21 ஆம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளில் ஜனநாயகக் கலாச்சாரம் குறைந்துக் கொண்டிருப்பதுடன் பிற்போக்கு எழுச்சிகள் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. பழமைவாத மாற்றங்கள், கடவுள், தங்கம் மற்றும் தேசியப் பெருமிதம் என்று அழைக்கப்படும் புகழொளியில், மனித இனத்தை சர்வாதிகார இருளுக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
முதலாளித்துவ சக்திகளுக்காகத் தங்கத்தை அல்லது மூலவளங்களைக் கைப்பற்றுவதற்காக மதவாத வலதுசாரி சக்திகள் கடவுளின் பெயரில் செயல்படுகிறார்கள். மேலும் தேசியப் பெருமிதம் என்பது கலாச்சார மற்றும் மதவாதப் பிற்போக்காளர்கள் கரங்களில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எதிர்ப்பில்லாத முதலாளித்துவ அமைப்பைப் பலப்படுத்துவதற்காக இந்தச் சக்திகளிடையே ஒரு பலமான ஒருங்கியைபு இருக்கிறது.
அரசியலில் வலதுசாரி சக்திகளை மதவாதக் குழுக்கள் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. சில கலாச்சார, சமூக, பிராந்திய மற்றும் மதவாதக் கருத்துக்களைப் பின்பற்ற வேண்டும் என்று இந்த பிற்போக்கு சக்திகள் கோருகின்றன.
அவை உணவுமுறை விதிகள், உடை உடுக்கும் முறை குறித்த விதிகள் மற்றும் திருமண விதிகள் ஆகியவற்றை மக்கள் திரளின் மீது திணிக்க முயற்சி செய்கின்றன. உணவுப் பழக்கங்களிலிருந்து பாலியல் தெரிவுகள் வரை பழமைவாத சக்திகள் தேசிய, மொழிவழி, பிராந்திய, கலாச்சார மற்றும் மதவாத வெறியூட்டும் கருத்தைத் திணிப்பதற்கு முயற்சி செய்கின்றன.
21 ஆம் நூற்றாண்டு உலகில் இந்தச் சக்திகள் இப்படிப்பட்ட ஒரே சீரான ஒழுக்க மதிப்பீடுகளை ஏன் கோருகின்றன? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது, மதவாத சக்திகளின் உள்ளார்ந்த இன, பாலின, சாதிய, வர்க்க மற்றும் முதலாளித்துவப் பண்பைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானதாகும்.
தனித்துவமான தேசியவாத மற்றும் மதவாத பிரச்சாரம், இந்தப் பழமைவாத சக்திகளின் பாசிச மற்றும் முதலாளித்துவப் பண்பை மறைக்கும் ஒரு மூடுதிரையாக இருக்கிறது.
பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை மையப்படுத்துதல், கலாச்சார மற்றும் மதவாத நெறிமுறைகளின் கட்டுமானம் ஆகியவை வாழ்க்கையைச் சமூக ரீதியாக ஒழுங்குபடுத்துதல், உழைப்புச் சக்தியை வசப்படுத்துதல் ஆகியவற்றுக்கான கருவிகளாகும்.
ஜனநாயகம், அதிகாரமளித்தல் மற்றும் வேற்றுமை குறித்த கருத்து முதலாளித்துவத்தையும் அதன் சந்தைச் சக்திகளையும் அச்சுறுத்துகிறது. அது மதவாத, பிற்போக்கு மற்றும் பாசிச சக்திகளையும் அச்சுறுத்துகிறது.
அரசியலை மையப்படுத்துதலும் ஒரே சீரான கலாச்சார நெறிமுறைகளும் உலகில் அரசியல் மற்றும் பொருளாதார மேட்டுக் குடிகளுக்கு உதவுகின்றன.
வலதுசாரி மதவாத சக்திகளுக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையில் ஒரு கூட்டணிக்கான சித்தாந்த அடித்தளத்தை மதவாதத் தத்துவம் அளிக்கிறது. அதில் தொழிலாளர்களும் மக்கள்திரளினரும் உழைப்பு மற்றும் அதன் விளைவுகளுக்கு மதவாத அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளச் செய்கிறது.
தனிப்பட்ட உழைப்பு மற்றும் மக்கள்திரள் உழைப்பு இரண்டையும் மதவாதத் தத்துவத்தின் இலட்சியங்களிலிருந்து பெறப்பட்ட வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் கட்டுப்படுத்துகின்றன. அது தொழிலாளர்களை அவர்கள் செலுத்தும் உழைப்புக்கு வெளியே வேறு ஒன்றுமில்லை என்று உணரும் வகையில் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது.
அவர்களுடைய வேலைதான் அவர்களுடைய தலைவிதியையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. ஆனால் உண்மைநிலையில், முதலாளித்துவ வர்க்கமும் மதவாத ஆளும் வர்க்கமும்தான் அவர்களுடைய ஆசைகளையும் விருப்பங்களையும் நசுக்குகின்றன, முதலாளித்துவ இலாப உற்பத்திக்காக அவர்களுடைய உழைப்புச் சக்தியைச் சுரண்டுகின்றன.
புதிய தாராளவாதக் கொள்கைகள் முதலாளித்துவ வர்க்கங்களாலும் அவர்களுடைய சந்தைச் சக்திகளாலும் கொண்டாடப்படுகின்றன. முதலாளித்துவம் ஒரு சிலருக்கு இலாபங்களையும் மக்கள்திரளினருக்குத் துயரங்களையும் உற்பத்தி செய்கிறது.
மதத்தில் கடவுள் எழுதிவைத்த தலைவிதிதான் துயரங்களுக்குக் காரணம் என்பதை இயற்கையானதாகவும் இயல்பானதாகவும் மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் மதவாத சக்திகள் உதவுகின்றன.
முதலாளித்துவத்தை ஒரு சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார அமைப்பாக வெற்றிபெறச் செய்வதற்குப் பலமான பகுத்தறிவற்ற மக்கள்திரள் கொள்கையை வலதுசாரி மற்றும் மதவாத சக்திகள் அளிக்கின்றன.
முதலாளித்துவத்தின் வளர்ச்சி, தனக்கு உதவுவதற்கும் அதன் முரண்பாடான பண்புகளுக்குத் தீர்வுகாண்பதற்கும், மதவாத வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை விரிவாக்குகிறது, உலகுதழுவியதாக ஆக்குகிறது. முதலாளித்துவம் அரசியலிலும் சமுதாயத்திலும் உள்ள பிற்போக்கு மதவாத சக்திகளின் உதவியுடன் மதவாத ஒழுக்கத்தை அதிகபட்சமாக்குகிறது.
எந்த அளவுக்கு மக்கள் தங்களையும் தங்கள் உழைப்பையும் கேள்விக்கிடமற்ற வகையில் மதவாத மற்றும் ஒழுக்க நியாயப்படுத்தல்களிடம் சரணடையச் செய்கிறார்களோ அந்த அளவுக்கு மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான மோதலைச் சமாளிப்பது முதலாளித்துவத்திற்கு எளிதாகிறது.
மக்கள் திரளின் பக்தி மனப்பான்மை முதலாளித்துவம் பிழைத்திருப்பதற்கு தவிர்க்கமுடியாத அளவுக்கு இன்றியமையாததாக இருக்கிறது. அது முதலாளித்துவத்தின் நிலவும் வலதுசாரி நிறுவன ஏற்பாடுகளுடன் அரசு, அரசியல் கட்சிகள், மற்றும் அரசாங்கத்திலிருந்து நீதித்துறை மற்றும் மதம் வரை இட்டுநிரப்புகிறது.
வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் ஒன்றிணைக்கப்பட்ட மதம் முதலாளித்துவத்தின் நொறுங்கும் தன்மைக்கு முட்டுக்கொடுத்து, அதன் உள்ளார்ந்த முரண்பாடுகளை மூடிமறைக்க உதவுகிறது.
வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடு கீழ்ப்படிதலுடன் வேலை செய்வதற்கு மக்களை நிர்ப்பந்திக்கிறது, உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்துவதன் மூலம் முதலாளித்துவம் வளர்வதற்கு உதவிசெய்கிறது.
உழைப்புச் சக்தியை அடக்குவது முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு மையமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அது அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் அதன் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிறது.
ஆனால், அதைக் கட்டுப்படுத்துவதற்கு, கடவுள், மதம், கலாச்சாரம் மற்றும் தேசியவாதம் ஆகியவற்றின் பெயரால் பகுத்தறிவற்ற பிற்போக்கு மதவாத மற்றும் வலதுசாரி சக்திகளுடன் புனிதமற்ற கூட்டணிகளை அமைக்கிறது.
வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாட்டைக் கட்டமைப்பது சுரண்டல் மற்றும் வன்முறையான முதலாளித்துவக் குவிப்புச் செயல்முறைகளுக்கு உள்ள அனைத்து சமூக மற்றும் மதத் தடைகளை அகற்றுகிறது.
வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடு என்பது முதலாளித்துவத்தின் பரந்த சட்டகத்துக்குள் அடைக்கப்பட்டுள்ளது, அது ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துவதற்கு மதவாத நியாயப்படுத்தல்களை அளிக்கிறது.
முதலாளித்துவம் மனிதர்களைச் சுரண்டுவதை உயர்த்திப் பிடிக்கிறது, சுற்றுச் சூழலைச் சீரழிக்கிறது என்பதைத் தவிர அதனிடம் ஒழுக்கம் என்ற ஒன்றும் கிடையாது.
முதலாளித்துவம் என்பது ஒழுக்கமற்றது என்பது மட்டுமல்லாமல் நுகர்வோரியத்தின் போட்டிக் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கிறது, அது மனித இனத்தின் எதிர்காலப் பிழைத்திருத்தலுக்கு மிகவும் இன்றியமையாத மனித இனத்திடம் தற்போதுள்ள அனைத்து ஒழுக்கநீதிகளையும் நல்லெண்ணங்களையும் அழிக்கிறது.
நுகர்வோரியம் பணம்சார்ந்த, தனிநபர்வாத, சுயநலக் கலாச்சாரத்தைப் பரப்புகிறது, அது அன்பு, அமைதி, சக மனிதர்களுக்கும் இயற்கைக்குமன ஒப்படைவு ஆகிய கருத்துக்களை அழிக்கிறது.
இந்த வழியில், முதலாளித்துவத்திற்குள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாட்டைக் கட்டியமைப்பது என்பது மனித உயிர்கள், சமுதாயம் மற்றும் இயற்கை ஆகியவற்றின் மதிப்பை அழித்து, முதலாளித்துவத்தின் சொந்த நோக்கத்திற்குச் சேவை செய்கிறது.
மதம் என்பது ஒழுக்கத்திற்கான ஒரு முன்நிபந்தனை அல்ல. ஒழுக்கச் சார்புகள் என்பவை உயிர் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் ஆகியவற்றுடனான மனித அனுபவத்தின் உற்பத்திப் பொருட்களாகும்.
மதத்தின் போதனை இல்லாமலே ஒழுக்கம் நிலவமுடியும். ஒழுக்கம் குறித்த அக்கறைகள் மனித அக்கறைகள் ஆகும். மனித அக்கறைகள் இல்லாமல் ஒழுக்கம் என்பது இல்லை.
மனிதர்களுக்கும் ஒழுக்கத்துக்கும் இடையிலான இந்த உள்ளார்ந்த உறவை, மதவாத மற்றும் வலதுசாரி சக்திகள் அமைப்பாக்கப்பட்ட மதத்தின் உதவியுடன் வெகுமக்கள் ஒழுக்க அதிகாரங்களை விரிவாக்குவதற்குப் பயன்படுத்துகின்றன. அமைப்பாக்கப்பட்ட மதங்கள் ஒழுக்கத்தை சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சாரச் சூழமைவுக்குள் நிறுவனமயமாக்குகின்றன.
அது ஆளும் மற்றும் ஆட்சியில் இல்லாத முதலாளித்துவ வர்க்கங்களுக்காக மக்கள்திரளைப் பயிற்றுவிக்கிறது. இந்தச் சக்திகள் ஒழுக்கக் கேட்டுக்கு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் மற்றும் மதச் சார்பற்ற சக்திகளைக் குற்றம் சாட்டுகின்றன.
இந்த வழியில் மதத்தின் தலைமையிலான வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடு என்பது ஒழுக்கமற்ற முதலாளித்துவ அமைப்புக்கு ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயலாற்றுகிறது.
மதவாத மற்றும் வலதுசாரி சக்திகள் தங்களுடைய வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாட்டு அதிகாரங்களை முடுக்கிவிடுவதால், மனித இடர்ப்பாடுகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. பட்டினி, வீடின்மை, வெறுப்புச் சூழல், மற்றும் அனைத்து வடிவ ஏற்றத்தாழ்வுகளும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. தோன்றி எழுந்துக் கொண்டிருக்கும் வலதுசாரி மற்றும் மதவாத சக்திகள் முதலாளித்துவ சுரண்டல் அமைப்பைப் பலப்படுத்துகின்றன.
மந்தமான அரசியல், பொருளாதார, கலாச்சார வானில் அருவருப்பான அமைதி நிலவுகிறது, அது முற்போக்கான, தாராளவாத, ஜனநாயகரீதியான ஒவ்வொன்றையும் விழுங்கிவிட முயற்சி செய்கிறது.
உரிமைகள், சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றுக்காகப் போராடும் மனிதர்கள் சிறையிலடைக்கப்பட்டு ஆளும் வர்க்கங்களால் மௌனிக்கச் செய்யப்படுகின்றனர். ஆனால் அந்த அமைதியும் அமைதிப்படுத்தலும் தாம் வரலாற்றில் அனைத்துப் புரட்சிகர எழுச்சிகளுக்கும் முன்னோட்டங்களாக இருக்கின்றன.
அமைதியின் ஜுவாலைகள் பாசிசக் கூக்குரல்களால் அணைந்துவிடுவதில்லை. அது புரட்சிகரப் புயலின் உந்துசக்தி திரள்வதற்காகவும், பாசிசத்தின் கற்பனைகளையும் அரசியலிலும் பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும், கலாச்சாரத்திலும் அதன் பிற்போக்கு உடன்பிறப்புக்களையும் எரித்துச் சாம்பலாக்கவும் காத்திருக்கிறது.
புரட்சியாளர்கள் தாம் மக்கள்திரளின் வரலாற்றை எழுதுகிறார்கள்; சமுதாயத்தை வளமை மற்றும் அனைவருக்குமான அமைதியின் எல்லைக்குள் கொண்டு செலுத்துகிறார்கள்.
முனைவர் பவானி சங்கர் நாயக், கவன்ட்ரி வணிகப் பள்ளி, கவன்ட்ரி பல்கலைக்கழகம், ஐக்கிய அரசியம்.
நன்றி: பிரான்டியர் இதழ்
- நிழல்வண்ணன்