gandhi 610உலகம் இன்று ஒரு நெருக்கடியான சூழலில் இயங்கிக் கொண்டுள்ளது. இந்தச் சூழல் என்பது நாம் இன்று சந்தித்து வரும் கொரானாவினால் மட்டுமல்ல, இவற்றைத்தாண்டி வாழ்வின் எல்லாத் தளத்திலும் நாம் சவால்களைச் சந்தித்து வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மானுட வாழ்வின் செயல்பாட்டின் வேகத்தை எவரும் எதிர்பார்க்காத அளவில் அதிகப்படுத்தியுள்ளது. நம் பொருளாதாரச் செயல்பாடுகள் உலகமய பொருளாதாரம் என்ற மாபெரும் சந்தை இயக்கத்தால் கடந்த 30 ஆண்டுகாலமாக மானுட வரலாறு இதுவரை இல்லாத அளவுக்கு புதிர்கள் நிறைந்தவையாக உருவாகியுள்ளது. இந்தப் புதிய சூழலைப் புரிந்து கொண்டவர்கள் எல்லை இல்லா அளவுக்குச் செல்வம் சேர்த்து விட்டனர். ஆனால் அவர்களால் அமைதியாக வாழ இயலவில்லை. சேர்த்த செல்வத்தால் மற்றவர்களையும் அமைதியாக வாழ வைக்க முடியவில்லை. இந்தச் சூழல் தந்த வாய்ப்பை புரிந்து கொள்ளாதவர்கள் எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும், ஏழ்மையிலும் வறுமையிலும் நுகர்வுக் கலாச்சாரத்தில் தோய்ந்து அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்த்தே பயனாளியாக வாழ்ந்து வருகின்றனர்.  

உலகத்தில் இரண்டு பிரிவாக நாடுகள் இருக்கின்றன. ஒன்று தொழில்மயமான நாடுகள். மற்றொன்று முன்னேற்றம் அடைந்துவரும் நாடுகள். இதையே சிலர் பின் தங்கிய நாடுகள் என்று வளர்ந்துவரும் நாடுகளை வகைப்படுத்துகின்றனர். முதல்வகையில் உள்ள நாடுகள் தொழில்மயமான வளமான நாடுகள் மட்டுமல்ல நடுத்தர மக்கள் அதிகமாக வாழும் நாடுகள். அது மட்டுமல்ல அரசியல், ஆளுகை, நிர்வாகம் பற்றிய பொதுப்புரிதல் உள்ள மக்கள் அதிகம் வாழும் நாடுகள். இரண்டாவது வகை நாடுகள் ஏழ்மையும் வறுமையும் நிறைந்த நாடுகள். அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் கல்வியறிவு குறைந்த நாடுகள் தான் உலகில் அதிகம். இங்கு அதிகம் ஏழைகள் வாழ்வது மட்டுமல்ல, பெரும்பான்மை மக்கள் அரசியல், ஆளுகை, அரசு, நிர்வாகம் பற்றிய புரிதல் உள்ள மக்கள் குறைவான எண்ணிக்கையில் வாழும் நாடுகள்.

உலகில் பணக்கார நாடுகள், அவர்கள் உருவாக்கிய பன்னாட்டு நிதி அமைப்புக்கள் மூலமாக பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் மேம்பாட்டுக்காகத் திட்டம் தீட்டி புதிய பாதையில் உலகமய பொருளாதாரச் செயல்பாடுகள் என பிரகடனப்படுத்தி முப்பது ஆண்டுகளுக்குமேல் உலகில் உள்ள நாடுகளில் செயல்படுத்தி வருகின்றன. இந்தப் பொருளாதாரச் செயல்பாடுகள் என்பது ஒரு மாபெரும் இயக்கம் போல் செயல்பட்டு உலக அரசியலில், ஆட்சியில், நிர்வாகத்தில் ஆளுகையில், கொள்கைகளில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து அதிகாரப் பரவல் மற்றும் மக்களாட்சிப்படுத்துதல் என்ற இரு பெரும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு உலக நாடுகளில் செயல்படுத்தப்பட்டன. இந்த அதிகாரப் பரவலும், மக்களாட்சிப்படுத்துதலும் உலகமயப் பொருளாதாரத்தை முறையுடன் செயல்படுத்தி அதன் பயன்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்டவைகள். எல்லா நாடுகளிலும் மக்களை அதிகாரப்படுத்தி, விழிப்புணர்வு உருவாக்கி, உலகமயப் பொருளாதாரத்தில் வரும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திடவும், உலகமயப் பொருளாதாரத்தால் வரும் ஆபத்துக்களை தவிர்த்திடவும் தேவையான பங்களிப்பைச் செய்ய செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த மூன்று செயல்பாடுகளையும் மக்கள் நலன் பின்புலத்தில் வைத்து செயல்பட்டால் உலகமயப் பொருளாதாரத்தால் உருவாக்கப்பட்ட செல்வம் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் சென்றடைய வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டன. அதற்கான அரசியல், ஆட்சி, ஆளுகை, நிர்வாகக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. இவைகளின் விளைவுகள் என்னென்ன என்பதுதான் பலரின் கேள்வி. ஏனென்றால் இந்த உலகமயப் பொருளாதாரம் முன்னெடுக்கப்பட்டபோது மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் அதிருப்தியும் எதிர்ப்புக்களும் உருவாகின. இருந்தபோதும் மக்கள் அறியாமையால் எதிர்க்கிறார்கள், அதன் பலன்களை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டால் எதிர்க்க மாட்டார்கள் என்று வாதிட்டு உலகமயப் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் சென்றனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு பல ஆய்வுகள் செய்யப்பட்டு என்னென்ன விளைவுகளை உலகமயப் பொருளாதாரம் கொண்டு வந்துள்ளது என்று பட்டியலிட்டன.

ஜோசப் ஸ்டிக்லிட்ஜ் என்ற பொருளாதார பேராசிரியர் 2001- ஆம் ஆண்டில் பொருளாதாரத்திற்கு நோபல் பரிசு பெற்றவர். உலக வங்கியில் பணியாற்றியவர். அமெரிக்க ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தவர். அவர் எழுதிய “உலகமயமும் அதன் அதிருப்தியும்” என்ற பிரசித்தி பெற்ற புத்தகம் பத்து லட்சம் பிரதிகள் விற்பனையாயின. அடுத்து அவர் எழுதிய “உலகமயப் பொருளாதாரத்தை செயல்பட வைப்பது” என்ற புத்தகமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒன்று. இவர் நிறைய கட்டுரைகள் புத்தகங்கள் எழுதியிருந்தாலும் எப்படி உலக வங்கியும் அமெரிக்காவும் முறைமாற்று செய்து இந்த சந்தைச் செயல்பாட்டைக் கொண்டு சென்றது என்பதையும், இந்த உலகமயப் பொருளாதாரத்தை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் செய்ய முடியும் என்பதையும் விளக்கியுள்ளார். உலகமயம்தான் வளர்ச்சிக்கு வழிகாட்டி என்று வாதிடுவோர் இந்த நூல்களைப் படித்தால் எவ்வளவு மோசமான பார்வைகளைக் கொண்டதாக பன்னாட்டு நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மக்கள் நலன் என்பது எப்படி பின்னுக்குத் தள்ளப்பட்டு, பொருளாதார ஆதிக்கத்தின் மூலம் நாடுகளை சீரழிக்கும் செயல்பாடுகள் நடந்துள்ளன என்பதை நாம் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

இவர் உலகமயப் பொருளாதாரத்தை ஆதரிக்கும் ஒரு பொருளாதாரப் பேராசிரியர். ஆனால் அவர் எதற்காக ஆதரிக்கின்றாரோ அது நடைபெறவில்லை. இந்த உலகமயப் பொருளாதாரத்தால் கிடைக்கக்கூடிய பயன்களை அனைவருக்குமானதாக மாற்ற முடியும், குறிப்பாக ஏழைகளுக்கு எப்படி பயனளிக்கச் செய்ய முடியும், இயற்கை எப்படி பாதுகாக்க முடியும் என எல்லா வாய்ப்புக்களையும் இவர் ஆய்வு செய்து வாய்ப்புக்களை பட்டியலிட்டுள்ளார். ஆனால் நடப்பது முற்றிலும் மாறானது என்பதையும் இந்த இரண்டு புத்தகங்களிலிருந்தும் நாம் தெறிந்து கொள்ள முடியும்.

அடுத்த ஒரு புத்தகம் “ஏழைகளுக்கான வங்கியாளர்: கிராமின் வங்கியின் கதை” என்ற புத்தகம். இந்தப் புத்தகம் என்பது 2006 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற கிராமின் வங்கியை வங்க தேசத்தில் தோற்றுவித்த முகமது யூனுஸ் அவர்களின் சுயசரிதம். இவர் முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் வகுப்புத் தோழர். இவர்தான் முதன் முதலில் ஏழைகளைப் பற்றிய ஒரு தவறான கருதுகோளை உடைத்துப் போட்டவர். பொதுவாக ஏழ்மைக்கு ஆட்பட்டவர்கள் ஒழுக்க நியதிகளுக்கு உட்பட்டு நியாயமாக வாழ்க்கை விழுமியங்களை கடைப்பிடிக்க மாட்டார்கள் என்ற கருதுகோளை தன் வங்கியின் மூலம் ஏழைகளை மரியாதையுடன் நம்பிக்கை கொண்டு நடத்திட ஆரம்பித்தால் அவர்கள் எல்லோரையும் விட வாழ்க்கை விழுமியங்களையும் ஒழுக்க நியதிகளையும் கடைப்பிடிப்பார்கள் என்பதை ஏழைப் பெண்களின் செயல்பாடுகள் மூலம் நிரூபணம் செய்தவர். அவர் ஒரு பேராசிரியர். வகுப்பெடுக்கும்போது அந்தப் பல்கலைக் கழக நுழைவாயிலில் நடந்த ஒரு சோக நிகழ்வு அவரை ஒரு புதிய வங்கியைத் துவங்கி, அதற்கு புதிய இலக்கணம் வகுத்து உலகுக்கே ஏழ்மை ஒழிப்புக்கு வழிகாட்டியவர். அவர் எழுதிய நூலைப் படித்தோமேயானால் உலக வங்கி எப்படி யெல்லாம் அட்டூழியம் செய்யும் என்பதை புரிந்து கொள்ளலாம். அவர் செயல்பாடுகளில் எவ்வளவு குருக் கீடுகளைச் செய்தது உலக வங்கி என்பதைப் புரிந்து கொள்ளலாம் இந்தப் புத்தகத்தின் மூலம். அதே நேரத்தில் ஏழைகள் இணைந்து திறனை அதிகப்படுத்தி தொழில் நுட்பத்தைக் கையாளக் கற்றுக் கொண்டால் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏழைகளின் வாழ்வில் ஏற்படுத்தலாம் என்பதை விளக்கும் நூல்.

அடுத்து ஹசூன் ஜங் என்ற பேராசிரியரின் புத்தகமான “முதலாளித்துவத்தின் இரகசிய வரலாறும் தங்குதடையற்ற வணிகத்தின் வெற்றுப்புனைவும்” என்ற புத்தகம் உலகமய பொருளாதாரத்தால் ஆப்ரிக்க நாடுகளின் அழிவை படம் பிடித்துக் காட்டியுள்ளார். லாபம் சம்பாதிப்பதில் ஈடுபட்ட சந்தை அரசை, கொள்கையை பந்தாடிவிட்டு மக்களை நுகர்வு வெள்ளத்தில் மிதக்க வைத்து, ஆட்சியாளர்களை கைப்பொம்மையாக்கி மக்களாட்சியை கேலிக்கூத்தாக்கிய அம்சங்களை விளக்கியுள்ளார். வெளியில் பேசும் பொருளாதாரச் செயல்பாடுகளுக்கும் உள்ளே நடக்கும் அலங்கோலங்களையும் விளக்கிய புத்தகம் இது. எந்தக் கட்டுப்பாடும் இன்றி வல்லான் வகுத்ததே வழி என்று இந்த நிதி நிறுவனங்கள் சந்தைச் சக்தியின் மூலம் நடத்திய அத்துமீறல்கள் நாடுகளையும் ஏழைகளையும் எப்படியெல்லாம் வாட்டி வதைத்துள்ளது என்பதை படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

அடுத்து 2017 ஆம் ஆண்டு வெளிவந்த "தேர்தல்கள் விற்பனைக்கு: வாக்குகளை வாங்குவதன் காரண காரியங்கள்” என்ற புத்தகம் ஆசியக் கண்டத்தில் எப்படி வாக்குகள் சந்தைப் படுத்தப்பட்டுள்ளன என்பதை மிகப் பெரிய ஆய்வினை ஒரு ஆராய்ச்சியாளர் குழு செய்து வெளியிட்ட புத்தகம்தான் இது. இதைப் படித்தால் மக்களாட்சி எப்படிக் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. கட்சிகள் எப்படி பணம் ஈட்டுகின்றன, எப்படி வாக்குகளை சந்தைப் படுத்துகின்றார்கள், அரசியல் கட்சிகள் யாருக்காக செயல்படுகின்றன. சந்தைக்கும் அரசியல் கட்சிகளுக்கும் உள்ள உறவுமுறை என்ன, இதன் விளைவுகள் என்னென்ன? என்பதை விளக்கும் புத்தகம் இது.

அடுத்து 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த ஐ.நாவின் மானுட மேம்பாட்டு அறிக்கை ஒரு முக்கியமான கருத்தை மையப்படுத்தி இந்த அறிக்கைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. மானுடத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவுமுறை அதில் ஏற்பட்ட விரிசல்கள், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சிதிலங்கள் அனைத்தையும் படம் பிடித்து காண்பித்து இனி உலக நாடுகள் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையைச் சீரழிக்க முடியாது. அது வருங்காலச் சந்ததியினரை மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதனை சுட்டிக்காட்டி இனி எப்படி மானுடம் தன்னை சூழல் பாதுகாப்புக்குத் தேவையான செயல்பாடுகளை வடிவமைத்து செய்ய வேண்டும் என்பதனை விளக்கியுள்ளது.

அடுத்து ஆக்ஸன் எய்டு என்ற நிறுவனம் கொண்டு வந்த உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை அடுத்த நிலையில் உலகமயப் பொருளாதார காலத்தில் பொருளாதாரம் வளர்ந்த சூழலில் மக்களின் ஏற்றத் தாழ்வுகள் எவ்வளவு மோசமான சூழலுக்குச் சென்றுள்ளது என்பதை படம் பிடித்துக் காண்பித்து ஏழைகளின் வாழ்வு எப்படி நிர்மூலமாக்கப்பட்டுள்ளது என்பதையும் விளக்கியுள்ளது. இதே நிறுவனம் ஏழைகளின் சுகாதாரம் பற்றியும் ஓர் ஆய்வறிக்கையைத் தயாரித்து, ஏழைகள் எந்த அளவுக்கு விளிம்பு நிலைக்குச் சென்றுள்ளார்கள் என்பதனையும் வெளிக்கொண்டு வந்துள்ளது. அடுத்து சமீபத்தில் வந்துள்ள பருவநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு வல்லுனர் குழு தயாரித்த பருவநிலை மாற்றம் பற்றிய அறிக்கை. இந்த அறிக்கை அபாயச்சங்கை உலகிற்கு ஊதிவிட்டது என்றே கூறலாம். இனிமேலும் காலம் தாழ்த்தாமல் உலக நாடுகள் பருவநிலை மாற்றம் பற்றிய புரிதலுடன் பல்நிலைச் செயல்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்றால் உலகை அழிவுப்பாதையில் விரைந்து அழைத்துச் செல்கின்றீர்கள் என்று பொருள்பட எதிர் வருகின்ற அபாயங்களை பட்டியலிட்டு வெளியிட்டு உலகில் பொது விவாதத்தை உருவாக்கியுள்ளது.

அரவிந்த் வீர்மணி என்ற பொருளாதார வல்லுனர் அரசுக்கு ஆலோசகராக பொருளாதார வளர்ச்சிக்குச் செயல்பட்டவர். அவர் “புதிய மேம்பாட்டுக்கான மாற்று வழிமுறை” என்ற தலைப்பில் எகனாமிக்ஸ் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி என்ற ஆய்வுச் சஞ் சிகையில் ஒரு பெரிய விரிவான கட்டுரை எழுதி இருந்தார். அந்தக் கட்டுரையில் அரசு மக்களின் மேம்பாட்டுக்கு ஒரு காலத்தில் முழுப் பொறுப்பு எடுத்துக் கொண்டது. ஆனால் அந்த பொறுப்பை நிறைவேற்ற இயலவில்லை தோற்றது. அதேபோல் அரசுக்கு உதவி செய்து, பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு அரசு செய்ய முடியாத மேம்பாட்டுச் செயல்பாடுகளை சந்தை செய்யும் என்றுதான் புதிய பொருளாதாரக் கொள்கையை நோக்கி நாடுகள் சென்றன. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு என்ன விளைவு என்று ஆய்வு செய்து பார்த்தபோது சந்தையும் தோற்றது. ஏனென்றால் இந்தியாவில் 25 ஆண்டுகள் 7லிருந்து 7.5 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி இருந்தபோதும், அதன் தாக்கத்தை மக்களின் வாழ்க்கை மேம்பாட்டில் குறிப்பாக ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தில் பார்க்க முடியவில்லை. அடைந்த வளர்ச்சியை யாரோ பற்றிச் சென்று விட்டனர். எனவே அரசும் தோற்றது, சந்தையும் தோற்றது என்றும் மாற்று முறை காண வேண்டும் என்றும் எழுதினார். அந்த மாற்றுமுறை என்பது மக்களை அதிகாரமளிப்பது, அதிகாரத்தை பரவலாக்குவது, வேலை வாய்ப்பை உருவாக்குவது, மக்களுக்கு சென்றடைய வேண்டிய உரிமைகளை அளித்திடல், எல்லா மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும் சுற்றுச்சூழல் என்பதை பின்புலத்தில் வைத்துச் செயல்பட்டாலன்றி ஏழைகள் வாழ்வில் மேம்பாட்டினைக் கொண்டுவர இயலாது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

அடுத்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் “மூன்றாம் தூண்” என்ற புத்தகத்தில் அரசும் சந்தையும் மக்களைப் புறந்தள்ளி விட்டது. சமூகப் பிரச்சினை புறந்தள்ளி சந்தைக்காக அரசு செயல்படுவதும், அரசுக்காக சந்தை செயல்படுவதுமாக இருந்து சமூகப் பிரச்சினை புறந்தள்ளி செயல்பட்டதன் விளைவு இன்று இவ்வளவு பொருளாதார வளர்ச்சி இருந்தும் சாதாரண மக்கள் பிரச்சினைகள் கூட தீர்க்கப்படவில்லை. எனவே மாற்றுமுறை தேவை என்று வாதிட்டார். மற்றொரு முக்கியமான புத்தகம் “அரசு சுருங்குகிறது என்பது ஒரு மாயை” என்ற தலைப்பில் பல்தேவ் ராஜ் நய்யர் எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் உலகமய பொருளாதாரம் வரும்போது பல அரசாங்கச் செயல்பாடுகளிலிருந்து அரசுத் துறைகள் விலகி அரசைக் குறைத்து ஆளுகையை கூட்டுவது என்பதுதான் பிரகடனம். ஆனால் இந்தியாவில் அரசுத் துறைகள் மென்மேலும் வளர்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. அது மட்டுமல்ல மேம்பாட்டுக்கான பணிகளை தொடர்ந்து செய்வதாகவும் பிரகடனப்படுத்துகிறது. இருந்தபோதிலும் அந்தச் செயல்பாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த மேம்பாட்டையும் கொண்டுவரவில்லை என்று விவாதிக்கிறார்.

2008ஆம் ஆண்டு பித்யூத் சக்ரோபர்த்தியும் மொகித் பட்டாசார்யாவும் இணைந்து “ஆளுகை ஓர் தர்க்கவாதம்” என்ற புத்தகத்தை தொகுத்து ஆக்ஸ்போர்டு பதிப்பகத்தின் மூலம் வெளியிட் டனர். இந்தியாவில் தலை சிறந்த பேராசிரியர்களிடமும், வெளிநாடுகளிலிருந்து பிரசித்தி பெற்ற பேராசிரியர்களிடம் கட்டுரைகளை வாங்கித் தொகுத்து வெளியிட்டனர். இந்தப் புத்தகம் உலகமயப் பொருளாதாரத்தில் எப்படி ஓர் அரசாங்கம் தன் ஆளுகைச் செயல்பாட்டை மாற்றியமைத்துக் கொள்கிறது என்பதை விளக்கியுள்ளனர். ஆட்சி என்பதிலிருந்து ஆளுகை என்ற சொல்லுக்கு மாறும்போது அரசு எப்படி மாற்றங்களைப் பார்க்கிறது என்பதை விவாதிக்கிறது.

அதே இரு பேராசிரியர்களும் “நிர்வாக மாற்றமும் புதிய கண்டுபிடிப்புக்களும்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை தொகுத்து அதே பதிப்பகத்தார் மூலம் வெளியிட்டுள்ளனர். இந்தப் புத்தகத்திற்கும் உலகில் தலைசிறந்த நிர்வாகவியல் நிபுணர்களைக் கண்டுபிடித்து கட்டுரைகளை வாங்கி பதிப்பித்துள்ளனர். இந்தப் புத்தகத்தில் எவ்வாறெல்லாம் பொது நிர்வாக முறை இந்த உலகமயப் பொருளாதாரத்தால் மாற்றம் பெற்று வருகிறது, அதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன, திணரும் நாடுகள் கொடுக்கும் காரணங்கள் என்னென்ன என்பதையெல்லாம் பதிவு செய்துள்ளனர்.

இதே காலக் கட்டத்தில் இந்தியாவின் தலைசிறந்த அரசியல் அறிவியல் அறிஞர் ரஜினி கோத்தாரி ‘மக்களாட்சி மீள்பார்வை' என்ற ஒரு புத்தகத்தை எழுதினார். அதில் நம் மக்களாட்சி ஒரு தேக்க நிலைக்கு வந்துவிட்டது, இதிலிருந்து நாடு மேம்பட புதிய அரசியல் செயல்பாடுகள் கட்டமைக்கப்பட வேண்டும். நம் அரசியல் கட்சியின் அரசியல் என்பது ஒரு நிலைக்கு மேலே செல்ல இயலவில்லை. எனவே புதுத் தடம் காண முயல வேண்டும் என புதிய பாதை காட்டியுள்ளார்.

மேற்கூறிய புத்தகங்கள் நமக்குத் தரும் செய்திகள் பல. நாம் நினைப்பதுபோல் ஆட்சியாளர்கள் மக்கள் சிந்தனை கொண்டு அறிவியல் பூர்வமாக முடிவெடுத்து மக்கள் நலம் பேணவில்லை. அவர்களின் அரசியல் என்பது கட்சிகளின் வளர்ச்சியில் கட்டமைக்கப்பட்டது. கட்சி நலன், தேர்தல் செயல்பாடு என்பதிலிருந்து கட்சிகளால் வெளியேறி மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவல்ல ஆட்சியை ஆளுகையை நடத்தவில்லை. மக்கள் பிரச்சினைகள், மக்கள் நலன் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன. இரண்டு சந்தையை கட்டுப்படுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் அரசாங்கத்தை தங்களுக்காக செயல்படும் கருவிகளாக மாற்றி விட்டனர்.

மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் வாக்குகளும், மக்களின் பிரதிநிதிகளும் சந்தைப்படுத்தப்பட்டு இவைகளெல்லாம் ஏலம் எடுக்கப்படுகின்றன. உலகமயப் பொருளாதாரத்தில் சந்தை தன்னை உயர்த்தி அரசையும் சமூகத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. இயற்கை- யின்மேல் போர் தொடுத்து பெருமளவில் சூழலைக் கெடுத்து விட்டது சந்தைப் பொருளாதாரம். அடுத்து மக்களாட்சியை தேர்தலுக்குள் சுருக்கி தேர்தலில் வெற்றி பெற்று சந்தைக்குப் பணி செய்து அரசியல் கட்சிகள் பொருள் ஈட்டி அரசியல் செய்வது என்று புதிய அரசியலைக் கட்டமைத்து விட்டார்கள். அதேபோல் அரசாங்கம் மக்களையும் மக்கள் பிரச்சினைகளையும் புறம் தள்ளி சந்தைக்குச் செயல்படும் அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. புதிய சூழலுக்கு மாறுவதாகச் சொல்லி அரசு தான் மக்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படைப் பணிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டுவிட்டது. அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளி அதிகப்படுத்தப்பட்டு அரசின் மேல் மக்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அரசு அதன் துறைகள் மூலம் மக்கள்மேல் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து செயல்பட்டதன் விளைவு எல்லை இல்லா ஊழலில் அரசாங்கம் சிக்குண்டு கிடக்கிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், வளர்ச்சி வேகமான வளர்ச்சி என்ற பெயரில் மக்களையும் இயற்கையையும் சுரண்டி தனியார் லாபம் ஈட்டியதுதான் எதார்த்தமான உண்மை. அரசுதான் மக்களைக் காக்கும், மக்களின் மேம்பாட்டுக்கு உத்திரவாதம் என்ற நிலைப்பாட்டை மாற்றி சந்தைக்கு உதவி பொருளாதார வளர்ச்சி கொண்டு வந்து மக்கள் மேம்பாட்டுக்குச் செயல்படுதல் என்ற இலக்கை நோக்கிச் சென்று அரசு தன் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் சந்தையிடம் இழந்து நிற்கிறது. மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் அரசியல் கட்சிகளை நிதி கொடுத்து சந்தைக்குச் செயல்படும் சக்தியாக அரசு மாறிவிட்டது. மக்களை நுகர்வுக் கலாச்சாரத்தில் தோய்ந்திடும் நிலைக்கு நுகர்வோர். நடத்தை மற்றும் சிந்தனையில் மாற்றம் கொண்டு வந்து விட்டது சந்தையின் செயல்பாடுகள் மூலமாக. வேகமான வளர்ச்சி இயற்கையை எல்லை இன்றி சுரண்டி உலகம் வெப்பமாகக் காரணமாக அமைந்துவிட்டது. இயற்கையும், ஏழைகளும்தான் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதுவரை கொண்டு வந்த எந்தக் கோட்பாடும் இன்று செயல்படவில்லை. எல்லாக் கோட்பாடுகளையும் உடைத்தெறிந்து விட்டன உலகமயப் பொருளாதாரச் செயல்பாடுகள். இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் பாரதி எழுதிய கட்டுரை “கொள்ளையடிப்பதை கொள்கையாக” என்பதை ஞாபகப்படுத்துகிறது. சரி இவைகளெல்லாம் நிதர்சனமான உண்மை தான். இதை உணர்ந்து பார்த்த ஒரு குடிமகனாக என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் அடிப்படையான கேள்வி.

உலகில் நடந்த எல்லா மாற்றங்களுக்கும் ஒருசிலர் உணர்வுடன் சமுதாயச் சிந்தனையுடன் தியாக உணர்வுடன், அர்ப்பணிப்புடன் செயல்பட்டது தான் காரணங்கள். அது அமெரிக்க விடுதலையானாலும், பிரெஞ்சுப் புரட்சியாக இருந்தாலும், ரஷ்யப் புரட்சியாக இருந்தாலும் இந்திய விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் சரி மக்களாட்சி விரிவாக்கமாக இருந்தாலும் சரி அனைத்தும் தானாக வந்தது கிடையாது. இவைகளுக்குப் பின்னால் லட்சக் கணக்கான மக்களின் தியாகமும் உழைப்பும் இருக்கின்றது. எனவே இன்றைய சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணும்போது என் ஞாபகத்திற்கு வருவது இங்கிலாந்து தேசத்தில் மக்கள் சபையில் இளம் உறுப்பினராக இருந்த வில்லியம் விபர்போர்ஸ் 1807ல் அடிமைமுறைக்கு எதிரான இயக்கத்தை ஆரம்பித்தார். அப்பொழுது அவரது நண்பர்கள் கருங்கல்லில் ஏன் மோதுகிறாய் என்று கூறி விமர்சித்தபோதும் தொடர்ந்து தொடர்வினை ஆற்றிக் கொண்டிருந்தார் தளர்வில்லாமல். அவர் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் அடிமைமுறைக்கு எதிரான சட்டம் 1833ல் நிறைவேற்றப்பட்டது ஆங்கிலேயப் பாராளுமன்றத்தில்.

மானுட வரலாற்றில் அவர் செய்த சாதனை மகத்தானது. மாண்புடையது. எனவே எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் நாம் ஒரு மக்களாட்சி நாட்டில் குடிமகனாக நாம் செய்ய வேண்டிய பணிகளை பொறுப்புடன் செய்தாக வேண்டும். நாம் உலகை மாற்றுவதற்கு முன், நாட்டை மாற்றுவதற்கு முன், மாநிலத்தை மாற்றுவதற்கு முன், நம்மை மாற்றிக் கொண்டு, நாம் வாழும் இடத்தில் வசிக்கும் வாய்ப்பில்லா ஏழை மக்களுக்கு அவர்களுடன் சேர்ந்து பணி செய்வதுதான் நாம் செய்யக்கூடிய நற்பணியாகும். இப்படிப்பட்ட பணிகளை நாட்டில் சமூகத்தில் பல இடங்களில் சமுதாயச் சிந்தனை கொண்டு செயல்பட்டு வருவதைப் பார்க்க முடியும். நாட்டில் கடைக்கோடியில் அடிநிலையில் வாழும் ஆதிவாசிகளுடன் வாழ்ந்து செயல்படும் பலர் நமக்குத் தெரியாமல் இருக்கலாம், பல பணிகளை அவர்களுக்காகச் செய்து குட்டி மகாத்மாக்களாக வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் கிராமங்களிலும் நகரங்களிலும் கடைநிலையில் வாழக்கூடிய மக்களுக்காக பணியாற்றத் தேவை ஒரு புரிதல் அந்தப் புரிதலுடன், மக்களாட்சி தரும் வாய்ப்பினை பயன்படுத்தி, அகிம்சையைப் பின்பற்றி தொடர்ந்து போராடி அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவது என்பதுதான் ஒரு பொருளுள்ள மானுட வாழ்வு.

- க.பழனித்துரை

Pin It