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு முன் வைத்த அறிக்கையிலிருந்து சில பகுதிகளை சில மாற்றங்களுடன் தருகிறோம்.

“இந்திய சமூகம் பற்றிய புரிதலில் உள்ள போதாமையே இந்திய கம்யூனிஸ்ட் அமைப்புகளின் பொதுவான அம்சமாக உள்ளது. சமூகத்தின் பருண்மையான நிலைமைகளை மார்க்சிய-லெனினிய முறையில் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் கட்சித் திட்டம் மற்றும் புரட்சிக்கான போர்த்தந்திரம் செயல்தந்திரம் வகுத்து, மக்களின் சமூக உணர்வு மட்டத்தை வளர்த்தெடுப்பதற்கு மாறாக வால் பிடிப்பது அல்லது, இதற்கு நேர்மாறாக புறநிலை யதார்த்தத்திற்கு பொருந்தாத திட்டத்தை முன்வைத்து மக்களின் உணர்வு நிலைக்கு அப்பால் நிற்பது ஆகிய இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். இவ்விரு பிரிவினருமே தம்மைப் பற்றிய மிகைமதிப்பீடு என்ற புதைகுழியில் சிக்கிக் கொண்டு, அதிலிருந்து மீள்வதற்கான வழி தெரியாமல், அதிலேயே மூழ்கிப் போகின்றனர்.

அ. இந்திய துணைக்கண்டத்தின் சமூக அரசியல் பொருளாதார படிவம்

 1. சிந்து சமவெளி நாகரீகம் பற்றியும் ஆரியர் வருகைக்கு முன்பு இந்தியாவில் நிலவிய உற்பத்தி முறை பற்றியும் மார்க்சிய லெனினிய மதீப்பீடு
 2. இந்தியாவில் மார்க்ஸ் வரையறுத்த ஆசியபாணி சொத்துடமை வடிவம் நிலவியது என்பது பற்றி பருண்மையான ஆய்வுகளை மேற்கொண்ட பிறகுதான் அது பற்றிய மதிப்பீட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்திருக்கின்றனவா?
 3. இந்திய சமூகத்தின் தனிச்சிறப்பான அம்சமான வருணாசிரம/சாதிய கட்டமைவு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மீது தாக்கம் செலுத்தியதா தற்போது அதன் தாக்கம் எப்படி உள்ளது? இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் போர்த் தந்திரம், புரட்சிக்கான திசைவழியில் வருணாசிரமம்/சாதி என்ற அம்சம் புறக்கணிக்கப்பட்டிருப்பது சரியானதா?
 4. இந்திய சமூகத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் மாற்றமும் உலகின் பிற பகுதிகளில் குறிப்பாக மேற்கு ஐரோப்பாவில் நிகழ்ந்த வளர்ச்சிப் போக்கிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? அதன் அடிப்படையில் இந்தியாவின் பருண்மையான நிலைமைகளைப் பற்றிய பருண்மையான ஆய்விலிருந்து இந்தியப் புரட்சிக்கான கோட்பாட்டை உருவாக்குவது. எப்படி?
 5. இந்திய சமூகத்தில் தோன்றிய, பரவிய மதங்கள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் என்ன பங்கை செலுத்தின? அவற்றின் தாக்கம் என்ன? மேற்கு ஐரோப்பாவில் கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கம், அதன் பின் முதலாளித்துவ உற்பத்தி முறை தோன்றுவதற்கு இணையாக வளர்ந்த புரோட்டஸ்டண்ட் இயக்கத்தின் பங்கு ஆகியவற்றுக்கு இணையாக இந்தியாவில் நிகழ்ந்ததா? ஆங்கிலேயர்களால் இந்து மதம் என்பது கட்டமைக்கப்படுவதற்கு முன்னர் இந்தியாவின் மதங்கள் உற்பத்தி முறைகளின் மீது என்ன தாக்கம் செலுத்தின?
 6. இந்தியாவின் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு பகுதிகளின் வளர்ச்சிப் போக்குகள் ஒரே மாதிரி இருந்தனவா? இல்லையென்றால் அதற்கான காரணம் என்ன? மேலும் ஜம்மு&காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களுடனான இந்திய அரசின் உறவுகளின் தன்மை பற்றிய மதிப்பீடு.
 7. இந்தியாவின் தேசிய இனங்கள் முழு வளர்ச்சி பெற முடியாததற்கான தடைகள் குறித்து. இது குறித்து பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் வைத்திருக்கும் நிலைப்பாடுகள் சரியானவைதானா?
 8. இன்றைய இந்திய அரசியலில் இந்துத்துவ சக்திகளால் கட்டியமைக்கப்படும் இசுலாமியர் பற்றிய வரலாற்றின் போலித்தனத்தின் பின் இருக்கும் வரலாற்று உண்மை என்ன? இந்தியாவில் இஸ்லாமுக்கும் பார்ப்பனிய மதத்துக்கும் இடையேயான உறவு ஆங்கிலேயர் வருகைக்கு முன்பும் பின்பும் எவ்வாறு இருந்தது? மாற்றமடைந்தது? அது உற்பத்தி சக்திகளின் மீது எத்தகைய தாக்கத்தை செலுத்தியது?
 9. இன்றைய அரசியல் சூழலை குறிக்கப் பயன்படுத்தப்படும் பார்ப்பன பாசிசம் என்ற கருத்தாக்கம் உற்பத்தி முறையுடனான உறவை பிரதிபலிக்கிறதா? பார்ப்பன சனாதனம் என்ற கருத்தாக்கம் வரலாற்று ரீதியிலும் இப்போதும் உற்பத்தி முறையுடனான உறவை எவ்வாறு பிரதிபலிக்கிறது?

சர்வதேச நிலைமை

 1. 1990-களுக்குப் பிந்தைய உலக முதலாளித்துவம்
  1. 19-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவத்திலிருந்தும்,
  2. 20-ம் நூற்றாண்டில் உலகப் போர்களின் போதான உலக முதலாளித்துவத்திலிருந்தும்,
  3. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பனிப்போர் கால உலக முதலாளித்துவத்திலிருந்தும் எப்படி வேறுபடுகிறது?
 2. இன்றைய உலகத்தில் முன்னணி முதலாளித்துவ நாடுகளுக்கு இடையேயான சர்வதேச உறவுகளை ஆளும் பொருளாதார விதிகள் என்ன?
 3. இன்றைய உலகத்தில் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் பின்தங்கிய உலக நாடுகளுக்கும் இடையேயான சுரண்டல் உறவு எந்தத் தன்மைகளைக் கொண்டுள்ளது?
 4. சீனாவைப் பற்றி மார்க்சிய-லெனினிய குழுக்கள் 1980-களில் முன் வைத்த மதிப்பீடுகள் சரியானவையா? கடந்த 70 ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சீனாவில் நடந்து வரும் ஆட்சியை எப்படி மதிப்பிடுவது? சீன அரசு பின்பற்றுவது சீன இயல்புகளைக் கொண்ட சோசலிசப் பாதையா அல்லது முதலாளித்துவ பாதையா?
 5. ஏகாதிபத்திய சுரண்டல் உறவுகள் இந்தியா போன்ற பின்தங்கிய உலக நாடுகளின் உள்நாட்டு பொருளாதார உறவுகளில் (வர்க்க உறவுகளில்) எத்தகைய தாக்கம் செலுத்துகின்றன? எத்தகைய முரண்பாடுகளையும் போராட்டங்களையும் தோற்றுவிக்கின்றன?
 6. இந்த உறவுகள் பற்றிய சர்வதேச மார்க்சிய ஆய்வுகள் எனக் கருதப்படுபவை சரியான முடிவுகளை முன்வைக்கின்றனவா?
 7. இன்றைய உலகம் பற்றிய முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாடுகள் என்ன சொல்கின்றன? ஆளும் வர்க்கங்களின் கொள்கையாக அமல்படுத்தப்படும் இந்தக் கோட்பாடுகள் பற்றிய மார்க்சிய லெனினிய விமர்சனங்கள்.
 8. பல்வேறு நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த மாற்றங்களை அரசியல் ரீதியாக எவ்வாறு அணுகுகின்றன? எத்தகைய பங்காற்றுகின்றன? குறிப்பாக, நமது அண்டை நாடான நேபாளத்தில் மாவோயிஸ்ட் கட்சியின் செயல்பாட்டை எப்படி மதிப்பிடுவது? வியட்நாம், கியூபா, வடகொரியா போன்ற நாடுகள் பற்றிய நமது மதிப்பீடு என்ன?

தொகுப்பாகச் சொன்னால், 21-ம் நூற்றாண்டில் புரட்சிகர உடைப்பை ஏற்படுத்தும் கண்ணி பற்றிய மார்க்சிய கோட்பாடு என்ன?”

ஆய்வுப் பணி செயல்தந்திரமாக

இந்திய சமூகத்தின் பருண்மையான நிலைமைகளை ஆய்வு செய்வது, அதன் அடிப்படையில் இந்தியப் புரட்சி பற்றியகோட்பாட்டு முடிவுகளை வந்தடைவது இன்னும் நிறைவேறாத தனிச்சிறப்பான சூழலில் நாம் உள்ளோம். எனவே, இந்திய சமூகத்தைப் பற்றிய மார்க்சிய லெனினிய ஆய்வின் அடிப்படையில் கட்சித் திட்டம் மற்றும் புரட்சிக்கான போர்த்தந்திரம் ஆகியவற்றை வரையறுத்து அவற்றின் ஒளியில் செயல்தந்திரம் வகுப்பது சாத்தியமில்லாமல் உள்ளது.

இதன்படி, இந்திய சமூகம் பற்றியும், இன்றைய சர்வதேச அரசியல் பொருளாதார நிலைமைகள் பற்றியும் செய்யும் ஆய்வுப் பணி என்பது நம் கையிலிருந்து தட்டிப் பறிக்க முடியாத, இந்தத் தருணத்தில் மிக முக்கியமாய் உள்ள, சங்கிலி முழுவதும் நம் கைவசமாகி விடுவதற்கு உத்தரவாதம் தரும் கண்ணியாக உள்ளது.

ரசியாவில், 19-ம் நூற்றாண்டின் இறுதியில், சமூக ஜனநாயக (கம்யூனிஸ்ட்) இயக்கம் எதிர்கொண்ட பிரச்சினை, நாடு முழுவதும் உள்ள மார்க்சிய குழுக்கள் சிதறுண்டு கிடப்பது என்பதே. அகில ரசிய பத்திரிகை ஒன்றை நடத்தும் முயற்சிகள் அரைகுறையாகவும், தொடர்ச்சியின்றியும் முடிந்து போயிருந்தன.

இந்நிலையில், அந்த குழுக்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் அகில ரசிய அரசியல் பத்திரிகை ஒன்றை நடத்துவதன் மூலம் சமூக ஜனநாயக இயக்கத்தை ஒன்றுபடுத்துவதுதான் பின்பற்ற வேண்டிய செயல்தந்திரம் என்று லெனின் தலைமையிலான தோழர்கள் முடிவு செய்து இஸ்க்ரா பத்திரிகையை ஆரம்பித்தனர்.

நாடு முழுவதும் உள்ள மார்க்சிய குழுக்களை, இஸ்க்ரா பத்திரிகையை இரகசியமாக பெற்று வினியோகிப்பது, பத்திரிகைக்கு செய்திகளை எழுதி அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்ளும்படியும், உள்ளூர் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிடுமாறும் கேட்டுக் கொண்டனர்.

அத்தகைய அகில ரசிய பத்திரிகை ஒரு கோட்பாட்டு ஆசிரியனாகவும், அரசியல் பிரச்சாரகனாகவும் அமைப்பாளனாகவும் செயல்படும், ரசிய சமூக ஜனநாயக இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும் செயல்பட்டது.

நம்மைப் பொறுத்தவரையில், எந்த ஒரு பணி இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கான கோட்பாட்டு ஆசிரியனாகவும், அரசியல் பிரச்சாரகனாகவும் அமைப்பாளனாகவும் செயல்படுவதற்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது? இந்தியாவில் பிளவுண்டு பலவீனப்பட்டு உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளையும் குழுக்களையும் ஐக்கியப்படுத்துவதற்கான வழிமுறையாக உள்ளது?

மேலே சொன்னது போல, இந்திய சமூகம் பற்றிய மார்க்சிய லெனினிய அடிப்படையிலான பருண்மையான ஆய்வும், 21-ம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் பற்றிய மார்க்சிய லெனினிய ஆய்வும் நேர்மையான புரட்சிகர சக்திகளை ஐக்கியப்படுத்தி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அவசியமாக உள்ளன.

இத்தகைய ஆய்வுப்பணி கடந்த 100 ஆண்டு காலத்தில் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்பதை மேலே பார்த்தோம். இந்நிலையில் இன்றைய சமூக நிலைமைகளை மார்க்சிய லெனினிய முறையில் பருண்மையாக ஆய்வு செய்யும் பணியை பலமாகக் கையில் பிடித்துக் கொள்வதை நமது செயல்தந்திரமாக அமைத்துக் கொள்கிறோம்.

கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் குழுக்களுடனும் உறவு

இந்நிலையில், செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் குழுக்களுடனும் நமது உறவு என்ன?

அவர்களிடமிருந்து முழுவதும் துண்டித்துக் கொண்டு தனியாக ஒரு கட்சியைக் கட்டி அமைக்கப் போகிறோமா? அல்லது இந்தக் கட்சிகளுடனும் குழுக்களுடனும்  நீண்ட விவாதங்களின் அடிப்படையில் புரிதல் ஏற்பட்டு குறிப்பிட்ட கட்சிகளுடன் ஐக்கியப்பட்டு ஒரு ஒன்றுபட்ட கட்சியை உருவாக்கப் போகிறோமா? அல்லது அத்தகைய விவாதங்களின் ஊடாக ஒரு கட்சியுடன் இணைந்து விடுவோமா?

இந்தக் கேள்விகளுக்கான விடை, இந்திய சமூகம் பற்றியும், இன்றைய அரசியல் பொருளாதார நிலை பற்றியும் நமது ஆய்வின் முடிவுகளை சார்ந்து அமையும். அந்த முடிவுகளின் அடிப்படையில் மார்க்சிய லெனினிய கட்சிகளுடனும் குழுக்களுடனும் சித்தாந்த போராட்டம் நடத்துவதன் மூலம் நமது ஐக்கியத்துக்கான முயற்சியை முன்னெடுப்போம்.

அதாவது, நாம் மிகச்சிறந்த மிக முற்போக்கான முன்னோடிகளின் மிகச்சிறந்த மரபுரிமையிலிருந்தும், ஜனநாயகப் போராட்டத் தொடர்ச்சியிலிருந்தும் முறித்துக் கொள்ளவில்லை. இந்திய சமூகத்தின் பருண்மையான நிலைமைகளுக்குப் பொருந்தாத அரசியல் கோட்பாடுகளில் இருந்தும் அவற்றை ஒட்டிய நடைமுறைகளிலிருந்தும் மட்டுமே முறித்துக் கொள்கிறோம்.

இப்போது நம்முடைய செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்?

ஆய்வுப் பணியில் நேரடியாக ஈடுபடும் தோழர்களைத் தவிர, மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்களும் ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டுமா, மற்ற வேலைகளை எல்லாம் கைவிட்டு விட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

அரசியல் பிரச்சாரம், அமைப்பு கட்டுவது, மார்க்சியக் கல்வி, பத்திரிகை நடத்துவது போன்ற அரசியல் வாழ்வின் பிற பணிகள் அனைத்தையும் அந்தந்த அரங்கில் உள்ள தோழர்கள் தொடர்ந்து செய்வோம். ஆனால், அவை அனைத்தையும் இந்த ஆய்வுப் பணியை மையப்படுத்தியதாக அமைத்துக் கொள்வோம்.

அதாவது, இப்போதைய செயல்தந்திரமான, ஆய்வுப் பணி என்பதன்படி அனைத்து தோழர்களும் ஆய்வுப் பணிக்கு இசைவாக தமது முதன்மை வேலைகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

நாம் எடுத்துக் கொண்டுள்ள ஆய்வுப் பணிகள்

 1. இந்திய சமூகம் பற்றிய ஆய்வு - ஏடறிந்த வரலாற்றுக் காலம் தொட்டு இன்று வரை
 1. தருமபுரி பகுதியில் சில கிராமங்களில் சாதிய கட்டமைப்பு பற்றி கள ஆய்வு
 1. சர்வதேச அரசியல் பொருளாதார நிலைமைகள்
 2. கொங்கு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார மாற்றங்கள் - அங்கு ஆர்.எஸ்.எஸ்/பாஜகவின் வளர்ச்சிக்கு பின் இருக்கும் காரணிகள்
 3. கடலோர மாவட்டங்களைப் பற்றியும் மீன்பிடித்தொழில் பற்றியும் ஆய்வு

ஆய்வுப் பணியில் நேரடியாக ஈடுபடாமல், பிற வேலைகளைச் செய்து வரும் YCL தோழர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொருவரும் தமது வேலைத் திட்டத்தையும் செயல்பாடுகளையும் மேலே சொன்ன ஆய்வுப் பொருளை ஒட்டி, ஆய்வுப் பணிக்கு வலு சேர்ப்பதாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

 • இந்த ஆய்வுப் பொருள் தொடர்பான மேலும் தலைப்புகளில் கள ஆய்வுகளை முன்னெடுப்பது. இந்தக் கண்ணோட்டத்தில் போராட்டங்களை முன்னெடுப்பது, போராட்டங்களைப் பற்றியும் அரசியல், சமூக நிகழ்வுகள் பற்றியும் மதிப்பீடு செய்வது
 • ஆய்வுப் பொருள் தொடர்பான நூல்களை வாசித்து விவாதிப்பது (வாசிப்பு வட்டங்கள்) - உதாரணமாக, மார்க்சிய பொருளாதார நூல்கள், அம்பேத்கரின் சாதி பற்றிய நூல்கள்
 • ஆய்வுப் பொருள் தொடர்பான உரைகள், விவாதங்களுக்கு ஏற்பாடு செய்வது (வாசிப்பு வட்டங்கள்) - உதாரணமாக, சாதி ஒழிப்பில் அம்பேத்கர், பெரியார் என்ற உரை
 • ஆய்வுப் பொருள் தொடர்பான செய்திகளையும் கட்டுரைகளையும் தேர்ந்தெடுத்து எழுதி வெளியிடுவது
 • ஆய்வுப் பொருள் தொடர்பான வீடியோக்களை தயாரித்து வெளியிடுவது
 • ஆய்வுப் பணியோடு இயைந்த வகையில் சமூக ஊடக பிரச்சாரங்களை முன்னெடுப்பது

இது போல இன்னும் பல செயல்பாடுகளை திட்டமிட்டுக் கொள்ளலாம்.

இந்தச் செயல்திட்டத்தின் அடிப்படையில், ஆய்வு மற்றும் இதர வேலைகளுக்கு பங்களிப்பு செலுத்த விரும்பும் தோழர்கள் எங்களுடன் கரம் கோர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்!

- இளம் கம்யூனிஸ்ட் கழகம்
தொலைபேசி எண் : +91 99522 11917
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இணையதளம் : https://yclindia.wordpress.com

Pin It