அமைதியான சூழலில் தான் சமூகத் தளத்தில் ஒற்றுமை ஓங்கும். ஒற்றுமை மிகுந்த நாட்டில் தான் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சமூக நீதியோடு இணைந்த பொருளாதார வளர்ச்சியில் தான் பகிர்வு நீதி நிலைப்பெறும்.
இன்று எங்கும் பிளவு, எதிலும் பிணக்கு என்பதையே ஆட்சியியலாக மாற்றி, அதை ஊக்குவிக்கும் தன்மை சங்கிகளின் இன்றைய ஆட்சியில் தலைவிரி கோலமாகத் தாண்டவமாடுகிறது.
குஜராத்தில் கோத்ராவில் தொடங்கி மணிப்பூர் வரை மக்களைப் பிளவுபடுத்திக் குருதி குளியலில் மக்கள் மடிந்தனர்; மடிகின்றனர். மக்களின் அன்றாட நுகர்பொருட்களின் விலைகள் விண்கலன் வேகத்தில் மேல் நோக்கிப் பயணம் செய்கின்றன. பல பொருளாதார அறிஞர்களின் கணிப்புகள் பொய்த்து வருகின்றன. இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரப் பேராசிரியர் ஆல்பிரட் மார்ஷல் 81 வயது வரை வாழ்ந்தவர். 1924-ஆம் ஆண்டு மறைந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆல்பிரட் மார்ஷல் மறைவுக்குப் பிறகு பல்கலைக்கழக நூலகத்திற்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மார்ஷல் எழுதிய “பொருளாதாரக் கோட்பாடுகள்” என்ற நூலைப் பாடத் திட்டத்தில் சேர்க்காத பல்கலைக்கழகங்கள் இல்லை எனலாம். தேவை ஆர்வம் (Demand), அளிப்பு (Supply) என்ற இரு கூறுகள் சந்தைப் பொருளாதாரத்தை இயக்குகிறது; மாற்றுகிறது. விலை உயர்வு, விலை சரிவு ஆகியன சந்தை யில் பொருட்களின் அளிப்பு தன்மையாலும், நுகர்வோரின் தேவை ஆர்வத்தாலும் ஏற்படுகின்றன என்று ஆல்பிரட் மார்ஷல் விளக்கினார். நுகர்வோர் மிகை என்ற கோட்பாட் டையும் முன்மொழிந்தார். அழுகும் பொருட்களை (Perishable Commodities) வாங்கும் விற்கும் சந்தையைத் தற்காலிகச் சந்தை (Short Term Market) என்று அழைத்து அச்சந்தை இயங்கும் முறைகளையும் மார்ஷல் விளக்கினார்.
தக்காளி போன்ற நுகர்பொருட்கள், பழங்கள் ஆகிய பொருட்களின் அளிப்பு காரணிகளுக்கேற்ப (Supply Factors) விலைகள் ஏறும், இறங்கும் என்று விளக்கம் அளித்தார். இப்பொருட்கள் விரைவில் அழுகும் அல்லது அழிந்து விடும் நிலை இருப்பதால் மற்ற நீண்டகால பொருட்களின் விலை ஏற்றம் போல் அமையாது என்றும் குறிப்பிட்டார்.
ஆனால் இந்தியாவில் குறுகிய கால சந்தைப் பொருட் களுக்கும், நீண்டகால சந்தைப் பொருட்களுக்கும் மார்ஷல் கூறியது போன்று பெரும் வேறுபாடுகளைக் காணமுடிய வில்லை. தற்போது ஒரு கிலோ தக்காளி விலை 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலையைவிட இரட்டிப்பு விலையில் விற்கப்படுகிறது. வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உருளைக் கிழங்கு ஆகிய உணவுப் பொருட்களின் விலையும் சந்தைப் பொருளியலாளர்கள் குறிப்பிட்ட, கணித்த அடிப்படை கூறுகளைச் சிதைத்து உயர்ந்து வருகின்றன.
சந்தைப் பொருளாதாரம் கொள்ளை இலாபம் ஈட்டும் கருவியாக மாறி, இந்தியா முதலாளிகளின் சொர்க்கமாக மாறிவிட்டது. ஏழைகள் விலைவாசி உயர்வு எனும் கொதி கலனில் வெந்து, வீழ்ந்து வருகின்றனர்.
சான்றாக, ஆப்பிளும் தற்காலிக சந்தை கூறுகளை உள்ளடக்கிய ஒரு நுகர்பொருளாகும். இமாச்சல மாநிலத்தில் விளையும் ஆப்பிள் விலை இன்று ஒரு கிலோ ரூபாய் 320/க்கு விற்பனை செய்யப் படுகிறது. ஆண்டிற்கு ரூபாய் 5000 கோடி அளவுக்கு ஆப்பிள் வேளாண்குடியினரால் உற்பத்தி செய்யப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு இமாச்சல மாநிலத்தின் ஆப்பிள் உற்பத்தி செய்யும் வேளாண் குடியினர் பிரதமர் நரேந்திரரின் பேரன்பர் அதானி நடத்தும் வேளாண் பொருட்கள் குழுமத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
என்ன காரணம் தெரியுமா?
2017-ஆம் ஆண்டு அதானி வேளாண் குழுமம் ஒரு கிலோ ஆப்பிள் ரூபாய் 85 விலைக்கு உழவர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான டன் ஆப்பிள்களை வாங்கியது. ஆனால் 2022-ஆம் ஆண்டில் கிலோ ஆப்பிள் ரூபாய் 76-க்குத் தான் வாங்க முடியும் என்று அறிவித்தது. விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி செலவு 50 மடங்கு உயர்ந்துவிட்டது எனக் குறிப்பிட்டு அதானி குழுமத்தின் அடாவடி விலை குறைப்பிற்கு எதிராகப் போராட்டம் அறிவித்தனர். பிரதமர் நரேந்திரர் தலைமையிலான ஒன்றிய அரசு இமாச்சல மாநிலத்தின் விவசாயிகளுக்கு ஆதரவாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.
2020-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு மூன்று வேளாண் சட்டங்களை இயற்றி, தனியார் முதலாளிகளின் பிடியில் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் முறையை அதாவது சந்தைப்படுத்தல் முறையை நடை முறைப்படுத்த முற்பட்டது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு இலாபம் ஈட்டும் வகையில் இந்தச் சட்டங்கள் பயன்படும் என்று மனதின் குரல் நாயகன் நரேந்திரர் மன சாட்சியின்றி உரத்த குரலில் ஒலித்தார். அவரது அடிப்பொடிகள் தப்புத்தாளம் தட்டினர்.
இன்று ஆப்பிள் சந்தையில் அதானி குழுமம் இலாப வேட்டை ஆடும் போக்கை நன்கு கணித்து, உணர்ந்து ஓராண்டிற்கு மேல் புதுதில்லியை முற்றுகையிட்டுப் போராடி வேளாண் குடியினர் வெற்றி பெற்றனர். மூன்று சட்டங்களும் ஒன்றிய அரசால் திரும்பப் பெறப்பட்டன.
இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படாமலேயே வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளும் நுகர்வோர்களும் சுரண்டப்படுகின்றனர். சட்டம் இயற்றப்பட்டிருந்தால் அரசுத் துணையோடு மக்களைச் சூறையாடியிருப்பார்கள்.
மணிப்பூர் மௌன குரு நரேந்திரர் முன் வைக்கும் ஒவ்வொரு சட்டத்திற்கும், ஒவ்வொரு நகர்விற்கும் பின் அதானி அம்பானிகள்தான் உள்ளனர். ஆஸ்திரேலியா சுரங்கம் தொடங்கி இலங்கை சூரிய ஒளி மின்சார உற்பத்தி ஒப்பந்தம் வரை அதானி அதானி என்பதைத்தானே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதுபோன்ற முறையற்ற கொள்ளை இலாபம் அடித்ததால்தானே உலகின் பணக் காரர்கள் பட்டியலில் அதானியால் இடம்பெற முடிந்தது.
எப்படி மோசடி செய்து அதானி பணக்காரராக ஆனார் என்பதை ஹின்டன்பர்க் அறிக்கையும் அம்பலப்படுத்தியது.
இதுபோன்று காட்டை, நாட்டை முதலாளிகளிடம் ஒப்ப டைக்கும் நிலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் உரையாடல்களை ஊடகங்களில் காண முடியாது. இந்திய ஊடகங்களைப் பெரும் முதலாளிகள் வாங்கி விட்டனர். செய்திகள் உண்மை களை உணர்த்தாது. சாணியைச் சந்தனம் என்று முதல் பக்கத்தில் வெளியிடுகிறார்கள். புரட்டுத் திருட்டுகளை வலதுசாரிகள் என்கிற சங்கிகள் நேர்மை நீதி என்று ஒளி ஊடகங்களில் பிதற்றுகிறார்கள்.
ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக் குறியாக மாறி வருகிறது. விலையேற்றம், வேலையில்லாக் கொடுமை, தற்காலிக வேலையில் குறைந்த கூலி, தாங்க முடியாத மறைமுக வரிகள்! மக்கள் சுமைதாங்கிகளாக அச்சத்தோடும் மனதில் கவலையோடும் வாழ்கிற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இச்சூழலில் மணிப்பூர் பெண்கள் கற்பழிப்பு படுகொலை கள் உலக நாடுகளிடையே இந்தியாவிற்குக் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் கோபம் எங்கும் காணப் படுகிறது.
நரேந்திரரே நீங்கள் ஆண்டது போதும்; மக்கள் மாண்டது போதும் என்று மக்கள் மன்றம் கேட்கத் தொடங்கி விட்டது.
1956ஆம் ஆண்டு அரியலூரில் தொடர் வண்டி விபத்து நடந்தது. 110 பேர்கள் இறந்தார்கள். அப்போது தொடர் வண்டி துறையின் அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி பதவி விலகினார். அப்போது துணை அமைச்சராக இருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த ஓ.வி. அழகேசன் பதவி விலகவில்லை. இதுகுறித்து அறிஞர் அண்ணா - “அரியலூர் அழகேசரே! நீங்கள் ஆண்டது போதும்; மக்கள் மாண்டது போதும்” என்று குறிப்பிட்டார்.
அண்ணாவின் சொல்லாடல் இன்றும் தேவைப்படுகிறதல்லவா!
- பேராசிரியர் மு.நாகநாதன்