இயற்கை எத்தனை சுகமோ அத்தனைக் குரூரம் கூட.
மூணார் ராஜமலை எஸ்டேட்டில் நிகழ்ந்த நிலச்சரிவு உள்ளத்தை கசக்கி.. உயிரோடு வதைக்கிறது. ஏற்கனவே கொரோனா போட்டுக் கொன்று கொண்டிருக்கும் வேளையில்...
சாமியாக ...... கடவுளாக ..... வாழ்வாதாரமாக ....... சந்தோஷமாக ....... இன்பமாக.... நம்பிக்கையாக நினைத்த ஈர மண் சரிந்து இத்தனை உயிர்களைப் பலி எடுத்து விட்டதை ..... நான்கு லைன்களை அப்படியே சரித்து ஒன்றுமில்லாமல் செய்து விட்டதை நடுக்கத்தோடு காண்கிறேன்.
உயிர் இழந்த சொந்தங்கள்... காயம்பட்ட சொந்தங்கள் ....... மன வேதனைப்பட்ட சொந்தங்கள் .... மீட்டெடுக்க போராடிக் கொண்டிருக்கும் சொந்தங்கள் ....... என்று "அங்க அடிச்சா இங்க வலிக்குதே..." கண்கள் கலங்க தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இயற்கைச் சீற்றம் வால்பாறை, மூணார், நீலகிரி போன்ற மலை பிரதேசங்களுக்கு இயல்பு தான் என்றாலும்... இன்னுயிர் போகையில்... ஈடு செய்ய இல்லாத துயரங்கள் நம்மை சூழ்ந்துக் கொள்வதை வேறு வழி இல்லாமல் புலம்ப வேண்டியதாய் இருக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன் அட்டகட்டி கொண்டை ஊசி வளைவுகளில் அடித்து நொறுக்கிய மழையை... காற்றை.... மறந்திருக்க முடியாது. ஆற்றுத்தடம் போல, சாலை மாறி பயமுறுத்தியக் காட்சியை இன்னும் நடுக்கத்தோடு நினைவு கூறுகிறேன். மரம் மண் என்று வேரோடு இழுத்துக் கொண்டு போனதைப் பதபதைக்கும் நினைவுகளோடு பகிர்ந்து கொள்கிறேன். சிறுவயதில் 87 அல்லது 88ல்... இதே போன்ற பெரிய மழையும் புயலும் வந்து ஆடி மாசத்தை ஆட்டி விட்டு போனதை, தூரத்தில் மனதின் வெகு தூரத்தில்.. மிகப்பெரிய பூதமாய் இன்னமும் காண்கிறேன்.
அட்டகத்தித் தாண்டி சில வளைவுகளோடு ரோடு துண்டாடப்பட்டது மூளையின் தூரத்து ஓரத்தில் நினைவில் இருக்கிறது. பொள்ளாச்சியில் இருந்து வரும் பேருந்து அந்தப் பக்கமே நின்று விட அதிலிருந்து இறங்கி குறுக்கு வழியே காட்டுக்குள் நடந்து மேலேறி.... இந்த பக்கம்... உடைந்த சாலைக்கு முன்பாக நின்றிருக்கும் வால்பாறையில் இருந்து வந்த பேருந்தில் ஏறிக் கொள்ள... அந்த பேருந்தில் இருப்போரும்... அதே மாதிரி நடந்து சென்று பொள்ளாச்சி பேருந்தில் ஏறி கொள்ள..... அப்படித்தான் அந்த சாலை சீர் செய்யும் வரை பயணம் தொடர்ந்தது.
அந்த மழையில்தான்...... அப்படி நடந்துச் சென்று ...... பேருந்து மாற்றி ஏறிச் சென்று தான் எங்கள் சுந்தர மாமாவுக்கு பொள்ளாச்சியில் திருமணம் நடந்தது. (ஆடியில் திருமணம் என்ற முற்போக்கை அப்போதே நிகழ்த்திக் காட்டினார்கள்)
அதன் பிறகு எத்தனையோ புயல்... மழை வெள்ளம். இயற்கையின் இலகுவான கைகளில்.... எப்படி தவழ்கிறோமோ அதற்கு எதிர்த் திசையில்.. அதே இயற்கையின் முரட்டுக் கைகளில்... வாழப்பழக்கப் பட்டிருக்கிறோம். மரம் விழுந்து மாடு செத்தக் காட்சிகள் எல்லாம் உண்டு. நான்கைந்து நாட்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்ட நாட்களும் உண்டு. சாலைகளின் குறுக்கே விழும் மரம் பயணங்களை ரத்துச் செய்திருக்கின்றன.
இடி விழுந்து மரம் கருகி இருக்கிறது. அடை மழையில்.... அன்றாடம் நகர்த்தி இருக்கிறோம். மழையும் மலைச் சார்ந்த வாழ்வும் மிக நெருக்கமாய் புன்னகைக்க வைக்கும் அதே நேரத்தில்.... மிக நெருக்கமாய் அழவும் வைத்து விடும். யானை மிதித்து தொழிலாளி பலி. மரம் விழுந்து தொழிலாளி பலி. சிறுத்தை அடித்து தொழிலாளி பலி. இதோ இப்போது மண் சரிவில்.... பலி.
துக்கத்தின் விசும்பலில்.... துயரத்தில் துடிக்கும்... இனம் புரியாத தவிப்பை மிக நுட்பமாக உணர்கிறேன். வெளியே கால மழை. உள்ளே கண்ணீர் மழை.
இம்முறை மூணாறில் நிகழ்ந்தது காலப்பிழை. இந்த பேரிடரில் சிக்கி இறந்தவர்களுக்காகச் சொல்ல ஒன்றுமில்லாமல் உள்ளம் நடுங்க மௌனிக்கிறேன். மண்ணுள்ளேச் சிக்கி இருப்போரை மீட்டெடுக்க வாய் முனங்கி வேண்டிக் கொள்கிறேன். தீராக் கோபத்தை தூவும் மழையே தீராத நம்பிக்கையையும் தூவு என்று வானம் பார்த்துக் கண்ணீர் மல்க கெஞ்சுகிறேன். இறந்தவர்களில் எனது நண்பரிடம் படித்த மாணவி ஒருவரும் என்று அவர் சொல்கையில்... தெரியாத முகத்துக்கே இந்த பதட்டம் என்றால்... தெரிந்த முகத்துக்கு .......!
இறந்த உயிர்களுக்கு ஈடு சொல்ல ஒன்றுமில்லை. இருக்கும் உயிர்களைக் காத்துக் கொள்ள வார்த்தை இல்லை. மீட்பு பணி துரிதமாகட்டும். எல்லாம் வல்ல இயற்கையேச் சற்று பொறு. அமைதியாகு. அடங்கு. நாங்கள் மிக சாதாரண மனிதர்கள்.
- கவிஜி