1. கடல் கொண்ட துயரம்

“வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
ப•றுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக்கங்கையும் இமயமும்
கொண்டு தென் திசையாண்ட தென்னவன் வாழி”

Tsunamiஎன்று சிலப்பதிகாரமும் “தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் கறுங்கடல் கொண்டொழிதலால்” என்று அடியார்க்கு நல்லாரும் “மலிதிரையூர்ந்துதன் மண்கடல் வௌவலின்” என்று முல்லைக்கலிப்பாட்டும் செய்த இலக்கியப் பதிவுகளாகவும் ‘1964இல் தனுஷ்கோடி நகரத்தை கடல் பொங்கி அழித்தது’ என்கிற பழைய செய்தியாகவும் மட்டுமே தமிழர்தம் ஞாபக அடுக்குகளில் இடம்பெற்றிருந்த ‘கடல்கோள்’ கடந்த 2004 டிசம்பர் 26 அன்று பிரம்மாண்டமான சுனாமி அலைகளாக நிஜத்தில் வந்து தமிழகத்தைத் தாக்கியது. பல கிராமங்கள் அடியோடு அழிந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அடித்துச் செல்லப்பட்டனர். சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரிப் பகுதிகளின் கடலோர மக்கள் வாழ்விழந்து, வீடிழந்து, ரத்த உறவுகளை இழந்து, மனைவி மக்களை இழந்து, பெற்ற தாய் தந்தையரை இழந்து அனாதரவாகக் கடற்கரையில் விடப்பட்டனர். எல்லாம் ஒரு பொழுதுக்குள் நடந்து முடிந்துவிட்டது. அழியாத காயங்களைத் தமிழ்ச் சமூக மனதில் ஏற்படுத்திவிட்டுப் பின்வாங்கிவிட்டன அலைகள்.

அங்கே தாழம்பேட்டையில் லட்சுமி என்ற பெண்மணி கடலை வெறித்தபடி கரையிலேயே நிற்கிறார். திடீரெனக் குரலை உயர்த்தி ஆட்காட்டி விரலை ஆட்டி ஆட்டிக் கடலோடு ஆவேசமாகப் பேசுகிறார். கடலைத் திட்டுகிறார். அழுகிறார். மீண்டும் மௌனமாகிறார். இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெடித்து ஆவேசமாகப் பேசுகிறார். யார் போய் அவரோடு பேச்சுக்கொடுத்தாலும் பேச மறுக்கிறார். வெறித்த பார்வையோடு கரையைவிட்டு நகர மறுக்கிறார். அவரது கணவரையும் மூன்று குழந்தைகளையும் ஒருசேரக் கடல் கொண்டுபோய்விட்டது.

முழுக்குத்துறையில் ஒரு தந்தை தன் நான்கு வயது மகனைப் பிணமாகக் கையில் தூக்கிவருகிறார். அவரே குழிவெட்டி போர்வையை உள்ளே விரித்து தலையணையும் வைத்துத் தன் செல்ல மகனை மெதுவாகப் படுக்கவைத்து நல்லடக்கம் செய்கிறார். கண்ணீர் இல்லை. கதறல் இல்லை. கனத்த மௌனம் போர்த்திய அவரது முகத்தை நம்மால் பார்க்கவும் முடியவில்லை.

பொன்னம்திட்டில் தன் மூன்று குழந்தைகளின் சடலங்களையும் வரிசையாக மணல்வெளியில் வைத்துக் கதறிக்கொண்டிருக்கிறாள் ஒரு தாய். பொன்னந்திட்டின் சிதைந்த வீடுகளில் ஒரு வீட்டில் எல்லாம் போய்விட ஒரே ஒரு பொம்மை மட்டும் தனியே கிடக்கிறது. அந்த ஊரின் பள்ளிக்கூடம் அழிந்துவிட்டது. அங்கிருந்த தகவல் பலகை மட்டும் அப்படியே நிற்கிறது அந்த ஊரின் ஜனத்தொகை இவ்வளவு என நமக்குச் சொல்லியபடி.

குளச்சலில் கடலுக்குள் கையை விட்டாலே ஒரு பிணம் கையில் வந்து விழுந்தது. அந்த ஒரே ஊரில் மட்டும் 527 மனிதர்களைச் சடலங்களாக்கிச் சென்றது கடல்.

நாகை-அக்கரைப்பேட்டை கிராமத்தில் மட்டும் 1000 பேர் மடிந்தனர். பெரும்பெரும் பள்ளங்கள் தோண்டி அவர்களை ஒட்டுமொத்தமாக அடக்கம் செய்தனர் -எஞ்சியிருந்த மக்கள்.

சுமத்ரா தீவுக்கு 160 கிமீ மேற்கே கடலுக்கடியில் 30 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் -அதாவது இந்தியா, இந்தியப்பெருங்கடல், வங்கக்கடலின் பகுதி இவற்றைச் சுமந்து கொண்டு மிதக்கும் இந்தியத்தட்டு (டெக்டோனியம் பிளேட்) அந்தமான் -நிக்கோபார் தீவுகளையும் வடக்கு சுமத்ராவையும் சுமக்கும் பர்மா பிளேட்டுக்குக் கீழே இறங்கிவிட்டதால் ஏற்பட்ட நிலநடுக்கம் பிரம்மாண்டமான சக்தி மிக்கதாக இருந்தது. ஹிரோஷிமா-நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டுகளையும் சேர்த்து இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த வெடிபொருட்களின் சக்தியைப் போல இரண்டு மடங்குக்கு மேலான வெடிதிறனை டிசம்பர் 26 நில நடுக்கம் கொண்டிருந்தது. ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய லிட்டில் பாய் என்கிற அணுகுண்டைப்போல 2.13 மில்லியன் மடங்கு சக்தி மிக்கதாக இந்த நிலநடுக்கம் இருந்தது. வடக்கே ஆசியத்தட்டு இருக்க தெற்கிலிருந்து ஆண்டுக்கு 6 செ.மீ வடக்கு நோக்கி நகரும் இந்தியத்தட்டு இடித்துக்கொண்டு வர நடுவில் மாட்டிக்கொண்ட பர்மா தட்டின் மேற்குக்கரை-1200 கி.மீ நீளம்- அழுத்தம் தாளாமல் 2004 டிசம்பர் 26 அன்று பத்திலிருந்து இருபது மீட்டர் உயரத்துக்கு மேலெழும்பி விட இந்தியத்தட்டு அதற்கு அடியில் போய் விட்டது. அதன் காரணமாக கடல்நீர் உள்ளும் வெளியுமாகப் போய் வரத் துவங்கியது. தட்டு கீழே போவது என்பது பூப்போல நடக்கும் செயலல்ல. அது 9.0 ரெக்டர் அளவு நடுக்கத்துடன்தான் கீழே போனது, அந்த நடுக்கத்தின் அதிர்ச்சி அலைகள்தான் சென்னைக்கு வந்து- காலையில் கட்டிடங்கள் அதிர்ந்தன.

Tsunamiஅத்தனை வேகத்தோடு உண்டாக்கப்பட்ட அலைகள் மணிக்கு 800 கிமீ வேகத்தில் பயணம் செய்து கரையைத்தாக்கின. ‘கரையைத் தாக்கும் அலைகள்’ என்பதுதான் சுனாமி (TSUNAMI) என்கிற ஜப்பானியச் சொல்லுக்கு அர்த்தம்.

சுனாமி அலைகள் தாக்குவதற்கு முன்னால் முதலில் கடல் உள்வாங்கும். கன்னியாகுமரியில் அதுபோல கடல் நீண்ட தூரம் உள்வாங்கியதும் கடலுக்கு அடியில் உள்ள தரையும் அங்கு கிடந்த பொருட்களும் வெளித்தெரிய ஆரம்பித்தது. அந்த அரிய காட்சியைக் கண்டு உற்சாகமடைந்த சுற்றுலாப்பயணிகள் கடலுக்குள் இறங்கி நடக்கவும் புகைப்படம் எடுக்கவும் ஆரம்பித்தனர். ஆனால் அடுத்த ஐந்து நிமிடத்தில் சுனாமி அலை வந்து தாக்கியதில் நூற்றுக்கு மேற்பட்டோர் குமரியில் கொல்லப்பட்டனர்.

ஆனால் இப்படி கடல் உள்வாங்கினால் ஐந்து நிமிடத்தில் சுனாமி வரும் என்று தன் பாடத்தில் படித்திருந்த டில்லி ஸ்மித் (Tilly Smith) என்கிற பத்து வயதுச் சிறுமி தாய்லாந்தின் புக்கெட் நகரத்தில் கடற்கரையிலிருந்த மக்களை எச்சரிக்கை செய்து 100 பேருக்குமேல் அந்த இடத்தைவிட்டு ஓடச்செய்து காப்பாற்றிய செய்தியும் வந்துள்ளது.

காலை எட்டு மணிக்கு சென்னையைத் தாக்கிய அலைகள் அடுத்தடுத்து கீழைக்கடற்கரையை தாக்கிக்கொண்டே வந்து 9.30க்கு நாகையையும் 10.30 மணிக்குக் குமரியையும் தாக்கியது. அரசின் செய்தி கேள்விப்பட்டு மணக்குடிக்கு வந்த மாநில அமைச்சர் ஒருவர் சர்ச்சுக்கு வந்து பாதிரியாரை மட்டும் பார்த்துவிட்டுப் போய் விட்டாராம். மக்களை எச்சரிக்கை செய்யவில்லையாம். அவர்போன பத்து நிமிடத்தில் அலை வந்து மணக்குடியைத் தாக்கியுள்ளது. ஆனால் செய்தியைச் சில நிமிடங்களுக்கு முன் அறிந்த கீழ மணக்குடியின் பஞ்சாயத்துத்தலைவி கூப்பாடுபோட்டு ஊர்மக்களை கரையை விட்டு விரட்டியுள்ளார். ஆனால் ஒரு தொலைபேசி அழைப்பு வர போனை எடுக்கப்போன அவர் அலையில் மாட்டிக்கொண்டு உயிரிழந்தார்.

மக்களுக்கு சுனாமி பற்றிய அறிவு ஊட்டப்பட்டிருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். ஐந்து நிமிடம் போதுமே ஓடித்தப்பிக்க.

இந்தோனேஷியாவிலும் சுமத்ராவிலும் இந்தியாவிலும் இலங்கையிலுமென இரண்டு லட்சம் உயிர்களைப் பலி கொண்ட சுனாமி கடற்கரை வெளியெங்கும் கூக்குரலும் கதறலுமாக எம்மக்கள் பிணங்களைத் தேடி அலைந்து திரியும்படி விட்டுச்சென்றது

(அடுத்த அத்தியாயம்).

- ச.தமிழ்ச்செல்வன்

Pin It